அடிக்கடி வெங்காயம் விலை உயர என்ன காரணம்..?



வெங்காய விலை உயர்வுதான் இப்போதைய பகீர் வைரல். பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வெங்காய விலை உயர்வு பற்றி கேட்க, அவர் ‘என் வீட்டில் வெங்காயத்தைப் பயன்படுத்துவதில்லை.
அதனால் அது பற்றி தெரியாது’ என்று சொன்ன மென் நகைச்சுவை எதிர்க்கட்சிகளாலும் நெட்டிசன்களாலும் கிழிகிழியென்று கிழிக்கப்படுகிறது.‘வெங்காயத்தின் சாதி (caste) பற்றி அல்ல, விலை (cost) பற்றி கேட்கிறோம், பதில் சொல்லுங்கள்’ என்று கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

 மறுபுறம் கணவன் மனைவிக்கு வைர நகைகளுக்குபதிலாய் வெங்காயம் வாங்கித் தருவதைப் போன்ற மீம்ஸ்கள், ஜாலி கேலிகள் என்று களை கட்டுகிறது. இப்படியாக கொந்தளிப்பும் பகடியுமாக தேசிய பேச்சாகியிருக்கிறது வெங்காய விலை உயர்வு.

உண்மையில் வெங்காயம் இந்த வருடம் மட்டும் விலை உயரவில்லை. அடிக்கடி இது வாடிக்கைதான். கடந்த வருடங்களில் பலமுறை வெங்காய விலை விண்ணுக்குச் சென்றிருக்கிறது. ‘உன்னில் உருவான ஆசைகள் என் அன்பே அந்த வெங்காய விலை போல இறங்காதது’ என்று வைரமுத்து சினிமா பாட்டில் எழுதும் அளவுக்கு வரலாற்றில் இடம் பெற்ற சமாசாரம் இது.

குறிப்பாக, 1998ம் ஆண்டு ஏற்பட்ட வெங்காய விலை உயர்வால் தில்லி, ராஜஸ்தான் மாநில தேர்தல் முடிவுகளே மாறின. அதேபோல், 1980ம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலையும் வெங்காய விலை உயர்வே தீர்மானித்திருக்கிறது. இப்படி சமையலறை முதல் பார்லிமெண்ட் வரை சகல இடங்களிலும் காரசாரமாக புழங்குவதுதான் வெங்காய வரலாறு.

எல்லாம் சரி, வெங்காய விலை ஏன் இப்படி அடிக்கடி விண்ணுக்குப் போகிறது?
வெங்காய உற்பத்தியில் ஏற்படும் சரிவுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள். வெங்காயம் இந்தியாவின் முக்கியமான உணவுப் பொருள். சொல்லப் போனால் உலகுக்கே முக்கியமான உணவுப் பொருள். தினசரி உணவில் இது இல்லாத சமையலே இல்லை என்ற அளவுக்கு வெங்காயம் முக்கியமான உணவு.

புற்றுநோய் போன்ற கொடூரமான நோய்களைக்கூட தடுக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உட்பட பல்வேறு முக்கியமான சத்துக்கள் கொண்ட வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இதனால் நோயாளிகள் முதல் வளரும் குழந்தைகள் வரை அனைவருக்கும் அத்தியாவசியமானது. இதுதான் வெங்காயத்தை எல்லா சமையல்கட்டுகளிலும் இன்றியமையாததாக மாற்றியிருக்கிறது.

உலக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடுகளில் நமக்கு இரண்டாம் இடம். சீனாதான் முதலிடம். ஆண்டுதோறும் நாம் இரண்டு கோடி டன் வெங்காயத்தை உற்பத்தி செய்கிறோம். சீனா இரண்டரைக் கோடி டன். நமக்கு அடுத்த நிலையில் அமெரிக்கா, எகிப்து, ஈரான், துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகள் இருக்கின்றன. உலகம் முழுதும் ஆண்டுதோறும் பத்து கோடி டன் வெங்காயம் உற்பத்தியாகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரை வெங்காயம், தேசம் முழுதும் விளைந்தாலும் மகாராஷ்ட்ரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும் மொத்த உற்பத்தியில் 45% உற்பத்தியாகிறது. இவ்விரண்டு மாநிலங்களும்தான் நமக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்குமேகூட வெங்காய தாதாக்கள். இதைத் தவிர நாம் சிலவகை வெங்காயத்தை பாகிஸ்தான்,எகிப்து போன்ற நாடுகளிலிருந்தும்இறக்குமதி செய்துவருகிறோம்.மகாராஷ்ட்ராவிலும் கர்நாடகாவிலும் பருவமழை தவறும்போதோ அதிகப்படியாகப் பொழியும்போதோ அது வெங்காய சாகுபடியைப் பாதிக்கிறது. இதனால் அந்த வருடம் வெங்காய விலை விண்ணைத் தொடுகிறது.

உண்மையில் பருவ மழையால் வெங்காய விலை பாதிப்பது ஒரு பகுதிதான். இன்னொரு முக்கியமான விஷயம் நமது வியாபாரிகள் செய்யும் பதுக்கல் என்னும் தில்லாலங்கடித்தனம். சுமார் நாற்பத்தைந்து சதவீத வெங்காய உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டாலும் ஏற்றுமதியைக் குறைத்து, இறக்குமதிக்கான வரியைத் தளர்த்தி நிலைமையைக்கட்டுக்குள் கொண்டுவர இயலும். ஆனால், சில வியாபாரிகளின் பேராசையும் அரசியல்வாதிகளின் சுயநலமும் இதைச் செய்யவிடாமல் தடுக்கின்றன. இதனால் தேவைக்கு ஏற்ற இருப்பு இல்லாமல் போகிறது.

அதேபோல், மகாராஷ்ட்ரா, கர்நாடாகாவில் விளைச்சல் பாதிக்கப்பட்டால் ஆந்திரா, பஞ்சாப், வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள வியாபாரிகள் உடனடியாக தங்கள் மாநில வெங்காயங்களை சந்தைக்குக் கொண்டுவராமல் பதுக்கிவிடுகிறார்கள். வெங்காயத்தை சரியான முறையில் பாதுகாத்தால் சில மாதங்கள் வரை காக்க முடியும் என்பதால், அதனை தங்கள் குடோன்களில் பதுக்கி வைத்திருந்து, வெங்காயத்துக்கான தேவை உச்சத்தில் இருக்கும்போது அதைக் கொள்ளை விலையில் சந்தைக்குக் கொண்டுவருகிறார்கள்.

இப்படி, எரியும் வீட்டில் உருவும் மட்டும் மிச்சம் என்பதைப் போல சீசனில் சம்பாதித்தால்தான் உண்டு என்ற வியாபாரிகளின் பேராசையும் வெங்காய விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். டிசம்பர் மாதத்தில் வெங்காய வரத்து சீராகத் தொடங்கிய பிறகு பல வியாபாரிகள், தங்கள் பேராசையால் மிச்சமாகி அழுகிய வெங்காயங்களை டன் கணக்கில் கொண்டு போய் கீழே கொட்டுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

அரசு வெங்காய விலை நிர்ணயம் உள்ளிட்ட விஷயங்களில் நேரடியாகத் தலையிட்டு உச்சவரம்பு நிர்ணயிப்பது, விவசாயிகளுக்கு உரிய தொகை போய்ச் சேர்கிறதா என்பதை உறுதி செய்வது, தேவைக்கும் இருப்புக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை சரியாகப் பேணுவதன் மூலம் சந்தையைக் கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் வெங்காய விலை நிரந்தரக் கட்டுக்குள் வராது.

இளங்கோ கிருஷ்ணன்