நான்... ஓவியர் மாருதி



தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்மெய் வருத்தக் கூலி தரும்இந்தக் குறளைத்தான் நான் எப்போதும் கடைப்பிடிக்கறேன். உழைப்பை மட்டுமே நம்பி வாழறேன்.புதுக்கோட்டைல 1938, ஆகஸ்டு 28 அன்று பிறந்தேன். 81 வயசு முடிஞ்சிருக்கு. அப்பா பள்ளி வாத்தியார். என் கூட பிறந்தவங்க அஞ்சு பேர். மூணு சகோதரர்கள், ரெண்டு சகோதரிகள்.

அஞ்சாறு வயசுல குலப்பட்டி பாலையா ஸ்கூல்ல சேர்ந்தேன். என் பள்ளி காலம்தான் இந்தியா சுதந்திரம் வாங்கப்போற காலம். ஹைனஸ் என்பார்களே... அவர்கள் ஆட்சி செஞ்ச காலம்.அப்பா, இந்தச் சின்ன டிசைன் எல்லாம் ஓவியமா போடுவார். வரலட்சுமி நோன்பு அன்னைக்கு சொம்புகளையெல்லாம் வர்ணம் பூசி அதுல டிசைன் செய்வார். நானும் உதவி செய்வேன். அதுதான் எனக்கு ஓவியக்கலை உள்ள வளர முதல் விதை.
அப்புறம் நானா பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். பி.யு.சின்னப்பா, பாகவதர், சிவாஜி, எம்ஜிஆர் போஸ்டர்களெல்லாம் வரும். அதை வைச்சு வரைஞ்சு பார்ப்பேன். பிறகு பத்திரிகைல வர்ற ஓவியங்கள் மேல ஆர்வம் விழுந்தது.

என் வீட்டைச் சுத்தி யார் என்ன பத்திரிகை வாங்கறாங்கனு எனக்கு அத்துப்படி. என்று அந்தப் பத்திரிகைங்க வருதுன்னும் தெரியும். சரியா காலைலயே போய் அந்தந்த வீட்ல நிப்பேன். சிலர் அன்றைக்கே கொடுப்பாங்க. சிலர், ‘அப்புறம் வாடா’னு சில நாட்கள் கழிச்சு தருவாங்க. இன்னும் சிலர் தரவே மாட்டாங்க. வேறு சிலர், கெடு விதிப்பாங்க... ‘நாளைக்கே தரணும்...’ இப்படி.

ஆனா, மாலை அவங்க வேலை முடிஞ்சு வர்றதுக்குள்ள அட்டைப்படத்துல தொடங்கி சிறுகதை, தொடர்கதை, ஜோக்ஸ் வரை அத்தனை படங்களையும் வரைஞ்சு பார்த்திருவேன். அப்பாவுக்கு பத்திரிகை வாங்கற அளவுக்கு வருமானம் இல்ல. ரூ.67தான் அவர் சம்பளம். அதுல நாங்க ஏழு பேர் வாழணும். தரைலயும் சுவர்லயும் வரைஞ்சுதான் எனக்குப் பழக்கம். நாங்க இருந்தது வாடகை வீடு. சுவர் முழுக்க வரைஞ்சிருக்கேன். அப்பா டீச்சரா இருந்ததால சாக்பீஸ் கிடைக்கும். அதை வைச்சு தரை எல்லாம் வரைவேன்.

ஒருநாள் வீட்டுக்கு வந்த ஹவுஸ் ஓனர், சுவர்ல நான் வரைஞ்சிருக்கறதைப் பார்த்தார். திட்டுவார்னு நினைச்சேன். ஆனா, பாராட்டினார். அதோடு, ‘சுவர்ல, தரைல வரையறது பயிற்சியா வராது... காகிதத்துல வரைஞ்சு பழகு... அப்பதான் யார்கிட்டயாவது காட்ட முடியும்’னு சொன்னார்.
இதுக்கு பிறகுதான் காகிதத்துல வரைய ஆரம்பிச்சேன். படிப்புல பெருசா நாட்டமில்ல. ஏதோ பாஸ் ஆகிட்டிருந்தேன். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் என் மேல ஏகப்பட்ட வருத்தம். ஓவிய விருப்பத்தால எங்க பொதுத் தேர்வுல கோட்டை விட்டுடுவனோனு பயந்தாங்க.

அவங்க ஆதங்கம் சரிதான். 4வது ஃபாரத்துல - அதாவது இப்போதைய 9ம் வகுப்புல - ஃபெயிலாகிட்டேன். வாத்தியார் பையனே இப்படினா... அப்பா ரொம்ப கோபப்பட்டார். இப்ப மாதிரி உடனே எல்லாம் எழுத முடியாது. திரும்ப ஒரு வருஷம் படிக்கணும்.இந்த நேரத்துல மதுரையை சேர்ந்த ஒரு ஓவியர்... எந்த லைனும் இல்லாம ஒரே ஸ்ட்ரோக்குல வரைவார். அப்ப இருந்த ஒரு கட்சியோட சின்னம் இரட்டை மாட்டு வண்டி. அதை அப்படியே வரைவார்.

அவர் எங்க எல்லாம் வரையறாரோ அங்க எல்லாம் நின்னு கவனிப்பேன். அதை அப்படியே வீட்ல வந்து வரைஞ்சு பார்ப்பேன். இது அப்பா, அம்மாவுக்கு இன்னும் வருத்தத்தை ஏற்படுத்துச்சு. ‘நீ பாஸானா உன்னை ஆர்ட்ஸ்ல சேர்க்கறோம்’னு சொன்னாங்க.ஆர்ட் ஸ்கூல் ஆர்வத்துல 10வது படிச்சு பாஸானேன். அடுத்து கல்லூரி. பி.யூ.சி ஒரு வருஷம் போனேன். அதாவது ஆர்ட்ஸ் & சைன்ஸ் கல்லூரி. இதைதான் அப்பா ஆர்ட்ஸ்ல சேர்க்கறேன்னு குறிப்பிட்டிருக்கார்!

நான் படிச்சது தமிழ் மீடியத்துல. அங்க எல்லாமே இங்கிலீஷ். எனக்கும் ஒண்ணும் புரியலை. அப்பாகிட்ட பயந்துகிட்டே படிப்பெல்லாம் வரலைனு சொல்லிட்டேன். படிப்புக்கும் முழுக்கு போட்டாச்சு.என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருந்தது. காலைல எழுந்து கோயில்களுக்குப் போய் அங்க உட்கார்ந்து சிலைகளை எல்லாம் வரைவேன். ஓவியர் சில்பியின் ஓவியங்களுக்கு நான் ரசிகன். ஓவியர் மாதவனை மானசீக குருவா ஏத்துக்கிட்டேன்.
சென்னைல இருந்து வர்ற ஓவியர்கள்கிட்ட, ‘அங்க வந்தா வேலை கிடைக்குமா’னு கேட்பேன். ‘வெறுமனே வரைஞ்சா போதாது, எழுத்துகள் எழுதியும் பழகணும்’னு சொன்னாங்க. சினிமா போஸ்டர்கள் எல்லாம் உருவாக்கற இடங்கள்ல வேலை கிடைக்கும்னு புரிஞ்சிக்கிட்டேன். எழுத்துகள் எழுதி பழகினேன். சென்னைக்கு கிளம்பி வந்தேன்.

ஒரு சினிமா போஸ்டர் விளம்பரம் தயாரிக்கிற இடத்துல வேலை கிடைச்சது. சம்பளம் ரூ.50. எம்ஜிஆர், சிவாஜி படங்களை வெட்டி ஒட்டி, அதுல தலைப்பு , விபரங்கள் எல்லாம் எழுதணும்.எனக்கு பத்திரிகைல வேலை செய்ய ஆசை. ‘குமுதம்’ ஆபீசுக்கு போய் வாய்ப்பு கேட்டேன். அங்கதான் அப்ப ஃபிரீலேன்ஸ் ஆர்ட்டிஸ்டுகளுக்கு அதிக வாய்ப்பு கொடுப்பாங்க. எனக்கும் கான்செப்ட் கொடுத்து வரையச் சொன்னாங்க. வாஷ் டிராயிங். அதாவது ஒரே கலர்ல வரையப்படும் ஓவியம்.

ஒண்ணு வரைஞ்சுட்டுப் போய் கொடுத்தேன். ‘இந்த மாதிரி ஓவியங்களை நாங்க போடறதில்லையே’னு சொல்லி அதை வாங்கி வைச்சுக்கிட்டாங்க. பார்த்தா சில நாட்கள்ல என்னுடைய வாஷ் ஓவியம் அட்டைப்படமா வந்தது!ஊர்ல இருந்து அண்ணன் வர்றப்ப எனக்கு ஒரு ரூபா கொடுப்பார். அதை வைச்சு பத்திரிகைங்க எல்லாம் வாங்கி, எந்தெந்த பத்திரிகைகள்ல எப்படி ஓவியம் வரையறாங்கனு பார்ப்பேன்.

என் மானசீக குரு மாதவனோட உறவினரான ஓவியர் ஆர்.நடராஜன்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். ஒத்தாசையா அவருக்கு இருந்துகிட்டே ஓவியம் கத்துக்கிட்டேன். நானும் நடிகர் சிவகுமாரும் ஆர்.நடராஜனுடைய சிஷ்யர்கள்!மெல்ல மெல்ல பத்திரிகை வேலைகள் வர ஆரம்பிச்சது. வெறுமனே பத்திரிகை ஓவியங்களா இல்லாம ஆயில் பெயிண்டிங்கும் கத்துக்கிட்டேன். அதுதான் இப்ப வரை எனக்கு அதிக வருமானம் தருது. காரணம், அதன் விலை அதிகம். நிறைய பேர் தங்களை அல்லது தங்களுக்கு வேண்டியவர்களை ஓவியமா வரையச் சொல்லித் தருவாங்க. அல்லது நான் வரைஞ்ச ஓவியங்களை ஆன்லைன்ல வாங்கறாங்க.

இப்படியான வாழ்க்கைக்கு இடைல எனக்கு நிறைய பெண் ரசிகைகள் கிடைச்சாங்க. தேடி வரத் தொடங்கினாங்க. நான் கொஞ்சம் சரியான உடல் தேகம், ஃபங்க், தொங்கு மீசை... இப்படி இருப்பேன். அதனாலயே கொஞ்சம் பெண் ரசிகைகள் அதிகம். அதுவரை திருமணம் வேண்டாம்னுதான் இருந்தேன். வயசுக்கே உரிய சபலத்தால எங்க பிரச்னை வந்துடுமோன்னு வீட்ல பெண் பார்க்க ஆரம்பிச்சாங்க.
இங்க என்னையும் ஒரு பெண் காதலிக்கத் தொடங்கிட்டாங்க! இது ஆகற காரியமில்லைனு அவங்களுக்குப் புரிய வைச்சு நல்லவிதமா நாலு வார்த்தைகள் பேசி அவங்களை அனுப்பினேன்.

எனக்குள்ள சில முடிவுகள் இருந்தது. என் வருமானம் பற்றித் தெரிஞ்ச... என் ஓவியங்களைப் புரிஞ்ச பெண் வேணும்னு ஆசைப்பட்டேன். அதே மாதிரி விமலா கிடைச்சாங்க. தஞ்சாவூர்ல அரசு வேலை பார்த்துட்டு இருந்தாங்க.திருமணம் முடிஞ்சு சந்தோஷமா வாழ ஆரம்பிச்சோம்; இப்ப வரை மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு இருக்கோம். எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவ சுபாஷினி. சின்னவ சுஹாசினி. ரெண்டு பேருமே எம்பிஏ படிச்சிருக்காங்க; வேலை பார்க்கறாங்க; திருமணமாகி செட்டிலாகிட்டாங்க. பெரியவளுக்கு ரெண்டு குழந்தைங்க. சின்னவ பூனேல இருக்கா.

ஓவியரா இருந்த நான் ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்‘, ‘வீர வேலு நாச்சியார்‘ படங்கள் வழியா ஆடை வடிவமைப்பாளரா ஆனேன். இதுக்கு கலைஞர் ஐயாதான் காரணம். வரைஞ்சி என்ன சம்பாத்தியம் வரப் போகுதுன்னு கேட்ட,கேட்கற எல்லாருக்கும் என் வாழ்க்கைதான் பதில். வீடு, மனைவி, ரெண்டு மகள்கள்னு இந்த வாழ்க்கையை எனக்குக் கொடுத்தது ஓவியம்தான். படுத்ததும் தூங்கறேன். இதைவிட வேறென்ன வேணும்?

அத்தனை எழுத்தாளர்களுடனும் அந்தந்த காலகட்டங்கள்ல பயணம் செய்திருக்கேன். இது கொடுப்பினை. என் ஓவியங்கள்ல உணர்வு இருக்கணும்னு ஆசைப்படுவேன்; அதுக்குத்தான் முக்கியத்துவமும் கொடுக்கறேன்.அமரர் கல்கிக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு எப்பவும் பெருமைதான். ஓவியக் கலைமாமணி விருது சில வருஷங்களுக்கு முன்னாடி கிடைச்சது.

இராஜராஜன் ஆயிரமாவது ஆண்டு விழாவுல கடல்போர் உள்ளிட்ட சில படைப்புகளுக்கு ஓவியம் வரையும் வாய்ப்பை கலைஞர் ஐயா தந்தார். எம்ஜிஆர் காலத்துல கலைஞர்களுக்கான கோட்டாவுல எனக்கு வீடு கிடைச்சது.என் சொந்தப் பேரு ரங்கநாதன். நாங்க மராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவங்க. அப்பா பெயர் டி.வெங்கோப ராவ். அம்மா பெயர் பத்மாவதி பாய்.

சென்னை வந்தப்ப குடிசைலதான் தங்கினேன். மாசத்துக்கு ஒண்ணு ரெண்டு வேலைகள்தான் பத்திரிகைகள்ல கிடைக்கும். சினிமா விளம்பரத்தால பொழப்பு ஓடுச்சு. இங்க வேலை பார்த்துக்கிட்டேதான் பத்திரிகைகள்லயும் ஓவியம் வரைய வாய்ப்பு தேடி அலைஞ்சேன்.ஒருநாள் பத்திரிகைகளுக்கு போயிட்டு தாமதமா வேலைக்கு வந்து ஓனர்கிட்ட மாட்டிக்கிட்டேன். ஏன் லேட்டாச்சுனு உண்மையை சொன்னேன். உடனே அவரு, ‘இங்க மட்டும் வேலை பார்க்கறதா இருந்தா பாரு... இல்லைனா கிளம்பு’னு சொல்லிட்டார்.

என்னால பத்திரிகையை விட முடியாது. அது என் சுவாசம். அதேநேரம் சினிமா விளம்பர வேலையையும் அப்ப விட முடியாத நிலை. சோறு சாப்பிடணுமே! அதனால புனைப் பெயர்ல பத்திரிகைகளுக்கு ஓவியம் வரையலாம்னு முடிவு செஞ்சேன்.

என்ன பெயர் வைச்சுக்கலாம்னு யோசிச்சப்ப நான் தங்கியிருந்த இடத்துக்குப் பக்கத்துல ‘மாருதி ஃபார்மஸி’ இருப்பது கண்ல பட்டது. அந்த ‘மாருதி’ எனக்குப் பிடிச்சிருந்தது. ஏன்னா, எங்கப்பா ஆஞ்சநேய பக்தர்! அந்த நொடியே பத்திரிகை ஓவியங்களுக்கு என் பேரு மாருதினு முடிவு செஞ்சேன்!
இப்ப ரங்கநாதன்னா யாருக்கும் தெரியாது! புனைப்பெயரே என் அடையாளமாகிடுச்சு!

என் முதல் ஓவியம் 20.4.1959 அன்று வெளியான ‘குமுதம்’ வார இதழ்ல வெளியாச்சு. அந்த நாள்தான் இதோ இப்ப உங்க முன்னாடி பேசிட்டு இருக்கற மாருதிக்கும்... இந்த 81 வயசுலயும் விடாம வரைஞ்சுட்டு இருக்கவும் காரணம்!

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்