ரத்த மகுடம்-124



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

மதுரை தச்சர்கள் வீதிக்குள் நுழைந்த சீனனின் முகத்தில் புன்முறுவல் விரிந்தது. எதிர்பார்த்தது போலவே நான்கு பாண்டிய வீரர்கள் வீதியின் முனையில் காவலுக்கு நின்றிருந்தார்கள்.தயக்கமேதுமின்றி அவர்களை சீனன் நெருங்கினான். சற்று இடைவெளிவிட்டு மூன்று வீரர்கள் மரியாதையுடன் நிற்க... நடுவில் அலட்சியமாக நின்றிருந்த... பார்த்ததுமே தலைவன் போல் தென்பட்டவனின் அருகில் சென்று சீன பாணியில் வணங்கினான். ‘‘இது தச்சர்கள் வீதிதானே..?’’

தலைவனின் முகத்தில் வியப்பு விரிந்தது. பிசிறில்லாமல் ஒரு சீனன் தமிழில் பேசுகிறானே... ‘‘ஆம்...’’ உதடுகளும் உச்சரித்தன. தலையும் அசைந்தன.
‘‘செல்லலாம் அல்லவா..?’’ பவ்யமாக சீனன் வினவினான்.‘‘செல்லக் கூடாது என நாங்கள் தடுக்கவில்லையே...’’ மீசை அதிர தலைவன் சிரித்தான். ‘‘செல்வதற்குத்தானே வீதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன..?’’

‘‘காவலுக்கு நிற்கிறீர்களே... ஒருவேளை செல்ல அனுமதியில்லையோ என்று நினைத்தேன்...’’ மீண்டும் தலைவனை வணங்கிய சீனன், வீதியில் நடக்கத் தொடங்கினான்.‘‘யாரைப் பார்க்க வேண்டும்..?’’
நின்று திரும்பி தலைவனை ஏறிட்டான் சீனன். ‘‘வீரபாண்டிய தச்சரை...’’
‘‘என்ன விஷயமாக..?’’

‘‘கடல் பயணத்தில் அராபியர்களின் தாக்குதலை எதிர்கொள்ள சில பொறிகளை புதிதாக உருவாக்கி கலத்தில் பதிக்க வேண்டும்...’’
காவலர் தலைவனின் கண்கள் இடுங்கின. ‘‘உங்கள் மரக் கலத்தை எங்கு நிறுத்தியிருக்கிறீர்கள்..?’’‘‘கொற்கையில்! அங்குள்ள துறைமுகக் காவலர்களுக்கு சின் மங் சின் என்றால் தெரியும்... அதுதான் எனது பெயர். மரக்கலத்தின் அடிப்பகுதியில் படிந்த பாசிகளை அங்கு அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். பழுதடைந்த மரப் பலகைகளை நீக்கிவிட்டு புதிய பலகைகளை பதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பணிகள் முடிய எப்படியும் ஒரு திங்களாகும். அதற்குள் வீரபாண்டிய தச்சரை சந்தித்து புதிய பொறிகளை வாங்கிச் செல்லலாம் என்று மதுரைக்கு வந்தேன்... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கொற்கைக்கு ஆள் அனுப்பி நீங்கள் விசாரிக்கலாம்...’’

சீனனை ஏற இறங்கப் பார்த்த தலைவன், பதிலேதும் சொல்லவில்லை. மாறாக கேள்வி ஒன்றைக் கேட்டான். ‘‘கொற்கையில் தச்சர்களே இல்லையா..?’’
‘‘இருக்கிறார்கள்... ஆனால், தமிழகத்தில் இருக்கும் தச்சர்களில் யாருமே வீரபாண்டிய தச்சருக்கு ஈடாக மாட்டார்கள்...’’
‘‘... என்று யார் சொன்னது..?’’ வீரர் தலைவன் இடைவெட்டினான்.

‘‘எங்கள் மன்னர்!’’ கம்பீரமாக பதில் அளித்தான் சீனன்.‘‘சீன மன்னரா..?’’
‘‘ஆம்... தாங் வம்சத்து மன்னர்!’’தலைவனின் கண்கள் நகைத்தன. ‘‘வீரபாண்டிய தச்சரின் இல்லம் தெரியுமல்லவா..? இல்லையெனில் அடையாளம் காட்ட வீரன் ஒருவனை அனுப்புகிறேன்...’’

‘‘தங்கள் உதவிக்கு மிக்க நன்றி. இடதுபுறம் ஏழாவதாக இருக்கும் இல்லம்தான் வீரபாண்டிய தச்சரின் வசிப்பிடம். இந்த நேரத்தில் என்னை வரச் சொன்னதே அவர்தான். தவிர...’’‘‘தவிர..?’’‘‘இதற்கு முன்பும் ஒருமுறை வந்திருக்கிறேன்...’’
‘‘எப்பொழுது..?’’

‘‘மதுரையின் மேல் புறாக்கள் பறந்தபோது!’’ சொன்ன சீனன், வீரர் தலைவனை பழையபடி வணங்கிவிட்டு வீர பாண்டிய தச்சரின் இல்லம் நோக்கி நடக்கத் தொடங்கினான்.எட்டு கண்கள் தன்னை சல்லடையிட்டு சலிப்பதை உணர்ந்தபோதும் சீனன் திரும்பவில்லை. அதே கம்பீர நடையுடன் இடதுபுறம் ஏழாவதாக இருந்த இல்லத்தை நெருங்கினான். வீட்டைச் சுற்றிலும் மூங்கில் படல் அமைக்கப்பட்டிருந்தது. ஒற்றை ஆள் நுழையும் அளவுக்கு வழியுமிருந்தது.

அதனுள் நுழைந்தவனை சின்னஞ் சிறிய நந்தவனம் வரவேற்றது. மலர்களின் மணத்தை ஆழ்ந்து நுகர்ந்தபடியே நடந்தவன், வாயிலை அடைந்தான். கதவைத் தட்டினான்.நான்காவது முறை தட்ட கையை ஓங்கியபோது கதவு திறந்தது.கண்களால் தன்னைப் பின்தொடரும்படி சைகை செய்த பணியாளன், உட்புறமாக நடந்தான். அவனைத் தொடர்ந்த சீனன், முதலிரண்டு அறைகளைக் கடந்து தாழ்வாரத்தை அடைந்ததும் அதிர்ந்தான்.
சீனனை வரவேற்க அங்கு காத்திருந்தவர் வீரபாண்டிய தச்சரல்ல.

சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர்!சீனனை உச்சி முதல் உள்ளங்கால் வரை தன் கண்களால் ஆராய்ந்த விக்கிரமாதித்தர், தன் கரத்தை நீட்டினார். ‘‘கச்சையைக் கொடு...’’
‘‘...’’
புன்னகையுடன் தன் உதடுகளைத் திறந்து அந்தச் சொல்லைத் தனித்தனியாக சாளுக்கிய மன்னர் உச்சரித்தார்... ‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’‘‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ!’’நங்கை இதை உச்சரித்ததுமே காஞ்சியில் இருந்த புலவர் தண்டியின் மாளிகைக் கதவுகள் அகலமாகத் திறந்தன.‘‘புலவர் பூஜை அறையில் தங்களுக்காக காத்திருக்கிறார்...’’ என்றபடி நங்கையை வணங்கினாள் பணிப்பெண்.

தலையசைத்த நங்கை பழக்கப்பட்ட பாதையில் நடந்து மாளிகையின் கொல்லைப் புறத்தை அடைந்தாள். சுமந்து வந்த மூங்கில் கூடையை இறக்கி வைத்துவிட்டு கிணற்றை அடைந்தவள் தண்ணீரை இறைத்து தன் முகம் கை கால்களைக் கழுவினாள். நங்கையின் மனம் முழுக்க ‘செ-லி நா-லோ-செங்-கியா பா-தோ-பா-மோ...’ என்ற சொல்லுக்கு இருந்த மகிமையைக் குறித்தே சுற்றிச் சுற்றி வந்தது.

செ-லி என்றால். நா-லோ-செங்-கியா என்றால் நரசிம்ம. பா-தோ-பா-மோ என்றால் போத்தவர்மன். மொத்தமாகச் சேர்த்தால் நரசிம்ம போத்தவர்மன். பல்லவ இளவரசரான ராஜசிம்மரை சீனர்கள் தங்கள் மொழியில் இப்படித்தான் அழைத்தார்கள். இந்த அழைப்பே பல்லவ ஒற்றர்களுக்கான அடையாளச் சொல்லாகவும் அமைந்துவிட்டது.

பரவசத்துடன் முந்தானையால் தன் முகத்தைத் துடைத்த நங்கை, தான் இறக்கி வைத்த மூங்கில் கூடையைத் திறந்தாள். பாரிஜாதமும் நந்தியாவட்டையும் தாமரைகளும் கூடை முழுக்க நிரம்பியிருந்தன.அவற்றைத் தனித்தனியாக பணிப்பெண் கொண்டு வந்து கொடுத்த மூன்று பூஜைத் தட்டிலும் வைத்த நங்கை, தாமரை மலர்கள் இருந்த தட்டை மட்டும், தான் எடுத்துக் கொண்டாள்.

மற்ற இரண்டையும் இரு பணிப்பெண்கள் ஏந்த பூஜை அறைக்குள் நங்கை நுழைந்தாள்.சாம்பிராணி புகைக்கு நடுவே பஞ்சமுக விளக்கில் நெய் தீபம் எரிய... சுடரென ஒளிர்ந்தபடி மகா மேருவுக்கு புலவர் தண்டி சந்தன அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்.கண்களால் பணிப்பெண்களுக்கு நங்கை ஜாடை காட்டினாள். ஓசை எழுப்பாமல் தாங்கள் சுமந்து வந்த தட்டை வைத்துவிட்டு பணிப்பெண்கள் பூஜை அறையைவிட்டு வெளியேறினார்கள்.

அபிஷேகம் முடிந்து அஸ்திரத்தால் மகாமேருவைத் துடைத்து புலவர் பொட்டிட்டார். மகாமேரு கம்பீரமாக அமரும் அளவுக்கு இருந்த சின்னஞ்சிறிய தங்க சிம்மாசனத்தின் மீது அதை பக்தியுடன் வைத்த புலவர் தண்டி, திரும்பிப் பார்க்காமல் தன் கையை நீட்டினார்.தாமரைப் பூக்கள் இருந்த பூஜைத் தட்டை எடுத்து பயபக்தியுடன் நங்கை கொடுத்தாள்.தாமரைப் பூக்களின் இதழ்களை பக்தியோடு விரித்த புலவர், அவற்றை ஒவ்வொன்றாக மகாமேருவைச் சுற்றிலும் வைத்தார்; அலங்கரித்தார்.

பின்னர் பாரிஜாதப்  பூக்களாலும் நந்தியாவட்டை மலர்களாலும் மகாமேருவுக்கு அர்ச்சனை செய்தார். தீபாராதனை காண்பித்து முடித்ததும் திரும்பி நங்கையைப் பார்த்து புன்னகைத்தார்.வணங்கிய நங்கை, தாம்பாளத் தட்டை எடுத்து அவரிடம் கொடுத்தாள். தட்டின் மீது கச்சை இருந்தது!
‘‘பல்லவ இளவல் இருக்கும் இடத்துக்கு கரிகாலனும் சிவகாமியும் சென்று விட்டார்களா..?’’ கேட்டபடியே தட்டில் இருந்து கச்சையை எடுத்தார் புலவர்.
பதில் சொல்லாமல் நங்கை தலையைக் குனிந்தாள்.

நங்கையை இமைக்காமல் பார்த்த புலவர் தண்டியின் கண்கள் சுருங்கின. ‘‘எதிர்பார்த்ததுதான். என் கட்டளையை அவர்கள் மதித்திருந்தால்தான் ஆச்சர்யப்பட வேண்டும்...’’ பூமி பிளந்து தன்னை விழுங்கிவிட வேண்டுமென்று அம்பாளிடம் பிரார்த்தனை செய்தாள் நங்கை.
‘‘தனிமையில் உன்னிடம் கரிகாலன் என்ன சொன்னான்..?’’புலவரை நிமிர்ந்து பார்த்த நங்கையின் கண்கள் கலங்கியிருந்தன.
‘‘வெட்டுப்படுவதற்காகவே, தான் ஆடும் சதுரங்க ஆட்டத்தின் காயை நகர்த்தியிருப்பதாக சொன்னானா..?’’
உதடுகள் துடிக்க ஆம் என நங்கை தலையசைத்தாள்.

‘‘சிவகாமி வெட்டுப்படப் போகிறாள்... அதற்காகவே கரிகாலன் அவளை அனுப்பியிருக்கிறான்...’’ முணுமுணுத்த புலவரின் பார்வை சட்டென தன் கையில் இருந்த கச்சையின் மீது படிந்தது. அதை உயர்த்தி விளக்கின் ஒளியில் பார்த்தார். முன்னும் பின்னு மாக வரையப்பட்டிருந்த கோடுகளைக் காணக் காண அவரது கண்கள் விரிந்தன.‘‘இந்தக் கச்சையை உன்னிடம் யார் கொடுத்தது..? கரிகாலனா சிவகாமியா..?’’ புலவரின் கண்கள் கூர்மையடைந்தன.‘‘கரிகாலர்...’’‘‘அப்பொழுது சிவகாமி எங்கிருந்தாள்..?’’
‘‘கரிகாலருக்கு அருகில்...’’
‘‘இதில் இருக்கும் கோடுகள்..?’’

‘‘என் கண் முன்னால் கரிகாலர் தீட்டியது... புத்தம் புதிதான கச்சையில் அவர் தீட்டினார்...’’
‘‘அப்பொழுது சிவகாமி எங்கிருந்தாள்..?’’
‘‘கரிகாலருக்கு அருகில்...’’புலவரின் கண்கள் ஒளிர்ந்தன. ‘‘அதாவது இந்தக் கச்சை சிவகாமி அணிந்திருந்தது அல்ல... சரியா..?’’
‘‘ஆம்... அவள் அணிந்திருந்ததை உங்களிடம் கொடுத்திருப்பேனா..? அந்த பாவ காரியத்தை நான் செய்திருப்பேனா..?’’
உற்சாகத்துடன் அவளை ஏறிட்டார். ‘‘நங்கை...’’
‘‘சொல்லுங்கள் புலவரே...’’

‘‘மதுரை பாதாளச் சிறைக்கு சிவகாமி ஏன் சென்றாள்..?’’
‘‘அசுரப் போர் வியூகத்தை பிரதி எடுக்க...’’
‘‘மொத்தம் எத்தனை அசுரப் போர் வியூகம்..?’’
‘‘இரண்டு...’’

‘‘இரண்டையும் தன் கச்சையில் பிரதி எடுத்தது சிவகாமிதானே..?’’
‘‘ஆம்...’’‘‘அதை தனித்தனியாக இரு கச்சைகளில் வரைந்து உன்னிடம் சேர்த்தது யார்..?’’
நங்கையின் புருவங்கள் விரிந்தன.

‘‘சொல் நங்கை...’’
‘‘க...ரி...கா...ல...ர்...’’
‘‘இதற்கு முன் கடிகை பாலகன் வழியாக உன்னிடம் வந்து சேர்ந்த கச்சை எங்கிருக்கிறது..?’’
‘‘அதை கரிகாலர் பதினாறு துண்டுகளாக வெட்டி நெசவாளர்
களிடம் ஆளுக்கு ஒரு துண்டாகக் கொடுத்திருக்கிறார்...’’‘‘இந்தக் கச்சையையும் பதினாறு துண்டுகளாக வெட்டி நெசவாளர்களிடம் கொடுக்கும்படி சொன்னார்களா..?’’  ‘‘ஆம்... சிவகாமி அப்படிச் சொன்னாள்...’’‘‘இதேபோன்று இரு கச்சைகளை கரிகாலனும் சிவகாமியும் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரிடம் கொடுத்திருக்கிறார்களா..?’’‘‘புலவரே...’’
‘‘அதிர்ச்சியடையாமல் பதில் சொல் நங்கை...’’

‘‘ஆம்...’’
‘‘இந்தத் தகவலை சிவகாமி இல்லாதபோது தனிமையில் உன்னிடம் கரிகாலன் சொன்னானா..?’’
‘‘ஆ...ம்...’’தாடியை நீவியபடி சில கணங்கள் மவுனமாக இருந்த புலவர், ஒரு முடிவுடன் தன் கரத்தில் இருந்த கச்சையை உயர்த்தினார். ஆராய்ந்தார்.
பின் நிதானமாக அந்தக் கச்சையை அருகில் இருந்த விளக்கில் காண்பித்தார்.கச்சையின் நுனியில் தீப் பிடித்தது.

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்