தீபாவளி ட்ரீட்... திரைக்கே வராமல் நேரடியாக சன் டிவியில் புத்தம் புதிய படம்!



‘‘தீபாவளி மாதிரி கலர்ஃபுல்லான ஒரு ஃபெஸ்டிவல்ல, சன் டிவியில் படம் போடுறாங்கன்னாலே, அதுக்கு அவ்ளோ பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.
இப்ப சன் டிவியே தயாரிச்சு, அதை தியேட்டருக்குக் கூட கொண்டு போகாம, நேரடியா டிவில ரிலீஸ் பண்றாங்கன்னா, அந்தப் படம் எவ்ளோ ஸ்பெஷலானதா இருக்கும்! அப்படி ஒரு படமா ‘நாங்க ரொம்ப பிஸி’ இருக்கும். இந்தப் படம் ஒரு டார்க் காமெடி, டார்க் ஹியூமர் என்பதைத் தாண்டி, விறுவிறுப்பான ஆக்‌ஷன், அழகான காதல், சின்னதா ஒரு சென்டிமென்ட்னு கலந்துகட்டி இருக்கு.

சிம்பிளா சொல்றதா இருந்தா சன் டிவி நேயர்களுக்கு ஒரு ஃபெஸ்டிவல் ட்ரீட் காத்திருக்கு...’’ நிறைவாகப் பேசுகிறார் இயக்குநர் பத்ரி.
சுந்தர்.சி.க்கு ‘வீராப்பு’ கொடுத்தவர், இப்போது ஷாம், பிரசன்னா, யோகிபாபு என கதைக்கேற்ற கதாபாத்திரங்களுடன் ‘நாங்க ரொம்ப busy’யாக வந்திருக்கிறார். லாக்டவுன் காலகட்டத்தில் படப்பிடிப்பு துவங்கலாம் என அரசு அறிவித்ததும் ஷூட்டிங் கிளம்பிப் போய், முப்பதே நாட்களில் முழுப் படத்தையும் முடித்திருக்கிறார்கள்.

‘ஆடாம ஜெயிச்சோமடா’வுக்குப் பிறகு டைரக்‌ஷன் பக்கம் வந்திருக்கீங்க..?

ஆமா. என் குருநாதராலதான் சாத்தியமாச்சு. கொரோனா டைம்ல நிறைய படங்கள் பார்த்தோம். அப்படி சுந்தர்.சி. சார் ‘மாயாபஜார் 2016’னு ஒரு கன்னடப் படத்தை பார்த்தார். பயங்கர ஹேப்பியாகிட்டார். அதுல சின்னச் சின்ன மாறுதல்களை மட்டும் பண்ணினா, தமிழ்ல செம ஹிட் அடிக்கும்னு நினைச்சார். உடனே என்னைக் கூப்பிட்டும் படத்தை பார்க்கச் சொன்னார்.

எனக்கும் படம் திருப்தி. அதை தமிழுக்கு கொண்டு வந்தா, அவர் நினைச்சது மாதிரியே ஹிட் அடிக்கும்னு நினைச்சோம். இப்ப படம் ரெடி. ‘நாங்க ரொம்ப பிஸி’ கலகலப்பான படம். சின்னச் சின்ன கதாபாத்திரங்கள்ல கூட நல்லா தெரிஞ்ச நட்சத்திரங்கள் இருக்கணும்னு நினைச்சோம்.
காமெடி படத்தைப் பொறுத்தவரை நமக்கு நல்லா தெரிஞ்ச முகங்களைப் போட்டா, அதுவே ஸ்கிரீன்ல பாதி சிரிப்பை கொண்டு வந்துடும். அப்படி ஒரு மேஜிக் இருக்கு.

பிரசன்னா, ஷாம், யோகிபாபு, அஸ்வின், மொட்டை ராஜேந்திரன், விடிவி கணேஷ், ஆர்.என்.ஆர்.மனோகர், சிங்கம்புலி, சமுத்திரக்கனி, பவர் ஸ்டார், சுவாமிநாதன், மனோகர்னு கதைக்கேத்த கதாபாத்திரங்களா ஸ்டார் காஸ்ட் இருக்கும்.

ஹீரோயின்களா ஸ்ருதி மராதேவும், ரித்திகா சென்னும் நடிச்சிருக்காங்க. இதுல ஸ்ருதி மும்பை ஹீரோயின். தமிழ்ல ‘குரு சிஷ்யன்’ பண்ணினவங்க. ரித்திகா சென், பெங்காலி நடிகை. இதுக்கு முன்னாடி ‘டகால்டி’யில நடிச்சவங்க. ரெண்டு பேருமே டயலாக்கிற்கு மெனக்கெட்டிருக்காங்க.
இது 2016ல பண மதிப்பிழப்பு பீரியட்ல நடந்த கதை.

ஆனா, நாங்க ஷூட் போனதோ லாக்டவுன் டைம்ல. கதை நடக்கற காலகட்டத்துல யாரும் மாஸ்க் அணிஞ்சிருக்க மாட்டாங்க. இதையெல்லாம் மைண்ட்ல வச்சு, அதுவும் முப்பதே நாள்ல படத்தை முடிக்கணும் என்பது மிகப்பெரிய சவால்.

செப்டம்பர் 14ல ஷூட் ஆரம்பிச்சு, நவம்பர் 14ல டிவியில வருதுனா, அது எவ்ளோ பெரிய விஷயம்! இந்த சவாலை சந்திச்சு அசத்தியிருக்கார் படத்தின் ஒளிப்பதிவாளரான கிச்சா. வேகமா, தரமா முடிச்சுக் கொடுத்தார். படத்திற்கு இசை ‘எங்கேயும் எப்போதும்’ சத்யா. டார்க் காமெடி ஜானர்னால படத்துல ரெண்டு பாடல்கள்தான். குட்டி குட்டி தீம் மியூசிக் தவிர, பின்னணி இசை மிகப்பெரிய பலம்.தொடர்ந்து சுந்தர்.சி.யோட ட்ராவல் பண்றீங்க..?

இது சந்தோஷமான ட்ராவல். அவர் என் குருநாதர். நான் தொழில் கத்துக்கறதே அவர்கிட்டதான். நான் அவரோட அசிஸ்டெண்ட்னு சொல்றதுல பெருமைப்படறேன். அவரோட ஜட்ஜ்மென்ட் எப்பவும் தோத்ததில்ல. ஒரு படத்தைப் பார்க்கும்போதே, அதை தமிழுக்கு கொண்டு வரமுடியுமா... என்ன கரெக்‌ஷன்ஸ் பண்ண வேண்டியிருக்கும் என்பதை கரெக்ட்டா கணிச்சு, ஹிட் அடிப்பார். ஏன்னா ரீமேக்கைப் பொறுத்தவரை அதை தமிழுக்கு கொண்டு வரும்போது ப்ளஸ்ஸை விட மைனஸ்தான் அதிகம் இருக்கும். ஒரிஜினல் மிகப்பெரிய ஹிட் ஆனதால்தான் அதை நாம ரீமேக் பண்றோம்.
ஒரு ஹிட் படத்தை கையில வச்சிருக்கோம்னு ஒரு பயம் இருக்கும். கை நிறைய பணம் வச்சிருக்கவன் எப்பவும் பயந்து பயந்துதான் இருப்பான். அதே மாதிரிதான் நாமளும் பயத்தோட இருப்போம்.

நம்ம படத்தை ஒரிஜனலோடு எப்பவும் கம்பேர் பண்ணி பார்ப்பாங்க. எதுக்கெடுத்தாலும் ‘அந்த படத்துல இருந்தது மாதிரி இல்ல... அதுல இது நல்லா இருந்துச்சு... அந்தப் படத்துல இது நல்லா இருந்ததாலதான் அது ஓடுச்சு...’னு பேச்சு எழும். அந்த ஒப்பீடு படம் ரிலீஸ் ஆகும்வரை நம்ம மைண்ட்லயும் இருக்கும். இதை எல்லாம் கவனத்துல எடுத்து ஒர்க் பண்ண வேண்டியிருக்கும்.

‘வீராப்பு’ கூட மலையாளத்துல வந்த ‘ஸ்படிகம்’ ரீமேக்தான். ஆனா, அதை தமிழுக்கு கொண்டு வந்தா ஹிட் ஆகும்னு என் குரு
நாதர் நினைச்சார். கணிப்பு சரியா இருந்துச்சு. இப்ப ‘நாங்க ரொம்ப பிஸி’யை முடிச்சிட்டு அவர் இயக்கும் ‘அரண்மனை 3’ ஷூட்டுக்கு கிளம்பிட்டேன். அதோட ஒரு ஷெட்யூலை ஏற்கெனவே குஜராத்துல ஒரு பெரிய அரண்மனைல முடிச்சுட்டு வந்தோம். வந்த ரெண்டாவது நாள்ல லாக்டவுன் தொடங்கிடுச்சு. ஸோ, அடுத்த ஷெட்யூல் இப்பதான் ஸ்டார்ட் பண்ணினோம்.

இதுவும் இந்த மாசமே முடிஞ்சிடும். முந்தைய பார்ட்களை விட இதுல காமெடியும் ஹாரரும் பிரமாண்டமா இருக்கும். ஏப்ரல்ல கொண்டு வர திட்டமிட்டிருக்கார். அதையடுத்து மறுபடியும் சாரை வச்சு ஒரு படம் இயக்கறேன். அதுக்கான வேலைகளும் நடந்திட்டிருக்கு.

மை.பாரதிராஜா