கொரோனாவை குணப்படுத்தும்லிங்க முத்திரை!
இதற்கு ஐஐடி தரச்சான்றிதழ் வழங்கியிருக்கிறது என்கிறார் இந்த சித்த மருத்துவர்
கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் ஒருநாளில் முந்நூறு பேர் வரை உயிரிழப்பது மிகுந்த வேதனை அளிக்கும் செய்தி. கொரோனாவின் முதல் அலையைவிட இரண்டாம் அலையில் உடனடியாக நுரையீரல் தொற்று ஏற்பட்டு மூச்சுத்திணறலால் மரணம் நிகழ்வதாக வருத்தம் தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
இந்நிலையில்தான் நுரையீரலில் தங்கும் சளியை இலகுவாக்கி மூச்சுத்திணறல் ஏற்படாமல் தடுக்கவும், காய்ச்சலைக் குறைக்கவும் சித்த முத்திரைகள் பயனுள்ளதாக இருக்குமென நம்பிக்கை தருகிறார் மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவரும், சித்த முத்திரை பயிற்றுனருமான டாக்டர் சாலை ஜெயகல்பனா.
இவரிடம் சித்த மருத்துவம் பார்த்த கொரோனா நோயாளிகள் பலர் இந்த முத்திரைகளையும் செய்து எளிதில் குணமாகியுள்ளனர். குறிப்பாக, லிங்க முத்திரை நுரையீரல் தொற்றை சரியாக்கி எளிதாக சுவாசிக்க வைப்பதாகக் கூறுகிறார்கள் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள். இந்த லிங்க முத்திரையை தற்போது சென்னை ஐஐடியும் ஆய்வுக்குட்படுத்தி சிறப்பானது என அங்கீகாரம் அளித்துள்ளது.
‘‘சித்த முத்திரை என்பது யோகா போல ஒரு கலை. நம் கோயில்கள்ல சிலைகள், சிற்பங்கள் எல்லாம் ஒரு முத்திரையுடன்தான் இருக்கும். இந்த முத்திரை எல்லாம் உடலின் பிரச்னைகளை சரி செய்து உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடியவை. நான் சித்த மருத்துவம் படிக்கிறப்ப ஒரு யோகிகிட்ட இந்த முத்திரைகளைக் கத்துக்கிட்டேன். பிறகு, இந்த முத்திரைகளை மருத்துவத்துக்காகப் பயன்படுத்தத் தொடங்கினேன். நோயாளிகளுக்கு ஒரு தெரபியா மாத்தினேன்.
கடந்த 14 ஆண்டுகளாக என்னிடம் வரும் நோயாளிகளுக்கு சித்த மருந்துடன் சித்த முத்திரைகளையும் பயன்படுத்தி நோயை குணப்படுத்துறேன்...’’ என்றபடியே பேசத் தொடங்கினார் டாக்டர் சாலை ஜெயகல்பனா. ‘‘கடந்த 2007ல் சிக்குன்குனியா வந்தது. அப்புறம் டெங்கு, ஸ்வான் ஃப்ளூனு அடுத்தடுத்து வந்த வைரஸ் காய்ச்சல்களால் மக்கள் பாதிக்கப்பட்டாங்க. இதுல ஸ்வான் ஃப்ளூ மதுரையில் அதிகமா பரவியது. இப்படி ஒவ்வொரு காலக் கட்டத்திலும் வைரஸ் காய்ச்சல் வரும்போதும் இந்த முத்திரைகள் ரொம்ப பயனுள்ளதா இருந்தது. குறிப்பா, லிங்க முத்திரை.
இந்த முத்திரை காய்ச்சலை குறைப்பதற்கும், நுரையீரல் தொற்றை சரிசெய்வதற்கும் ரொம்ப பயனுள்ளது. காய்ச்சலின் தீவிரத் தன்மை அதிகரிக்கும்போது அதை வேகமாகக் குறைக்கிற வேலையை இந்த லிங்க முத்திரை செய்கிறது. இதை நான் 2007ல் இருந்து பார்த்திட்டு வர்றேன். குறிப்பா, நுரையீரலில் சளி சேரும்போது இந்த லிங்க முத்திரை பண்ணினால் சளி இளகி வெளியேறுவதையும், மூச்சுத்திணறல் உடனே குறைவதையும் பார்க்கிறோம்.
ஆஸ்துமா பிரச்னை உள்ளவங்க இந்த லிங்க முத்திரை பண்ணும்போது இளைப்பு உடனே குறையும். இதுக்கு என்ன காரணம்னு பார்க்க நான் ஆய்வைத் தொடங்கினேன். அந்த ஆய்வுல, இந்த முத்திரை செய்யும்போது உடலின் உள்வெப்பம் அதிகரிப்பதை உணர்ந்தேன். அதாவது, லிங்க முத்திரை செய்ய ஆரம்பிச்சதும் நுரையீரல், காது, மூக்கு, தொண்டை இந்தப்பகுதிகள் எல்லாம் வெப்பமாவதை உணர முடிஞ்சது.
என்கிட்ட வந்த நோயாளிகள் இந்த முத்திரையைப் பண்ணிட்டு உடல் நல்லாயிருக்குனு சொன்னாங்க. ரொம்ப ஆண்டுகளா நுரையீரல் பிரச்னை இருந்தவங்க சரியாகிடுச்சுனு சொன்னப்ப சந்தோஷமா இருந்துச்சு. இதன்மூலம் 5 ஆயிரம் பேர் பயனடைஞ்சு இருக்காங்க...’’ என்கிறவர், லிங்க முத்திரைக்கு ஐஐடி தந்த அங்கீகாரம் பற்றி தொடர்ந்தார்.
‘‘பொதுவா, சித்த மருத்துவம் எதை சொன்னாலும் அதற்கு அறிவியல்பூர்வம் இருக்கானு கேட்கறவங்க அதிகம். லிங்க முத்திரை இந்தப் பிரச்னைகளைக் குணப்படுத்துகிறதுனு நான் சொல்லும்போது நிறைய பேர் இதற்கென்ன ஆதாரம்னு கேட்டாங்க.அப்படி கேட்குற எல்லோர்கிட்டயும் நீங்களே செய்து பாருங்கனு சொல்வேன். இப்படி ஒவ்வொருத்தருக்கும் சொல்றதுக்கு பதிலா இதை அறிவியல்பூர்வமா நிரூபிச்சா என்னனு தோணுச்சு. இந்த முத்திரை செய்யும்போது நுரையீரலில் வெப்பம் அதிகரிக்கும் என்பதை எதன் மூலம் கணக்கிடலாம்னு பத்து வருஷமா பல ஆய்வுகள் செய்து பார்த்தோம்.
பிறகு தெர்மல் இமேஜிங் கேமிரானு இருக்கு. அதன்மூலம் கவனிச்சு பார்த்தப்ப வெப்பம் அதிகரிக்கிறதை துல்லியமா கணக்கிட முடிஞ்சது. இதை வச்சு நிறைய முத்திரைகளுக்கு நான் உடலில் என்ன மாற்றம் ஏற்படுதுனு பார்த்தேன். இதை நானே அங்கீகரிக்கிறதைவிட ஒரு பெரிய நிறுவனம் கணக்கிட்டு அங்கீகரிச்சால் சரியா இருக்கும்னு நினைச்சேன். அதனால, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை ஐஐடியிடம் கொடுத்தோம். டாக்டர் கல்பனா குளோபல் சித்த முத்திரை ஆராய்ச்சி நிறுவனம்னு சர்வதேச அளவுல முத்திரை பத்தின ஆராய்ச்சிகளுக்காக உருவாக்கியிருந்தோம். இதன்வழியா ஐஐடிகிட்ட எடுத்திட்டு போனோம்.
இந்த முத்திரை ரொம்ப எஃபெக்டிவ்னு சொல்லி அங்குள்ள பயோமெடிக்கல் துறையினரிடம் மதிப்பீடு செய்யச் சொன்னோம். அவங்ககிட்ட தொடு உணர்வு ஆய்வு மையம் இருக்கு. அந்த ஆய்வுக்கூடத்துல தெர்மல் இமேஜிங் கேமிரா மற்றும் ஈசிஜினு ரெண்டு பேராமீட்டர் மூலம் ஆய்வு பண்ணி வெப்பநிலை உயர்கிறதுனு உறுதிப்படுத்தினாங்க.
தவிர, இந்த முத்திரைக்கு பல்ஸ் ரேட்டையும், ஹார்ட் ரேட்டையும் நிலையா இருக்க வைக்கிற தன்மையும் இருக்குனு அங்கீகரிச்சிருக்காங்க. இதன்மூலம் இன்னும் பரவலா மக்கள்கிட்ட போய்ச் சேரும்னு நினைக்கிறேன். அதுக்கான விழிப்புணர்வை இப்ப ஏற்படுத்திட்டு வர்றேன்...’’ என்கிறவர், லிங்க முத்திரையைச் செய்து காட்டினார்.
‘‘இந்த முத்திரை செய்வது ரொம்ப எளிது. அதுவும் இந்த கொரோனா சமயத்தில் இந்த முத்திரை கட்டாயம் செய்யணும். ஏன்னா, போனமுறை 21 நாள் கழிச்சுதான் மூச்சுத்திணறல் வந்துச்சு. இப்ப 4ம் நாளிலேயே நுரையீரல் தொற்றால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் மரணத்தை தழுவுறாங்க.இந்த முத்திரை உட்கார்ந்த நிலையிலோ அல்லது படுத்தபடியோ எப்படி வேணும்னாலும் செய்யலாம்.
முதல்ல மூக்கின் அடியில் இரு நாசித் துவாரங்களிலும் ஆள்காட்டி விரலை வைத்து பார்க்கணும். எந்த நாசியில் குறைவான அளவு மூச்சு வருதோ அல்லது எந்த நாசித் துவாரம் அடைபட்டிருக்கோ அந்த நாசித் துவாரமுள்ள கையின் கட்டை விரலை செங்குத்தாக உயர்த்திப் பிடித்துக் கொள்ளணும். பிறகு, மற்றொரு கையின் ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலால், உயர்த்திப் பிடித்த கட்டை விரலை சுற்றி வளைக்கணும். அதனுடன் மற்ற விரல்களையும் காற்றுப் புகாதவாறு இறுக்கமாகக் கோர்த்துக் கொள்ளணும்.
சுமார் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யணும். உடலின் உள்வெப்பம் அதிகரித்து வியர்த்து வரும்போது நிறுத்திக்கணும். இதனால், உடல்ல நுரையீரல் பகுதியில் வெப்பம் அதிகரிச்சு மூக்கு, தொண்டை, நுரையீரல்னு வெப்பம் 12 சதவீதம் அதிகமாவதை பார்க்கலாம். அதாவது, ஒரு டிகிரியில் இருந்து மூணு டிகிரி வரை அதிகமாகும். இதனால, ரெண்டு விஷயங்கள் நடக்கும். இறுக்கமான சளி எல்லாம் இளகி வெளியாகிடும். பொதுவா, கொரோனாவில் சளி அதிகரிக்கிறதால அது இறுகி மூச்சுத்திணறல் ஏற்படுது. அதை இந்த முத்திரை இளக்கி வெளியேற்றிடும்.
இரண்டாவது, வீக்கம். அதாவது, சளி பிடிச்சா மூக்கு, தொண்டைக்குள்ள வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் நுரையீரல் வரை பரவி மூச்சுக்காற்றை உள்ளிழுக்க முடியாமல் திணறலை ஏற்படுத்தும். இப்ப இந்த முத்திரை பண்ணும்போது வீக்கங்கள் குறைஞ்சு காற்றோட்டம் உள்ள போகும். எளிதா சுவாசிக்க முடியும். தவிர, இந்த முத்திரையால் ஆக்ஸிஜன் லெவல் நாலஞ்சுனு அதிகரிக்கும். இப்ப 93 இருக்குனா அது 98 ஆக உயரும். இது நான்கு மணி நேரம் வரை அப்படியே இருக்கும்.
இதை ரெண்டு மூணு நாள் தொடர்ந்து செய்யும்போது முழுவதுமா குணமடையறாங்க. இந்த முத்திரையைச் செய்யச் சொல்லி பல கொரோனா நோயாளிகளை குணப்படுத்தியிருக்கோம். ஐசியூல இருக்கிறவங்களே இந்த முத்திரை போட்டு வெளியே வந்திருக்காங்க. இப்படி குணமானவங்க சேர்ந்து கோவிட் வாரியர்ஸ்னு ஒரு குரூப்பே வச்சிருக்காங்க. அவங்க வசிக்கிற பகுதிகள்ல இந்த முத்திரையை சொல்லிக் கொடுக்குறாங்க.
இந்த முத்திரை வைரஸ் மட்டுமல்லாமல் எந்த நுண்கிருமியா இருந்தாலும் உடலில் வாழமுடியாத தன்மையை ஏற்படுத்திடும். இதுல என்ன விஷயம்னா, ஆரம்ப நிலையில் இந்த முத்திரையைச் செய்ய ஆரம்பிச்சிட்டாங்கனா அவங்க கஷ்டநிலைக்கு போறதில்ல. அதனால, இதை ஒரு தற்காப்புக்காகவாவது இந்நேரத்துக்குப் பயன்படுத்துங்கனு கேட்டுக்கிறேன்...’’ என்கிறார் டாக்டர் சாலை ஜெயகல்பனா. (மருத்துவர்களிடம் கலந்தாலோசித்த பின் இதைச் செய்யவும்)
முத்திரைகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்...
‘‘இந்த லிங்க முத்திரை தவிர மண் முத்திரை, பிராண முத்திரை, பிராண வியான முத்திரை, இதய முத்திரைனு நான்கு முத்திரைகள் இந்தக் கொரோனா காலத்திற்கு முக்கியமானது...’’ என்கிறார் டாக்டர் சாலை ஜெயகல்பனா. மண் முத்திரை - இது காய்ச்சல் வராமல் இருக்க செய்ய வேண்டிய முத்திரை. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல்வலி, காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் உடல் சோர்வு, காய்ச்சலின் போது ஏற்படும் நுகர்ச்சி, வாசனை இழப்பு போன்றவற்றை சரிசெய்யும்.
இரண்டாவது, பிராண வியான முத்திரை. இந்த முத்திரை தொண்டைக் கரகரப்பு, தொண்டை வலி, வறட்டு இருமல் ஆகியவற்றை விரைவில் சரிப்படுத்தும்.மூன்றாவது, பிராண முத்திரை. காய்ச்சலின் போதும், காய்ச்சலுக்குப் பிறகும் ஏற்படும் உடல்சோர்வு மற்றும் நரம்புத் தளர்ச்சியை இந்த முத்திரை சரி செய்து சுறுசுறுப்பை உருவாக்கும்.
நான்காவது, இதய முத்திைர. இந்த முத்திரை இதயத்திற்கு செல்கின்ற இரத்த ஓட்டத்தை சீர் செய்கிறது. இதய வலி மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கிறது. கொரோனா வந்தபிறகு பலருக்கு இதயப் பிரச்னை வருவதாகச் சொல்கின்றனர். இந்த முத்திரை அதைக் குணப்படுத்தும்.முத்திரைகள் பற்றி siddhamudra.org தளத்தில் நிறைய தகவல்கள் இருப்பதாகச் சொல்கிறார் டாக்டர் சாலை ஜெயகல்பனா.
பேராச்சி கண்ணன்
|