Family Tree-கனடாவின் நம்பர் ஒன் மதுபான நிறுவனம்!



இந்தியாவைப் போலவே குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாடு, கனடா. அங்கே இயங்கிவரும் 80 சதவீத நிறுவனங்கள் குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படுபவை. தவிர, கனடாவின் சின்னச் சின்ன பிசினஸ்களைக் கூட குடும்ப நிறுவனங்கள்தான் ஆக்கிரமித்துள்ளன. அப்பாவும் அம்மாவும் முழு நேரமாக பிசினஸை  நடத்துவார்கள்.

மாலை நேரத்திலோ அல்லது வார விடுமுறையின்போதோ குழந்தைகளும் குடும்ப பிசினஸில் தங்களை இணைத்துக்கொள்வார்கள். மட்டுமல்ல, கனடாவின் 60 சதவீத ஜிடிபி இந்தக் குடும்ப நிறுவனங்களின் மூலம்தான் கிடைக்கிறது.

கனடாவின் குடும்ப நிறுவனங்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷனாகவும் வழிகாட்டியாகவும் இருப்பது ‘மால்சன்’ எனும் மதுபான நிறுவனம். 235 வருடங்களாக இயங்கி வரும் குடும்ப நிறுவனம் இது. கனடாவிலேயே செல்வ வளமும் செல்வாக்கும் மிகுந்த குடும்பமும் இதுவே.
கனடாவில் உள்ள டீடோட்டலர்களுக்குக் கூட இந்த நிறுவனத்தைப் பற்றித் தெரியும் என்பது ஹைலைட்.

வட அமெரிக்காவிலேயே பழமையான மதுபான நிறுவனம், கனடாவின் இரண்டாவது பழைய நிறுவனம்,  உலகின் ஐந்தாவது மிகப்பெரிய மதுபான நிறுவனம், அமெரிக்கர்கள் அதிகம் விரும்பும் பீரை தயாரிக்கும் நிறுவனம்... என இதன் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
‘கூர்ஸ் லைட்’, ‘மில்லர் லைட்’, ‘மால்சன் கனடியன்’... என நூற்றுக்கும் மேற்பட்ட பிராண்டுகளில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடைக்கின்றன.
மக்கள் கூடிக் களிக்கும் நிகழ்வுகளில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் மதுபானங்களைத் தயாரிப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம். 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இந்நிறுவனத்தின் இணையதளத்துக்குள் நுழைய முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.

ஜான் மால்சன்

மாபெரும் மது சாம்ராஜ்யத்துக்கு வித்திட்டவர் ஜான் மால்சன். பிசினஸ்மேன், நிலப்பிரபு, சமூக சேவகர் என பன்முகங்களைக் கொண்டவர். 1763ம் வருடம் இங்கிலாந்திலுள்ள மௌல்ட்டன் என்ற குக்கிராமத்தில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். நல்ல  வசதி யான குடும்பம். ஜானுடைய தந்தைக்கு 38 ஏக்கர் நிலமும், பெரிய வீடும், ஏராளமான கட்டடங்களும்  இருந்தன.

6 வயதில் தந்தையையும் 8 வயதில் தாயையும் இழந்தார் ஜான். தாத்தாவின் கவனிப்பில் வளர்ந்த ஜானுக்கு படிப்பில் பெரிதாக நாட்டமில்லை.
அவர் வாழ்ந்த கிராமத்தில் தொழில் வளர்ச்சி அவ்வளவாக இல்லை. அதனால் பலர் பிழைப்புக்காக வெளியூர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் படையெடுத்தனர். இதைப் பார்த்த ஜானுக்கும்  வெளிநாட்டுக்குப் போய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆசை துளிர்விட்டது.

அப்போது வயது 12 என்பதால் கிராமத்தை விட்டு அவரால் நகர முடியவில்லை. பக்கத்து ஊரில் கிடைத்த வேலைகளைப் பார்த்து கொஞ்சம் பணத்தைச் சேர்த்தார். 18 வயதானதும் ‘டைட்டானிக்’ படத்தின் நாயகன் கப்பலில் ஏறுவதைப் போல கனடாவுக்குச் செல்லும் ஒரு கப்பலில் ஏறிவிட்டார் ஜான். பயணத்தின்போது கப்பலில் ஓட்டை விழுந்து தண்ணீர் புகுந்துவிட்டது. ‘டைட்டானிக்’ அளவுக்கு பெரிய சேதம் இல்லை.

மாற்றுக் கப்பல் வரும் வரை பல நாடகள் கப்பலிலேயே காத்திருக்க வேண்டிய நிலை. ‘என்னடா... இப்படி ஆகிப்போச்சே...’ என வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் கனடாவுக்குச் செல்ல வேண்டும் என்ற முடிவை அவர் மாற்றிக்கொள்ளவில்லை. மாற்றுக் கப்பல் வந்தவுடன் அதே உற்சாகத்துடன் கனடாவுக்குப் பயணமானார். 1782ம் வருடம் ஜூலை மாதம் மான்ட்ரீல்  நகரத்தை வந்தடைந்தார் ஜான் மால்சன்.

அவருக்கு முன்பே தெரிந்த நபர்கள் கனடாவுக்கு வந்திருந்தது  ஜானுக்கு சாதகமாக அமைந்தது. ஆம்; ஜான் பிசினஸ் தொடங்க அந்த நபர்கள் பல வழிகளிலும் உதவி செய்தனர். கனடாவுக்குள் நுழைந்த அடுத்த வாரமே ஜேம்ஸ் பெல்ஸ் என்பவருடன் இணைந்து இறைச்சி பிசினஸ் செய்ய ஆரம்பித்தார் ஜான். அந்த பிசினஸில் நல்ல லாபம் இருந்தாலும் அவருக்குப் பிடிக்கவில்லை. சில மாதங்களிலேயே இறைச்சி பிசினஸில் இருந்து விலகி வேறு வேலைகளைத் தேட ஆரம்பித்தார்.

கடைசியில் பீர் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அதுவும் ஒரு பார்ட்னராக. அப்போது ஜானுக்கு வயது 21.
சில மாதங்களிலேயே நிறுவனத்தை தனக்குச் சொந்தமாக்கிவிட்டார். அப்போது  கனடாவில் பெரிதாக பீர் பிரபலமாகவில்லை. அத்துடன், கிடைக்கும் பீரும் சுவையாக இல்லை என்பதை அறிந்தார்.   

மட்டுமல்ல, அவருடைய நிறுவனத்தில் தயாராகும்  பீர் ஜானைக் கொஞ்சம் கூட திருப்திப்படுத்தவில்லை. அதனால் பீரை பலமுறை பரிசோதனை செய்து அதிலுள்ள குறைகளைக் கண்டறிந்தார். மூலப்பொருட்களைவிட பீர் தயாரிக்கும் உபகரணங்களில்தான் பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்தவுடன் நிறுவனத்தை தற்காலிகமாக மூடிவிட்டு இங்கிலாந்துக்குக்  கிளம்பி விட்டார்!

அங்கே பல நாட்கள் அலைந்து திரிந்து பீர் தயாரிக்கும் நவீன உபகரணங்களை வாங்கினார். அதுவரை ஜான் சம்பாதித்த பணம் முழுவதும் பயணத்துக்கும் உபகரணங்களுக்கும் சரியாகப் போய்விட்டது. 1786ல் புது உபகரணங்களுடன் மான்ட்ரீலில் கால் பதித்த ஜான், செயின்ட் லாரன்ஸ் நதிக்கரையோரத்தில்  ‘மால்சன்’ மதுபான ஆலையைத் திறந்தார்.  

அடுத்த 20 வருடங்களை பிசினஸுக்காக  அர்ப்பணித்தார். தினமும் 15 மணி நேரத்துக்கும் குறைவில்லாமல் உழைப்பார். கிடைக்கும் லாபத்தை எல்லாம் பிசினஸை விரிவாக்கும் நோக்கில் முதலீடாக்கினார். இங்கிலாந்தில் இருந்த தந்தையின் சொத்தில் சில பகுதிகள் ஜானுக்குக் கிடைத்தது. அதையும் பிசினஸிலே முதலீடு செய்தார். மற்றவர்களுக்கு பீர் போதை என்றால் ஜானுக்கு பிசினஸ்தான் போதை.

பிசினஸில் முழுக்கவனமும் செலுத்தியதால் திருமணமே வேண்டாம் என்று இருந்தார் ஜான். 38 வயதில் சாரா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். இவர்களது திருமணம் சுற்றி யிருப்பவர்களால் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. காரணம், ஜானைவிட  பெரியவர் சாரா. ஏற்கனவே திருமணமானவர்.
கணவனைப் பிரிந்த பிறகு பிழைப்பைத் தேடி மான்ட்ரீலுக்கு வந்திருக்கிறார் சாரா. அப்போது அவர் கையில் ஒரு பைசா கூட இல்லை. சாராவுக்கு ஜான் வீட்டில் பணிப்பெண் வேலை கிடைத்தது. சாராவுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்யாமலே மூன்று மகன்களுக்குத் தந்தையாகிவிட்டார் ஜான். குழந்தைகள் பெற்று சில வருடங்கள் கழிந்த பிறகே ஒரு தேவாலயத்தில் வைத்து சாராவைத் திருமணம் செய்தார் ஜான்.
 
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸிலிருந்து ஏராளமானவர்கள் கனடாவில் முடியேற ஆரம்பித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் பீர் பிரியர்கள். அவ்வளவு பேருக்கும் பீர் சப்ளை செய்ய ‘மால்சன்’ மட்டுமே இருந்தது. உற்பத்தியான பீர்கள் சில மணி நேரங்களில் விற்றுத்தீர்ந்தன. பாதி வாடிக்கையாளர்களை அடுத்த நாள் வரச்சொல்வதே ஜானுக்கு வாடிக்கையாகிவிட்டது.

பிசினஸை நல்ல நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு, மூன்று மகன்களிடமும் ‘மால்சனை’ ஒப்படைத்துவிட்டு மறைந்தார் ஜான் மால்சன்.
‘‘இந்தப் பிரபஞ்சம் முழுவதும் என்னுடைய பீரை விரும்பும்...’’ என்று 200 வருடங்களுக்கு முன்பு ஜான் மால்சன் சொன்னதைக் காப்பாற்றி வருகின்றனர் அவரது சந்ததிகள். பிசினஸ் நடத்தினோம், லாபம் சம்பாதித்தோம், உலகளவில் பிசினஸை விரிவாக்கினோம் என்றில்லாமல் சமூகப் பொறுப்புடனும் இயங்கினார் ஜான் மால்சன். அதை அவருக்குப் பின் வந்தவர்களும் தொடர்கின்றனர்.

நிகழ்வுகள்

மான்ட்ரீல் நகரில் 30 படுக்கைகளுடன் ஒரே ஒரு மருத்துவமனை மட்டுமே இருப்பதை கவனித்தார் ஜான் மால்சன். 1821ல் மான்ட்ரீல் மக்களுக்காக ஒரு பொது மருத்துவமனையைக் கட்டித்தந்தார். 1836ல் மான்ட்ரீலிலிருந்து நியூயார்க் வரை ரயில்பாதை அமைக்க நிதி உதவி செய்தார் ஜான் மால்சன். இதுதான் கனடாவின் முதல் ரயில்பாதை. இதுபோக கனடாவுக்குள் முதல் நீராவிக் கப்பலையும் கொண்டு வந்தது ‘மால்சன்’ நிறுவனம்தான்.
1903 லிருந்து மதுபானங்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது ‘மால்சன்’.

மான்ட்ரீலில் உள்ள ஆலையில் 1950ம் வருடம் ஒரு ராட்சத கடிகாரத்தை அமைத்தது. 12 கிலோமீட்டர் தொலைவிலிருந்து கூட இந்தக் கடிகாரத்தைப் பார்க்க முடியும். 1959ல் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான ‘மால்சன் கனடியன்’ பீர் அறிமுகமானது. இன்று கனடாவில் அதிகமாக விற்பனையாகும் பீர் இதுதான். 2015ல் பீர் வைப்பதற்கான பிரத்யேகமான ஒரு குளிர்சாதனப் பெட்டியை அறிமுகப்படுத்தியது.

தயாரிப்புகள்

பீர், மால்ட் பெவரேஜ், எனர்ஜி டிரிங்க்ஸ், ஸ்பிரிட்ஸ், ஒயின்.

இன்று

அமெரிக்காவின் முன்னணி மதுபான நிறுவனம், ‘கூர்ஸ்’.  பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இயங்கிவரும் குடும்ப நிறுவனம் இது. 2005ல் ‘மால்சனு’டன் இந்நிறுவனம் இணைக்கப்பட்டது. அதிலிருந்து ‘மால்சன் கூர்ஸ் பெவரேஜ் கம்பெனி’ என்று அழைக்கப்படுகிறது.

இந்தக் கூட்டணி குடும்ப நிறுவனத்தின் தலைமையகம் சிகாகோவில் அமைந்துள்ளது. ஏழாம் தலைமுறையைச் சேர்ந்த ஆண்ட்ரூ மால்சன் சேர்மனாக இருக்கிறார். துணை சேர்மனாக பீட் கூர்ஸ் நிறுவனத்தைக் கவனித்து வருகிறார். சுமார் 18 ஆயிரம் பேர் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். 2019ம் ஆண்டின் வருமானம் 77,761 கோடி ரூபாய்.l

த.சக்திவேல்