நடிக்க வருகிறார் ஓவியர் ஸ்யாம்!



தான் நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டை ஸ்கெட்ச் செய்துள்ளார் ஸ்யாம்

தமிழ்ப் பத்திரிகையின் இளைய தலைமுறை ஓவியர்களில் ஸ்யாம் மிஸ்டர் ஸ்டைலிஷ்!  குறும்பு மின்னும் கண்கள், அட்டகாச உயரம், ரகளையான கிராஃப் கொண்ட வாழ்க்கை. அதெல்லாம் இப்போது விஷயம் இல்லை. ஸ்யாம் இப்போ நடிகர்!நடிகர் இ.வி.கணேஷ்பாபு ஹீரோவாகி இயக்கும் ‘கட்டில்’ படத்தில் மிக முக்கிய கேரக்டராகி வந்து நிற்கிறார்.
அத்தனை பேரையும்ஆனந்த அதிர்ச்சி அடைய வைத்து அருமையாகப் புன்னகைக்கிறார்.‘‘நண்பர்களுக்கெல்லாம் ரொம்பவும் ஆச்சர்யம். யாரும் இதை எதிர்பார்க்கலை. நானே இதை எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

எனக்கு சினிமா பிடிக்கும். நாலு பக்கம் படித்தால் வராத உணர்வை, நாலு பேர் மேடைபோட்டுப் பேசினால் புரியாத விஷயத்தை, சினிமா மூலம் சொன்னால் மனதில் பதியும். அந்த விதத்தில் சினிமா மீது எனக்கு மரியாதை உண்டு. நான் உண்டு என் ஓவியம் உண்டு என்றுதான் இதுவரை இருந்திருக்கிறேன். இயக்குநர் கணேஷ்பாபு என்னிடம் ‘கட்டில்’ கதையைப் பற்றிச் சொன்னார். அருமையாக இருந்தது. நல்ல உணர்வுகளை மீட்டித் தந்தது.

என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு படைப்பு சும்மா ஜாலியாக, பொழுதுபோக்காக மட்டும் இருந்தால் போதாது. எங்கேயோ ஓர் ஓரத்தில் உங்களின் இதயத்தில் ஒட்டணும். ஒரு நிமிடமாவது உங்களை ஸ்தம்பிக்கச் செய்யணும். பாதி ராத்திரியாவது உங்களைத்  தூங்கவிடாமல் பண்ணணும்.
அப்படி ‘கட்டில்’ படத்தில் விஷயம் இருந்தது. கணேஷ்பாபு என்னை விடாமல் கூப்பிட்டதால் யோசிக்க ஆரம்பித்தேன். அப்புறம் ஒரு நாள் காஸ்ட்யூமர் வந்து ட்ரஸ்சுக்கு அளவெடுக்க ஆரம்பிச்சிட்டார்!

ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க. எனக்கு இதுக்கு முன்னாடி இப்படி ஒரு பெரும் வாய்ப்பு வந்திருக்கு. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் ‘வானமே எல்லை’னு ஒரு படம் டைரக்ட் பண்றார். அதில் அன்னை தெரஸா படம் இடம் பெறணும். அதற்காக என்னை ஒரு படம் வரையச் சொல்லிக் கேட்டாங்க. படமும் அருமையாக தயாராகிடுச்சு.

இவ்வளவு பெரிய டைரக்டரை கண்ணால் பார்த்துட்டு வரலாம்னு நேரா நானே வரைஞ்சதை தூக்கிட்டுக் கிளம்பிட்டேன். பாலசந்தர் என்னைப் பார்த்தார். அப்புறம் ஓவியத்தையும் பார்த்தார். ‘அருமையா வரைஞ்சிருக்கே. ஆத்மாவை அப்படியே இழுக்குது...’னு சொன்னார். அடுத்து அவர் சொன்னதுதான் ஆச்சர்யம்.

என் கண்ணை உத்துப்பார்த்திட்டு ‘இந்தப் படத்தில் நடிக்கிறியா... நல்ல ரோல்யா... என்னை நம்பு...’’னு சொன்னார்.
அது மேஜர் சுந்தர்ராஜன் பையன் கௌதம் நடிச்ச ரோல்! எனக்கு பதட்டமாகிவிட்டது. என்ன சொல்றதுன்னு புரிய மாட்டேங்கிது.
‘பார்க்கிறேன். அப்புறம் சொல்றேன். யோசிக்கிறேன்...’னு பல மாதிரி சொல்லிட்டு வந்திட்டேன்.

இப்ப நினைச்சால் ஆச்சர்யமாக இருக்கு. எல்லோரும் என்னைத் திட்டினாங்க. இப்பதான் மனசை எப்பவும் ஓப்பனா வைச்சுக்கணும்னு புரியது. ஆனால், எனக்கு இப்ப அதுபத்தி எந்த மனக்குறையும் இல்லை. ஆச்சர்யம் என்னன்னா, இதில் கே.பாலசந்தர் சாரோட மருமகள் கீதா கைலாசம் எனக்கு அம்மாவாக நடிக்கிறாங்க! ஏதோ ஒரு விடாத இடம் எனக்கு இருக்குன்னு புரிஞ்சது. சரின்னு சொல்லிட்டேன்.

ஒளிப்பதிவு செய்யும் வைட் ஆங்கிள் ரவிஷங்கர், என் நீண்ட நாள் நண்பர். இவரும் இயக்குநர் கணேஷ்பாபுவும் படத்தை வடிவமைப்பது ரொம்பவும் பிடிச்சிருக்கு. ‘கட்டில்’னு வேறு அர்த்தத்தை அது கொண்டு வரலை. வீடு என்பதும், அதன் பொருள்களும் அஃறிணை அல்ல. இந்த வீட்டில் 200 வருஷங்களா ஒரு கட்டில் கிடக்கு. மூணு தலைமுறையைப் பார்த்திருக்கு. ஏகப்பட்ட பேருக்கு அதில் பிரசவம் நடந்திருக்கு. வம்சம் விருத்தியாகியிருக்கு.

அதே கட்டிலில் பல மரணங்கள் நடந்திருக்கு. அதில் நடந்த தலையணை மந்திரங்கள், சந்தோஷங்கள், வருத்தங்கள், கண்ணீரில் நனைந்த தலையணைகள் எல்லாமே அந்தக் கட்டிலோட சம்பந்தப்பட்டு இருக்கு.

கட்டிலுக்குக் கால் இருக்கு. கையிருந்தால் அதனால் ஓர் உயிர்ச்சித்திரம் வரைய முடியும். அப்படி ஒரு கதை. அந்த வீட்டையும் கட்டிலையும் வித்துட்டு வேற இடத்திற்குப் போயிடணும்னு நினைக்கிற மூத்த மகனா, கணேஷ்பாபுவுக்கு அண்ணனா நடிக்கிறேன். பாசத்தைக் கொட்டிட்டு, பைசா உதவாமல் இருக்குறவன். பேசினால் தேள் மாதிரி கொட்டுவேன்.

எவ்வளவு பெரிய தப்பு செய்திருந்தாலும், அதை அவன் வேணும்னு செய்யாதவரைக்கும் மன்னிப்பு காத்திருக்கு. வயசுக்கோளாறு, ரத்தம் சூடா இருக்கும்போது எதற்கும் அஞ்ச மாட்டோமே, அப்படி அமைகிற சூழ்நிலைகளும் இதில் இருக்கு...’’ தன் ஓவியங்கள் போலவே அமைதியாகவும் அழுத்தமாகவும் அழகாகவும் பேசுகிறார் ஸ்யாம்.

தூரிகையில் நீங்க மன்னன்தான். ஆனால், கேமரா முன்னாடி..?
அதில் நான் பச்சை மண்ணு. அய்யா நடிக்கறது ரொம்பக் கஷ்டம்! நாம் ஒவ்வொரு படத்தையும் பார்த்திட்டு நாற்காலியில் சாஞ்சுக்கிட்டு ரவுஸ் அடிக்கிறோம். ஆனால், ஸ்பாட்டுல கேமிராவிற்கு முன்னாடி நின்னு, ஸ்டார்ட், கேமரா, ஆக்‌ஷன் சொல்லிட்டா எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போகும்.

ஒரு ஆளாக இருந்து இன்னொரு வாழ்க்கை வாழ்ந்து பார்க்கிறது கஷ்டம் இல்லையா... நானே அப்படித்தான் வரைஞ்சு மனிதர்களை சிருஷ்டிக்கிறேன்.
ஆனால், நடிக்க திணறிப்போயிட்டேன். பாலசந்தர் எத்தனையோ நடிகர்களை அறிமுகபடுத்தி வைத்து இன்னிக்கு அவர்கள்தான் முதல் வரிசையில் இருக்காங்க.அப்படிப்பட்டவரின் மருமகள் கீதாம்மா மகனாக நான் நடிக்கிறது எனக்கு ஆசிர்வாதம்..! அடுத்து முழுக்க சினிமாதானே?

நோ சான்ஸ்! இது மாதிரி நல்ல கேரக்டர் வந்தால் நடிப்பேன். அதற்காக ஓவியம் வரைவதை என்னால் விட்டுவிட முடியாது. ஏன்னா, அது என் சுவாசம்!

நா.கதிர்வேலன்