வெர்ஜின் பையனுக்கும் சிங்கிளா இருக்க நினைக்கிற பெண்ணுக்கும் காதல்! நானும் சிங்கிள்தான் ரவுசு



‘‘முப்பது வயசை தொடறாங்க 90’s kids. அவங்க ஜவ்வ்வ்வ்... லவ்வை பார்த்து இந்த உலகமே ஜிவ்வுனு எதிர்த்தாலும், மூஞ்சில காறித்துப்பினாலும் அதையெல்லாம் துடைச்சுட்டு ஸ்டைலா, கெத்தா இருக்காங்க.அவங்களோட ஸ்டோரிதான் ‘நானும் சிங்கிள்தான்’. பின்கழுத்துல ‘வெர்ஜின் பாய்’னு டாட்டூ வரைஞ்சிட்டு, கமிட் ஆகறதுக்காக சுத்துற பையனுக்கும், சிங்கிளாகவே இருக்கணும்னு நினைக்கற பொண்ணுக்குமிடையே லவ் வந்தால் என்னவாகும்?

இதுதான் ஒன்லைன். சிம்பிளா தோணினாலும், முழுக்க முழுக்க கலகலக்க வைக்கற கமர்ஷியலான டிரீட்மெண்ட் படத்துல இருக்கு. நயன்டீஸ் கிட்ஸ் கொண்டாடுற படமா எங்க படமிருக்கும்!’’ நம்பிக்கை மின்ன பேசுகிறார் ‘நானும் சிங்கிள்தான்’ படத்தின் அறிமுக இயக்குநர் ஆர்.கோபி. இதற்கு முன் யூடிப்பில் ‘வெர்ஜின் பசங்க’ என்ற வெப்சீரீஸை இயக்கியவர் இவர்.

படத்தோட டீசர்ல ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’னு வருதே..?
அந்த வார்த்தை டீசர்ல இடம்பெற்றதுமே ‘அப்படீன்னா என்ன’னு பலரும் ஆர்வமா விசாரிச்சாங்க. இப்ப ‘டேட்டிங்’ வார்த்தையை எப்படி சகஜமா உச்சரிக்கிறோமோ, அப்படி இனி ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ பத்தியும் சொல்வோம். டீசர் பார்த்துட்டு படம் இப்படி இருக்கும்னு ஒரு முடிவுக்கு வந்திருப்பீங்க. ஆனா, படம் வேற! அப்படி ஒரு ஸ்கிரிப்ட் இது. குட்டி குட்டி சஸ்பென்ஸ் நிறைய வச்சிருக்கோம்.

ஆரம்பத்துல, வேற ஒண்ணா யோசிச்சேன். விக்னேஷ் சிவன் மாதிரி ஒரு பையன், நயன்தாரா மாதிரி ஒரு பொண்ணை விரும்பறதா எழுதினேன். தயாரிப்பாளரைத் தேடி அலையும்போது, எல்லாருமே என்னோட வெப்சீரீஸ் ‘வெர்ஜின் பசங்க’ மாதிரி ஒரு யூத்ஃபுல் எண்டர்டெயின்மெண்ட் வேணும்னு சொன்னாங்க.

அப்படித்தான் இந்தக் கதையை ரெடி பண்ணினேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள சப்ஜெக்ட். படத்துல தினேஷ், தீப்தி ஸடி, ‘மொட்டை’ ராஜேந்திரன் தவிர புதுமுகங்களும் இருக்காங்க. சின்னத்திரையில் என்னோட புராஜெக்ட்ஸ்ல ஒர்க் பண்ணின பலரும் இந்தப் படத்துல இருக்காங்க. அப்படித்தான் கே.ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவாளரானார். ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்த ஹித்தேஷ் மஞ்சுனாத் இசையமைப்பாளராக அறிமுகமாகறார். ஸ்டண்ட்ஸை கனல் கண்ணனும், ஆடம் ரிச்சர்ட்ஸும் கவனிச்சிருக்காங்க. லண்டன்ல இடம் பெறும் ஃபைட்டை ஆடம்தான் பண்ணினார். ஆண்டனி எடிட் பண்றார்.

எப்படி இருந்தது லண்டன்?
எதுக்காக லண்டன் போனோம் என்பது கதையில் இருக்கு. அங்க நாங்க போன நேரம் நல்ல நேரம். ராத்திரி ஒன்பது மணி வரை பகல் பொழுது
தான். ஸோ, சலிக்காமல் ஷூட் பண்ணினோம். தினேஷ், மொட்டை ராஜேந்திரன்னு எல்லாருமே அடுத்த அடுத்த லொகேஷன்களுக்கு எங்களோடவே நடந்து வந்தாங்க. சின்னச் சின்ன ஒர்க்கை ஷேர் பண்ணிக்கிட்டாங்க.

இந்தக் கதையை நிறைய ஹீரோக்களுக்கு சொல்லியிருப்பேன். சிலர் இதை உள்வாங்கிக்க சிரம்ப்பட்டாங்க. ஆனா, தினேஷ் எளிதா புரிஞ்சுக்கிட்டார். அவரை ‘அட்டகத்தி’யாக லோக்கல் பையனாகத்தான் பாத்திருப்போம். இதுல அவர் டாட்டூ வரையறவரா வர்றார். பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கற கன்டன்ட்ல அவர் சந்தோஷமா வந்து கமிட் ஆனார். மைனூட்டான விஷயங்களைக் கூட அழகா இம்ப்ரூவ் பண்ணிடுவார்.
ஹீரோயின் தீப்தி, புதுமுகமா..?

இல்ல. தீப்தி ஸடி. மும்பை பொண்ணு. மலையாளம், மராத்தி, கன்னடானு ஒரு ரவுண்ட் அடிச்சிருக்காங்க. துல்கர் சல்மானின் ‘சோலோ’வில் கூட நடிச்சிருக்காங்க. தமிழுக்கு இப்பதான் வந்திருக்காங்க. நிறைய ஹீரோயின்ஸ் தேடிப்பார்த்தோம். பிகினி போட்டு நடிக்கக்கூட ரெடியா இருந்தாங்க. ஆனா, மாடர்னா சில விஷயங்கள் இருக்குனு சொல்லி நடிக்கத் தயங்கினாங்க.

தீப்தி கண்டிஷன் எதுவும் போடல. ஏற்கெனவே படங்கள் பண்ணினவர். இதுல அவங்க ஐடில ஒர்க் பண்ற பொண்ணு. அதைப்போல மொட்டை ராஜேந்திரன், ரொம்பவே குழந்தை மனசுக்காரர். இதுல அவர் ஆர்.ஜே.வா வர்றார். காதலர்களுக்கு லவ் டிப்ஸ் அள்ளி வீசுவார். ‘ஒரு லவ் மேட்டரு...’னு அட்வைஸ் கேட்க அவர்கிட்டபோய் நின்னா, ‘லவ்வா? மேட்டரா’னு கேட்டு தெளிவடைவார்!
உங்க அறிமுகம்..?

இது எனக்கு முதல் படம். இதுக்கு முன்னாடி நான் சின்னத்திரையில ரைட்டரா இருந்திருக்கேன். நிறைய சேனல்கள்ல ஒர்க் பண்ணியிருக்கேன். முதன் முதலா வெப்சீரீஸ் இயக்கும் வாய்ப்பு கிடைச்சது. பண்ணினேன். இந்தப் படம் கிடைக்க அதுதான் ஒரு விசிட்டிங் கார்ட்.
நான் வெப்சீரீஸ் இயக்கின டைம்ல அது பாப்புலர் ஆகல. வெப்சீரீஸ் இப்ப பாலிவுட் வரை டிரெண்டா ஆகியிருக்கு. பெரிய ஸ்டார்கள் கூட விரும்பி வந்து நடிக்கறாங்க.  

வெப்சீரீஸ்ல நிறைய ப்ளஸ் இருக்கு. உதாரணமா, என்னோட ‘வெர்ஜின் பசங்க’ மாதிரி ஒரு கதையை படமா பண்றது சவால். நிறைய விஷயங்களை மனசுல வச்சு, பண்ண வேண்டியிருக்கும். சென்ஸார்ல இது இருக்குமா, தப்புமானு கூட யோசிக்கணும். சில தயாரிப்பாளர்கள் ‘இந்தக் கதைல அந்த விஷயம் வேணாம்... இந்த விஷயம் வேணாம்’னு மாத்த சொல்வாங்க. இப்படி பஞ்சாயத்து எதுவும் வெப்சீரீஸ்ல இல்ல. அதனாலேயே பலரும் அதில் கவனம் செலுத்தறாங்க!

மை.பாரதிராஜா