10 ஆயிரம் சதுர அடியில் சென்னையில் ஒரு காட்டை உருவாக்கி இருக்கும் சிங்!



‘‘நம் நாட்டோட தேசிய மலர் ‘தாமரை’. இது பலருக்கும் தெரியும். ஆனா, மாநில மலர்? 99% பேருக்குத் தெரியாது. ஏன், தாவரவியல் வல்லுனர்கள்லயே பலருக்கு இது தெரியாது.
செங்காந்தள் மலர்’தான் நம் தமிழ் மாநிலத்தின் மலர்!’’ஆச்சர்யமான தொடக்கத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சென்னை முகப்பேரில் வசிக்கும் ஜஸ்வந்த் சிங். 10 ஆயிரம் சதுர அடியில் காட்டை உருவாக்கி அதில் வீட்டையும் கட்டியிருக்கிறார்.

சென்னை தட்பவெப்பநிலையில் வளரவே வளராது என்று கருதப்படும் தாவரங்களைத்தான், தான் உருவாக்கி இருக்கும் காட்டில் வளர்த்து வருகிறார்!
30 ஆண்டுகள் உழைப்பில் 300க்கும் மேற்பட்ட, உலகின் அரியவகைத் தாவரங்கள் இவரது காட்டில் வளர்ந்து குலுங்குகின்றன!
‘‘தாத்தா காலத்துல பிசினஸ் காரணமா பஞ்சாப்புக்கும் சென்னைக்கும் டிராவல் பண்ணிட்டு இருந்தோம். அப்பா காலத்துல சென்னைலயே செட்டிலாகிட்டோம். கட்டடக்கலைதான் எங்க குடும்ப பிசினஸ்.

சின்ன வயசுல இருந்தே இயற்கை, மரங்கள் மேல எனக்கு காதல் உண்டு. மெயின் தொழில் கட்டடக்கலை. கூடவே போட்டோ லேப்பும் இருக்கு. இது தவிர ரெண்டு அபார்ட்மெண்ட்ஸ்ல ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே ஹாஸ்டல் நடத்திட்டு இருக்கேன்.ஆனா, முக்கியமான என் அடையாளமா நான் நினைக்கறது இந்தச் செடிகள்தான். இதுதான் என் ஹாபி, தொழில், சுவாசம் எல்லாமே!செம்பருத்தியும், வேம்பும் யார் வைச்சாலும் வளரும். நம்ம மண்ணுக்குரிய தாவரங்கள் அவை. ஆனா, இந்த மண்ணுல வளரவே வளராதுனு நினைக்கற தாவரங்களை வளர்க்கணும்னுதான் விரும்பினேன்.

உடலுக்குக் குளிர்ச்சி தரும் நன்னாரில ஆரம்பிச்சு கேன்சரை குணப்படுத்தும் காட்டு எலுமிச்சை வரை இங்க வளர்க்கறேன். வெனிலா, சிவப்பு பெர்ரி, கருப்பு பெர்ரி, நீல பெர்ரிகள், பேக்கரி செர்ரி, பிளாக் கரண்ட், திராட்சை, ஆரஞ்சு, பப்ளிமாஸ்னு பல தாவரங்கள் இங்க இருக்கு...’’
பெருமையாக சொல்லும் ஜஸ்வந்த் சிங், ஆப்பிள் மரத்தையும் வளர்த்து வருகிறார். அது கனி கொடுப்பதற்காகக் காத்திருக்கிறார். அவ்வளவு செடிகள் இருந்தும் எங்கும் ஒரு கொசுகூட கண்ணில் படவில்லை.

‘‘தேங்கிய நீர் எங்க இருக்கோ அங்கதான் கொசுவும் இருக்கும். தேங்கிய நீர் இருந்தா அதுல ரெண்டு மீன் வாங்கி விடலாம். அதேமாதிரி தேங்கிய நீர்ல எண்ணெயோ டீசலோ கலந்துவிட்டாலும் கொசு பிரச்னை இருக்காது.இதைத்தான் செய்யறேன். இங்க பயோ உரக்கழிவு சேமிக்கற கலனைச் சுற்றி தண்ணீர் நிற்கும். அதுல கூட இரண்டொரு மீன்களை நீந்த விட்டிருக்கேன்.

எல்லா செடியும் மரமும் வளர தண்ணீரும் சூரிய ஒளியும் தேவை. இதை மனசுல வைச்சே இந்தக் காட்டை உருவாக்கி இருக்கேன். ‘இரவு ராணி’னு டிராகன் பழம் கொடுக்கற ஒருவகை கள்ளி தாவரம் இருக்கு. இதனோட ஒரு பழம் ரூ.100 வரை விற்கப்
படுது. இந்த இரவு ராணியையும் வளர்க்கறேன்!

என் காட்டைப் பார்க்க நிறைய மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் வர்றாங்க. சிலர் சுத்திப் பார்த்துட்டு மணிக்கணக்குல மவுனமா அமர்ந்துட்டுப் போவாங்க...’’ புன்னகைக்கும் ஜஸ்வந்த், வீட்டிலேயே இந்திய மற்றும் ஆஸ்திரேலிய தேனீக்களையும் வளர்த்து சுத்தமான தேனும் எடுக்கிறார்.

மாடித்தோட்டத்தில் காய்களும், கனிகளும் காய்த்துக் குலுங்க அங்கே சுதந்திரமாக பறவைகள் பலவும் சுற்றித் திரிகின்றன. அங்கேயும் பளிச்சென நிற்கிறது பயோ சுழற்சி.  ‘‘எல்லாமே இயற்கை உரம்தான். இந்தத் தொட்டில மண்புழு உரம். வெளில இருந்து மாட்டுச் சாணமும், கோமியமும் வாங்கறேன். சொந்தமாவே பயோ உரம் தயாரிக்கறேன்.

ஒரு ஏசி தினமும் சுமார் 6 லிட்டர் தண்ணீர் கொடுக்குது. சுத்தமான நீர். அதைக் குடிக்கக் கூடாது. ஆனா, செடிகளுக்கு அவ்வளவு நல்லது.
ஹாஸ்டல் ஏசி தண்ணீர் எல்லாமே செடிகளுக்குப் போறா மாதிரி குழாய் அமைச்சிருக்கேன். மழைநீர் சேகரிப்பை கடைப்பிடிக்கறேன். வர்தா புயல்ல ஆரம்பிச்சு சென்னை வெள்ளம் வரை பலதை சந்திச்சுட்டேன். அப்ப கூட என் காடு சேதமாகலை!’’ என்னும் ஜஸ்வந்த், முறைப்படி 28 பேர் அமர்ந்து உண்ணும் வகையில் மரத்தின் மேல் வீடு ஒன்றும் கட்டி வைத்திருக்கிறார்.

சென்னை மாநகரத்துக்குள் காஸ்மோபொலிட்டன் சிட்டிக்குரிய எந்த அடையாளமும் இல்லாமல் இப்படியொரு வாழ்விடத்தை உருவாக்கி இருக்கும் ஜஸ்வந்த் சிங்கிடம் பலரும் இப்படி ஒரு காடு தங்களுக்கும் வேண்டுமெனக் கேட்கிறார்களாம். ‘‘இதெல்லாம் 35 வருஷ உழைப்பு. செங்காந்தள் மலர் எங்க கிடைக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவே எனக்கு மூணு வருஷங்களுக்கு மேல ஆச்சு. ஒவ்வொரு செடி, மரத்துக்குப் பின்னாலயும் எங்க குடும்பத்தின் உழைப்பு இருக்கு.

இந்த போன்சாய் புளிய மரத்துக்கு வயசு 17. பொதுவா போன்சாய் மரங்களுக்கு தனி அக்கறை காட்டணும். இல்லைனா அது வளர்ந்துகிட்டே இருக்கும்...’’ வாஞ்சையுடன் அதைத் தடவிக் கொடுத்தபடியே சொல்லும் ஜஸ்வந்த், 24 நட்சத்திரங்களுக்கும் 24 செடிகள், மரங்கள் வைத்திருக்கிறார்.
இதுதவிர நல்ல நிலையில் பேசக்கூடிய வகையில் பழங்கால டெலிபோன் துவங்கி அக்கால புகைப்படங்கள் வரை பத்திரப்படுத்தி சுவரில் படமாக மாற்றியிருக்கிறார்.

வீட்டில் சோலார் மின்சாரம்தான். ஒரு மரத்தில் தானே செதுக்கிய திருவள்ளுவர் உருவப்படம் உட்பட பஞ்சாப்காரராக இருந்தாலும் அச்சுஅசல்
தமிழராகவே வாழ்கிறார் ஜஸ்வந்த் சிங்.‘‘முடிஞ்சவரை இயற்கையான உணவுகளை சாப்பிடுங்க... வாரத்துக்கு ஒருமுறையாவது மரத்துக்கு கீழ நின்னு ஆரோக்கியமான காற்றை சுவாசிங்க... மரங்களையும் செடிகளையும் கொஞ்சுங்க...’’ என வேண்டுகோள் வைக்கிறார்!                  

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்