டிஜிட்டல் காலனியாதிக்கத்தில் இந்தியா!



தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா எழுப்பும் கேள்விகள்

“என்னுடைய தகவல்களை இந்நிறுவனம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில்தான் அதன் சேவையைப் பயன்படுத்துகிறேன். என்னுடைய தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை இந்த நிறுவனத்துக்கு உண்டு.
இதை இந்நிறுவனம் மீறக் கூடாது...”- வாட்ஸ் அப் தன்னுடைய தகவல்களை, ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்போவதாக அறிவித்த போது, அதற்கு எதிராக இரண்டு மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது மாணவர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நீதிமன்றத்தில் முன்வைத்த வாதம்தான் மேல் இருப்பது.

இதற்கு ஃபேஸ்புக் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சொன்ன பதில் - “வாட்ஸ் அப்பின் புதிய விதிமுறைகள் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லையோ, அவர்கள் தாராளமாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளலாம். அந்தச் சுதந்திரம்தான் அவர்களுக்கு இருக்கிறதே!”

இந்த வழக்கு மட்டுமல்ல. டெக் நிறுவனங்களின் பிரைவசி தொடர்பாக எந்தப் பிரச்னையை எடுத்துக்கொண்டாலும், அதில் அந்நிறுவனங்களின் பதில் இரண்டே இரண்டாகத்தான் இருக்கின்றன.

ஒன்று, “எங்களுடைய பிரைவசி பாலிசியில்தான் விதிமுறைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கோமே!’’
இரண்டாவது, “எங்கள் விதிமுறைகள் பிடிக்கவில்லை என்றால் தாராளமாக நீங்கள் விலகிக்கொள்ளலாம்!”
இந்நிலையில் இந்தியாவில் எந்த நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் பிரைவசியையோ, டேட்டாவையோ அலட்சியமாகக் கையாளக் கூடாது என்கிற அடிப்படையில், மக்களின் தனிப்பட்ட ரகசிய தகவல்களை பாதுகாப்பதற்கான ‘தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா’வை மக்களவையில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடந்த மாதம் 11ம் தேதியன்று தாக்கல் செய்தார்.  

சட்டத்துக்கான தேவை!
நாள்தோறும் நாம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள்… ஆகியவை அதன் பயன்பாட்டுக்காக நம்மிடம் பணம் வாங்குவதில்லை. ஆனால், வேறொரு விஷயத்தை விலையாகக் கோருகின்றன. அது நம் டேட்டா. இதை வைத்துத்தான் எல்லா டெக் நிறுவனங்களுமே இயங்குகின்றன.
இதற்கு சமீபத்திய உதாரணம். வெறும் மருத்துவ ஆராய்ச்சிக்காக என்று கூறி, ஃபேஸ்புக் பயனாளர்களிடமிருந்து டேட்டாவை வாங்கிய கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம், அதை அமெரிக்க வாக்காளர்களை மூளைச்சலவை செய்வதற்காகப் பயன்படுத்தியது. இது தொழில்நுட்ப உலகில், மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது.

இதேபோலத்தான் நம்முடைய டேட்டாவை எத்தனையோ நிறுவனங்கள் பங்குபோட்டுக்கொண்டுள்ளன. இதை யார் வைத்திருக்கிறார்கள், அதை வைத்து என்ன செய்கிறார்கள், அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன, ஃபேஸ்புக், கூகுள் உட்பட எல்லா பெருநிறுவனங்களும் நம் டேட்டாவை முறையாகத்தான் கையாள்கின்றனவா...

இவை எதுவுமே நமக்குத் தெரியாது. காரணம், நிறுவனங்களிடம் வெளிப்படைத்தன்மை (Transparency) இல்லாததே. நாட்டில் நிதி சார்ந்த சேவைகளை அளிக்கும் நிறுவனங்களை முறைப்படுத்த ரிசர்வ் வங்கி இருக்கிறது; முதலீடுகளைக் கண்காணிக்க, செபி இருக்கிறது. ஆனால், நம் டேட்டாவைக் கையாள்வதற்கும், அதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கும் ஏதேனும் ஓர் அமைப்பு இருக்கிறதா? இதற்காக உருவானதுதான் இந்தப் புதிய தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம்.

இந்தியா முழுக்கவே தனிநபர்களின் பிரைவசி குறித்து அதிகளவில் விவாதிக்கப்படுகிறது. அதில், சட்டரீதியாக இந்தியா எந்தளவுக்குப் பின்தங்கியிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. ஆதார் தொடர்பான வழக்கிலும் பிரைவசி முக்கிய விவாதப் பொருளாக இருந்தது.
பிரைவசி என்பது அடிப்படை உரிமையா இல்லையா என்பதை உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டு, ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிரைவசி என்பது அடிப்படை உரிமையே’ எனத் தீர்ப்பும் அளித்தது.

இப்படித் தொடர்ச்சியாக பிரைவசி குறித்தும், டேட்டா பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டு வந்தாலும் அதைச் சட்டரீதியாக செயல்படுத்த நம்மிடம் முறையான சட்டங்கள் இல்லை. நம்மிடம் சைபர் பாதுகாப்புக்காக இருக்கும் ஒரே சட்டம், இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மட்டுமே.

இந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா தலைமையில் பத்துப் பேர்கொண்ட குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு. கிட்டத்தட்ட ஓராண்டுகால அவகாசத்துக்குப் பிறகு, இந்தக் குழு கடந்த ஜூன் மாதம் 27ம் தேதி தன்னுடைய அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அம்சங்கள்

தனிநபர் தகவல்களைத் திரட்டுவது, சேமித்து வைப்பது, பயன்படுத்துவது, பகிர்வது, தனிநபர் தகவலைப் பயன்படுத்த ஒப்புதல் பெறும் முறை, தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தினால் அபராதம் என்ன, நஷ்டஈடு என்ன உள்ளிட்டவற்றை அடக்கிய தனிநபர் தகவல் பயன்பாட்டுக்கான விதிமுறைகள் மற்றும் அதை கண்காணிக்கும் அமைப்பு என அனைத்தும் இந்தச் சட்டத்தில் கையாளப்பட்டுள்ளன.

அரசாங்கம், இந்தியாவில் பதியப்பட்ட தனியார் நிறுவனங்கள், தனிப்பட்ட தகவல்களைக் கையாளும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆகிய மூன்றும் தனிநபர் சார்ந்த தகவல்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளை இந்தச் சட்ட மசோதா வரையறுக்கிறது.
தனிநபர் குறித்த தகவல்களை Sensitive Data, Critical Data, General Data என மூன்று வகைகளாகப் பிரிக்கிறது.

1. சென்சிட்டிவ் டேட்டா என்ற முக்கியமான தகவல் பிரிவில் பாஸ்வேர்டு கொடுத்துப் பாதுகாக்கப்பட்டிருக்கும் தகவல்கள், நிதி மற்றும் வங்கி விவரங்கள், உடல்நலன் தொடர்பான விவரங்கள், பாலின விருப்பம், மதம் மற்றும் சாதிப் பிரிவுகள், வேலை, கைரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்கள், மரபியல் விவரம் உள்ளிட்டவற்றை வகைப்படுத்துகிறது.

இந்தத் தகவல்களை சம்பந்தப்பட்டவரின் நேரடி ஒப்புதலுடன் மட்டுமே இந்தியாவுக்கு வெளியில் சேமிக்கவும் கையாளவும் நிறுவனங்களுக்கு அனுமதி உண்டு.ஆனால், அந்தத் தகவல்களின் ஒரு நகலை கட்டாயம் இந்திய எல்லைக்குள்ளும் வைத்திருக்க வேண்டும் என்கிறது இந்தச் சட்டம்.

2. கிரிட்டிக்கல் டேட்டா எனப்படும் மிக முக்கியமான என்ற வகைப்பாட்டில், என்னென்ன தகவல்கள் இடம்பெறும் என்பதை, சூழலுக்கேற்ப அரசு தீர்மானிக்கும்.

இராணுவம் உள்ளிட்ட தேசப் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் இந்த வகைப்பாட்டில் இடம்பெறுகின்றன. இந்தத் தகவல்களை இந்திய எல்லைக்குள்ளேயே கையாள வேண்டும்.

3. பொதுவான தகவல்கள் ‘ஜெனரல் டேட்டா’ என வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றை எங்கு வேண்டுமானாலும் சேமிக்கலாம்; பயன்
படுத்தலாம்.

சட்டம் ஆபத்தானது?

இந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள், தனிநபர் தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த மசோதா ஆபத்தானது என அதனை வடிவமைத்த குழுவின் தலைவரான நீதிபதி பி.என்.கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “பிரைவசி என்பது மக்களின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அந்த தீர்ப்புக்கு இணங்கியே இந்த வரைவு மசோதாவை நாங்கள் உருவாக்கினோம். ஆனால், மத்திய அரசு அந்த மசோதாவில் இப்போது மாற்றம் செய்திருக்கிறது.

மத்திய அரசின் நிறுவனங்கள் தனிநபர் தகவல்களை பெறுவதற்கும், அதனை ஆய்வு செய்வதற்கும் வரைவு மசோதாவில் சில கட்டுப்பாடுகளை நாங்கள் கொண்டு வந்தோம். அந்தக் கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருக்கிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று.

இதன் மூலமாக, இறையாண்மை என்ற பெயரில் எந்த நபரின் அல்லது நிறுவனங்களின் தனிப்பட்ட தகவல்களை வேண்டுமானாலும் அரசால் பெற்றுக் கொள்ள முடியும். இதனை அனுமதித்தால் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

நல்ல செய்தி என்னவென்றால், இப்போது அந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான்.
மசோதாவில் மத்திய அரசு செய்திருக்கும் மாற்றங்களை சரிசெய்ய அக்குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, தனிநபர் தகவல்களைப் பெறும் வழிமுறை என்பது நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இருக்க வேண்டும்...” என்று தெரிவித்துள்ளார்.
நீர்த்துப்போகச் செய்ய அமெரிக்க - இந்திய நிறுவனங்கள் திட்டம்?

இந்தியாவின் தனிநபர் பாதுகாப்பு மசோதா, தொழில் புரிவதில் சிக்கலை ஏற்படுத்தும் என சில அமெரிக்க மற்றும் இந்திய நிறுவனங்கள் கருதுகின்றன.
இதனால் இந்த மசோதாவை நீர்த்துப்போகச் செய்ய அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன என்று அந்த முயற்சிகளுடன் தொடர்புடைய பெயர் குறிப்பிடாத மூன்று பேர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் பேசுகையில் தெரிவித்துள்ளனர்.

இதன்படி ஆல்பாபெட் இன்க் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் பயனாளர்களின் தரவுகளைப் பாதுகாத்துச் செயலாக்கும் முறைகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும்.எனவே, விதிமுறை மாற்றங்களால் செலவுகள் அதிகரிக்கும் என இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. சில கொள்கைகளை வகுப்பதற்காகப் பயனாளர்களின் தரவுகளை நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்கிறது. ஆனால், நிறுவனங்கள் வணிக ரீதியான வளர்ச்சிக்குத் தரவுகள் மிக முக்கியம் என்பதால் அதைக் கொடுக்க மறுக்கின்றன.

யுஎஸ் சேம்பர் ஆஃப் காமர்ஸின் ஒரு பகுதியான அமெரிக்க இந்திய கவுன்சில், இந்த விவகாரத்தில் தலையிட்டு மசோதாவில் திருத்தம் கொண்டுவர இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் அவர்கள் முக்கிய ஆலோசனைகளுக்குத் திட்டமிட்டுள்ளதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் கூறியுள்ளார்.

இந்தக் குழு 2020 தொடக்கத்தில் இந்தியாவுக்கு வந்து நாடாளுமன்றக் குழுவினருடன் சந்திப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் அமேசான் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும் இந்த மசோதாவால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த மசோதா குறித்து பாஜக எம்பியும், நாடாளுமன்றக் குழு தலைவருமான மீனாட்சி லேகி, “தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்த பரந்த ஆலோசனை நடத்தப்படும். வெளிநாட்டுக் குழுவின் சட்ட ஆலோசனையும் பெறப்படவுள்ளது...” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல தகவல் பாதுகாப்பு மசோதாவில் நிறுவனங்களுக்கு உள்ள கவலைகளைக் களைவதற்கு மற்ற தொழில் துறை அமைப்புகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டங்களும் தயாராகி வருவதாக மற்றொரு நாடாளுமன்றக் குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
பயனர்களின் முக்கியதனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை வியட்நாம் அரசு அண்மையில் இயற்றியது. ஆஸ்திரேலியாவிலும் கடந்த ஆண்டு இதுபோன்ற ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது இந்தியாவிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனால், அவற்றை நீர்த்துப்போகச் செய்வதற்கான முயற்சிகளும் வெளிநாட்டு நிறுவனங்களால் தொடங்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது.
தகவல்களின் காலனியாதிக்கம் 56.6 கோடி பயனாளர்களைக்கொண்ட இணைய பயன்பாட்டில் 2வது இடத்தில் உள்ள இந்தியா ஒரு செழிப்பான டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது.

தொழில்நுட்பத்துறையைப்பொறுத்தவரையில் மின்னணு வர்த்தகத்தில் இந்தியா 51% முன்னேறியுள்ளது. இப்போது 123 கோடி மக்களுக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது. 121 கோடி பேரிடம் செல்போன் உள்ளது. அவைகளில் 44.6 கோடி ஸ்மார்ட்போன்கள் ஆகும்.உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது உலகளாவிய கண்டுபிடிப்புகளின் பட்டியலில் 2015ம் ஆண்டு 81வது இடத்தில் இருந்த இந்தியா, 2017ம் ஆண்டு 60ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

2018ன் முதல் ஆறு மாதங்களில் மட்டும் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகளினால் 450 கோடி தரவுகள் அம்பலப்படுத்தப்பட்டன. 2019ல் 77.4 கோடி மின்மடல் முகவரிகள் சம்பந்தப்பட்ட 270 கோடி அடையாளங்கள் பற்றிய தரவுகளும், 2.1 கோடி கடவுச்சொற்களும் இணையத்தின் மூலம் விற்பனைக்காக முன்வைக்கப்பட்டன.மிகப்பெரிய சொத்தாக உள்ள தகவல்கள்தான் இனி புதிய எண்ணெய் வளம்.   

உலக அளவில் வழிந்தோடும் தகவல்களினால் பெரும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் உருவாகியுள்ளன. மலை போல் தகவல்கள் குவிந்து வருகின்றன. அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர போட்டி போடுகின்றனர்.ஏனென்றால் தகவல்களைக் கட்டுப்படுத்துபவரே உலகையும் கட்டுப்படுத்துவார் என்று சொல்லப்படும் அளவிற்கு நிலை மாறியுள்ளது. இதில் இந்தியாவின் நிலை உலக அளவில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்னம் அரசு