ரத்த மகுடம்-83



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

மாடத்தை சீனன் நெருங்கியதும் ஆந்தை அலறியது.குனிந்து பார்த்தான். இருளும் ஒளிர்ந்தது. அதில் கரிகாலனின் கண்கள் சிமிட்டின. கூகையைப் போல் குரல் எழுப்பியது கரிகாலன்தான் என சீனன் புரிந்துகொண்டான்.  

பார்வையால் என்னவென்று கேட்டான்.ஜாடையால் சாளரம் ஒன்றை கரிகாலன் காண்பித்தான்.புரிந்துகொண்டதற்கு அறிகுறியாக சீனன் தலையசைத்தான்.அடுத்த கணம் கொடியைப் பிடித்தபடி, தான் ஜாடை செய்த சாளரத்தின் அருகில் கரிகாலன் வந்தான். எச்சரிக்கையுடன் தலையை உட்புறமாக நீட்டி இரு பக்கங்களிலும் பார்த்தான். யாருமில்லை.மெல்ல சாளரத்தைப் பிடித்தபடி ஓசை எழுப்பாமல் உள்ளே குதித்தான்.

ஏறிய வேகத்தில் இறங்கிய சீனன் சாளரத்தின் பக்கமாக வந்து கரிகாலன் போலவே உள்ளே இறங்கினான்.இருவரும் மிக மெதுவாக நடந்தார்கள். பாத ஒலியும் எழாதபடி பார்த்துக் கொண்டார்கள்.வலப்பக்கமாக நடந்தபடி வந்தவர்கள் மூடியிருந்த அறை ஒன்றின் முன்னால் நின்றார்கள்.

கரிகாலன் திரும்பிப் பார்த்தான். சீனன் தலையசைத்தான். இருவரும் கதவின் இருபுறமும் நின்றுகொண்டார்கள். தத்தம் இடுப்பில் இருந்து குறுவாளை எடுத்துக்கொண்டு கைகளில் கெட்டியாக பிடித்துக்கொண்டார்கள்.

பார்வையால் உரையாடிவிட்டு கரிகாலன் கதவின் மீது கை வைத்தான். உட்புறமாகத் தாழிடப்படாததால் கதவு திறந்துகொண்டது. புழக்கத்தில் இருந்த அறை என்பதற்கு அறிகுறியாக ஓசை எதையும் அது எழுப்பவில்லை. இருவரும் கவனத்துடன் அறைக்குள் நுழைந்தார்கள். எதிர்பார்த்தது போலவே அறையில் யாருமில்லை.‘‘கரிகாலரே...’’ சீனன் அழைத்தான்.புருவத்தை உயர்த்தி என்னவென்று கரிகாலன் கேட்டான்.

‘‘ஆந்தையைப் போல் நீங்கள் அலறச் சொன்னதற்கான காரணம் புரிகிறது. இரவில் கூகைகளின் ஆட்சி என்பதால் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் எழாது. எனவே நீங்கள் கேட்டுக் கொண்டபடி கொடியை மாடம் வரை ஏறுவதற்கு வசதியாக வைத்துவிட்டு நான் வந்துவிட்டதற்கு அறிகுறியாக ஆந்தையைப் போல் அலறி சமிக்ஞை செய்தேன்...’’
‘‘அதற்கென்ன இப்போது..?’’

‘‘இல்லை... மாடம் வரை கொடியைப் படரும்படி வைக்கச் சொல்லிவிட்டு எதற்காக சாளரத்தில் நுழையச் சொன்னீர்கள்..?’’
‘‘சிறிது நேரத்தில் நீயே அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வாய்...’’ கரிகாலன் புன்னகைத்தான்.‘‘நம்மால் சமாளிக்க முடியும்... குறிப்பாக உங்களால்... என்றாலும் எதிரிகள் சூழ்ந்துகொண்டால் தப்பிப்பது கடினமல்லவா..? நீங்கள் வேறு வாட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்... குறுவாள் போதும் என்று சொல்லிவிட்டீர்கள்...’’‘‘வாட்களுக்கு தேவை ஏற்படாது...’’‘‘மாளிகை..?’’

‘‘மாளிகையின் சூட்சுமம் எனக்குத் தெரியும்... அஞ்சாதே! காஞ்சியில் மாளிகையை நிர்மாணித்த சிற்பியின் சீடர்கள்தான் மதுரை வணிக வீதியையும் அமைத்திருக்கிறார்கள்... என்ன... கொஞ்சம் மாறுதல் செய்திருக்கிறார்கள்! சிற்ப சாஸ்திரமும் வாஸ்து சாஸ்திரமும் அறிந்தவனுக்கு இந்த மாளிகையை விட்டு எப்படி வெளியேற வேண்டும் என்றும் தெரியும்...’’

‘‘ஆனால், இது வணிகர் வீதி அல்லவா..?’’
‘‘வணிகனான நீ இப்போது ஒற்றனாகச் செயல்படவில்லையா..? நிலம் மாறலாம்... தேசம் பிரியலாம்... ஆனால், வணிக வீதிதான் உலகத்தையே இணைக்கிறது! சமாதானமும் சச்சரவும் தீர்மானிக்கப்படுவது பிரபஞ்சம் எங்கும் வணிகர்களால்தான்! தேசங்களை உருவாக்குவதும் யுத்தத்துக்கான தேவையை விதைப்பதும் காலம் காலமாக வணிகர்கள்தான்! அதனால்தானே காஞ்சி வணிக வீதியை சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபர் தேர்ந்தெடுத்தார்?! அதே வழியைத்தான் மதுரையில் நாம் பின்பற்றப் போகிறோம்!’’
‘‘புரிகிறது கரிகாலரே...’’ சீனன் இழுத்தான்.

‘‘பரவாயில்லை... தொண்டைக்குள் சிக்கி இருப்பதையும் கேட்டு விடு!’’
‘‘காஞ்சியை மீட்க வேண்டிய நேரத்தில் எதற்காக பல்லவ இளவரசர் உங்களை மதுரைக்கு அனுப்பியிருக்கிறார்..? எதற்காக யாருக்கும் ஐயம் எழாதபடி என்னையும் இங்கு வரச் சொன்னீர்கள்..?’’‘‘எந்த இடத்தில் போர் நடைபெற வேண்டும் என்று தீர்மானிக்க!’’
‘‘கரிகாலரே...’’‘‘தமிழகத்தின் நிலை உனக்குப் புரியாது... வணிகம் செய்ய வந்தவன் பல்லவ இளவரசருக்கு நட்பாகி அவருக்காக உன் உயிரையும் கொடுக்க சித்தமாகி இருக்கிறாய்... அதற்காகவே எங்கள் சார்பில் ஒற்றனாகவும் மாறியிருக்கிறாய்... உண்மையில் இந்த மண்ணில் பிறந்த என்னைவிட நீயே உயர்வானவன்...’’ நெகிழ்ச்சியுடன் சொன்ன கரிகாலன், சீனனை நெருங்கி அவனை அணைத்துக் கொண்டான்.

‘‘இதை ஏன் இப்போது சொல்கிறீர்கள்..?’’ கூச்சத்துடன் சீனன் கேட்டான்.‘‘உன் கேள்விக்கு பதில் அளிக்க! உன் நாட்டில் போர் புரிவது போலவே இங்கும் யுத்தம் நடைபெறும் என்று நினைத்து அதற்கேற்ப யோசிக்கிறாய்... ஆனால், இந்த நிலத்தின் யுத்த தந்திரங்களே வேறு... சில முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும்... அப்போதுதான் நமக்குத் தேவையான இடத்தில் முடிச்சிட முடியும்... எனது கணிப்பு சரியெனில் நாளைக் காலை நீ உறையூருக்குச் செல்லவேண்டி இருக்கும்...’’

ஏதோ கேட்க வாயைத் திறந்த சீனன், சட்டென்று அமைதியாக தன் செவிகளைக் கூர்மைப்படுத்தினான்.
கரிகாலனின் காதுகளும் எழுந்து தாழ்ந்தன.
யாரோ யாரிடமோ பேசும் சப்தம்.
‘‘கரிகாலரே... அது சிவகாமியின் குரல்...’’
‘‘ம்...’’ கரிகாலன் புன்னகைத்தான்.

‘‘நாம் இருவரும் கொடியைப் பிடித்து ஏறுவதை அவர்கள் பார்த்தார்கள்...’’
‘‘தெரியும்... அவள் பார்க்க வேண்டும் என்றுதான் அவ்வப்போது வெளிச்சம் என்மீது படும்படி பார்த்துக் கொண்டேன்!’’
‘‘சிவகாமி யார் பக்கம் இருக்கிறார்கள்..?’’
‘‘உனக்கென்ன தோன்றுகிறது..?’’
‘‘குழப்பமாக இருக்கிறது!’’

‘‘ராஜ தந்திரத்தின் ஒரு பகுதி எதிராளியைக் குழப்புவது... சிவகாமி அதைத்தான் செய்கிறாள்... பல்லவர்களை மட்டுமல்ல, சாளுக்கியர்களையும் குழப்புகிறாள். அடுத்து பாண்டியர்களையும் குழப்பப் போகிறாள்... அவள் யார் பக்கம்... யாருடைய ஆயுதம்..? இந்தக் கேள்வியை மட்டும்தான் எல்லோர் மனதிலும் விதைத்திருக்கிறாள். இதற்கு தீர்வு காண ஒவ்வொருவரும் முற்படுவதற்குள் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கிறாள்...’’
‘‘அவர்களுக்கு என்ன வேண்டும்..?’’

‘‘கலங்கிய குட்டை தெளிந்த பிறகு உள்ளே இருப்பது ஸ்படிகமாகத்
தெரியும்!’’‘‘எப்போது தெளியும்..?’’
‘‘தெளியாது... தெளிய வைக்க வேண்டும்... வா...’’
சீனனை அழைத்துக் கொண்டு குரல் வந்த திசையை நோக்கி கரிகாலன் நகர்ந்தான்.சூழலை உணர்ந்து அதன் பிறகு எதுவும் பேசாமல் சீனனும் பின்தொடர்ந்தான்.

அவர்கள் இருந்த அறை இன்னொரு அறைக்கு வழிகாட்டியது. அங்கிருந்து இன்னொன்று. பிறகு மற்றொன்று. குரலையே பாதையாகப் பின்பற்றினார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் இருவருக்கும் வழிகாட்டுவதற்காகவே சிவகாமி தன் குரலை உயர்த்திப் பேசுகிறாளோ என்றுகூட கரிகாலனுக்கும் சீனனுக்கும் தோன்றியது!குரலின் ஓசை அதிகரித்தபோது சுவர் ஒன்றின் முன்னால் நின்றுகொண்டிருந்தார்கள்.

கரிகாலன் அந்தச் சுவரை ஆராய்ந்தான். ஓரிடத்தில் அவன் பார்வை நிலைத்தது. கண்கள் பளிச்சிட்டன. தன் வலது கையை அந்த இடத்தில் வைத்து தடவினான். திருப்தியுடன் நகத்தால் அங்கு சக்கரம் வரைந்தான். சக்கரத்தின் மையத்தை விரல்களால் பிடித்துத் திருகினான்.
ஓசை எழாமல் அந்த சுவர் கதவாக மாறித் திறந்தது!சீனன் பிரமிப்புடன் கரிகாலனைப் பார்த்தான்.

எந்த சமிக்ஞையும் காண்பிக்காமல் கரிகாலன் நுழைந்தான். கூடவே சீனனும்.பாதாள சிறையைப் போல் கும்மிருட்டாக இருந்தது. இருள் பழகியதும் தொலைவில் ஒளி தென்பட்டது. அதை நோக்கி மெல்ல நடந்தார்கள்.அந்த ஒளி தீப்பந்தம் என்பதும் சிவகாமி நடுவில் அமர்ந்திருக்க அவளைச் சுற்றிலும் சாளுக்கிய, பாண்டிய தளபதிகள் நின்று கொண்டிருப்பதும் கால் நாழிகை பயணத்துக்குப் பின் தெரிந்தது.இருளோடு கரைந்தபடி அவர்கள் பேசுவது துல்லியமாகக் கேட்கும் தொலைவில் கரிகாலனும் சீனனும் நின்றார்கள்.

சிவகாமியின் கையில் அரக்கு இருந்தது. அவள் முன்னால் வெள்ளை நிற பட்டுத்துணி விரிந்திருந்தது.‘‘புரிகிறதல்லவா..? இனி கவனியுங்கள்...’’ சிவகாமியின் குரல் அழுத்தமாக ஒலித்தது.குனிந்து அரக்கினால் பட்டுத் துணியின் ஓரிடத்தை வட்டமிட்டாள்.‘‘இது புள்ளலூர். காஞ்சிபுரத்துக்கு பத்து கல் தொலைவில் இருக்கும் ஊர். இங்குதான் பல்லவ மன்னர் மகேந்திரவர்மருக்கும் சாளுக்கிய மாமன்னர் இரண்டாம் புலிகேசிக்கும் போர் நடந்தது. பல்லவர்களுக்கு தெற்கே சிற்றரசாக சோழர்களும், பேரரசாக பாண்டியர்களும் இருந்தனர். மேற்கே கங்கர்கள் வலிமையுடன் இருந்தார்கள்.

மாமன்னர் இரண்டாம் புலிகேசி, சோழர்களையும் பாண்டியர்களையும் தவிர்த்துவிட்டு கங்கர்களை நட்பாக்கிக் கொண்டார். அந்தப் போரில் பல்லவர்களும் சாளுக்கியர்களும் சம அளவில் வெற்றி பெற்றனர். பல்லவ ராஜ்ஜியத்தை சாளுக்கியர்களால் கைப்பற்ற முடியவில்லை. இது பல்லவர்களுக்கு சாதகமான விஷயம்.

அதேநேரம் பல்லவர்களின் விஸ்தரிப்பை சாளுக்கியர்கள் இப்போரில் தடுத்தனர். இது சாளுக்கியர்களுக்கு சாதகமாக அமைந்தது. எனவேதான் இருநாட்டினரும் தத்தம் வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் கல்வெட்டைச் செதுக்கியுள்ளனர்... இந்த விவரங்கள் உங்களுக்குத் தெரியும்...’’

நிறுத்திய சிவகாமி நிமிர்ந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு எதேச்சையாக பின்னால் திரும்புவதுபோல் திரும்பினாள்.
அங்குதான் கரிகாலனும் சீனனும் இருளில் மறைந்திருந்தார்கள்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்