நாடு ஒன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவர்களை எல்லாம் பேஸ்புக், வாட்ஸ் அப் வழியாக பாஜக சுரண்டியது!



faceb(JP)ook மினி தொடர் 11

ஃபேஸ்புக் மற்றும் பிஜேபி இருவரில் யார் யாரை அதிகம் பயன்படுத்தியது என்ற கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் சிரமம். இருதரப்புமே பரஸ்பர நலன்களோடு ஒருவரை ஒருவர் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதே உண்மை. ஃபேஸ்புக்குக்கு வருமானமும் செல்வமும் அதிகார மையங்களோடான நெருக்கமும் தேவைப்பட்டது. பிஜேபிக்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் தக்கவைப்பதும் தேவைப்பட்டது. எனவே, ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டோம்...’’ இப்படிச் சொன்னவர் வினித் கோயங்கா. மும்பையைச் சேர்ந்த ஒரு ஐடி நிபுணர்.

2003ம் ஆண்டு முதலே பிஜேபி இளைஞர் அணிகளில் தீவிரமாகப் பங்கு பெற்று வருபவர். நிதின் கட்கரியோடு நெருக்கமானவர். பிஜேபியின் ஐடி விங்கில் முக்கியப் பங்காற்றியவர். இவர்தான் தனது கட்சிக்கும் ஃபேஸ்புக்குக்குமான சந்தர்பவாத, சுயநலக் கூட்டணி பற்றி ஒரு நேர்காணலில் இப்படிச் சொன்னவர்.

பிஜேபியை மேலே அதிகாரத்துக்குக் கொண்டு வந்ததற்கு கூலியாகத்தான் இன்று, நிதின் கட்கரி அமைச்சராக இருக்கும் கப்பல் மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறைக்கான ஐடி விங்கின் பொறுப்பில் இருக்கிறார். மேலும், பியூஷ் கோயல் அமைச்சராக இருக்கும் ரயில்வே அமைச்சகத்தில் தகவல் தொடர்பு மையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

2008ம் ஆண்டு பிஜேபியை நவீனமாக்குவதற்காக அழைக்கப்படுகிறார் கோயங்கா. இவர் உள்ளே வந்ததும் செய்த முதல் வேலை கட்கரி போன்ற பிஜேபியின் மேல்மட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான தலைவர்களுக்கு இடையிலான வீடியோ கான்ஃபரன்ஸ் வசதிகளை ஹெச்.டி எனும் அதிநவீன தொழில்நுட்ப தரத்தில் நிகழ்த்திக்காட்டியதுதான்.

இந்த சிறிய வெற்றிக்குப் பிறகு கோயங்காவுக்கு திரும்பிப் பார்க்க நேரமில்லை. இதை இந்தியா முழுமைக்குமான ஒரு மாபெரும் செயலாக விரிவாக்கினார். அப்போது, 2013ம் ஆண்டு. தேர்தலுக்கு ஒரே ஓர் ஆண்டு மட்டுமே இருந்தது. சுமார் 78 ஆயிரத்துக்கு மேற்பட்ட களச் செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து, இந்தியா முழுதும் பிஜேபிக்காக களமாடிக்கொண்டிருந்தார்.

இதற்காக பல்வேறு குழுக்கள் உருவாக்கப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்டது. இப்படி ஒவ்வொரு குழுவிலும் ஒருவர் அல்லது ஒருசிலருக்கு ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் களமாடும் பணி ஒதுக்கப்பட்டது.கோயங்காவின் இன்னொரு முக்கியமான பங்களிப்பு, பிஜேபி தலைவர்களை ஐடி நிறுவனத்தின் பெருந்தலைகளோடு கோர்த்துவிட்டதுதான்.

சோம் மிட்டல், ராஜேந்திர பவார் உள்ளிட்ட பலர் இவ்வாறு பிஜேபியோடு நெருங்கியவர்கள்தான். இந்தோ - அமெரிக்க வர்த்தக கவுன்சில் நிறுவனம் உட்பட பல நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் அடக்கம். கோயங்கா இந்த ஐடி நிறுவனங்களுக்கும் கட்சிக்குமான சந்திப்புகள் தொடர்ச்சியாக நடைபெறவும் இவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும் மிக முக்கிய பாலமாக இருந்தார். இதில், ஐடி நிபுணர்கள் முதல் ஐடி நிறுவன அதிபர்கள் வரை பலதரப்பட்டவர்கள் இருந்தனர்.

‘பரிபாலனத்தைப் பற்றி பேசுவோம்' என்ற பெயரில் தில்லியின் அசோகா சாலையில் உள்ள பிஜேபி காரியாலயத்தில் இந்த சந்திப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெற்றன.‘‘2009ம் ஆண்டு ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் இந்தியாவின் பிரதானமான இருபது நகரங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக்கூடியதாக இருந்தன.

ஆனால், அடுத்த ஐந்தே ஆண்டுகளில், அதாவது 2019ல் இந்தியாவின் வழமையான எல்லா ஊடகங்களையும் ஓரங்கட்டிவிட்டு, அதிகாரமிக்கதொரு ஊடக வலைத் தொடர்பாக இவை வளர்ந்து நிற்கின்றன. இனி இந்த நவீன உலகை அதன் கருத்தியல் களைத் தீர்மானிக்கப் போகும் முக்கியமான சக்தியாக இவை இருப்பதைத் தடுக்க இயலாது...’’ இப்படிச் சொன்னவர் பெயர் பிரத்யுத் போரா.

இவர்தான் 2007ம் ஆண்டில் பிஜேபி ஐடி விங் என்பதையே நிறுவியவர். ஃபேஸ்புக்கும் வாட்ஸ்அப்பும் தங்கள் சேவையைத் தொடங்கிய ஒரே ஆண்டில் பிஜேபி தனது ஐடி அணியை உருவாக்கிவிட்டது என்பதை கவனிக்க வேண்டும். இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் செய்யாத முக்கியமான வேலை இது.

இப்போது போரா, பிஜேபியிலிருந்து விலகி இருக்கிறார். கடந்த 2015ம் ஆண்டு மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் எதேச்சதிகாரப் போக்கை எதிர்த்து குரல் கொடுத்ததைத் தொடர்ந்து தனது தேசிய பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வியகத்தில் (ஐஐஎம்) முதல் தலைமுறைப் பட்டதாரியாக வெளிவந்த இளைஞர்களில் போராவும் ஒருவர். கல்லூரி நாட்களிலேயே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களால் ஈர்க்கப்பட்டவர்.

ராஜ்நாத் சிங் தங்களது கட்சித் தலைவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள வேண்டிய அவசியத்தைக் கருத்தில்கொண்டு, ஐடி விங்க் ஒன்றின் தேவையை உணர்ந்து இதனை உருவாக்கினார். ஆனால், சமூகவலைத்தளங்களில் மக்களைச் சீரழிப்ப தற்காக இது உருவாக்கப்பட வில்லை என்கிறார் குரோகானை பூர்வீகமாகக் கொண்ட இந்த நிபுணர்.

இப்போது, தன் சொந்த மாநிலமான அசாமில் அரசியல் ரீதியாக ஏதும் செய்ய இயலுமா எனப் பார்த்துவருகிறார். போரா ஐடி விங்கிலிருந்து விலகி அசாம் சென்ற அதே நேரத்தில் ராஜ்நாத் சிங்கை ஓரங்கட்டி நிதின் கட்கரி பிஜேபி தலைவராகவும் புதிய ஐடி விங்கின் பொறுப்புக்கு கோயங்காவும் வருகிறார்கள். இந்த கோயங்காவின் செயல்பாடுகளைத்தான் முந்தைய பக்கங்களில் பார்த்தோம்.

‘‘2012ம் ஆண்டு இந்தியாவின் வழமையான ஊடக உலகின் சாம்ராஜ்யத்தை சமூக வலைத்தளங்கள் உடைத்து நொறுக்கின. அவற்றின் எழுச்சி முக்கியமானதாக இருந்தது. 2012 - 14ம் ஆண்டுகளில் காங்கிரஸ் முழுமையாக ஓர் ஊழல் கட்சியாக அம்பலப்பட்டு நின்றது. அரசியல்வாதிகள் நேரடி யாக மக்களிடம் உரையாடுவதுபோல் சமூக வலைத்தளங்களில் ஒவ்வொருவரோடும் உரையாட முடிந்தது. நாம் ஒவ்வொருவருமே மீடியாவைப் போலவே சமூக வலைத்தள உரையாடல்களையும் கவனிக்க ஆரம்பித்தோம்...’’ என்கிறார் கோயங்கா.

கோயங்காவின் குடும்பம் ஆர்எஸ்எஸ் அமைப்போடு நெருங்கிய தொடர்புடையது. ஐபிஎம் நிறுவனத்தோடு பணிரீதியான தொடர்பில் இருந்த கோயங்கா தன் அமைப்பின் வலதுசாரி கருத்தியல் பரப்புரைக்காக அந்நிறுவனத்தைப் பயன்படுத்தினார். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் என்ஆர்ஐ இந்தியர்களை ஒருங்கிணைத்து ஒரு வலை உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும் இந்தியாவில் உள்ள தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தொடர்பு கொண்டு ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்வினையாற்றச் சொன்னார்கள்.

லைவ் சாட்கள், பக்கங்களை லைக் செய்வது, வாட்ஸ்அப் க்ரூப்களில் பங்கேற்பது, செய்திகளை பார்வேர்டு செய்வது என தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் ஈடுபட்டார்கள். இப்படி தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே ஒவ்வொருவரையும் அவரவர் அறிவுநிலைக்கு ஏற்ப மண்டையைக் கழுவினார்கள்.

‘நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் நம்மை மீட்பதற்கான ஒரே பரமாத்மா மோடி மட்டும்தான்’ என்பது ஒரு சுலோகம் போல திரும்பத் திரும்ப இவர்களால் உச்சரிக்கப்பட்டது. தங்கள் தலையில் செயற்கையாக திணிக்கப்பட்டதை இவர்களே நம்பவும் தொடங்கினார்கள். தங்களை அறியாமலேயே பிஜேபியின் கருத்து வாகனமாக மாறினார்கள்.

இதன் பெயர்தான் நல்லுணர்வைச் சுரண்டுவது. அதாவது, நாடு நன்றாக இருக்க வேண்டும், மக்களுக்கு நன்மை செய்பவர்கள் வரவேண்டும் என நினைக்கும் ஒருவரை தங்கள் சுயலாபத்துக்காக தங்கள் கருத்தியலுக்கு வளைப்பது. அவர்களின் நல்லுணர்வு, நல்ல எண்ணத்தை தங்கள் சுய மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொள்வது.

இப்படித்தான் பிஜேபி எல்லா தந்திர வழிமுறைகளையும் பின்பற்றி அதிகாரத்துக்கு வரத் தயாராகியது. சரி, இந்த கோவர்த்தனகிரி தூக்கி கோபியர்களைக் காக்கும் ஆபத்பாந்தவனை இவர்கள் எப்படி சிருஷ்டித்தார்கள்..?

(தொடர்ந்து தேடுவோம்)

இளங்கோ கிருஷ்ணன்