எங்கே எனது கவிதை



இந்தர் குமார்..!

விருதுகளாய் வாங்கிக் குவித்தவன். உலகத் தரத்துக்கு தமிழ்த் திரையுலகை உயர்த்திய கலைஞன். மனசுக்கு எப்பவும் 21 வயசுதான். எப்போதுமே சுறுசுறுப்பும் சிரிப்புமாய் உலவிய வயதாகிப் போன இளைஞன்.
கண்ணாடிப் பேழைக்குள்ளிருந்த அவனுடைய பூதவுடலுக்கு மாலை மரியாதை செய்ய திரையுலகமே திரண்டிருந்தது.‘இந்தர் குமாரின் இழப்பு திரையுலகிற்கே இழப்பு...’‘கண்களை இழந்து விட்டாள் கலையன்னை...’
- இப்படி யார் யாரோ பேட்டியைத் தொடர, எல்லா சானல்களின் கேமிராவும், மைக்கும் போட்டி போட்டுக்கொண்டு கபளீகரம் செய்தன.

உள்ளிருந்து இந்தரின் மனைவி சரஸாம்பிகாவின் பெருங்குரல் அவ்வப்போது எழுந்தது. அவளுடன் கூடவேயிருந்த கூட்டம் காபியும், பழச்சாறும் மாறிமாறி அவளுக்கும் தந்து தங்கள் வயிற்றையும் நிரப்பிக் கொண்டது.

இந்தரின் மகன் சந்திர குமார் முகத்தில் தந்தையின் இழப்பு தந்த துக்கத்தை விட, இனி நான்தான் ராஜா என்ற இறுமாப்புதான் அதிகம் தெரிந்தது. வீடு முழுக்க பணத்திமிரின் வாசனை!

இந்தரின் வளர்ப்பு மகன்களாகக் கருதப்பட்ட வெங்கட்டும், நர்சிம்மும், மணியரசுவும் பின்புறமாய் ஒதுங்கினர். சோகமும், துக்கமும் அவர்களது முகத்தில் அப்பிக் கிடந்தன.

உள்ளே, இந்தர் குமாரின் வாரிசுகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. சும்மாவே மரியாதை என்றால் என்ன விலை என்று கேட்பவர்கள்… அதிலும், இந்தரின் உதவியாளர்கள் என்றால் கிள்ளுக் கீரையாய் நடத்துவார்கள். தங்களின் அடிமைகள் என்பது போல கடுப்பேற்றுவார்கள். தங்கள் தந்தையின் மொத்தத் திறமையையும் கூறுபோட்டு விற்ப வர்கள் என்ற எண்ணத்துடன் வளைய வருபவர்கள்.

இழப்பின் களைப்பு இழைந்து கிடந்தது முகத்திலும், கண்ணிலும். பின்புறமிருந்த மரத்தின் நிழலில் நின்றனர்.
‘‘என்னடா… அம்மாவை காணோம்!’’
‘‘அம்மா வந்தால், இதுங்க சும்மாயிருக்குமாடா… கத்தி அசிங்கம் பண்ணாதா..?’’
‘‘அதுக்காக... அம்மா இல்லாமல் எப்படிடா…’’

‘‘அம்மாதானே ஒருவாரமா ஆஸ்பிட்டலில் இருந்து கவனிச்சுக்கிட்டாங்க. இவங்க ஒருத்தனாவது வந்து எட்டிப் பார்த்தானாடா…’’
‘‘என்னடா செய்றது... உயிர் பிரியறப்போ அம்மாதான் இருந்திருக்கிறாங்க. அம்மா மடியிலேதான் அப்பா உயிரை விட்டுருக்கார். ஆனா, உயிர் போனதுமே, ஆஸ்பிடல் நிர்வாகம், உடனே, இங்கே தகவல் தெரிவிச்சிருக்கிறாங்க...’’
‘‘ப்ச்... அம்மாவை நினைச்சாலே கஷ்டமா இருக்குடா...’’

‘‘ஹும்! நாம போய் அழைச்சிட்டு வந்திடலாமா… சங்கத் தலைவர்களும், பெரிய பெரிய ஆளுங்களும் இருக்கிறாங்க. தலைவர்கிட்ட பேசிட்டு அம்மாவை அழைச்சிட்டு வந்திடலாமா... கடைசியா அம்மா ஒரு தடவை முகம் பார்க்க வேணாமா!’’
‘‘ம்… சரிடா, நான் பேசுறேன்! நீங்க கிளம்புங்க… பேசிட்டு உடனே போன் பண்றேன்…’’ மணியரசு இயக்குநர் சங்கத் தலைவனைத் தேடிப் போக இருவரும் கிளம்பினர்.

அந்த அம்மா…
அவள், தன்னுடைய இருபதாவது வயதில், இந்தர் குமாரின் ஐந்தாவது படத்தில் கதாநாயகியின் தோழியாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவள்.  கிணற்றடியில் தண்ணீர் சேந்திக் கொண்டு நடந்து வரவேண்டும் என்றுதான் அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது.
அதை, அவள்… இப்படியும் உயிரோட்டமாய் செய்ய முடியும் என்று காட்டினாள்.

கிணற்றடியில் தண்ணீர் சேந்திக்கொண்டு, இயல்பாகத் தண்ணீரில் முகம் பார்த்து, தன்னையே ரசித்துக் கொண்டு. பிறகு, உள்ளங்கையினால், நீரில் அடித்துச் சிதறடித்து… நீர்த் திவலைகளில் கதுப்புகள் சிலிர்க்க, இதழோரக் குறும்புச் சிரிப்பு கண்களில் தெறிக்க, லேசாய் புடவையைத் தூக்கிப் பிடித்து கணுக்கால் கொலுசு மறைந்தும், மறையாமலும் தெரிய லேசாய் ஒரு ஓரப் பார்வையொன்றை விசிறிவிட்டு குடத்துடன் நடக்க…

அந்தக் காட்சி இந்தரை புருவந் தூக்க வைத்தது… ஓரிரு நிமிடமே வருகிற சீன் அது… கவிதை மாதிரி வந்திருந்தது !
இந்த இயல்பான நளினத்தைத்தான் கதாநாயகிக்கு புரிய வைக்க முயன்று, தோற்றுப் போய், தோழியை தண்ணீர் குடம் சுமந்து வரச் சொல்லி காட்சியை மாற்றிவிட்டு தன் உதவியாளனை ஷூட் பண்ணச் சொல்லி விட்டு விட்டேற்றியாய் நகர்ந்து அமர்ந்தவரை, அந்தப் பெண்ணின் நடிப்பு… அவருடைய எதிர்பார்ப்பை அவரே எதிர்பாராத சமயம் முழுமையாக செய்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.

அடுத்த படத்தில், அவளுக்கு முக்கியமான சவாலான பாத்திரம்… ஈரக் களிமண் போல குழைந்து கொடுத்தவள், அவர் கற்பனைகளை தன்னுள் உள் வாங்கி திரையில் உலவ விட்டாள். அவர் அவளை நுண்மையாக நகாசு பண்ண பண்ண, அவருடைய கற்பனையில் நினைத்ததை கை தேர்ந்த சைத்ரிகனைப் போல முகத்தில், உடல் மொழியில் என்று உணர்வுகளைத் தோய்த்து திரையில் காட்டினாள்.

அவளுடைய திறமையில் வசமிழந்தார் இந்தர். இருவருக்குமிடையேயான இருபது வயது வித்தியாசம் அந்த உறவில் புலப்படவேயில்லை. பூவொன்று பூப்பது போல அத்தனை இயல்பாக பூத்தது. பரிணமித்தது. ஒரு சிலரைத் தவிர யாருக்குமே உறுத்தவில்லை.அவருடைய மேதா விலாசத்துக்கு அவளுடைய தேவதா விசுவாசம் ஈடுகொடுத்தது. அவளும் உலக சினிமாக்களை தேடித் தேடிப் பார்ப்பாள். இருவர் இடையேயும் விவாதம் இரவையும் தாண்டி விடியல் வரையும் கூடப் போகும்.

அதில் இந்த மூன்று மகன்களும் கலந்து கொள்வார்கள். கடைசியில், ‘‘பார்த்தீங்களாடா உங்கம்மாவை! உங்கப்பாவையே ஜெயிச்சிட்டா!’’ என்பார் பெருஞ்சிரிப்புடன். பெருமிதம் கலந்த கர்வம் அதில் மினுங்கும். எப்படி என் தயாரிப்பு என்ற உரிமை த்வனிக்கும்.
இத்தனைக்கும் அவள் பேரழகி என்று சொல்ல முடியாது. மாநிறம்தான். பெரிய கரிய விழிகள் என்று கூட ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால், மின்னலடிக்கும் விழிவீச்சு.

ஒரு நிமிரல்…. ஒரு சீறல்… ஒரு ஓரப்பார்வை… சின்ன இதழ்த் துடிப்பு… லேசான சுழிப்பு… எல்லாமும் பேச வேண்டியதில் பாதிவேலையை செய்து விடும்.மெதுமெதுவே அவளும் சுவாதீனமாகி விட, அவளுக்காகவே சவாலான பாத்திரங்களைப் படைத்தார். அவளும் அனாயாசமாக ஈடு கொடுப்பாள். வெளிப்படங்களைக் குறைத்துக் கொண்டு விட்டாள்.

மைச் சிமிழைப் போல அழகான வீடு. சுற்றிலும் தோட்டத்தோடு ஆரண்யம் மாதிரி. குருவும் பத்தினியுமான அழகிய ஆதர்ஸ வாழ்க்கை. அவருடைய கலைத்தாகத்துக்கு அவளே வடிகால். அன்னையைப் போலத் தாங்கி, தோழியைப் போல தோள் கொடுத்து,… வெளியாட்கள் முன்பாக எதுவுமே பேச மாட்டாள். புன்னகையுடன் வரவேற்பதோடு சரி… மற்றவர்களிடம் அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘ஸார்’ என்ற ஒரு வார்த்தை மட்டுமே மரியாதையுடன் ஒலிக்கும்.

அவரால் உருவாக்கப்பட்டு, அவள் உயிர் கொடுத்த அந்தப் படங்கள் அன்றைக்கும்… ஏன், இன்றைக்கும் பேசப்படுபவை!அவருக்குக் கிடைத்த விருதுகளில் அவளின் உழைப்பும், பங்கும் கணிசமானது என்பதை யாராலுமே மறுக்க முடியாது.அந்த அவளை அழைத்து வரவேண்டியதுதான்…அமைதியாக இருந்தது அந்த வீடு. அதைக் கலைக்க விரும்பாமல் ஓசையெழுப்பாது வெங்கட்டும், நர்ஸிம்மும் கேட்டைத் திறந்து உள்ளே வந்தனர். கூட்டமும், கூச்சலுமாயிருந்த அந்தப் பெரிய வீட்டை விட, யாருமேயில்லாத மௌனத்தில் கிடந்த இந்த வீட்டில் இன்னும் ஆழமான துக்கம் சூழ்ந்து கிடப்பதாகத் தோன்றியது.

கண்ணுக்குத் தெரியாத துயரத்தின் மூச்சுக் காற்று அதீத வெக்கையுடன் சுழன்றடிப்பது போலத் தோன்றியது.
வாசலுக்கு நேரே, இந்தர் வழக்கமாய் உட்காரும் அந்தப் பெரிய ஆடும் நாற்காலி. அதில் அவருடைய படம். கீழேயும் மேலேயுமாக செண்பகப் பூக்கள். அவருக்குப் பிடிக்கும் என்பதாலேயே நர்சரியில் சிறு கன்றாக வாங்கி வைத்து வளர்த்தது. இந்த இருபது வருடங்களில் மரமாகிப் பூத்துக் குலுங்கியது.
சின்ன முத்துப் போல ஒளி விடும் விளக்கு! புகையில் கோட்டோவியம் தீட்டும் ஊதுபத்தி. மண்டியிட்ட நிலையில் நாற்காலியில் முகம் பதித்த அவள்…
‘‘அம்மா!’’

மெதுவே திரும்பினாள். நாசியும் முகமும் சிவந்து கிடந்தது. வட்டமான பெரிய திலகமும் சரிந்து வழிந்த பூச்சரமும்
கம்பீரம் தரமுயன்று தோற்றன.‘‘அம்மா… அந்த வீட்டுக்கு போயிட்டு வந்திடலாம்…’’
‘‘ஒரே ஒரு முறை அப்பாவை பார்த்துட்டு மரியாதை பண்ணிடலாம்...’’
அவள் மறுபுறம் தலையைத் திருப்பிக் கொண்டாள். உடல் குலுங்கியது.

சில நிமிடங்களுக்குப் பின்பு…..
‘‘வேணாம் வெங்கட்! உங்கப்பா முதலிலேயே என்னிடம் வாக்கு வாங்கிக்கிட்டார், அந்த வீட்டுப் படி ஏறக்கூடாதுன்னு…’’ அவளுடைய கை, படத்தைத் தடவியது.‘‘நான் இறந்து போயிட்டால் அந்த வீடு என் உடலை ஆர்ப்பாட்டமாய் எடுத்துட்டுப் போயிடும். நீ அங்கே போனா உன்னப் பேசியே கொன்னுடுவாங்க. அதனாலே நீ போகக் கூடாது. ஆனா, நீ என் சகி. என் ப்ரியத்துக்கு உகந்தவள். எப்பவுமே இதே போல பூவும் பொட்டோடும் இருக்கணும்! இது என் அடையாளம். நான் இங்கேதான் உன்னை சுத்திச் சுத்தி வருவேன். என் ஆன்மா இங்கேதான் இருக்கும். என் ஆன்மா இருக்கிற இடம்தானே உசத்தி!’’

அவர் சொன்னது காதில்  ஒலித்தது.பெரிய விம்மலுடன் அழுகை வெடித்தது. அதில் ஆற்றாமையா, காதலா, நேசமா, தனிமையா, காதலா… எல்லாமேவா…. அந்த அழுகையும் விம்மலும் ஒரு கட்டத்தில் ‘ஹக்’கென்ற சப்தத்துடன் நின்றது. அவள் உடல் தரையில் சரிந்தது. விழிகள் நிலை குத்திப் பார்த்தபடி நின்றன அசைவற்று…வெங்கட்டும், நர்ஸிம்மும் திடுக்கிட்டு, ஒரே எட்டில் அவளை அடைந்து தூக்க... தலை சரிந்தது.அந்த அழுகையும், விம்மலும் இப்போது அவர்களைத் தொடர்ந்து விரட்டியது.எங்கே எனது கவிதையென, பாதியில் முடிந்த கவிதையாய் இவளும்… தன் இணையின் இறுதிப் பயணத்தில்!             

17 நாட் அவுட்!

புது வருஷத்தில் புதுப் புன்னகையில் மிளிர்கிறார் த்ரிஷா. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, மல்லுவுட்டில் மோகன்லால், ஜீத்து ஜோசப் காம்பினேஷன் படம், டோலிவுட்டில் சிரஞ்சீவியின் ஜோடி என வரும் 2020யை கெத்தாக கொண்டாடும் த்ரிஷாவுக்கு, சினிமாவில் இது 17வது ஆண்டாகும்.

வீடியோவில் ஆடிஷன்!

‘சர்வம் தாளமயம்’ அபர்ணா பாலமுரளி, அடுத்து ‘சூரரை போற்று’கிறார். ‘‘சூர்யா சார் படத்துக்காக இயக்குநர் சுதா கொங்கராகிட்ட இருந்து ஆஃபர் வந்ததும் ஸ்வீட் ஷாக்கிங். ஆடிஷன்ல மதுரை ஸ்லாங் பேசச் சொன்னாங்க. கஷ்டமாகத்தான் இருந்துச்சு. அப்புறம், வீட்டுக்கு வந்து நானே பிராக்டீஸ் பண்ணினேன். அதை வீடியோவாகவும் சுதா மேமுக்கு அனுப்பினேன். செலக்ட் ஆகிட்டேன்...’’ என்கிறார் அபர்ணா.

ராஷ்மி ஹேப்பி!

தித்திக்கும் பொங்கலில் திக்குமுக்காடவிருக்கிறார் டோலிவுட் ரஷ்மிகா மந்தனா. மகேஷ் பாபுவுடன் அவர் நடித்த படம், ஜனவரியில் ரிலீஸ் என்பதால் இந்தக் குஷி. சமீபத்தில் அதன் டப்பிங்கையும் பேசி முடித்துவிட்டு திருப்தியாக புன்னகைக்கும் ராஷ்மி, தமிழில் கார்த்தியின் ‘சுல்தானி’லும் மினுமினுக்கிறார்.

- ஜே.செல்லம் ஜெரினா