நியூஸ் சாண்ட்விச்



முதியோர் இல்லத்தில் காதல் திருமணம்!

கேரளாவில் முதியோர் காப்பகத்தில் நடந்த திருமணம்தான், இப்போது ஹாட் டாப்பிக். காரணம், மணமக்கள் இருவருக்கும் வயது அறுபதிற்கு மேல்!
கோச்சனியன் மேனன், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் லட்சுமி அம்மாளின் கணவருக்கு உதவியாளராக இருந்தார். பின், வேறு இடத்தில் வேலை கிடைக்க இவர்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இரண்டு மாதங்களுக்கு முன் முதியோர் காப்பகத்திற்கு வந்த போதுதான், மறுபடியும் லட்சுமி அம்மாளைச் சந்தித்துள்ளார். 21 வருடங்களுக்கு முன் லட்சுமி கணவரை இழந்து, உறவினர்களுடன் வசித்து இரண்டாண்டுகளுக்கு முன் இந்த காப்பகத்திற்கு வந்தது தெரியவந்தது.
பின் இருவருக்கும் காதல் மலர்ந்து, டிசம்பர் 28 அன்று முறைப்படி திருமணம் நடந்தது. இந்த திருமணத்தை கேரள விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். அத்துடன் திருமண புகைப்படத்தை தன் டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டார்.

கோலம்... போராட்டம்...

இந்திய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையோரம் மாணவர்கள் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு 6 மாணவர்கள் சேர்ந்து, அமைதியான முறையில் கோலம் வரைந்து, இந்திய குடியுரிமை சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் எதிர்த்து வாசகங்கள் எழுதினர்.

உடனே அங்கு வந்த போலீசார், கோலம் வரைந்த மாணவிகளை கைது செய்து, சில மணி நேரம் கழித்து விடுவித்தனர். அதற்குள் இத்தகவல் வலைத்தளங்களில் பரவி, இப்போது இது மாநில அளவிலான போராட்டமாக மாறிவருகிறது!

பில்கேட்ஸுடன் சீக்ரெட் சாண்ட்டா

ரெட்டிட் என்ற இணையதளம் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சீக்ரெட் சாண்டா விளையாட்டை ஏற்பாடு செய்யும்.
இதில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் கலந்துகொள்வார். இந்த ஆண்டு 33 வயதான பெண் ஒருவருக்கு பில்கேட்ஸ் பரிசுகள் அனுப்ப வேண்டும்.

அதற்காக அப்பெண்ணிற்கு என்ன பிடிக்கும் என்ற தகவல்களை சேகரித்து, மொத்தம் 37 கிலோ எடை கொண்ட பல பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறார் நம் கோடீஸ்வரர். மேலும் அப்பெண்ணின் மறைந்த தாயின் நினைவாக நன்கொடையும் வழங்கி இன்ப அதிர்ச்சியைப் பரிசாக அளித்திருக்கிறார் பில்கேட்ஸ்!

சைக்கிள் கலெக்டர்

தெலங்கானாவின் நிசாமாபாத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற ஆட்சியர் நாராயண ரெட்டி, சைக்கிள் ஓட்டிச் சென்று அரசு அலுவலகங்களில் மேற்பார்வை செய்த விவரம் வெளியாகி பரபரப்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

காலையிலேயே தயாராகி சைக்கிளில் பொது மக்களைப் போல சாதாரணமாக நகரம் முழுக்க விசிட் அடித்துள்ளார். வழியில் பல இடங்களை பார்வையிட்டு கடைசியாக அரசு பொது மருத்துவமனை வந்த ஆட்சியர், தன் அடையாளத்தை வெளிக்காட்டாமலே ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

கடைசியாக அவரை அடையாளம் கண்டு கொண்ட ஊழியர்களிடம், வேலையில் கவனக்குறைவுடன் மெத்தனமாகஇருக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி எச்சரித்து அனுப்பியுள்ளார்.  பதவியேற்ற சில தினங்களிலேயே பொறுப்புடன் செயல்படும் ஆட்சியரை மக்கள் மெச்சி வருகின்றனர்.

பருவம்... பாடம்!

அடுத்த கல்வியாண்டு முதல், அனைத்து பொது பள்ளிகளிலும் பருவநிலை மாற்றம் குறித்த பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன. ம்ஹும், இந்தியாவில் அல்ல. இத்தாலியில்!எதிர்காலத் தலைமுறையினர் வரவிருக்கும் காலநிலை சீற்றங்களுக்கும், அவசரக் காலத்திற்கும் தயாராயிருந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக அந்நாட்டு கல்வி அமைச்சர் லோரென்சோ ஃபியோராமண்ட் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உலகிலேயே பருவநிலை மாற்றத்தைக் கட்டாய பாடமாக்கிய நாடு என்ற பெருமையும் இத்தாலியைச் சேர்கிறது.

போக்குவரத்து விதிமீறலா..? ஏழைகளுக்கு உணவு கொடு!

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் போக்குவரத்து விதியை மீறி வாகனங்களை நிறுத்தும் ஓட்டுனர்கள், அபராதத் தொகைக்கு நிகரான உணவுப் பொருட்களை வாங்கி எளியோருக்குக் கொடுக்கலாம் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதேபோல கடந்த ஜூலை மாதம், அபராதப் பணத்திற்கு பதிலாக மாணவர்களுக்குத் தேவையான பள்ளிப் பொருட்களை வாங்கிக்கொண்டார்கள். இப்படி 2016 முதல் அபராதத் தொகைக்கு பதிலாக நன்கொடை வாங்குவதை அரசாங்கம் வழக்கமாக்கியிருக்கிறது.

எஸ்பிஐயில் பணம் எடுக்க செல்போன் தேவை!

எஸ்பிஐ ஏ.டி.எம்களில் இனி இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பணம் எடுக்கும் போது, நம் அலைபேசிக்கு வரும் OTP  நம்பரை பதிவிட்டுத்தான் பணம் எடுக்க முடியும். போலி பண அட்டைகள் மூலம், ஏடிஎம்களிலிருந்து பணம் எடுத்து மோசடி செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பான பணப் பரிவர்த்தனையை உறுதி செய்யவே இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, பத்தாயிரத்திற்கு மேல் இரவு நேரத்தில் பணம் எடுக்கும் போது, வங்கியுடன் இணைக்கப்பட்டிருக்கும் கைப்பேசி எண்ணுக்கு OTP எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும். அந்த எண்ணைப் பதிவிட்ட பிறகே பணத்தை எடுத்துச் செல்லலாம்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்