அமெரிக்கா: வெள்ளை இனவாதமா..? பன்மைத்துவ அரசியலா..?



சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், முற்போக்காளர்களில் பெரும்பாலானோரால் அருவருக்கப்பட்ட, இனவாத நோக்குள்ளவரான டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகும் முயற்சியில் தோல்வியடைந்துள்ளார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனும், மேற்கிந்திய, கிழக்கிந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸும் முறையே அதிபராக, துணை அதிபராக வெற்றி பெற்றுள்ளார்கள்.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல்தான்; குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் மாறி மாறி வெற்றிபெறுவது வழக்கம்தான்... என்பதைக் கடந்து இந்தத் தேர்தலுக்கு ஒரு கூடுதலான வரலாற்று முக்கியத்துவம் இருப்பதாகவே தோன்றுகிறது.
அமெரிக்கா வெள்ளை இனவாதிகளின் நாடா அல்லது அனைத்து இன மக்களுக்கு மான நாடா என்ற நீறுபூத்த நெருப்பான கேள்வியை மனதில் கொண்டால் இந்த தேர்தல்முடிவுகளில் சற்று கூடுதல் முக்கியத்துவம் தென்படும்.

வெள்ளை இனத்தவர் (whites), வர்ணத்தவர் (people of colour) என்ற முரண்பாட்டுடன், பெருந்தனவந்தர்கள், உழைக்கும் மக்கள் என்ற வர்க்க முரண்பாடு; மத அடிப்படைவாத நோக்கிற்கும், முற்போக்கு கலாசார நோக்கிற்குமான முரண்பாடு; குறுகிய தேசிய நோக்கிற்கும், சர்வதேச சூழலியல் அக்கறைக்குமான முரண்பாடு ஆகியவையும் சேர்ந்து கொள்கின்றன என்பதே நாம் புரிந்துகொள்ள வேண்டியது.

ஒற்றை அடையாள வாத தேசியம், எல்லா இடங்களிலும் மதவாதம், அடிப்படைவாதம், பெருமுதலீட்டிய நலன், சூழலியல் அக்கறையின்மை என்றே செயல்படுவதை கவனிக்க முடியும்.

*ஒரு சுருக்கமான ஃபிளாஷ்பேக்

அமெரிக்கா என்ற USA (United States of America) குடியேற்றத்தால் உருவான நாடு. அந்த நாட்டின் பூர்வகுடிகள் இன்று ஒரு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். அமெரிக்க கண்டத்தின் பூர்வ குடிகளைக் கொன்று, வென்று ஒடுக்கி ஐரோப்பிய குடியேறிகள் அமெரிக்கர்கள் ஆனார்கள். இதெல்லாம் நடந்து ஐநூறு ஆண்டுகள்தான் ஆகின்றன.

அமெரிக்க குடியேற்றம் என்பது வன்முறையுடன் நிகழ்ந்தாலும், அமெரிக்க நிலப்பகுதியில் குடியேறியவர்கள் தாங்கள் புதிய உலகைத் தோற்றுவிப்பதாகக்
கற்பனை செய்துகொள்ள முடிந்தது. இனவாத வன்முறையும், முற்போக்கு சுதந்திரவாத சிந்தனையும் இணைந்து பிறந்ததுதான் அமெரிக்கா.
அதனால் 1776ம் ஆண்டு இங்கிலாந்து அரசரின் கட்டுப்பாட்டி லிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அமெரிக்க காலனிகள் ஒன்றிணைந்து சுதந்திரப் பிரகடனம் செய்தன.

அமெரிக்கா, உலகின் முதல் மன்னரல்லாத மக்களாட்சி குடியரசாக அரசியல் நிர்ணய சட்டம் இயற்றி தன்னை உருவாக்கிக் கொண்டது. ஐம்பது சுயாட்சி அரசுகளான மாகாணங்களும், ஒரு மாவட்டமும் இணைந்ததுதான் ஐக்கிய அமெரிக்க அரசுகள் (மாகாணங்கள்) எனப்படும் USA. நாம் சுருக்கமாக அமெரிக்கா என்றே குறிப்பிடுகிறோம்.

வட அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்களுக்கு தோட்டங்களில், சுரங்கங்களில் வேலை செய்ய அடிமைகள் தேவைப்பட்டார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பின மக்கள் விலைக்கு வாங்கப்பட்டு அமெரிக்காவில் அடிமைகளாக விற்கப்பட்டார்கள். அவர்களது உழைப்பால்தான் அமெரிக்கா செல்வ வளம் மிகுந்த நாடாக மாறியது என்றால் மிகையாகாது. அடிமைகளின் உழைப்பைச் சுரண்டி அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் பெருந்தனவந்தர்கள் ஆனார்கள். மீண்டும் புத்துலக சுதந்திரவாதமும், இன ஒடுக்குமுறையும் இணைந்து பயணித்தது.

*கறுப்பினத்தவரும், பிற வர்ணத்தவரும்

விரைவில் நவீன தொழில்கள் பெருகிய வடக்கு மாகாணங்களுக்கும், அடிமைகள் வேலை செய்யும் தோட்டங்களும் பண்ணைகளும் நிறைந்த தென் மாகாணங்களுக்கும் அடிமை முறை குறித்த முரண்கள் வலுத்து 1860ம் ஆண்டு உள்நாட்டுப்போர் மூண்டது. மூன்றாண்டுகள் நீடித்த போரில் வட மாநிலங்கள் வென்றதுடன் அடிமை முறை முடிவுக்கு வந்தது. கறுப்பின மக்கள் விடுவிக்கப்பட்டார்கள். சுதந்திரமடைந்த கறுப்பினத்தவருக்கும், வெள்ளையர்களுக்கும் மோதல்கள் நிகழ்ந்தன. கூ கிளக்ஸ் கிளான் (Ku Klux Klan) என்ற வெள்ளை நிறவெறி அமைப்பு தோன்றி, கறுப்பர்களை வேட்டையாடத் துவங்கியது.

அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட கறுப்பின மக்கள் தங்கள் உரிமைகளுக்காக, சம வாய்ப்பிற்காக, சுயமரியாதைக்காக மேலும் நூறாண்டுகள் போராட வேண்டியிருந்தது. இன்னும் பெரும்பாலானோருக்கு உண்மையான சமத்துவம் என்பது தொலைதூர இலட்சியமாகவே உள்ளது எனலாம்.  
அதன் சமீபத்திய வெளிப்பாடுதான் வெள்ளையரான காவலரால் கறுப்பர் ஒருவர் தேவையின்றி கொடூரமாக கொல்லப்பட்டதை அடுத்து வெடித்தெழுந்த Black Lives Matter என்ற போராட்டம்.

குடியேற்றத்தால் உருவான நாடான அமெரிக்கா, ஐந்து ஆண்டுகள் அதில் தொடர்ந்து வசித்து, பணிபுரியும் யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை சட்டமாக வைத்திருக்கிறது. சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து, இந்தியாவிலிருந்து பல்வேறு தொழில்கள், வணிகம் சார்ந்து கணிசமானோர் குடியேறியுள்ளனர். லத்தீன் அமெரிக்க நாடுகள் என்னும் தென் அமெரிக்காவிலிருந்தும் கணிசமானோர் குடியேறியுள்ளனர். இவர்கள் ஸ்பானிய மொழி பேசுவார்கள்.

இன்றைய முப்பத்து மூன்று கோடி அமெரிக்க மக்கள் தொகையை தோராயமாக இப்படிப் பிரிக்கலாம்.
 
   வெள்ளை நிறத்தவர் -     60%
   லாடினோக்கள்        -     18%
   கறுப்பினத்தவர்       -     13%
   ஆசியர்கள்              -     6%
   கலப்பினத்தவர்       -     2%
   பூர்வகுடிகள்              -     1%

இதை இரண்டே பிரிவாகக் கூறும்போது வெள்ளையர் (whites), வர்ணத்தவர் (people of colour) என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் செல்வ பகிர்வையும் புரிந்துகொள்ள வேண்டும். ஏழ்மை என்பது அதிகம் இல்லாவிட்டாலும் கடுமையான ஏற்றத்தாழ்வு நிலவும் சமூகம். பத்து சதவீத மக்களிடம் எழுபது சதவீத சொத்துக்கள் குவிந்துள்ளன.

*அமெரிக்க அரசியலின் அடிப்படை முரண்

அமெரிக்க அரசியலில் தீவிர வலதுசாரிப் போக்கு என்பது வெள்ளை இனவாதம், கிறிஸ்துவ அடிப்படைவாதம், பெருமுதலாளி, பெருந்தனவந்தர்கள் ஆதரவு ஆகிய மூன்று அம்சங்கள் கலந்ததாக இருக்கிறது.

இந்தப் போக்கு தீவிர தேசியவாத நோக்கு கொண்டதாகவும், குடியேற்றங்களுக்கு, குறிப்பாக மெக்ஸிகோவிலிருந்து அனுமதியின்றி உட்புகும் எளிய உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகவும் இருக்கிறது. உலகளாவிய சூழலியல் சீர்கேட்டிற்கு முகம் கொடுக்க மறுக்கிறது. குடியரசுக் கட்சி என்னும் ரிபப்ளிகன் கட்சி இந்தப் போக்கிற்கு அதிகம் இடமளிக்கிறது.

அமெரிக்காவில் தீவிர இடது சாரி நோக்கு என்பது சாத்தியமேயில்லை. யார் முயன்றாலும் பணக்காரர்கள் ஆகலாம் என்ற கற்பிதம் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளதால் சொத்துக்குவிப்பு என்பது வெற்றியாக மட்டுமே பார்க்கப்படும். ஓரளவு மக்கள் நல அரசாக இருப்பது, செல்வந்தர்களுக்கு அதிக வரி விதித்து உழைக்கும் மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்குவது போன்றவைதான் அங்கே சோஷலிஸ நோக்கு என்றும், ‘காம்மி’ (Commie) என்ற கம்யூனிஸ்டு என்றும் கூறப்படுகிறது.

கம்யூனிசம் என்பது அரசுக் கட்டுப்பாடு என்றும், அது மக்களின் சுதந்திரத்தை பறித்துவிடும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் ஓரளவு மக்கள் நலன், கலாசாரப் பன்மை, முற்போக்குச் சிந்தனை, சர்வதேச நலன் ஆகியவற்றில் அக்கறை கொண்ட பார்வைக்கு ஜனநாயகக் கட்சி என்ற டெமாக்ரடிக் கட்சி இடமளிப்பதாக இருக்கிறது.  

இந்தத் தேர்தலில் மீண்டும் தீவிர வலதுசாரிப் போக்கு மட்டுப்படுத்தப்பட்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கூடுதலாக அவருடன் துணை அதிபராக கறுப்பினத் தந்தையும், தமிழரான தாயும் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இனவாத வலதுசாரி தேசியத்திற்கும், பன்மைத்துவ முற்போக்கு நோக்குள்ள தேசியத்திற்கும் அமெரிக்காவில் முற்றிவரும் முரணில் மீண்டும் முற்போக்குச் சக்தி களின் கை ஓங்கியுள்ளதும், கலப்பின வர்ணத்தவரான பெண் துணை அதிபராகியிருப்பதும் இந்தத் தேர்தலை முக்கிய வரலாற்றுத் தருணமாக மாற்றியுள்ளது.

கூடுதலாக விரைந்து சீர்கெட்டுவரும் உலகளாவிய சுற்றுச் சூழலைச் சீர்செய்ய முனைவதில் மீண்டும் அமெரிக்கா ஈடுபடும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. ஜோ பைடனுக்கும், கமலா ஹாரிஸிற்கும் வாழ்த்துக்கள் சொல்வோம்.  

ராஜன் குறை