நான்... ஜேடி & ஜெர்ரி



இங்க வெற்றி அவ்வளவு சுலபமில்ல. காத்திருப்பு ரொம்ப அவசியம். அதைப் புரிஞ்சுகிட்டு ஓட ஆரம்பிச்சதுனாலதான் இன்னைக்கு ரெண்டு பேர் கொண்ட நாங்க, ‘நான்’ என ஒற்றை ஆளா அடையாளம் காணப்படுகிறோம். ‘கருங்குயில் குன்றத்துக் கொலை’னு ஒரு நாவல் ‘மரகதம்’ என்ற பெயர்ல படமா வந்தது. அந்த நாவல் எழுதின டிஎஸ்டி சாமி வேற யாருமில்ல... ஜேடியோட தாத்தாதான்.  

ஜேடிக்கு சொந்த ஊர் கும்ப கோணம். பள்ளிப்படிப்பும் அங்கதான். ஜோசப் டி சாமி. இதன் சுருக்கம்தான் ஜேடி. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரில பட்டப்படிப்பு. ஜேடி எதிர்பார்த்தது கணக்கு. ஆனா, கிடைச்சது ஸ்டேட்டிஸ்டிக்ஸ். இதுதான் ஜேடியை சினிமா, இலக்கியம் பக்கம் திருப்பிச்சு.
ஜெர்ரியின் சந்திப்பும் அங்கதான். ரெண்டு பேருக்கும் ஒரே வகுப்பு. ஒரே ஹாஸ்டல். செயின்ட் ஜோசப் கல்லூரி வாழ்க்கையை எங்களால மறக்கவே முடியாது. பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட், அத்தனை உலக சினிமாக்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். பார்க்காத உலக சினிமாக்கள் கிடையாது; பேசாத சினிமா விஷயங்கள் கிடையாது.

அப்பா வழியா ஜேடிக்கு நிறைய புத்தகங்கள் பரிச்சயமானது. சின்ன வயசுலயே ‘பொன்னியின் செல்வன்’ துவங்கி நிறைய இலக்கியங்களைப் படிக்க ஆரம்பிச்சுட்டார். விளைவு, ஜேடி கவிதைகள் எழுத ஆரம்பிச்சார். அவரோட முதல் கவிதை ‘ஆனந்த விகடன்’ மாணவர் பக்கத்துல வெளியாச்சு.
ஜேடியோட அப்பா ராபர்ட் டி சாமி, எக்ஸிகியூடிவ் ஆபீஸர்.

அம்மா அமலோற்பவ மேரி டி சாமி. ஜேடிக்கு இரண்டு தம்பிங்க, ஒரு தங்கை. ஒரு தம்பியான ஜெரோம், வங்கில வேலை பார்க்கறார். இன்னொரு தம்பியான ஜேம்ஸ், அப்பா பாணில எக்ஸிகியூடிவ் ஆபீசர். தங்கை ஜஸ்டினா.

எப்படி ஜோசப் டி சாமி, ஜேடி ஆனாரோ அப்படி ஜெர்லின், ஜெரால்டு ஆகி ஜெர்ரி ஆனார். ஜெர்ரியின் சொந்த ஊர் திண்டுக்கல். ஆனா, பிறந்து வளர்ந்ததெல்லாம் கொடைக்கானல்ல. ஜெர்ரியின் அப்பா இந்திய வானொலில வேலை பார்த்தார். அவர் பெயர், ஆரோக்கியம். அம்மா பெயர் சூசையம்மாள்.

என்னதான் ஜெர்ரியின் அப்பா மத்திய அரசுல வேலை பார்த்தாலும் வாழ்நாள் முழுக்க விவசாயம் செய்தார். அதோட தன் வாரிசுகளுக்காக விவசாய நிலங்களை அப்படியே விற்காம விட்டு வைச்சார்.ஜெர்ரி படிச்சது எல்லாம் கொடைக்கானல்ல. ஜெர்ரி குடும்பத்துல யாருக்கும் இலக்கியம், சினிமால ஈடுபாடில்லை. அரசாங்கக் குடியிருப்புலதான் ஜெர்ரியின் இள்மைக்காலம் கழிஞ்சது. அமைந்த நண்பர்களும் மலையாளம், தெலுங்கு, இந்தினு பல மொழிகளைச் சார்ந்தவங்க. வார இறுதில மீன் பிடிப்பதும் மலை ஏறுவதும்தான் ஜெர்ரியின் பொழுதுபோக்கு.

இப்படி இருவேறு துருவங்களா இருந்த ஜேடியும் ஜெர்ரியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரில நண்பர்களாகி இப்ப வரை ஒண்ணா பயணப்படுகிறோம்; ஒண்ணாவே இப்ப இந்த பேட்டி யும் தர்றோம்.கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்த ஜெர்ரி, மொத்தமாவே தன் கல்லூரிக்கு முன்னாடி 4 - 5 படங்கள்தான் பார்த்திருக்கார். ஜேடியுடன் நட்பான பிறகு எல்லா படங்களையும் பார்த்துத் தள்ளினார்.

எந்த படத்துக்குப் போனாலும் அங்க ஜேடியும் அவர் அப்பாவும் முதல் வரிசைல அமர்ந்திருப்பாங்க. சத்தம் போட்டு ரெண்டு பேரும் சினிமா பத்தி பேசுவாங்க. ஜெர்ரிக்கு இதெல்லாம் ஆச்சர்யமா இருந்தது. மெல்ல மெல்ல ஜேடியின் ரசனையும் ஜெர்ரியின் விருப்பமும் ஒண்ணாச்சு. ஜேடி பத்து வருஷங்கள்ல படிச்ச இலக்கியத்தை ஜெர்ரி மூணே வருஷங்கள்ல படிச்சு முடிச்சார்.

செயின்ட் ஜோசப் கல்லூரில படிப்பு முடிச்சதும் ஜேடிக்கு வங்கில வேலை கிடைச்சது. ஜெர்ரி சென்னை லயோலாவுல எம்பிஏ சேர்ந்தார்.
உடனே ஜேடியும் அதே லயோலாவுல எம்.எஸ்சி அப்ளை பண்ணினார். சீட் கிடைக்க தாமதமானதால பிரசிடென்சில சேர்ந்தார்.
ஜேடிக்கு இயக்குநர் பாலு மகேந்திரா சார் கூட பணிபுரியிற வாய்ப்பு கிடைச்சது. ரெண்டு படங்கள் வரை அவருக்கு உதவி யாளரா இருந்தார். ஜெர்ரியுடனான நட்பும் தொடர்ந்தது.

அப்புறம் ரெண்டு பேருமா சேர்ந்து படம் இயக்க வாய்ப்பு தேடி அலைஞ்சோம். அப்ப தூர்தர்ஷன்ல டிவி புரோக்ராம் செய்ய வாய்ப்பு கிடைச்சது. டிவி நிகழ்ச்சிகளுக்காக மும்பை தயாரிப்பாளர்கிட்ட பேசினப்ப, ‘ஏன் நம்ம படக் கதையை சொல்லக் கூடாது’னு தோணுச்சு.
வேலைக்கு நடுவுல சினிமா கதைகள் பத்தி ரெண்டு பேரும் பேசுவோம். நிறைய கதைகளை உருவாக்கினோம். அதுல ஒண்ணு தான் அஜித் - விக்ரம் நடிச்ச ‘உல்லாசம்’ கதை.

டிவி எபிசோடுகள் முடிச்சு அவுட்புட் தர்றப்ப எங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சோம். அப்ப திடீர்னு ஸ்டிரைக் ஆனதுதான்  ஜேடி & ஜெர்ரி. இப்ப வரை இந்தப் பெயர்தான் தொடருது.அஜித் அப்ப ‘காதல் கோட்டை’ மாதிரி மென்மையான படங்கள்ல நடிச்சுட்டு இருக்கார். அவரை ஒரு முரட்டுத்தனமான இளைஞரா காட்ட நினைச்சோம். இளமை துள்ள ஒரு படம்.

சிறப்பான டீம் அமைஞ்சது. தரணி, ஜீவா, கார்த்திக் ராஜா... மேக்கிங் பத்தி ஊரே பேசுச்சு. இதுக்குக் காரணம், கல்லூரி நாட்கள்ல நாங்க பார்த்த உலகப் படங்கள்தான். நாங்க படிச்ச புத்தகங்கள், கவிதைகள், அரசியல் மற்றும் அயல்நாட்டுக் கவிதைகள் எல்லாம் எங்களுக்கு கை கொடுத்தது.
ஜேடி ரொம்ப நல்லா எழுதுவார். என்ன சீன்ஸ் பத்தி பேசினாலும், ஐடியா சொன்னாலும் அதை காகிதத்துல பிரமாதமா கொண்டு வந்துடுவார். எழுத்தாளர் சுஜாதாவே ஜேடி எழுதறதைப் பார்த்து வியந்திருக்கார்.  

எப்பவும் நாங்க விட்டுக் கொடுக்க மாட்டோம். எல்லா பணியும் நாங்க செய்ததுதான். நாங்க இயக்கினதுதான். எங்க ரெண்டு பேருக்குமே ஒன்லைன் கான்செப்ட் அல்லது டேக் லைன் ரொம்ப சுலபமா வரும். ஒனிடா டிவி விளம்பரம் எங்களை விளம்பரங்கள் பக்கம் இழுத்தது. முதல் முறையா விஜிபி விளம்பரம். ஏ.ஆர்.ரஹ்மான்தான் மியூசிக். லெனின் எடிட்டிங். இதுக்கு அப்புறம், ‘உல்லாசம்’, ‘விசில்’னு படங்கள்; ‘பாண்டவாஸ்’ அனிமேஷன்.
இதுக்கு அப்புறம் பெரிய இடைவெளி. 10 வருஷங்கள் எந்த வாய்ப்பும் வரலை. 2003ல சென்னை சில்க்ஸ் ஆரம்பிச்சாங்க. ஆடி மாசம் அவங்க கடையை பிரபலப்படுத்த விளம்பரம் எடுத்துக் கொடுங்கனு தேடி வந்தாங்க.

ஜவுளிக்கடை, சில்க் புடவைகள்னா கோயில்... பெண்கள்னு ஒரு கோட்பாடு இருந்தது. அதை உடைச்சு கொண்டாட்டம் மாதிரி ஆடி மாச விளம்பரம் இருக்கணும்னு செய்தோம். பரவை முனியம்மா அம்மா ‘ஆடியிலே அடிக்குதம்மா அதிர்ஷ்டக் காத்து...’ பாட... இமான் இசையமைச்சார். இந்த விளம்பரம் வெளிவந்த 15வது நாள்ல இருந்து அத்தனை ஷோரூம்ஸ்ல இருந்தும் அழைப்பு.

அப்ப தொடங்கின விளம்பரப் பட இயக்கம் இப்ப வரை பெரிய பிராண்டுகள் சூழ போயிட்டிருக்கு. சினிமா எடுக்கும் எண்ணம் கூட வெயிட்டிங்குல இருக்கற அளவுக்கு நாங்க இப்ப ஓடிட்டு இருக்கோம். ஒரு சினிமா எடுக்க குறைஞ்சது  மூணு மாசங்களாகும். விளம்பரங் கள் எல்லாம் கிளையன்ட்ஸை அடிப்படையா கொண்டது. சின்ன பிரேக் விட்டாலும் கைவிட்டுப் போயிடும். இங்க... விளம்பரத்துறைல... எங்களுக் காக பலர் காத்திருக்காங்க. அவங்களை ஏமாத்த விரும்பலை.

நிறைய நாயகிகளை-டாப் ஹீரோயின்ஸை-இயக்கியிருக் கோம். பலரும் எங்க விளம்பர இயக்கத்துல நடிச்சுதான் அட்வர்டைசிங் ஃபீல்டுல நுழைஞ் சிருக்காங்க. சந்தோஷம், இளமை, பாடல், நடனம்... இதுதான் எங்க விளம்பரங்கள். சில மாற்றுக் கருத்துகள், விமர்சனங்கள் வரும். ஆனா, குழந்தைகள், குடும்பங்களுக்கு எங்க விளம்பரங்கள் சந்தோஷத்தைக் கொடுக்குது.

எங்ககிட்ட விளம்பரங்கள் கொடுத்தபிறகு உரிமையாளர்கள் கவலையே இல்லாம அவங்க வேலையைப் பார்க்கப் போயிடுவாங்க. படப்பிடிப்புத் தளங்களுக்கு வரவும் மாட்டாங்க. அவ்வளவு நம்பிக்கை.கிட்டத்தட்ட 60க்கும் மேலான பெரிய பிராண்டுகளுக்கு ஓபனிங் விளம்பரங்கள் செய்திருக்கோம். எங்க விளம்பர டெம்ப்ளேட்டை மாடலா வைச்சுதான் இப்ப வரும் இளைஞர்கள் விளம்பரப் படங்கள் எடுக்கறாங்க.

அதனால எங்க டெம்ப்ளேட்டை நாங்களே உடைச்சு புதுமை படைக்க நினைச்சோம். அப்படி உருவானதுதான் ‘சரவணா ஸ்டோர்ஸ்’ விளம்பரம். இதுல அண்ணாச்சியையே நடிக்க வைச்சோம்.இதை பலரும் பலவிதமா டிரோல் பண்ணி கிண்டலடிச்சாங்க. அண்ணாச்சியும் சரி... நாங்களும் சரி... கவலைப்படல. மக்கள்கிட்ட பெரிய அளவுல இந்த விளம்பரம் ரீச் ஆச்சு. அதோட அண்ணாச்சியும் ஒரு டாப் மாடலுக்கான குவாலிட்டீஸை வளர்த்துக்கிட்டார். அவர் ஹீரோவா நடிக்கும் படத்தை எழுதி இயக்கியிருக்கோம். படப்பிடிப்பு முழுமையா முடிஞ்சுடுச்சு. சமயம் பார்த்து அந்தப் படத்தோட பெயர், கதை பத்தி எல்லாம் சொல்றோம். இப்போதைக்கு அது பிரமாண்டமான படம்... உங்களை ஆச்சர்யப்
படுத்தி மகிழ்விக்கும்னு மட்டும் சொல்லிக்கறோம்.   

எப்படி நாங்க இணை பிரியா நண்பர்களா இருக்கோமோ அப்படி எங்க மனைவிகளும் தோழிகளா இருக்காங்க.
ஜேடிக்கு லவ் & அரேஞ்ஜ்டு மேரேஜ். ஜேடியின் மனைவி பெயர் சகாய செல்வராணி. இவங்க பெண் அமிர்தவர்ஷினி, லயோலால விஸ்காம் முடிச்சுட்டு லண்டன்ல டிஜிட்டல் மார்க்கெட்டிங் படிக்கிறாங்க. பையன் மனோரஞ்சன் லயோலால படிப்பை முடிச்சுட்டு இயக்குநர் ஏ.எல்.விஜய்கிட்ட உதவியாளரா இருக்கார்.  

ஜெர்ரியின் மனைவி பெயர் செலின். ஹோம் மேக்கர். வீட்ல பார்த்த பெண்ணை கட்டிக்கிட்டார். இவங்க பையன் பிரியதர்ஷன், லயோலாவுல விஸ்காம் முடிச்சுட்டு லாஸ் ஏஞ்சல்ஸ்ல நடிப்பு, சினிமா பத்தி படிச்சுட்டு வந்திருக்கார். இவருக்கு நடிப்பு போலவே இசையிலும் டைரக்‌ஷனிலும் ஆர்வம். ஜெர்ரி - செலினின் மகள் மிருதுளா ஜோஸ்னா, எம்பிபிஎஸ் இறுதியாண்டு படிக்கறாங்க.

சினிமாதான் எங்க மூச்சு. ‘விசில்’ படத்துக்குப் பிறகு இப்பதான் மீண்டும் சினிமா எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. இடைல நாங்க எடுத்த விளம்பரங்கள்
எங்களை உயரத்துல நிறுத்தியிருக்கு.  இந்த இடம் கூட கிடைக்காம பலர் வெளில காத்திருக்காங்க. அதெல்லாம் பார்க்கிறப்ப நாங்க பெரிய அளவுல கஷ்டப்படலை, அலையலை. கிடைச்ச வாய்ப்பு களையும் சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கிட்டோம்.

இங்க காத்திருப்பு அவசியம். பல பெரிய விளம்பரப் படங்கள் எடுத்த - எடுக்கற நாங்களே பத்து வருஷங்கள் வரை காத்திருந்தோம். காத்திருப்பும் பொறுமையும், தோல்விகளைக் கண்டு துவளாத மனமும் இருந்தா நிச்சயம் ஜெயிக்கலாம்.இதுதான் இந்த ஜேடி & ஜெர்ரியின் வெற்றி ரகசியம்.

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்