சரித்திரப் படங்கள் இப்போது ஏன் தமிழில் வருவதில்லை?



கமர்ஷியல் சினிமா வெகுஜன மக்களுடைய கலை வடிவமாக  இருப்பதால் அதைப் புறக்கணிப்பது ஒரு வகையில் பொதுமக்களைப் புரிந்துகொள்ளாமல் புறக்கணிப்பது மாதிரிதான். ‘பாகுபலி’ மகா மெகா வெற்றிக்குப் பிறகு இந்தி, மலையாளம், தெலுங்கு முதற்கொண்டு வரலாற்றுப் படங்களைத் தயாரிக்கும் வேலைகளும், அதை கர்மசிரத்தையாக மேற்கொள்ளும் முயற்சிகளும் இருக்க, தமிழில் அப்படியொரு முயற்சியே இல்லை.

முன்னாளில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘சிவகங்கைச் சீமை’ என குறிப்பிடத்தக்க மேலான அக்கறையுடன் செய்யப்பட்ட படங்களே இன்னும் வரலாற்றுப்படங்களுக்கு ஞாபகமாக இருக்கின்றன. கேரளாவில் மம்மூட்டி, தெலுங்கில் சிரஞ்சீவி போன்றவர்கள் தங்கள் மொழியின் வரலாற்றுப் பார்வைகளை முன்வைக்க யத்தனிக்கிறார்கள். இங்கேயிருக்கிற முக்கிய நடிகர்கள் வழக்கமான சமூகப்படங்களை, பழக்கமான வகையில் கொண்டு வருகிறார்கள்.

வரலாற்றுச் சம்பவங்களை, முக்கியப் போராளிகளை, நம் மாண்பான சிறப்புகளை கலை வடிவத்தில் கொண்டு வர அனேகமாகத் தவறிவிட்டோம்.
இந்தியில் ஜனரஞ்சக பாணியில் இத்தகைய படங்கள் இருந்தாலும், அவை அடிப்படை சம்பவங்களை நீர்த்துப் போகச் செய்யாமல் இருக்கின்றன.
‘பாகுபலி’தான் இப்போது மறுபடியும் இத்தகைய படங்கள் உருவெடுக்கக் காரணமாக அமைந்திருக்கிறது. அதன் பெரும் பொருட் செலவும், அதை பல மடங்காகத் திரும்பிப் பெற்ற வரலாறும் இந்திய சினிமா வரலாற்றில் பெரும் பதிவு.

இத்தகைய பதிவுகள் தமிழில் இல்லை என்ற ஆழ்ந்த கவலையும் சினிமா ஆர்வலர்களுக்கு உண்டு. அதன் காரண காரியங்களைத் தேடியும் அதற்கான சாத்தியப்பாடுகள் குறித்தும் தமிழில் சில முக்கியமானவர்களிடம் பேசினோம்.தயாரிப்பாளரும், சினிமா ஆர்வலருமான தனஞ்செயன், ‘‘‘பாகுபலி’தான் இத்தகைய எண்ண ஓட்டத்தைத் தூண்டிவிட்டது...’’ என்றபடி பேசத் தொடங்கினார்:

‘‘ஆனால், இதற்கு பெரும் பொருட் செலவு ஆகும். பணம் கொஞ்சம் கொஞ்சமாக புரட்டி இப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்க முடியாது. நிறைய ஆயத்தங்களுடன் தீர்க்கமாக  இறுதி ஆக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டோடுதான் இதை அணுக வேண்டும். முக்கிய பாத்திரத்தில் நடிப்பவர்கள், இதில் நடிக்கும் போதே வேறொரு படத்தில் அவ்வப்போது வந்து இங்கே நடித்துச் செல்வதும் ஆகாது. இதற்கான முன்முனைப்பும், தயாரிப்பும் வேண்டும்.

பிரபாஸ் தெலுங்கு சினிமா உலகின் முன்னணி நடிகர். முதல் வரிசையில் இன்னமும் இருப்பவர். தலைமறைவாக வாழ்வது மாதிரி, பொது நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளாமல் ‘பாகுபலி’ ஷூட்டிங் காலங்களில் தவிர்த்தார். அப்படி பெரும் உழைப்பைக் கொட்டி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி
யின்  கெட்டிக்காரத்தனமான ஸ்கிரிப்ட்டில், அவர் அப்பாவின் வழிகாட்டுதலில் கிடைத்த வெற்றி இது.

இங்கே அத்தகைய நட்சத்திரக் கூடல் சாத்தியமே இல்லை. ஒருங்கிணைக்கவும் இயலாத காரியம். ரஜினி, அஜித், விஜய் ஒன்று சேர்ந்தால் இப்படி ஒரு வரலாற்றுப்படம் சாத்தியம். ஆனால், இது முடியுமா என்று பாருங்கள். அப்புறம் ஆகும் பொருட் செலவு. நிச்சயமாக பெரும் நடிகர்கள் சேராமல் போட்ட பணத்தை திரும்பப் பெறுவதும் கடினமாக இருக்கும்.

இப்போது கூட ராஜமௌலி ‘RRR’ என்னும் தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்ட படத்தை சத்தம் காட்டாமல் எடுத்து வருகிறார். அதிலும் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என இரு பெரும் நடிகர்கள்தான். இங்கே நடிகர்கள்தான் முதலில் வேண்டும். அதைக் கொண்டு செலுத்த நல்ல இயக்குநரும், அஞ்சாத தயாரிப்பாளரும் தேவைப்படும். ‘RRR’ படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே அதன் விற்பனை உரிமையை வாங்க நிலவுகிற போட்டி கொஞ்ச நஞ்சமல்ல.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சிவகங்கைச் சீமை’ போன்ற பெரும்படங்கள் தமிழில் செய்யப்படவில்லையா எனக் கேட்கிறீர்கள். பி.ஆர்.பந்துலு, ‘வீரபாண்டிய கட்டபொம்மனை’ச் செய்யும்போது தன் சொத்துக்களை எல்லாம் பணயம் வைத்து தயாரித்தார் எனவும், வெற்றி பெற்றதால் மட்டுமே அவரால் மீள முடிந்தது என்றும் சொல்கிறார்கள்.

அருமையான படமான ‘சிவகங்கைச் சீமை’ தோல்வி கண்டது, கண்ணதாசனை பொருளாதாரச் சிக்கலில் தள்ளிவிட்டது. தமிழில் இப்போதைக்கு இத்தகைய படங்கள் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது...’’ என்கிறார் தனஞ்செயன். ஓவியரும், கலை இயக்குநருமான ட்ராட்ஸ்கி மருதுவின் வாதங்கள் இப்படி இருக்கின்றன: ‘‘ஆரம்பத்தில் கடவுள் படங்களும், சரித்திரப்படங்களும்தான் தமிழ் சினிமாவை ஆட்சி செய்தன. அதுவே பெரும் காலமாக நீடித்தது.

திராவிட இயக்கம் இங்கே காலூன்றிய பிறகு நிலைமைகள் மாற ஆரம்பித்தன. சமூகப்படங்கள் மெல்ல வர ஆரம்பித்துவிட்டன. அதனால் சினிமாவில் சுயமரியாதை சார்ந்த படங்களும், கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன.வரலாற்றுப்படங்கள் எடுக்கும்போது நல்ல உழைப்பு வேண்டும். அதற்கான ஆராய்ச்சியும், முன்முதலீடும் தேவை. படத்தின் செலவை, படம் பிடிப்பதற்கு முன்னமே 30% செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

நான் ‘தேவதை’ படத்தைக் கையாளும்போது அதில் தமிழ்த் தன்மை இருக்க வேண்டும் என விரும்பினேன். தமிழ் சினிமாவில் அதற்கான சாத்தியங்கள் இனி இல்லையென்றே நினைக்கிறேன். நம்மிடம் ஸ்டூடியோ வசதிகள் அறவே இல்லை. ஆனால், ஆந்திராவில் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் சகல வசதிகளையும் செய்து வைத்திருக்கிறார்கள். ஸ்டூடியோக்களுக்கு முன்னோடியாக இருந்த நம்மிடம் இப்பொழுது அதற்கான சுவடே இல்லை.

ஆந்திராவில் பெரும் படங்கள் எடுப்பதற்கான அனைத்து வசதிகளுடன் பிரம்மாண்டமான செட்களுக்கும் இடம் இருக்கிறது. அங்கே தனித்து அமைத்து, பாதுகாக்கவும் முடியும். பெரும் வரலாற்றுப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிவிட்டால் மட்டும் போதாது. எழுதுவதை காட்சிப்படுத்துவது மட்டும் போதாது. கதையை காட்சிப் படுத்த வேண்டும்.

வரலாற்றுப் படத்திற்கான உடைகளை அணிந்துகொண்டு கூத்துக்கு பேசுவது மாதிரி பேசக்கூடாது.
இந்த மாதிரி வரலாற்றுப்படத்திற்கு ‘பாகுபலி’ உயரம் கிடையாது. ஆனால், இப்போது இருக்கிற நவீன விஞ்ஞான நேர்த்தியை ஒன்று விடாமல் பயன்படுத்தியிருந்தார்கள். இதை விடவும் ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ போன்ற இந்திப் படங்கள் சற்றே உண்மைக்கு நெருங்கி இருந்தன...’’ என்கிறார் ட்ராட்ஸ்கி மருது.

இயக்குநர் கரு.பழனியப்பன், ‘‘இங்கே ஓர் இயக்குநருக்கு தேவையான ஒரு நடிகர் கிடைப்பது கூட கடினம்...’’ என அழுத்தம்திருத்தமாக ஆரம்பித்தார்:
‘‘அப்படிப்பட்ட வேளையில் நாலைந்து நடிகர்கள் ஒன்று கூடுவது இங்கே பெரும்பாடு. இங்கே வேற்று மொழி நாயகர்களும் வந்து காலூன்ற முடியவில்லை. 20 வருடங்களாக மம்மூட்டி இங்கே வந்து பெயர் பெற்று விடப் பார்க்கிறார். ஆனால், முடியவில்லை.

மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ வெளிவந்து வெற்றி பெற்றபிறகுதான் இப்போது ‘பொன்னியின் செல்வன்’ சாத்தியமாகியிருக்கிறது. மலையாளத்தில் எந்த நடிகர்கள் நடித்தாலும், தனக்குப் பிடித்திருந்தால் அதில் சிறு வேடம் என்றாலும் நடிக்க தயாராகி விடுகிறார்கள். ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்தின் தயாரிப்பாளராக பகத் பாசில் இருந்தும், அதில் அவர் படம் முழுக்க வருகிறமாதிரி வேடத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை.

இங்கே தமிழின் வியாபாரம் குறைவு. படம் வெளிவருகிற நாளே அதன் அசல் பிரதிகள் இணையத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இங்குதான் அதிகம். வெளி மாநிலங்களில் இப்படி வெளிவர காலம் பிடிக்கும்.

தமிழில் வரலாற்றுப் படங்கள் வருவதற்கு ஏதுவான சூழ்நிலை ஏற்படுவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கவேண்டும். இக்கட்டுரை வெளிவரும் வேளையில், கடந்த 30 வருடங்களாக எம்ஜிஆர், கமல் போன்றவர்களின் கனவாக இருந்த ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புக்கு சென்றுவிட்டது என்ற இனிய செய்தி காதில் விழுகிறது...’’ என்கிறார் கரு.பழனியப்பன்.

நா.கதிர்வேலன்