கலர்ஃபுல் பேக்கேஜ்! இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் அதிரடி



‘‘‘பட்டாஸ்’ இந்தத் தலைப்பு முதலில் ஒரு கொண்டாட்ட மனநிலையைத் தான் குறிக்கும். பின்னணியில் இதற்கு பாஸிட்டிவ் தன்மையிருக்கு. ஒருத்தன், தான் இருக்கிற இடத்திலிருந்து வெடிச்சு வெளியே வர்ற இடம்தான் ‘பட்டாஸ்’. ஓர் இடத்திலிருந்து தன்னை மாற்றி அமைச்சுக்கிற இடத்தில் தொடங்குகிற கதைன்னு சொல்லலாம்.

படபடன்னு இருக்கிற, இப்ப இருக்கிற புள்ளிங்கோ பசங்களின் மனநிலையை பிரதிபலிச்சு, பின் அதையும் தாண்டி ஒரு மனிதனாக உருவெடுக்கிற ஒரு பயணமாகவும் இந்த ‘பட்டாஸ்’ அமையும். இந்த பெயர் எளிதாக வெளியில் சென்று அடைய ஒரு பேக்கேஜ். நுட்பமான சினிமா மொழிக்கும் இதில் இடமிருக்கு. எதுக்கும் தீர்வு சொல்றது என் வேலையில்லை. ‘இப்படி இருந்தது, இன்ன விதமாக நடந்திருக்கு, இப்படி இவர் வர்றார்’னு தீர்வை பார்க்கிற ரசிகன் கையில் கொடுத்திடுறதுதான் உத்தமம்.

சொல்லப் போனால் அந்தந்த சூழ்நிலையில் வாழ்ந்து பார்க்கிறவர்களின் மனநிலை நமக்குத் தெரியாது. இந்த இரண்டு கேரக்டர்களிலும் வாழ்க்கை அருமையாக வந்திருக்கு என்பதில் எனக்கு நிச்சயம் இருக்கு. கலகலன்னு புறப்பட்டு வந்தாலும், சீரியஸான முகத்தோடு வெடிச்சு கிளம்பினாலும் இதில் தனுஷ் சாரை, எல்லோருக்கும் பார்க்கப் பிடிக்கும். தவிர கேரியரில் இது அவர் கனிந்து நிற்கிற கட்டம்!’’ வார்ப்பாகப் பேசுகிறார் இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார். பாலுமகேந்திரா, வெற்றிமாறனின் நம்பகமான கலை வாரிசு.

இப்ப தனுஷ் ரொம்ப வரவேற்கத்தக்க இடத்தில் வேறு இருக்கார்.?
எல்லோரும் சொல்லிக்கிற மாதிரி அவர் மெருகேறியே வந்திட்டு இருக்கார். ‘அசுரன்’ மாதிரி ஒரு படத்தில் அவர் இறங்கிட்டு இதில் வருவதும் நல்ல கட்டம். என்ன ஒரு விஷயம்னா, இந்த மெருகேற்றலில் அவருடைய தனிப்பட்ட குணநலன்களும் இருக்கு. அவர் இன்னிக்கு பெரிய ஹீரோ. எல்லா வகையிலும் தேசிய விருதுவரைக்கும் வாங்கிட்டு அதன் பெருமிதமே இல்லாமல் இருக்கார்.

அவர்கிட்டே ‘நோ...’ சொல்றதை எந்தத்தயக்கமும் இல்லாமல் சொல்லலாம். அதை நம்ம பக்கமே நின்னு புரிஞ்சுப்பார். மத்த ஹீரோக்கள் ஹர்ட் ஆவாங்களோனு நினைக்கிற விஷயம் இவர்கிட்டே இருக்கவே இருக்காது.தனுஷ் என்கிற மனிதர், நல்ல நடிகரா உருமாறுவதற்கான ஆதாரமாகக் கூட இதைப் பார்க்கிறேன். ஒரு விஷயத்தை அப்படியே கொண்டு போய் சின்னச் சின்னதா மெருகேற்றுவது அவருக்கு கை வந்த கலை.
கலகலப்பாக புள்ளிங்கோ மாதிரி சுத்திக்கிட்டு இருக்கிறதும் சரி, அவர் அடுத்த கட்டம் டிராவல் தாண்டி வர்றதும் சரி அருமையாக செய்திருக்கார். படத்திற்காக அவர் 100% தன்னை கொடுத்திருக்கார்.

‘வடசென்னை’, ‘மாரி 2’னு முடிச்சுட்டு வந்து இதில் கலந்தார். இன்னிக்கு அவர் வெறும் கமர்ஷியல் ஹீரோ மட்டுமில்லை. படத்தோட கலர்ஃபுல் பேக்கேஜுக்கு பெயர் ‘பட்டாஸ்’னுஇருக்கலாம். ஆனால், நாம் எல்லோரும் கனெக்ட் ஆகிற ஒரு முக்கியமான விஷயமும் இதிலிருக்கு. அவருக்கான தீனி இல்லாமல் இதில் அவர் நடிக்க வந்திருக்கறதுக்கான காரணமே இல்ல. தற்காப்புக் கலை பற்றின அம்சங்களும் இதில் ஊடாடியிருக்கு. அதில் பயிற்சி கொடுத்தவரே அவரின் பயிற்சிக்கான கவனம் பற்றியும், நேர்த்தி பற்றியும் ஆச்சர்யப்பட்டார்.

தனுஷ், மெஹ்ரின் பிர்ஸாடா ஜோடி எப்படி..?
ஹீரோயினுக்கு பாடலுக்கு மேலேயும் படத்தில் உயிர் நாடியான இடங்கள் இருக்கு. நாலைந்து தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டு வந்திருக்காங்க. அவங்களுக்கும் பெயர் சொல்லிக்கிற மாதிரி நல்ல ரோல். ‘புதுப்பேட்டை’யில் கடைசியாக சினேகாவும், தனுஷும் சேர்ந்து நடிச்சாங்க. அதுக்குப் பின்னால் அவங்க சேர்ந்து நடிக்கற படம் இது.

தனுஷ் இந்தப் படத்திற்கு எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு சினேகாவும் முக்கியம். தற்காப்புக் கலையில் அவருக்கும், சினேகாவுக்கும் பயிற்சி கொடுத்து அதிர வைச்சிருக்கோம். அவங்களுக்கு இந்த ரோல் ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. அது அவங்க இறங்கி வந்து செய்யும் போது நல்லாத் தெரிஞ்சது. நவீன சந்திரான்னு தெலுங்கிலிருந்து வில்லன் இறக்குமதி ஆகியிருக்கார். அவரை புதுசா ரசிக்கலாம்.

பாடல்கள் நல்லாயிருக்கு...
விவேக் மெர்வின் மியூசிக். ரெண்டு பேரின் காம்பினேஷன் சூப்பர். அவங்க ஏற்கனவே இணையதளத்தில் ‘உரசாதே’ பாடலில் எக்கச்சக்க ஹிட் அடிச்சிருக்காங்க. ஏழு பாடல்கள் இருக்கு. ஓம்பிரகாஷ்தான் காமிரா. தனுஷ் கூட அவர் நிறைய தடவை களமாடியிருக்கார். என் கூட அவர் இதுதான் முதல் தடவை.

படத்தோட தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் சார். அனுபவத்தில் கனிந்தவர். எனக்கு அவர் கூட வேலை பார்க்கிறது பாலுமகேந்திரா சார்கிட்டே இருந்த மாதிரியிருக்கு. ஒரு விதத்தில் கண்டிப்பான வாத்தியார். நாம் தொழிலில் அக்கறையாக இருக்க உதவுவார்.

நமக்கும் அவ்வப்போது காதைத் திருகி சொல்லிக் கொடுக்கிற வாத்தியார் இருந்தால் வாழ்க்கை நல்லாயிருக்கும்னு தோணுது. எனக்கு அவர் அப்படி இருந்தார்.

இந்த ‘பட்டாஸ்’ படத்தில் பிடிச்ச விஷயம் என்னன்னா, ஒரு விஷயத்தை எடுத்துச் சொன்னது, நினைச்சது நடந்திருக்கு.எல்லாத்தையும் மனசில் படுகிற மாதிரியும், நம்புறமாதிரியும் சொல்ல வைக்கிறதுதான் நல்ல சினிமா. அப்படியும் ‘பட்டாஸ்’ நல்லபடியாக வந்திருக்கு.   
       
நா.கதிர்வேலன்