அணையா அடுப்பு - 25
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
நாயக்கரின் சீற்றம்!
உடல் வேறு, மனம் வேறு. மனம்தான் மகிழ்ச்சியை உணர முடியுமென்று அழுத்தமாக வாதிட்டுக் கொண்டிருந்தார் பிரம்ம சமாஜத்தைச் சார்ந்த தர ஸ்வாமி நாயக்கர்.உடலின் துணையின்றி மகிழ்ச்சியை மனம் எப்படி உணரமுடியுமென்று தர்க்கம் செய்துகொண்டிருந்தார் வள்ளலார். வள்ளலாரைப் பொறுத்தவரை உடல், மனம் இரண்டுக்குமே சமபங்கு உண்டு என்பதுதான் வாதம்.“கண் பார்க்காமல், காது கேட்காமல், மூக்கு நுகராமல் ஒரு மகிழ்ச்சியான விஷயம் மனதுக்கு எப்படி கடத்தப்பட முடியும்?” என்கிற நுட்பமான கேள்வியை வள்ளலார் முன்வைத்தபோது நாயக்கர் கொஞ்சம் ஆடித்தான் போனார்.
ஆனால் -அடுத்து அவர் கொடுத்த பதில் அறிவுபூர்வமானதாக அமைந்தது. “உடலின் ஓர் உறுப்புக்கு இருக்கும் தனித்தன்மை, இன்னொரு உறுப்புக்குக் கிடையாது. காதால்தான் கேட்க முடியும்; மூக்கால் அல்ல. அதுபோல கருத்துக்கு புலப்படும் விஷயம், கண்ணுக்குப் புலப்படாது…” வள்ளலார் இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறார் என்று ஒட்டுமொத்த கூட்டமும் காத்திருந்தது.
“மனதால் மட்டுமே பிரம்மத்தை உணரமுடியும் என்பது உங்கள் வாதம். அப்படியெனில் உடலுக்கு பங்குண்டு என்பது என் வாதம். கண்ணால் பார்த்தறியா, காதால் கேட்டறியா ஒரு விஷயத்தை மனம் மட்டும் எப்படி உணரமுடியும் என்கிற உண்மையை சாதாரண ஜனங்கள் கூட அறிவார்கள். நம் உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனித்தனி பண்பு உண்டு என்கிற உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இவற்றின் ஒருங்கிணைப்பில்லாமல் மனம் தனித்து செயல்பட வாய்ப்பில்லை.
எனவேதான் உறுதியாகச் சொல்கிறேன். கண்களுக்கும், கைகளுக்கும், காதுகளுக்கும், மூக்குக்கும் புலனாகக்கூடிய ஒரு விஷயமே, மனதால் பொருட் படுத்தத் தக்கதாகும்….” என்று அறுதியிட்டுக் கூறினார்.இந்த விவாதத்தை நாம் இவ்வளவு விரிவாகப் பார்ப்பதற்குக் காரணம் உண்டு. ஏனெனில் -இதே காலக்கட்டத்தில்தான் ஐரோப்பிய நாடுகளில் தத்துவவாதிகளிடையே கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் குறித்த கோட்பாடுகளின் விவாதம் அனல் பறந்துகொண்டிருந்தது.
அதே காலக்கட்டத்தில் நம் தமிழ்ச்சூழலிலும் கூட அத்தகைய தன்மை கொண்ட கூர்மையான விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டவே இவ்விவாதத்தை நாம் விரிவாக உணர வேண்டியிருக்கிறது.வள்ளலாரின் அந்த பதிலைக் கேட்டதுமே திருவந்திபுரம் ஊரைச் சார்ந்த பிராமணர்கள் தாங்களும் விவாதத்தில் ஈடுபடத் தலைப்பட்டார்கள்.“மனதுக்குப் புலப்படக்கூடிய ஒரு விஷயம், எப்படி அதே உருவில் கண்களுக்கும் புலனாகும்?” என்றார்கள்.
அதாவது மனம் எல்லையற்றது. அதனால் லவுகீகத்தில் சாத்தியமற்ற விஷயங்களைக் கூட புனைந்துகொள்ள முடியும்.ஆனால் -கண்கள் என்பது காணும் காட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே உண்மையை உணரும்.பிராமணர்கள் தத்துவரீதியாகக் கேட்ட கேள்வியைப் பாராட்டினார் வள்ளலார். விளக்க ஆரம்பித்தார்.
“மனதுக்குப் புலப்படுகிற ஒரு விஷயம் மெய்யா, பொய்யா என்பதை அறிய அங்கங்கள் உதவும். மனதுக்கு பிரபஞ்சம் புலப்படுகிறது என்றால், அது நிச்சயமாக கண்களுக்கும் புலப்படும்…” என்றார்.“நேரடியாகவே கேட்கிறோம். எல்லோர் மனதுக்கும் பிரம்மம் புலப்படாதா?” “பிரம்மம் என்பது மாயா அதீதம். மனம் என்பது மாயா காரியம். எனவே, மாயா காரியத்துக்கு மாயா அதீதம் புலப்படாது…” “அப்படியெனில் நாம் பிரம்மத்தை உணரவே முடியாதா?”
“அதற்குத்தான் ஆன்ம ஞானம் தேவை என்கிறேன்…” என்று முடித்தார் வள்ளலார்.வள்ளலாரிடம் சந்தேகம் கேட்ட பிராமணர்கள் திருப்தி அடைந்தார்கள்.தான், வாதித்துக் கொண்டிருந்தவரிடம் இடையில் புகுந்து பிராமணர்கள் சந்தேகம் கேட்டபோதே தர ஸ்வாமி நாயக்கர் அதிருப்தி அடைந்தார்.மேலும் -வள்ளலார் கொடுத்த விளக்கத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டது அவருக்கு சற்று கோபத்தையும் ஏற்படுத்தியது. மீண்டும் பழையபடி, “நான் எழுத்து வாயிலாக இங்கு நடந்த விவாதங்களுக்கு தக்க பதில்களை வழங்குகிறேன்...” என்றார்.
“பேச்சால் வள்ளலாரை வெல்ல முடியாது என்று நாயக்கர் ஒப்புக் கொண்டார்...” என்று கூட்டத்தில் ஒருவர் கூற, உடனே அங்கு சிரிப்பலை ஒன்று பரவியது.தான், தோற்று விட்டதாகக் கூட்டத்தினர் கருதியதால், நாயக்கருக்கு பெரும் சினம் உண்டாயிற்று.“இன்னும் எட்டே எட்டு நாட்கள். என்னைப் பார்த்துச் சிரித்தவர்களை நோக்கி இதே இடத்தில் நான் சிரித்துக் காட்டுகிறேன்…” என்று கண்களை உருட்டி, அவசரமாக எழுந்தவாறே சவால் விட்டார்.
நாயக்கர் உடன் வந்த பிரம்ம சமாஜத்தைச் சார்ந்த அவரது ஆதரவாளர்களும் கோபத்தோடு எழுந்தார்கள்.அங்கிருந்த பிராமணர்கள், “தர்க்கம் நடந்துகொண்டிருக்கும்போது, இதுபோல ஆவேசத்தில் வார்த்தைகளை விடக்கூடாது...” என்று கண்டித்தார்கள்.
இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்படுமோ என்கிற மாதிரி கலவரச்சூழல் எழுந்தது.அனைவரையும் வள்ளலார் சமாதானப்படுத்தி அமரவைத்தார்.“சிலை வழிபாடு செய்பவர்கள் பிரம்மத்தை அறியமுடியாது என்கிற பிரம்ம சமாஜத்தைச் சார்ந்தவர்களின் கோட்பாட்டை நான் நிராகரிக்கிறேன். அவரவர் வழியில் பிரம்மத்தை உணர முயற்சிப்பதே நன்று. பிரம்ம சமாஜம், வேத சமாஜம் போன்றவர்கள் நம்முடைய மரபான வழிபாட்டு முறைகள் தவறு என்று சொல்லுதல் கூடாது…” என்று தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக எடுத்து வைத்தார்.
பிரம்ம சமாஜத்தைச் சார்ந்தவர்களோ மீண்டும் மீண்டும் எழுத்து வாயிலாக நாம் விவாதிக்கலாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இருப்பினும் அங்கிருந்த கூட்டத்தார் பெரும்பாலும், நடைபெற்ற தர்க்கப் போரில் வள்ளலாரே வென்றார் என்றார்கள்.சிலை வழிபாட்டை எதிர்த்த பிரம்ம சமாஜத்துக்கும், வள்ளலாரின் சன்மார்க்க சங்கத்துக்கும் பெரும்பாலான கொள்கைகளில் பெருத்த வேறுபாடு ஒன்றுமில்லை.இருப்பினும் இரு தரப்பும் தத்துவ மோதலில் ஈடுபட்டதற்குக் காரணமென்ன?
(அடுப்பு எரியும்)
தமிழ்மொழி
ஓவியம்: ஸ்யாம்
|