ரத்த மகுடம்-86
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
‘‘கரிகாலனை எதற்காக பாண்டிய நாட்டுக்கு பல்லவ இளவரசரான ராஜசிம்மர் அனுப்பியிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்..!’’ கணீரென்று சொல்லிவிட்டு தன் நாசிக்குக் கீழே அடர்த்தியாக வளர்ந்திருந்த மீசையைத் தடவினார் பாண்டிய சேனாதிபதியான மாறவர்மன். ‘‘என்ன... உங்களுக்குத் தெரியுமா..?’’ பரபரப்புடன் கேட்டான் சாளுக்கியர்களின் உபசேனாதிபதி.‘‘வரலாற்றை அறிந்த அனைவருக்குமே அந்தக் காரணம் தெரியும்!’’ அலட்சியமாக பதில் அளித்தார் மாறவர்மன்.
![](http://kungumam.co.in/kungumam_images/2020/20200110/24.jpg) சொன்னவரை உற்று நோக்கினாள் சிவகாமி. அந்தப் பார்வையில், ‘அது என்ன காரணம்...’ என்ற வினா தொற்றி நின்றது.புரிந்துகொண்ட மாறவர்மன், தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டார்: ‘‘ஆண்டுக்கணக்காகத் தொடரும் பந்தம்தான்... அதனுடன் ஊடாடும் பகையும்தான்...’’ ‘‘புரியவில்லையே..?’’ சிவகாமி தன் புருவத்தை உயர்த்தினாள்.
‘‘அம்மணி... பல்லவர்கள் இடையில் வந்தவர்கள். ஆனால், சோழர்களும் பாண்டியர்களும் அப்படியல்ல! பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த நிலப்பரப்பில் அரசுகளை நிறுவியவர்கள்; நல்லாட்சி செய்தவர்கள். அன்று காவிரிப்பூம்பட்டினம் புகழ்பெற்றிருந்தது போலவே எங்கள் கொற்கையும் வணிகர்களின் சொர்க்க பூமியாகத் திகழ்ந்தது. எங்கள் இருவருக்கும் இடையில் ஒருவகையில் தாயாதி உறவு உண்டு என்றே சொல்லலாம். பெண் கொடுத்து பெண் எடுக்கும் வகையில் நெருக்கம் இருந்திருக்கிறது...’’
‘‘அதனால்தான் சோழ இளவரசரான கரிகாலரை பொடிப் பயல் என சில கணங்களுக்கு முன் அழைத்தீரா..?’’ நிதானமாகக் கேட்டாள் சிவகாமி. சங்கடத்துடன் நெளிந்தாலும் மீசையைத் தடவியபடி மாறவர்மன் தன்னை சமாளித்துக் கொண்டார்: ‘‘அதுதான் குறிப்பிட்டேனே... சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் உறவும் உண்டு... பகையும் உண்டு என்று...’’‘‘அதாவது பகையை மனதில் வைத்து உன் வார்த்தைகளை நீ உதிர்த்தாய்... நட்பை மனதில் வைத்து கரிகாலர் பாண்டிய மன்னரைச் சந்தித்து பல்லவர்களுக்கு ஆதரவு திரட்ட வந்திருக்கிறார் என்கிறாய்... அப்படித்தானே..?’’ ‘‘அப்படியில்லை என்கிறீர்களா..?’’ இடைமறித்தார் மாறவர்மன்.
சாளுக்கிய உபசேனாதிபதிக்கு ஒன்றும் புரியவில்லை. எனவே, அமைதியாக இருவரும் உரையாடுவதைக் கவனிக்கத் தொடங்கினான். ‘‘ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று கேட்கிறேன்..?’’ முகத்தில் பறந்த முடியை ஒதுக்கியபடி உதட்டைச் சுழித்தாள் சிவகாமி.
‘‘எப்படி இருக்கக் கூடாது என்கிறீர்கள்..?’’ கேட்டார் மாறவர்மன். தன் வயதையும் அனுபவங்களையும் பதவியையும் மதிக்காமல் ஒருமையில் அழைத்து சாதாரண வீரனைப் போல் தன்னை நடத்தும் சிவகாமியின் குரலும் உடல்மொழியும் அவரை எரிச்சல் அடைய வைத்தன. குரலிலும் அவை வெளிப்பட்டன. என்றாலும் சிவகாமி என்ன சொன்னாலும் அதை செவி கொடுத்து கேட்க வேண்டும் என பாண்டிய மன்னர் தன்னிடம் சொல்லியிருந்ததால் பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்.
மாறவர்மனின் எண்ண ஓட்டத்தை அவரது உடல் அசைவுகள் பிரதிபலித்தன. சிவகாமி அதை கவனிக்கவே செய்தாள். அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. ஆனால், அவரை மேலும் சீண்டிவிட்டு பார்க்க அவளுக்கு விருப்பமில்லை. அதேநேரம் தன் தொனியிலும் மரியாதையைக் கொண்டு வர அவள் முற்படவில்லை. இந்த மனநிலையுடனேயே ஒருமுறை பார்வையாளனாக நின்றுகொண்டிருக்கும் சாளுக்கிய உபசேனாதிபதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு உரையாடலைத் தொடர்ந்தாள்:
‘‘இப்படித்தான்...’’ சிவகாமி தன் உதட்டைச் சுழித்தாள்: ‘‘பாண்டியர்களும் சோழர்களும் ஏதோ ஆண்டுக்கணக்கில் இந்த நிலப்பரப்பை ஆண்டு வருவதாகக் கூறுகிறாய்... ஆனால், இடையில் களப்பிரர் சிலகாலம் இந்த மண்ணை ஆட்சி செய்ததை மறந்துவிட்டாய்...’’ ‘‘மறக்கவில்லை...’’ மாறவர்மன் தன் பற்களைக் கடித்தார்.
‘‘எனில் இப்படி பேசியிருக்க மாட்டாய்... மாறவர்மா... நீ குறிப்பிடுவதெல்லாம் உண்மைதான். பாண்டியர்களும் சோழர்களும் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள்தான். இதை நான் மறக்கவில்லை. அதனால்தான் கரிகாலரைக் குறித்து உயர்வாக சற்று நேரத்துக்கு முன் பேசினேன்... ஆனால்...’’ நிறுத்தியவள் மாறவர்மனின் கண்களை உற்றுப் பார்த்தாள்.
‘‘ம்... ம்...’’ என மேலே சொல்லும்படி நாசி துடிக்க மாறவர்மர் ஒலி எழுப்பினார்.‘‘களப்பிரர் காலத்தில் சோழர்கள் எங்கிருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது... பொறு... கரிகாலருக்கு தெரிந்திருக்கலாம் தனது மூதாதையர் குறித்து. ஆனால், உனக்கும் எனக்கும் தெரியாது. புரிகிறதல்லவா..? போலவே பாண்டியர்களும் எங்கே, எப்படி வாழ்ந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது! வேண்டுமானால் நீ அறிந்திருப்பாய்! இந்நிலையில் கடுங்கோன் தலைமையில் களப்பிரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் பாண்டியர்கள் அரசு அமைத்தார்கள். கடுங்கோனே பாண்டிய மன்னராகவும் பதவி ஏற்றார்...’’ ‘‘இவை எல்லாம் சரித்திரத்தில் இருப்பதுதானே..?’’ மாறவர்மன் புன்னகைத்தார்.
‘‘ஆம். அதே சரித்திரத்தில் பல்லவ மன்னர் சிம்ம விஷ்ணுவும் களப்பிரரை எதிர்த்தார் என்று இருக்கிறது!’’ சிவகாமி இப்படிச் சொன்னதுமே மாறவர்மரின் முகம் மாறியது.‘‘ஆவேசப்படுவதில் பயனில்லை மாறவர்மா! கடுங்கோனும் சிம்ம விஷ்ணுவும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடனும் கூட்டணி அமைத்தே களப்பிரர்களை வீழ்த்தினார்கள்! அப்போது சோழர்கள் எப்பக்கமும் இல்லை!’’
சிவகாமி என்ன சொல்ல வருகிறாள் என்பது மாறவர்மனுக்கு புரிந்தது. அதனாலேயே அவரது உடல் நடுங்கியது.அவரது அசைவுகளை அலட்சியப்படுத்திவிட்டு சிவகாமி தொடர்ந்தாள்: ‘‘எனவே, சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் எந்த அளவுக்கு நட்பும் பகையும் இருக்கிறதோ அதே அளவுக்கு பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் கூட நட்பும் பகையும் இருக்கிறது! பெண் கொடுத்து பெண் எடுப்பது வரை!’’
‘‘அட... ஆமாம்...’’ அதுவரை அமைதியாக நின்றிருந்த சாளுக்கிய உபசேனாதிபதி வியப்புடன் சொன்னான்: ‘‘எப்படி மகேந்திரவர்ம பல்லவரை சமண நெறியில் இருந்து திருநாவுக்கரசர் சிவநெறிக்கு மாற்றினாரோ அப்படி நின்ற சீர் நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னரையும் திருஞான சம்பந்தர் சைவ நெறிக்கு மாற்றினார் அல்லவா..? அந்த நின்ற சீர் நெடுமாறனின் மனைவியும் பாண்டியமாதேவியாக இருந்தவரும் கூட சோழ இளவரசி அல்லவா..?’’
‘‘சரியாகச் சொன்னாய் சாளுக்கிய உபசேனாதிபதி!’’ சிவகாமி தன் கரங்களைத் தட்டினாள்: ‘‘மாறவர்மா... பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் இருக்கும் உறவு புரிகிறதல்லவா..? உங்கள் மூவருக்குள்ளும் கொடுக்கல் வாங்கல் இருக்கிறது... எனவேதான் பல்லவர்களுக்கும் தங்களுக்கும் இடையில் இருக்கும் பகையைத் தீர்க்க பாண்டியர்களின் உதவியை நாடி சாளுக்கிய இளவரசர் விநயாதித்தர் மதுரையில் முகாமிட்டிருக்கிறார்.
இதே விஷயத்துக்காக பல்லவ இளவரசரான இராஜசிம்மரும் மதுரைக்கு வந்தால் தவறில்லை என இதன் காரணமாகத்தான் சொன்னேன்... ஆனால், தான் வராமல் எதற்காக சோழ இளவரசரான கரிகாலரை பாண்டிய நாட்டுக்கு பல்லவ இளவரசர் அனுப்பியிருக்கிறார் என்பதுதான் கேள்வி. ஏனெனில் இந்த வினாவுக்குள் யாரைச் சந்திக்க கரிகாலர் வந்திருக்கிறார் என்ற சந்தேகமும் ஊடாடி நிற்கிறது...’’ ‘‘ம்... ம்...’’ மாறவர்மன் அசைந்தார்: ‘‘யாரை கரிகாலன் சந்திக்கப் போகிறான்..?’’
‘‘அதைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்!’’‘‘உத்தேசமாக உங்களால்கூட கணிக்க முடியவில்லையா அம்மணி..?’’ மாறவர்மன் ஆச்சர்யப்பட்டார்.‘‘இல்லை! கணிப்புக்கு அப்பாற்பட்டவராக கரிகாலர் இருக்கிறார். காஞ்சியில் அவருடன்தான் நான் இருந்தேன்! ஆனாலும் காஞ்சிக்கு அவர் சென்ற காரியம் இப்போது வரை தெரியவில்லை...’’‘‘இதில் என்ன மர்மம் இருக்கிறது... பல்லவ மன்னரின் தாயாதியான ஹிரண்யவர்மர் அனுப்பிய ஆயுதங்களை எங்கள் போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் கைப்பற்றினார். அவரிடம் இருந்து அவற்றை மீட்டு பல்லவர்கள் வசம் அதை ஒப்படைக்கவும், காஞ்சி சிறையில் இருந்த தன் தந்தையை விடுவிக்கவும் கரிகாலன் காஞ்சிக்கு வந்தார்...’’ சாளுக்கிய உபசேனாதிபதி படபடத்தான்.
‘‘இதையெல்லாம் கண்ணாரக் கண்டாயா..? ஊகத்தின் அடிப்படையில்தானே சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தர் உட்பட நாம் அனைவரும் சொல்கிறோம்...’’ தன் கையில் இருந்த அரக்கை தூக்கிப் போட்டு பந்தைப் போல் பிடித்தாள் சிவகாமி.‘‘அப்படியானால்..?’’ சாளுக்கிய உபசேனாதிபதியின் குரலில் திகைப்பு வழிந்தது.
‘‘வேறொரு காரியமாகவே காஞ்சிக்கு கரிகாலர் வந்திருக்கிறார்... அந்தக் காரியத்தின் தொடர்ச்சியாகவே இப்போது மதுரைக்குள் நுழைந்திருக்கிறார்... அந்தக் காரியம் என்னவென்பதை நாம் கண்டுபிடித்தே ஆக வேண்டும்... நடைபெறவிருக்கும் பல்லவ- சாளுக்கியப் போருக்கும் கரிகாலரின் நடவடிக்கைகளுக்கும் சர்வநிச்சயமாக தொடர்பிருக்கிறது!’’
‘‘புரிகிறது அம்மணி... ஆனால், எப்படி கண்டுபிடிக்கப் போகிறோம்..?’’ மாறவர்மரின் குரலில் இப்போது சிவகாமியின் மீதான மரியாதை வெளிப்பட்டது.இந்த மாற்றத்தை சிவகாமி கவனித்தாள். பொருட்படுத்தவில்லை:‘‘அதற்காகத்தான் ஒரு வலையை விரித்தேன்...’’ ‘‘என்ன வலை..?’’ சாளுக்கிய உபசேனாதிபதியும் மாறவர்மனும் ஒருசேர கேட்டார்கள்.
‘‘முத்திரை மோதிரம்! ஆம். பாண்டியர்களின் முத்திரை மோதிரத்தை கரிகாலரிடம் கொடுத்திருக்கிறேன்!’’ ‘‘அதெப்படி உங்களுக்குக் கிடைத்தது..?’’ மாறவர்மன் குரலில் அதிர்ச்சி.‘‘இந்தக் கேள்வி அநாவசியம்... அவசியமானது அந்த முத்திரை மோதிரத்தை வைத்துக் கொண்டு கரிகாலர் என்ன செய்யப் போகிறார் என கண்காணிப்பது...’’‘‘எப்படி கண்காணிப்பது..?’’ உதடு துடிக்க மாறவர்மன் கேட்டார்.‘‘இதோ இப்படித்தான்...’’ சிரித்தபடி தனக்குப் பின்னால் திரும்பி சிவகாமி குரல் கொடுத்தாள்: ‘‘கரிகாலரே... சீனரே... மறைந்திருந்தது போதும்... வெளியே வாருங்கள்...’’
‘‘என்ன... அவ்விருவரும் இவ்வளவு நேரமாக இங்கேதான் இருக்கிறார்களா..?’’ கேட்டபடி சாளுக்கிய உபசேனாதிபதி வாளை உருவினான். மாறவர்மன் அதற்குள் தன் வாளை ஓங்கியபடி அந்த இருட்டுக்குள் பிரவேசித்து விட்டார்.அடுத்த கணம் அவரைப் பின்தொடர்ந்தபடி சாளுக்கிய உபசேனாதிபதியும் அங்கு சென்றான். இருவரும் இருள் பழகும்வரை காத்திருக்காமல் தங்கள் வாட்களைச் சுழற்றத் தொடங்கினார்கள். ஆனால், இருவராலும் காற்றை மட்டுமே கிழிக்க முடிந்தது! ‘‘அம்மணி... இங்கு ஒருவரும் இல்லை..!’’ மாறவர்மன் குரல் கொடுத்தார்.
‘‘இருக்கிறார்கள்...’’ நிதானமாகச் சொன்னபடி சிவகாமி அந்த இருட்டுக்குள் நுழைந்தாள். அவள் கரங்களில் வாள் ஒன்று பள பளத்தது: ‘‘கரிகாலரின் சுவாசக் காற்றை சுவாசித்தவள் நான்...’’ தன் நாசியை ஆழமாக இழுத்தாள்: ‘‘அந்த மணத்தை இப்பொழுதும் நுகர்கிறேன்! இங்குதான் அவர் இருக்கிறார்...’’மாறவர்மனும் சாளுக்கிய உபசேனாதிபதியும் சுற்றிலும் தங்கள் பார்வையால் அலசினார்கள். சுவர்கள்தான் தட்டுப்பட்டதே தவிர மனிதர்கள் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.கேள்வியுடன் இருவரும் சிவகாமியை நோக்கினார்கள்.
சிவகாமி அவர்கள் இருவரையும் பார்க்கவில்லை. அசையாமல் அப்படியே சிலையென நின்றாள்.எதற்காக அப்படி அவள் நிற்கிறாள் என இருவரும் யோசித்தார்கள்.சிவகாமியின் காதுகள் இரண்டும் ஒருமுறை எழுந்து தாழ்ந்தன. இதனைத் தொடர்ந்து அவள் உதட்டில் புன்னகை பூத்தது. அடுத்த கணம் கரகரவென்ற ஒலி அங்கிருந்த அமைதியைக் கிழித்தது.திடுக்கிட்டபடி மாறவர்மனும் சாளுக்கிய உபசேனாதிபதியும் ஓசை வந்த திசையை நோக்கினார்கள். மேலிருந்து சுவர் ஒன்று இறங்கிக் கொண்டிருந்தது!
சற்றும் தாமதிக்காமல் இருவரும் பாய்ந்து அந்தச் சுவரை மேலும் கீழே இறங்காதபடி தங்கள் தோளில் தாங்கி தடுக்க முற்பட்டார்கள்! முடியவில்லை. சுவர் இறங்குவதும் நிற்கவில்லை.மெல்ல மெல்ல கீழே இறங்கி தரையைத் தொட அந்தச் சுவர் முற்பட்டபோது -சிவகாமி தரையில் தவழ்ந்தபடியே, இறங்கிக் கொண்டிருந்த சுவருக்கும் தரைக்கும் இடையில் நுழைந்தாள்!
(தொடரும்)
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|