முகம் மறுமுகம்-ஓவியர் ஹன்சிகா!



மும்பை ஹீரோயின்களில் தமிழ் பேசும் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தப் பட்டியலில் பாஸ் மார்க் வாங்குபவர் ஹன்சிகா.
பாலிவுட் ‘ஹவா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கோலிவுட்டில் தனுஷின் ‘மாப்பிள்ளை’ மூலம் தமிழுக்கு வந்தார். அதன்பின் ‘எங்கேயும் காதல்’ ஆக மினுமினுத்தார். அப்புறம், ‘அரண்மனை’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ என அடுத்தடுத்து பாய்ச்சலில் ஆக்ட்டிங்கில் ஸ்கோர் செய்தார்; செய்கிறார்.

இப்போது நடித்து வரும் ‘மஹா’ ஹன்சியின் ஐம்பதாவது படம்!அடிக்கடி ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் அன்பில் நெகிந்து மகிழும் ஹன்சிகா, பிரமாதமான ஓவியரும் கூட! அவர் எப்போதோ வரைந்த ராதா - கிருஷ்ணர் கேன்வாஸ் ஓவியம் ஒன்று பதினைந்து லட்ச ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது! ‘‘இதுவரை எவ்வளவு ஓவியங்கள் வரைஞ்சிருக்கேன்னு கணக்கு வைச்சுக்கிட்டதில்ல. நிச்சயம் நூறுக்கு மேல இருக்கும். சின்ன வயசுல இருந்து ஸ்பிரிச்சுவல்ல ஆர்வம் உண்டு. அதனாலயே சிவன், விநாயகர், கிருஷ்ணன், ராதே, புத்தர், குருநானக்னு கடவுள்களை வரைஞ்சிருக்கேன்.

மாடர்ன் ஆர்ட், பேபி ஒட்டகச்சிவிங்கி, அணில்னு செல்லப் பிராணிகளையும் வரைவேன். எல்லாமே அந்தந்த செகண்ட்ல தோணுற ஐடியாஸ்தான்.
வாட்டர்கலர், அக்ரிலிக், அப்ஸ்ட்ராக்ட்ஸ், கேரிகேச்சர்ஸ், கேன்வாஸ், ஆயில் பெயிண்ட்ஸ்னு எல்லா வெரைட்டியும் ட்ரை பண்ணியிருக்கேன். அதுல வாட்டர் கலர்ல அலாதி ப்ரியம் உண்டு. ஓவியங்கள் மீது எனக்கு இருந்த ஆர்வம்தான் இப்ப இவ்ளோ தூரம் என்னை பயணிக்க வச்சிருக்கு...’’ வண்ணங்கள் மிளிர கையில் தூரிகையுடன் புன்னகைக்கும் ஹன்சிகாவின் இஷ்ட தெய்வங்கள் விநாயகரும் ராதே கிருஷ்ணாவும்.  

‘‘இவங்கதான் என் ஃபேவரிட். முன்னாடி ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் விநாயகரை வரைவேன். ஒருமுறை அவர் புல்லாங்குழல் வாசிக்கறா மாதிரி வரைஞ்சேன். எல்லாருமே பாராட்டின கணேஷ் பெயிண்ட்டிங்ல அதுவும் ஒண்ணு.முதன் முதல்ல நான் வரைஞ்சது இப்பவும் நினைவுல இருக்கு. அது ஸ்கூல் டேஸ்ல டிராயிங் க்ளாஸ்ல நடந்த மேஜிக். என் ஓவியத் திறமையை டெவலப் பண்ணினது டிராயிங் கிளாஸ்தான்.

எங்கம்மா ஸ்பிரிச்சுவல் குயின்! ஒருமுறை, ‘என் அறைல வைக்க ஒரு பெயிண்ட்டிங் பண்ணித்தா’னு அம்மா விரும்பிக் கேட்டாங்க. அவங்களுக்கு சீக்கிய கடவுள் குருநானக் ஜியை ரொம்பப் பிடிக்கும். ஸோ, அவங்களுக்காகவே ஆயில் பெயிண்டிங்ல குருநானக்ஜியை வரைஞ்சு கொடுத்தேன்.
‘எனக்கு ஒரு ஓவியம் வேணும்’னு எங்கம்மா கேட்டு வாங்கினதால அந்த பெயிண்ட்டிங்கை ரொம்ப ஸ்பெஷலா பாக்கறேன். அந்த பெயிண்டிங் ரெடியாக ஒரு மாசமாச்சு.

நான் பார்ட்டி கேர்ள் கிடையாது. மும்பை வீட்ல என் அம்மா, அண்ணனோட டைம் செலவழிக்க பிடிக்கும். ஷூட்டிங் விட்டா வீடுதான் என் உலகம். என் மனநிலைக்கு ஏற்ப, என் ஓவியங்களும் பிரதி பலிக்கும். பெயிண்ட்டிங் பண்ண போகும்போதே இதுதான் வரையப்போறேன்னு மைண்ட்ல ஃபிக்ஸ் ஆகியிருக்கும்.

ஆனா, நாம கோடுகளை உருவாக்கும் போதே, அந்த கோடுகள் அடுத்தடுத்த கோடுகளுக்கு கைபிடிச்சு கூட்டிட்டு போகும்! அந்த மேஜிக்தான் அழகான ஓவியமா மாறுது. நம்ம பங்களிப்பும், கடவுளின் ஆசீர்வாதமும் இருக்கறதால நினைச்ச எண்ணம், வண்ணங்களாகுது.

எந்த பெயிண்டிங்ஸையும் நான் அவசர அவசரமா வரைஞ்சதில்ல. எப்ப தோணுதோ, அப்ப பொறுமையா வரைவேன். அதிகாலைல பெயிண்ட் பண்ணவும் பிடிக்கும். கலர்ஸோடு ரிலாக்ஸ் ஆனா எண்ணங்களும் கலர்ஃபுல்லா, பாசிட்டிவ்வா ஆகும்னு சொல்றாங்க. அது உண்மையும் கூட!  
என்னோட சில பெயிண்டிங்ஸை மும்பைல ஆர்ட் எக்ஸிபிஷனா சின்ன அளவுல வைச்சிருக்கேன்.

அப்பதான் ராதே கிருஷ்ணா ஓவியத்தை ஒருத்தர் 15 லட்சத்துக்கு வாங்கினார். அந்த தொகையை ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்துட்டேன். அந்த பெயிண்ட்டிங் அவ்ளோ விலைக்கு போகும்னு நிச்சயமா எதிர்பார்க்கலை!’’ சிரிக்கும் ஹன்சிகா, ஓவியம் வரைவது தனக்கு ஹாபி மட்டும்தான் ப்ரொஃபஷன் இல்லை என்கிறார்.

‘‘நடிப்புல கவனம் செலுத்தவே விரும்பறேன். என் மெயின் ஒர்க் அதான். இடைவிடாம ஷூட்டிங் நடக்கறப்ப வரும் ஸ்டிரஸை குறைக்க பெயிண்டிங்ஸ்ல கவனம் செலுத்தறேன். அதனாலயே எப்பவும் எனர்ஜியா ஃபீல் பண்றேன். இப்ப இது என் passion ஆகவும் ஆகிடுச்சு!’’ என்னும் ஹன்சிகா, கிச்சன் பேபியாகவும் கிறுகிறுக்கிறார்.

‘‘யெஸ். யெஸ். குக்கிங் பிடிக்கும். டைம் கிடைச்சா baked items, chat foods பண்ணுவேன். என் அண்ணனுக்கு நான் செய்யற பீட்சா ரொம்பப் பிடிக்கும். வீட்ல நானே செய்து கொடுத்து சர்ப்ரைஸ் பண்றதும் உண்டு. பெயிண்ட்டிங், குக்கிங்கை விட என்னை ரிலாக்ஸ் ஆக்கறவர் மர்ஃபி மோத்வானி! லிட்டில் பப்பி... செல்ல நாய்க்குட்டி. எப்பவும் துறுதுறுன்னு பாசமழை பொழியறவன் அவன்தான்!’’ என்கிறார் கண்கள் சிமிட்டி!             


மை.பாரதிராஜா