இருட்டு



மலைக்கிராமத்தின் மர்மங்களை அசராமல் கண்டுபிடிக்கும் இன்ஸ்பெக்டரின் சாகசங்களே ‘இருட்டு’.அந்தக் கிராமத்தில் ஏராளமான வினோதங்கள். ஒன்றுக்கொன்று பிடிபடாத விஷயங்கள், நடக்கின்றன. பகல் இரவாகிறது. ஆறு பேர் மர்மமாக இறக்கிறார்கள்.
இன்ஸ்பெக்டரும் தீக்குளித்து உயிர் துறக்கிறார். இந்தக் கட்டத்தில் சுந்தர்.சி புது இன்ஸ்பெக்டராக உள்ளே வருகிறார். கொலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தாரா, குடும்பத்தை சேதாரமின்றி தக்கவைத்தாரா என்பதே திரைக்கதை.

பார்த்துப் பழகிய பேய்ப் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அதற்கு விடைகொடுத்திருக்கிறார்இயக்குநர் வி.இஸட்.துரை. சுந்தர்.சி பெரிதாக தன்னை மாற்றிக்கொள்ளாமல் ஹீரோத்தனம், மிடுக்கு என எதிலும் அகப்பட்டுக்கொள்ளாமல் இயல்பு.

மனைவியைக் கொஞ்சுவதில் அடுத்த கட்டம் போயிருக்கிறார். விடிவி கணேஷுக்கு பயத்தை ஊட்டும்போதெல்லாம் சிரிப்பொலி கேட்கிறது. அடுத்தடுத்து மர்மங்களைப் புரிந்துகொண்டு அதை கட்டவிழ்ப்பு செய்வது நன்று. அதற்காக குழந்தைகளுக்கு நடக்கும் விபரீதத்தைக் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது உறுத்தல்.

சாக்‌ஷிக்கு நடிப்புக்கு இடமில்லை. ஆனால் கவர்ச்சிக்கு உத்தரவாதம். யோகிபாபு ஒரே காட்சியில் வந்து காணாமல் போகிறார்.கிரீஷின் பின்னணி இசை பயமுறுத்துகிறது. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு பய உணர்வைக் கூட்டி அச்சமூட்டுகிறது. கதைக்குள் செல்லாமலே ஆரம்பத்தில் காட்சிகளை நகர்த்துவது ஏன்? சிக்கல்கள் சூழ இருக்க சுந்தர்.சி.யின் காதல் களிப்பு காட்சிகள் எப்படி!திடுக்கிடும் வித்தியாச திரில்லருக்கு உத்தரவாதம் தரலாம்.

குங்குமம் விமர்சனக் குழு