தொல்(லைக்) காப்பியம்



நிலையாமை பத்தி நமக்கு எப்பவும் அறியாமைதான். இறப்பும் இழப்பும் நமக்கு எந்த பள்ளிக்கூடமும் கல்லூரியும் கற்றுத்தராத பல பாடங்களை சொல்லித் தரும்.

தத்துவங்களை தள்ளி வைத்துவிட்டு ஓர் இறப்பு நடந்த கிராமத்து வீட்டில் நடக்கும் சம்பவங்களை மட்டும் கண்டா, நமக்கு வெறுமையின் மீதான வெறுப்பையும் தாண்டி வந்துவிடும் சிரிப்பு. ஹாலிவுட் படங்கள்ல இருந்து கோலிவுட் படங்கள் வரை, கொரியா படங்கள்ல இருந்து ஒரியா படங்கள் வரை, உலகப் படங்கள்ல ஆரம்பிச்சு உள்ளூர் படங்கள் வரை எதுலயும் கிடைக்காத புது அனுபவங்களை கத்துத் தருவது எழவு வீடுகள்தான். சில சமயங்களில் ‘சத்தமா கிடக்கிற சட்டசபைய விட கெட்டசபை’ எழவு வீடுதான்.

சாமந்திப் பூ வாசமும் சல்லிசான சரக்கு வாசமும் கலந்து மணக்கும் ஒவ்வொரு எழவு வீடும், உள்ளங்கள் வெவ்வேறானாலும் உணர்வுகளால் ஒருசேர பிணைக்கப்பட்ட மனிதர்களைப்பத்தி சொல்லும் என்சைக்ளோபீடியாக்கள்தான்.  முதல் நாள் வரை வீட்டுக்கு வந்தப்பவெல்லாம் ‘பழனிசாமியண்ணன் எப்ப வருவாரு’ன்னு கேட்ட அதே வாய்ங்க, ‘பாடிய எப்ப எடுக்கிறாங்க’ன்னு கேட்க வைப்பதுதான் காலம் ஆடும் குச்சிப்புடி டான்ஸ்.

ஆறு குழந்தைங்க பெத்து அரசாண்ட டாடியா இருந்தாலும், நூறு பேர வச்சு வேலை வாங்கின லேடியா இருந்தாலும், செத்துப்போனா அடுத்த நொடியே பாடிதான். நாக்குல தின்னாலும் கேக்கு மேல இருக்கிற கிரீமு கொஞ்சம் மூக்குல ஒட்டும். மனுஷன் வைகுண்ட மலையேறிட்டா அந்தளவுக்குக் கூட உலகத்தோட ஒட்டுறது இல்ல.

சிலபேரு இருக்கானுங்க, சர்வகாலமும் சந்தேகத்துலயே வாழுறவனுங்க. அவனுங்க பக்கத்துல சிக்கிக்கிட்டோம்னா எல்லாருக்கும் காலண்டர்ல இருக்கிற சனி, நமக்கு காலுக்கு அடியிலயே இருக்குனு அர்த்தம்.  ‘நம்ம குப்புசாமியா போயிட்டாரு’ன்னு கேட்பானுங்க, நாமளும் ‘ஆமா’ன்னு சொல்வோம். திரும்ப ரெண்டு நிமிஷம் கழிச்சு, ‘நேத்து கூட சரக்க போட்டுட்டு சாக்கடைல படுத்திருந்தாரேங்க, அவரா செத்துட்டாரு’ன்னு கேட்பானுங்க. என்னமோ பம்பாய் தாஜ் ஹோட்டல்ல ரூம் போட்டு தாயம் விளையாடின மாதிரி.

மூணாவது தடவை கேட்க அவனுங்க வாய திறக்கிறப்ப, அவனோட மூணு விரலை எடுத்து டெட் பாடி மூக்குல விட்டு, ‘மூச்சு வருதான்னு பார்த்துக்கடா முள்ளு புதரு வாயா’ன்னு கத்த சொல்லும். இன்னமும் சிலபேரு இருக்கானுங்க... ஒவ்வொரு ரவுண்டு சரக்கு உள்ள போனதும், ‘ஐயோ பெரியப்பா’ன்னு ஊரே அதிர்ற மாதிரி ஓடி வந்து பொணத்துக்கு முத்தம் கொடுத்துட்டு போவானுங்க. ‘எங்க தாத்தாவுக்கு சாராயம் புடிக்கும், புதைச்சா அவரை புல் பாட்டிலோடதான் புதைக்கணும்’னு உரிமைப் போராட்டம் பண்றவங்களும் உண்டு.

எழவு வீட்டுல முதல் நாள் காலைல குடிக்கிற காபில இருந்து மூணாவது நாள் கிடைக்கிற கருமாதி சோறு வரைக்கும் டைம் டேபிள் போட்டு சாப்பிட வந்தவனை கரெக்ட்டா கண்டுபிடிக்கலாம். அவனுங்கதான் இறந்தவர்களைப் பத்தி சிற்றுரை, சிறப்புரை, வரவேற்புரை, வாழ்த்துரைன்னு கிடைக்கிற காதுகளில் எல்லாம் கடப்பாரையை விட்டுக்கிட்டு இருப்பானுங்க.

‘உதவின்னு யாராவது கேட்டா, ஒரு மணி நேரம் ஏடிஎம்ல நின்னாவது எடுத்துக் கொடுப்பாருங்க’ன்னு சொல்வான். செத்த மனுஷனுக்கு பேங்க்ல அக்கவுண்ட்டே இருக்காது... அவரே, பொங்கலுக்கு அடைச்சுடறேன்னு டீக்கடைல அக்கவுண்ட் வச்சு பீடி அடிச்சுக்கிட்டு இருப்பாரு!
‘பசின்னு வந்தவங்களுக்கு நாக்குல ருசி மறக்குற அளவுக்கு சோறு போடும்’னு செத்த அம்மாவை புகழ்ந்து சொல்வானுங்க. அந்தம்மா முந்நூறு கிராம் கறி வாங்கி தொண்ணூறு பேருக்கு சோறாக்கி போட்டிருக்கும்.

நாம இவளை இப்ப புகழ்ந்தாதான், நாம செத்தாலும் நாலு பேரு புகழ்வாங்கன்னு பிளான் பண்ணி புகழ்கிற கிழவிங்க உண்டு. ‘பருவத்துல பொம்மை மாதிரி இருப்பா, பருத்தி வெடிச்ச மாதிரி பல்லைக்காட்டிச் சிரிப்பா’னு கம்பனுக்கும் கண்ணதாசனுக்கும் டஃப் ஃபைட் கொடுக்கும். செத்துப்போன அம்மாவோ கட்சிக்காரனுங்க கொளுத்துன உருவ பொம்மையாட்டம் இருக்கும். ஜேசிபி கை மாதிரி பல்ல முன்னாடி காட்டி சிரிக்கும்.

இப்படி ஓவரா புகழ்ந்து சங்குக்குள்ள சமுத்திரத்தை கொட்டுறது ஒரு வகைன்னா, இதான்டா நேரம்னு நெஞ்சுக்குள்ள இருக்கிற பாரத்தை இறக்கிவைக்க திட்டுறது ஒரு வகை. ‘பத்து ரூபா செலவு பண்ணாத பஞ்சாரப் பய, பணத்தை சேர்த்து வச்சு மட்டும் என்னாச்சு? தூக்கிப்போட்ட பால் பாக்கெட் தலைல பட்டு செத்துப் போயிட்டான்’னு போறபோக்குல புகையட்டும்னு போட்டுட்டு போயிடுவானுங்க. ‘கால் படி அரிசி கடன் கேட்டேன் கொடுக்கமாட்டேன்னுட்டா, இன்னைக்கு கப்பல் முழுக்க அரிசி சிப்பமேத்தியா கொண்டு போயிட்டா’ன்னு பழைய வஞ்சத்துல கொஞ்சத்தை கொட்டும்ங்க.

ஒப்பாரி பாடுறதுக்குன்னே ஊருக்குள்ள நாலு சுத்துங்க. வடக்குத் தெருவுல எழவு விழுந்திடுச்சுன்னு வாய் வழியா சேதி வந்தாலே போதும், மனசுல பி.சுசீலா, சித்ரான்னு நினைச்சுக்கிட்டு சூப்பர் சிங்கர் நடத்த அட்டண்டன்ஸ் போட்டுடும்ங்க இந்த ரவுடி பாட்டீஸ்.

வஞ்ச–்ப்புகழ்ச்சில ஆரம்பிச்சு கேட்கிறவன் நெஞ்சைப் புடிச்சுக்கிற அளவுக்கு ஆல் இந்தியா ரேடியோவா அடிச்சு விடுங்க. ‘நீ வாக்கிங் போகையிலே... போகையிலே, அந்த வங்கக்கடலே வணக்கம் சொல்லும்; நீ மழையில நனையையில... நனையையில, அந்த மேகமே வந்து குடை பிடிக்கும்’னு
ஒண்ணு நடு ஹால்ல ஏரோட்டுனா, ‘கல்ல பொதைச்சு வச்சா அது ரோடாகும், அருகம்புல்ல புதைச்சு வச்சா அது காடாகும், மண்ண புதைச்சு வச்சா அது மேடாகும், மன்னாதி மன்னவனே உனக்கு என்ன ஈடாகும்’னுஇன்னொண்ணு பொணத்து தலைமாட்டுலயே காரோட்டும்.  

ஒப்பாரிலயே வஞ்சப்புகழ்ச்சியும் உண்டு. ‘எல்லோரும் பற்பசையில பல்லு விளக்கறப்போ, அடியே, போஸ்டர் ஒட்டுற பசையிலயே பல்லு விளக்குனவளே; எல்லாம் புருஷனை மதிக்கிறப்போ, கிளியே, புடவைய தூக்கிக் கட்டி புருஷன் முதுகுலயே மிதிச்சவளே’ன்னு சைடு சந்துல சைக்கிள் மிதிச்சுட்டு போயிடுங்க. எழவு வீட்டுல எந்த பொம்பளை நல்ல சேலை கட்டியிருக்கான்னு பார்த்துட்டு, அழுகறப்ப வர எல்லா ஊளையையும் அந்தம்மா சேலைல துடைச்சிட்டு போயிடுங்க.

செத்துப்போனவரு மூக்குல பஞ்சைக் கூட வச்சிருக்க மாட்டாங்க, அதுக்குள்ளே சொத்தைப் பிரின்னு அண்ணன் தம்பிங்க நெஞ்சுல மிதிச்சுக்கிட்டு அடிச்சுக்கிற ஆக்‌ஷன் காட்சிகள் முதல் கோடி துணி கொண்டு வரப்ப பொறந்த வீட்டு கோடி, புகுந்த வீட்டு கோடி, பங்காளிங்க கோடின்னு பட்டாசு வெடிக்கிற சப்தத்தையும் மீறி வரும் அழுகைகள்னு சென்டிமென்ட் காட்சிகள் வரைக்கும் ஒருசேர ஓடும்.

தேர் கட்டுவது முதல் சீர் வைப்பது வரைக்கும் எழவு வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஆயிரம் கதைகளை வைத்திருக்கிறது. நமக்குத்தான் இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. ஷாமியானா பந்தலைப் பார்த்துத்தான் பக்கத்து வீட்டில் பெரிய காரியம் என்பதே பலருக்கும் தெரிகிறது.                                                     

 தோட்டா ஜெகன்