முகம் மறுமுகம்-பொட்டிக் மேக்கப்பில் கலக்கும் சந்தோஷி



ரஜினியின் ‘பாபா’, அகத்தியனின் ‘காதல் சாம்ராஜ்ஜியம்’, விக்ரமின் ‘மரியாதை’ உட்பட மூன்று டஜன் படங்களில் புன்னகைத்தவர் சந்தோஷி.
தன் பதிமூன்றாம் வயதில், ஏவிஎம்மின் ‘வாழ்க்கை’ மூலம் சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தவர் தொடர்ந்து சன் டிவியின் ‘மரகதவீணை’, ‘இளவரசி’, ‘ருத்ரவீணை’, ‘அரசி’ என ஏராளமான ஹிட் சீரியல்களில் மினுமினுத்தார்.

திருமணத்திற்குப் பின், இப்போது தொழில்முனைவோராக கெத்துகாட்டுகிறார். ப்ளஷ் (plush) என்ற பெயரில் மணப்பெண்ணுக்கான காஸ்ட்யூம்ஸ், ஜுவல்ஸ், மேக்கப், போட்டோகிராஃபி என அத்தனையும் அடங்கிய பொட்டிக், மற்றும் மேக்கப் அகடமியையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் சந்தோஷி.

‘‘மேக்கப்னாலே ஐஷேடோ, லிப்ஸ்டிக் போடுறது மட்டுமே இல்ல. உங்க குறைகளை மைனஸ்ஸா ஆக்காமல், நிறைகளை ப்ளஸ்ஸா ஆக்குற விஷயம் அது. மேக்கப்ல என் ஸ்டைல் ஆஃப் ஒர்க்கும் அதான். முதன்முதலா மேக்கப் பாக்ஸை கையில தூக்கிட்டு ஒரு பியூட்டீஷியனா ஆனதும் கர் (கணவர்) டென்ஷனாகிட்டார். ‘நீ ஒரு ஆர்ட்டிஸ்ட்டா ஆயிரக்கணக்கா சம்பளம் வாங்கினவ... இப்ப வெறும் தொள்ளாயிரம் ரூபாய்க்காக மேக்கப் போடப்போறியா... அதுவும் அதிகாலை மூணு மணிக்கே கிளம்பி’னு ஆதங்கப்பட்டு சொன்னார்.

நடிப்பு மட்டுமில்ல, மேக்கப், ஹேர்ஸ்டைலிங்கும் என் passionனு சொல்லி புரியவச்சேன். அப்புறம், என்னோட இன்வால்வ்மென்ட் பார்த்துட்டு, அவரே இந்த பொட்டிக்கை வச்சுக் கொடுத்துட்டார். இதை ஆரம்பிச்சதும் சினிமா, சீரியல் நண்பர்கள் பலரும் ‘இதெல்லாம் உனக்கு எதுக்கு’னு கேலியும் கிண்டலுமா கேட்டாங்க. அப்படி கேட்ட அத்தனை பேரும், என்னோட அடுத்தடுத்த கடைதிறப்புகளுக்கு வந்து ஆச்சரியமானாங்க.

இந்த டிராவலும் சந்தோஷமா இருக்கு. ஆனா, பொட்டிக் ஆரம்பிச்ச முதல் வருஷம் லாபம் பார்க்கல. அதே டைம்ல நஷ்டமும் இல்ல. ஒரு கட்டத்துக்கு மேல இதை யார்கிட்டேயாவது வித்துடலாம்னு கூட தோணுச்சு. அப்ப கணவர்தான் சமாதானப்படுத்தினார். ‘பிசினஸ்ல பொறுமை அவசியம். நாம இன்னும் உழைப்போம். பலன் தானாக வரும்’னார். அது உண்மையாகவும் ஆகிடுச்சு...’’ சந்தோஷத்தில் பூரிக்கும் சந்தோஷி, சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தன் கேரியரை ஆரம்பித்தவர்.

‘‘எங்க அம்மா பூர்ணிமா, டிராமா ஆர்ட்டிஸ்ட். எட்டு வயசுல அம்மா கூட டிராமாக்களுக்கு போறப்ப சினிமா வாய்ப்புகள் தேடிவரும். ‘அந்த கேரக்டர் இருக்கு. உங்க பொண்ணுக்கு பொருத்தமா இருக்கும். நடிக்க அனுப்புங்க’னு  கேட்பாங்க. அப்படித்தான் நான் சினிமாவில் என்ட்ரி ஆனேன். எட்டு வயசுல இருந்தே படங்கள் பண்ண ஆரம்பிச்சிட்டேன். 13 வயசுல ‘வாழ்க்கை’ சீரியல் பண்ணின பிறகு, என் கேரியரே மாற ஆரம்பிச்சது.

நடிச்ச சினிமா, சீரியல் எல்லாமே என்னை தேடி வந்ததுதான். யார்கிட்டயும் சான்ஸ் கேட்டு நின்னதில்ல. சினிமா பண்ணும்போது வருஷத்துல நாலு படம்தான் பண்ணுவோம். நிறைய நாட்கள் சும்மா இருக்க வேண்டியிருக்கும். ஆனா, சீரியல்ல நாலு நாள் ஃப்ரீ கிடைச்சாலே பெரிய விஷயம். அப்படி பிசியா இருப்போம். நல்ல கம்பெனி, நல்ல ஸ்லாட்ஸ், நல்ல சேனல் அமைஞ்சதால தொடர்ந்து சின்னத்திரைல நடிச்சேன்.

நான் நடிக்கற சீரியல்கள்ல என்னோட காஸ்ட்யூம்ஸ்ல ரொம்பவே கவனம் எடுத்துக்குவேன். ஒரு எபிசோடுல வந்த டிரெஸ்ஸை, அடுத்த எபிசோடுல பயன்படுத்தினதில்ல. ‘அரசி’ எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. அந்த டைம்ல நான் ஒரே நாள்ல அஞ்சாறு சீரியல்கள்ல கூட ஓடியாடி நடிச்சிருக்கேன். அதை சீரியல் உலகின் கோல்டன் பீரியட்னே சொல்லலாம். ஷூட்டுக்கு கார்ல போகும் போது சிக்னல்ல பஸ் டிரைவர்கள் என்னைப் பார்த்துட்டு, ‘மேடம் ‘அரசி’ல உங்க டிரெஸ் நல்லா இருந்ததுனு எங்க வீட்டுல சொன்னாங்க’னு பாராட்டியிருக்காங்க.

என்னோட காஸ்ட்யூம் சென்ஸ்னாலதான் பொட்டிக் ஆரம்பிக்கற ஐடியா வந்துச்சு. அந்தக் கனவு என் கணவர் கர், மாமனார், சின்ன மாமியார், நாத்தனார்ஸ்னு அத்தனை பேராலேயும் சாத்தியமாச்சு. சென்னை ஆழ்வார்பேட்டைல தொடங்கின ப்ளஷ், இப்ப வடபழனி, மதுரை கே.கே.நகர்னு மூணு இடங்கள்ல சக்சஸ்ஃபுல்லா போயிட்டிருக்கு. இதுக்காகவே என் புகுந்த வீட்டுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...’’ கலகலப்பவர், பொட்டிக் மெட்டீரியல்களை வட இந்தியாவில்தான் கொள்முதல் செய்கிறாராம்.

‘‘சினிமால இருக்கிறப்ப கிடைச்ச ரசிகர்களை விட, இப்ப ப்ளஷ் மூலமா அதிக ஃபாலோயர்ஸ் கிடைச்சிருக்காங்க. பொட்டிக் ஆரம்பிக்கும்போது பிரைடல் மேக்கப் boom டைம் அது. சாதாரண சலூன் மாதிரியோ, ஸ்பா மாதிரியோ பண்ண விரும்பல. யூனிக்கா இருக்கணும்... சந்தோஷினாலே தனி பிராண்ட்னு சொல்லணும்னு ஆசை. plushனா மென்மையான பட்டுத்துணி மாதிரி ஒரு ஃபேப்ரிக். பொட்டிக், பியூட்டி லான்ச் ரெண்டுக்கும் பொருத்தமான பெயரா தெரிஞ்சதால அதையே வைச்சுட்டோம்.

நானும் சரி, என் கணவர் கரும் சரி ரெண்டுபேருமே சினிமா இண்டஸ்ட்ரீல இருக்கறவங்க. அதனால எங்களால பெஸ்ட் மேக்கப் பண்ண முடியும்னு மக்கள் நம்பி வர்றாங்க. ஒரு கல்யாணப் பொண்ணு, எங்க பொட்டிக்குள்ள நுழைஞ்சா போதும், மேக்கப், காஸ்ட்யூம்ஸ், ஜுவல்ஸ்னு அத்தனையும் எங்ககிட்ட இருக்கறதால, அவங்க மணமகளா ரெடியாகிடுவாங்க.

கல்யாணப் பொண்ணுக்கான காஸ்ட்யூம்ஸ்ல இப்போதைய டிரெண்ட் லெகன்காஸ், கவுன்ஸ்தான். தவிர பார்ட்டி வியர்ஸ் கலெக்‌ஷன்ஸும் வச்சிருக்கோம். அப்புறம், சில மணப்பெண்கள் பட்டுப்புடவை ப்ரியர்களா இருப்பாங்க. நாங்க சில்க் சாரீஸ் பக்கம் இன்னும் கவனம் செலுத்தல. ஆனா, அதுக்கான டிசைனர் பிளவுஸை டிசைன் பண்ணிக் கொடுக்கறோம்.

சமீபத்துல வெட்டிங் போட்டோகிராஃபியும் கொண்டு வந்திட்டோம். நடிகர் கணேஷ் - நிஷா வெட்டிங்   போட்டோகிராஃபி நாங்கதான்தான் பண்ணினோம். மெட்டீரியல்ஸ், ஜுவல்ஸை மும்பை, தில்லினு நேரடியா விசிட் அடிச்சு கொள்முதல் பண்றோம்.  சிலதை நாங்களே டிசைன் பண்ணியும் கொடுக்கறோம்.வர்ற க்ளையன்ட்ஸ் பலரும் ‘இந்த மேக்கப் எப்படி பண்ணணும்? அந்த மேக்கப் எப்படி’னு ஆர்வமா கேட்கறாங்க. அதுக்காகவே மேக்கப் கத்துக்கொடுக்கற அகடமியும் ஆரம்பிச்சுட்டோம்.

எங்க மூணு நிறுவனங்களையும் சேர்த்து முப்பது பேர்கிட்ட ஒர்க் பண்றாங்க. ஒரு நாளைக்கு இருபது மணப்பெண்களை ரெடி பண்ண முடியும். நான் இல்லாத டைம்ல மாமனார் பிரசாத் பாபுதான் பொட்டிக்கை பாத்துக்கறார். அவர் தெலுங்கில் என்டிஆர் காலத்துல இருந்து நடிச்சிட்டிருக்கார். தமிழ்ல கூட ‘உன்னால் முடியும் தம்பி’ல மனோரமாவின் வாய் பேச முடியாத கணவரா நடிச்சிருப்பார்.

ப்ளஷைப் பொறுத்தவரை, எனக்கு ப்ளஸ்ஸாதான் இருக்கு. ஒரு பெண்ணா இருக்கறதால கல்யாணப் பெண்களும் அவங்க விரும்பற விஷயங்களை தயக்கமில்லாம என்கிட்ட கேட்கறாங்க. ஃபிரான்ஸ், சிங்கப்பூர்னு வெளிநாடுகள்ல இருந்து கூட எங்க மேக்கப் அகடமிக்கு படிக்க வர்றாங்க. 4 நாட்கள்ல இருந்து 18 நாட்கள் வரை வகுப்புகள் எடுக்கறோம். ஆட்கள் வச்சு எடுக்கறதில்ல. நானே க்ளாஸ் எடுக்கறேன்.

சமீபத்துல மேக்கப், ஹேர்ஸ்டைல் பத்தி பிரமாண்டமான செமினார் ஒண்ணு நடத்தினோம். அதுல ஆசிட் வீச்சு பாதிப்புக்கு ஆளான லட்சுமி அகர்வால், நமீதா, ரக்‌ஷிதா, பிரியங்கா, ஷியாமளா, பரினா, விடிலிஜோ, மாடலிங் கேர்ள்ஸ் ரம்யா, பிராச்சி சோலாங்கினு பலரும் பங்கேற்றாங்க.
லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையைத்தான் தீபிகா படுகோனே ‘ஷபாக்’ங்கற பெயர்ல படமா தயாரிச்சிட்டிருக்காங்க. எங்க ஸ்டைல் ஆஃப் மேக்கப் லட்சுமிக்கும் பிடிச்சுப் போச்சு.

இந்த வருஷத்துல இருந்து ஆதரவற்ற பெண்கள், காது கேட்காத, வாய்பேசமுடியாத குழந்தைகளுக்கு இலவசமா மேக்கப் கத்துக் கொடுக்கற ஐடியாவும் வந்திருக்கு.அப்புறம், முக்கியமான ஒரு விஷயம்... நான் இன்னமும் ஆக்ட்டிங்கை விட்டுடல. நல்ல கம்பெனி, நல்ல சீரியல் வரும் போது கண்டிப்பா நடிப்பேன். இப்ப எனக்கு ட்வின்ஸ் பிறந்திருக்காங்க. அதனால, கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கேன்.

சினிமாதான் என் அடையாளம். அதுதான் இவ்ளோ பெரிய பொட்டிக்கை அமைச்சுக் கொடுத்திருக்கு. ஸோ, அதை ஒருநாளும் விட்டுடமாட்டேன்...’’ எனப் புன்னகைக்கிறார். சந்தோஷி - கர் தம்பதிக்கு, பனவ் என்ற மகனும், ஷாஸ்விதா, ருஷிதா என்ற மகள்களும் உள்ளனர்.

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்