கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் -44



நீண்ட ஆயுளைத் தரும் தாடாளன்

இதமான சிரிப்பொலி அது. அதிக சத்தமும் இல்லை முத்துப் பற்களும் தெரியவில்லை. அதில் ஏதோ ஒரு வித ஏளனம் மட்டும் நிரம்பி வழிந்தது. அதை அந்த நளின நங்கை கவனிக்கத் தவறவில்லை. உலகமே அடி பிரண்டாலும், அவள் அவன் அடியை வருடுவதை விட்டதே இல்லை.

உலகமே செல்வம் செல்வம் என்று இவளைத் தேடி அலைந்து கொண்டிருக்க, இவளோ கடமையே கண்ணாக, கண்ணனின் பாதத்தை வருடியபடி இருக்கிறாள்.யோகிகளும் சித்தர்களும் இவளுக்கு கிடைத்த பாக்கியம், தங்களுக்கு இல்லையே என்று வெதும்பியபடி அருகில் நின்று கொண்டு, மாலவனையும் அவளையும் போற்றியபடி இருந்தார்கள்.

அந்த மாயவனோ நாகத்தின் மீது கள்ள நித்திரை செய்தபடி இருந்தான். நித்திரையா அது? அவன் உறங்கிவிட்டால் வையகம் இயங்குமா? உறங்குவது போல் பாசாங்கு செய்து உலகை இயக்கும், உன்னத யோகம் பயில்கிறான் அவன். இன்றும் வழக்கம் போல ஒரு நாடகத்தை அவன் துவங்கி விட்டான் என்பதை திருமகள் உணர்ந்தாள்.

அதை உணர்த்திய அவனது கள்ளப் புன்னகைக்கு, கோடி வந்தனங்கள் செய்தாள். ‘‘பிராண வல்லபா! பரந்தாமா! விழி மலருங்கள்...’’ என்று அன்பாக தன் பிரபுவை வேண்டிக்கொண்டாள் அலைமகள். சூரியனைக் கண்டு மலர்ந்த தாமரையைப் போல, திருமகளின் குரல் கேட்டு விழி திறந்தான் மாயவன். ‘‘என் புன்னகையின் பின் இருக்கும் மர்மத்தை அறிய வேண்டும். சரிதானே அன்பே..?’’ சந்திர ஒளியைப் பருகும் சகோரப் பட்சியைப் போல, திருமகளின் முகத்தைப் பார்த்து பகர்ந்தான் கோவிந்தன்.

அவளும் ஆமோதிப்பாக முகத்தை மேலும் கீழுமாக அசைத்தாள். அப்போது அவளது செவியில் அணிந்திருந்த தோடும், உச்சியில் சூடிய நெற்றிச் சுட்டியும், நாசியில் சூடிய மூக்குத்தியும் சேர்ந்து ஆடின. பல விதமான மணிகள் அசைய வீதியில் ஓடி வரும் தேரின் அழகை அது பழித்தது. மாதவனும் அந்த எழிலில் தன்னை மறந்துதான் போனான். பிறகு ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு பதில் உரைக்க ஆரம்பித்தான்.

‘‘எல்லாம் உன் புத்திரன் செய்த வேலைதான்...’’
விளங்காமல் விழித்தாள் அவள். உலகமே அவளது குழந்தை என்னும்போது, மாதவன் யாரைச் சொல்கிறான் என்பதை அவள் எப்படி புரிந்து கொள்வாள்?மாயவனே தொடர்ந்தான்: ‘‘நம் மகன் பிரம்மன் இருக்கிறான் அல்லவா? அவனுக்கு ஆணவம் தலைக்கு ஏறிவிட்டது. அனைவரையும் விட ஆயுள் அதிகம் என்ற கர்வம். மனிதர்களை நேற்று பெய்த மழையில், இன்று முளைத்த தளிராக எண்ணுகிறான்.

அதோடு நின்றுவிட வில்லை. மனிதரில் மாணிக்கமாக மின்னுபவர்கள் முனிவர்கள். அந்த முனிவர்களில் சிறந்தவர் ரோமச முனிவர். அவரையே அவமதிக்கத் துணிந்து விட்டான் அவன். என்னை அவமதித்தால் நான் பொறுத்துக் கொள்வேன் தேவி. ஊன் உருக, உயிர் உருக, என் மீது அன்பு வைக்கும் நல்லுள்ளங்களுக்கு தீங்கு செய்தால்... இல்லை இல்லை, தீங்கு நினைத்தால் கூட நான் பொறுப்பதில்லை. இதை என் உள்ளம் கவர்ந்த நீ நன்கு அறிவாய்....’’நிறுத்திவிட்டு, திருமகள் சிந்திக்க அவகாசம் தந்தான். அவளது மனதில் பழைய சம்பவங்கள் நிழலாடின.

‘இவர் சொல்லுவதுதான் எத்தனை உண்மை. பிருகு முனிவர் இவர் மார்பில் வந்து எட்டி உதைத்தார். அப்போது இவர் கோபம் கொள்ளவே இல்லை. ஆனால், இவரது அன்பு பக்தன் பிரகலாதனுக்கு ஒரு தீங்கு என்றதும் இவர் எடுத்த உக்கிர ரூபம் கண்டு அண்ட சராசரமும் நிலை தடுமாறி விட்டதே... இவரை அமைதிப்படுத்த அனைவரும் பட்ட பாடு இருக்கிறதே...  அப்பப்பா...’

அவளது உள்ளம் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னது. அந்தக் குரல் நரசிம்மனின் உக்கிர வடிவை நினைவு படுத்திவிட்டது. அதை நினைத்ததால் இப்போதும் அந்தத் தங்கப் பதுமைக்கு உடல் நடுங்கியது. அவளது உள்ளத்தின் போக்கை, அவளது முகத்தைக் கண்டே உணர்ந்தான் மாயவன். அவனது இதழில் இளநகை அரும்பியது.‘‘சுவாமி! பாவம் பிரம்மன்... அறியாத பிள்ளை தெரியாமல் செய்து விட்டான்...’’
இதைக் கேட்டு எழுந்து அமர்ந்துகொண்டான் மாயவன்.

தவறு செய்துவிட்ட மகனுக்கு பரிந்து பேசுவதால் மாலவன் முகத்தைப் பார்த்துப் பேச அவளுக்குத் துணிச்சல் வரவில்லை. நிலத்தைப் பார்த்தபடியே பேசினாள் அந்தப் பைங்கிளி. இந்த குணம்தானே அவனை கிறங்கடித்தது. ஜீவன்களாகிய நாம் பாவமே செய்கிறோம். நீதி வழங்கும் பரமாத்மாவான அந்த மாயவனோ முழு சுதந்திரம் பெற்றவன். ஆம். அவன் எந்த தண்டனை வழங்கினாலும் ‘ஏன்?’ என்று கேட்க ஒரு நாதி இல்லை. யாருக்கும் அந்த அதிகாரமும் இல்லை; துணிச்சலும் இல்லை.

பார்த்தாள் அலைமகள். உடன் கருணை என்னும் போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டாள். ஜீவன்களான நம் மீது கருணை கொண்டு நமக்காக சிபாரிசு செய்ய ஆரம்பித்தாள். இன்று வரை பிசிறு தட்டாமல் அவள் செய்யும் இந்த அற்புதமான காரியம்தான் நம்மை வாழ வைக்கிறது.
இன்றும் நாம் வாழ அவள் தனது சிரத்தை தாழ்த்திக் கொண்டாள்.

மாலவன் மெல்ல தன் மலர்க் கரத்தால் அவளது முகத்தைப் பிடித்து உயர்த்தி, நேருக்கு நேர் நோக்கினான். ‘‘கவலைப்படாதே தேவி! பிரம்மனை தண்டிக்கவும் மாட்டேன்! முனிவரைக் கை விடவும் மாட்டேன்!’’கேட்ட தேவியின் கண்கள் சந்தோஷத்தால் அகண்டு விரிந்தன.‘‘எனில் என்ன செய்யப் போகிறீர்கள் சுவாமி?’’ படபடப்போடு கேட்டாள் தேவி.
அதைக் கண்டு அந்த கேசவன் மீண்டும் நகைத்தான்.

‘‘இப்படி நகைத்தால் எப்படி சுவாமி... சொல்லுங்கள்! என்ன செய்வதாக உத்தேசம்?’’ இருப்புக் கொள்ளாமல் மாயவனின், கை கொள்ளாத தோளைப் பற்றி உலுக்கியபடியே கேட்டாள் அந்தக் காரிகை. ‘‘பொறு தேவி... பொறு...’’ என்றபடி கைகளைத் தட்டினான். அந்த ஓசையைக் கேட்டு, ஓடோடி வந்தான் கருடன். சுவர்ண மயமான அவனது சிறகு மாலவனின் தேக காந்தியின் முன், சூரியனைக் கண்ட நட்சத்திரம் போல களை இழந்தது. கை குவித்து, பூமியில் விழுந்து வணங்கினான் அந்த கருடன்.

‘‘கருடா! உடன் பாரதத்தின் தென் பகுதியில் இருக்கும், பாடலீக வனத்திற்கு நாம் செல்ல வேண்டும்...’’ அமுதமாகக் கட்டளையிட்டார்.
‘‘தங்கள் சித்தம் என் பாக்கியம் பிரபோ!’’ என்றபடி அந்த பரந்தாமன் தனது முதுகில் ஏற தோதாக நின்றுகொண்டான்.
மாலவன் சற்றும் தாமதிக்காமல் அவன் மீது ஏறிக் கொண்டு மடி மீது திருமகளை அமர்த்திக் கொண்டான். அவளும், இதுவே நான் என்றும் விரும்பும் சிம்மாசனம் என்பதுபோல ஆனந்தமாக அமர்ந்து கொண்டாள்.

பறக்க ஆரம்பித்தான் கருடன். வைகுண்டத்தை கடந்தான். பல தேவலோகங்களை நொடியில் கடந்து, பூமிக்கு வந்தான். பாடலீக வனத்திற்கு மனதை விட விரைவாக வந்து சேர்ந்தான். அங்கு இருந்த ஒரு மரத்தடியில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். விடாமல் அவரது நா ‘நாராயண’ நாமத்தை ஜபித்தபடி இருந்தது. முகத்தில் பிரம்ம தேஜஸ் சொட்டியது. பூமியில் உலாவும் சூரியனோ என்று பார்ப்பவரை அது திகைக்க வைத்தது.
சரியாக அந்த முனிவர் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, ‘‘அங்கே... அவர் முன்னே சென்று நிறுத்து சுபர்ணா!’’ என்று கருடனுக்கு கட்டளையிட்டார் மாயவன்.

அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அவரை நோக்கிப் பறந்தான். அருகில் அவரது முகத்தைக் கண்டதும் திருமகள் அவர் யார் என்பதை உணர்ந்து விட்டாள். அவளது இதழ் அவர் யார் என்பதை மெல்ல சொல்லியது. ‘‘அட! ரோமச முனிவர்!’’அதைக் கேட்ட மாயவன் விளக்கம் தர ஆரம்பித்தார். ‘‘ஆம் தேவி! பிரம்மன் அவமானமாகப்பேசியது முனிவரை வெகுவாகப் பாதித்தது. உடன் இந்த இடத்திற்கு வந்தார். என்னை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு அருளவே நாம் இங்கு வந்திருக்கிறோம்!’’

அதைக் கேட்ட தாயார் பல விஷயங்கள் நொடியில் புரிந்ததால் அர்த்தபுஷ்டியுடன் இள நகை பூத்தாள்.நாகராஜன் குடி கொண்டிருக்கும் காயத்ரி ஃப்ளாட்ஸ் வாசலில் கீழ்வீட்டு பத்மினி அமர்ந்திருந்தாள். அழுது அழுது அவளது கண்கள் சிவந்திருந்தன. ஆனால், இப்போது அவளது கண்களில் கண்ணீர் இல்லை. மாறாக ஆனந்தம் நிரம்பி வழிந்தது. மடியில் அவளது குழந்தை அமர்ந்திருந்தாள். அனைத்து ஃப்ளாட்களைச் சேர்ந்தவர்களும் அங்கு கூடியிருந்தார்கள்.

அவளுக்கு ஆறுதல் சொல்லத்தான் அங்கு வந்தார்கள். ஆனால், நாகராஜன் சொல்லிக் கொண்டிருந்த கதையைக் கேட்டபடி நின்றிருந்தார்கள்! அருகில் நாகராஜனின் மனைவி ஆனந்தவல்லி. உடன் கண்ணன்.எப்போதும் மாலை நான்கு மணிக்கே வீட்டுக்கு வந்துவிடும் பத்மினியின் மகள் பவித்ரா, அன்று ஏழு மணி ஆகியும் வரவில்லை. பள்ளிக்கு போன் செய்தபோது ‘அப்பொழுதே அவள் கிளம்பிவிட்டதாக’ச் சொன்னார்கள்.

பத்மினியின் வயிற்றில் புளியைக் கரைத்தது போல இருந்தது. தன் கணவனுக்கு தகவல் சொன்னாள். அலுவலகத்துக்கு பர்மிஷன் சொல்லிவிட்டு பவித்ராவைத் தேடி அவன் அலையத் தொடங்கினான்.இந்த நேரத்தில்தான் கண்ணனின் கையைப் பிடித்தபடி நாகராஜனும் ஆனந்தியும் தகவல் அறிந்து பத்மினியைத் தேடி வந்தார்கள். ‘‘சீர்காழி தாடாளன் பெருமாளை வேண்டிக்கோம்மா!’’ என்று ஆறுதலாகச் சொன்னார் நாகராஜன்.

பத்மினியும் கண்ணில் பொங்கிய கண்ணீரோடு அந்தப் பெருமானை இதய பூர்வமாக சரணடைந்தாள். அவள் அப்படிச் செய்ததுதான் தாமதம், ‘‘அம்மா!’’ என்று அழைத்தபடி கேட்டைத் திறந்து கொண்டு வந்தாள் பவித்ரா! தன் குழந்தையை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து அக மகிழ்ந்தாள் பத்மினி.மனம் நிலைப்பட்டதும் நாகராஜனை நோக்கித் திரும்பினாள்: ‘‘அந்தப் பெருமாளைப் பத்தி சொல்லுங்க மாமா... அவரை வேண்டினதுமே என் குழந்தை கிடைச்சுட்டாளே... அவரோட மகிமையை இன்னும் தெரிஞ்சுக்க ஆசைப்படறேன்!’’ இதனை அடுத்துதான் நாகராஜன் கதை சொல்லத் தொடங்கினார். தொடரவும் செய்தார்.

(கஷ்டங்கள் தீரும்)  

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்