நீடாமங்கலம் to மன்னார்குடி 2100 மரப்போத்துகள்! சாதித்த கிரீன் நீடா



ஒன்றல்ல… இரண்டல்ல… இரண்டாயிரத்து நூறு மரப்போத்துகள். சுமார் 12 கிமீ தூரத்துக்கு, அதுவும் நான்கே மணி நேரத்தில் சாலையின் இருபுறங்களிலும் நட்டு ஒரு புதிய சாதனையே படைத்துள்ளனர் நீடாமங்கலத்தைச் சேர்ந்த ‘கிரீன் நீடா’ என்ற அமைப்பினர். இவ்வளவு தொலைவுக்கு மரப்போத்துகள் நட்டது தமிழகத்தில் இதுவே முதல்முறை.

‘‘இதை வெறும் சாதனைக்காக செய்யல... முன்னாடி எங்க பகுதி ரொம்பப் பசுமையா குளுகுளுனு இருக்கும். சாலையை விரிவுபடுத்தும்போதும், கஜா
புயலின்போதும் நிறைய மரங்கள் போயிடுச்சு. அதை சமன் செய்ய இவ்வளவு மரப்போத்துகளை நட்டிருக்கோம்...’’ அமைதியாகச் சொல்கிறார் ‘கிரீன் நீடா’ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான ராஜவேலு. இவர், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

‘‘பொதுவா, மரம் வளர்க்க நினைக்கிறவங்க மரக்கன்றுகளைத்தான் நடுவாங்க. இதை ஆடு, மாடுகள் தின்ன வாய்ப்பிருக்கு. இதைத் தடுக்க வேலி போடணும். தினமும் தண்ணீர் ஊத்தணும். வளர்றவரை கண்ணும் கருத்துமா பாதுகாக்கணும். பராமரிப்பு செலவு அதிகம் பிடிக்கும். ஆனா, மரப்போத்துகளுக்கு இது தேவையில்ல.

மரப்போத்துன்னா மரக்கிளையின் ஒரு பகுதி! அதை ஒடிச்சு மண்ணுல ஊன்ற வேண்டியதுதான். நான் சின்ன வயசுல இருக்கும்போது எங்க கிராமத்துப் பெரியவங்க இப்படி மரப்போத்துகளைக் குளக்கரைல ஊன்றுவதைப் பார்த்திருக்கேன். நல்லா வளரும். அந்த ஐடியாவை பின்பற்றி இதைச் செய்தேன்...’’ என்கிற ராஜவேலு, இந்த அமைப்பைத் தனியொருவராக துவக்கியிருக்கிறார்.

‘‘எங்க ஊர் நீடாமங்கலம். தஞ்சாவூர்ல இருந்து திருவாரூர் போகிற வழியில இருக்கு. வடக்கு தெற்கா எடுத்துக்கிட்டா கும்பகோணத்திற்கும், மன்னார்குடிக்கும் நடுவுல வரும். கல்லணைல இருந்து பிரியும் வெண்ணாறு, எங்க ஊர்ல மூன்றாகப் பிரியும். அதனால, நீடாமங்கலம் எப்பவும் செழிப்பா இருக்கும். முப்போகம் விளைகிற பூமி. கோடையில கூட பம்ப் செட்ல சாகுபடி பண்ணுவாங்க. நான் அங்க பாலாஜி நகர்ல குடியிருக்கேன். பிறந்து வளர்ந்ததெல்லாம் நீடாமங்கலம் அருகே கானூர் கிராமத்துல.

சின்ன வயசுலயே மரம் வளர்க்கணும்னு ஆர்வம். 2018ல் இந்த கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பை ஆரம்பிச்சேன். இதுல நீடாங்கிற வார்த்தை நீடாமங்கலத்தைக் குறிக்கும். அதேநேரம் பறவைகளின் கூடுனு ஒரு அர்த்தமும் இருக்கு. மெல்ல மெல்ல என் நண்பர்களும் அமைப்புல இணைஞ்சாங்க. அப்புறம், சமூக வலைத்தளத்துல நாங்க செய்கிற வேலைகளைப் பார்த்து இன்னும் சில நண்பர்கள் வந்தாங்க. எங்கள் கூடு கொஞ்சம் கொஞ்சமா விரிவாச்சு. இப்ப ஐம்பதுக்கும் மேற்பட்டவங்க அமைப்புல இருக்காங்க. இதுல பெரும்பாலானவங்க அரசு ஊழியர்கள்...’’ என்கிறவர் மரப்போத்துகள் நட்ட விஷயத்தை விவரித்தார்.

‘‘முதல்ல, நாங்க எங்க ஊர் ரயில்நிலைய - பேருந்து நிறுத்தம் அருகே அரசமரக்கன்றை வச்சோம். அப்புறம், நஞ்சில்லா காய்கறிகளைக் கொடுக்க மாடித் தோட்டத்துக்கான பயிற்சி கொடுத்தோம். இந்த ஆண்டு தொடக்கத்துல 2019 பனை விதைகள் விதைக்கலாம்னு நினைச்சோம். ஆனா, போதுமான ஆட்கள் எங்ககிட்ட இல்ல. அப்ப வட்டார வளர்ச்சி அலுவலர்கிட்ட பேசினோம். அவங்க மாவட்ட ஆட்சியர்கிட்ட பேசினாங்க. அப்புறமென்ன... நூறு நாள் பணியாளர்களை வச்சு அந்தப் பணியைச் சிறப்பா ெசய்தோம்.  

பிறகு, கானூர் கிராமத்துல ஒரு ஏக்கர் பரப்புல குளம் வெட்டினோம். இதை முகநூல்ல பார்த்திட்டு சவுதியில் இருக்குற ஜெட்டா தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவங்க 50 ஆயிரம் ரூபாய் நிதி கொடுத்து உதவினாங்க. நாங்க மேலும் 50 ஆயிரம் ரூபாய் போட்டு குளத்தை உருவாக்கினோம். அதைச் சுற்றியும் பனை விதைகள் தூவினோம்.

கடந்த ஜூலைல 800 மரக்கன்றுகள் நட்டு குறுங்காடு அமைச்சோம். இதை நீடாமங்கலம் பேரூராட்சியுடன் இணைஞ்சு எங்க பாலாஜி நகர்லயே செய்தோம். இரண்டு அடிக்கு ஒண்ணுனு 8 ஆயிரம் சதுர அடில மியாவாக்கி முறைல வச்சோம். இது பக்கவாட்டுக் கிளையெல்லாம் வராமல் நேரா, உயரமா வளர்ந்து வர்ற முறை. அப்புறம்தான், நீடாமங்கலத்துல இருந்து மன்னார்குடி வரை 12 கிமீ தூரம் மரப்போத்துகள் வைக்கிற திட்டம் உருவாச்சு. 

ஒருகாலத்துல இந்த சாலையின் இரண்டு பக்கமும் மரங்கள் வளைஞ்சு நிழலா இருக்கும். இப்ப வெயிலா இருக்கு. இதனால், நோய்கள் அதிகரிச்சிடுச்சு. மனிதர்கள் மட்டுமல்ல, கால்நடைகளும் சிரமத்திற்கு ஆளாகுது. அதனாலயே, முதல்ல இந்தப் பகுதியை பசுமையாக்க முடிவெடுத்தோம். போன மாசம் 17ம் தேதி உலக மாணவர் தினத்துல இந்த விஷயத்தை முன்னெடுத்தோம்.

பள்ளிகள், கல்லூரிகள்கிட்ட பேசி மாணவர்களைத் திரட்டினோம். அறுநூறு பேர் வந்தாங்க. அடுத்து இந்தப் பகுதியில தங்கியிருந்த திருச்சி, தஞ்சை வேளாண் கல்லூரி மாணவ - மாணவிகள் 200 பேர் முகநூலைப் பார்த்திட்டு கலந்துகிட்டாங்க. அப்புறம், சாலைப் பணியாளர்கள், எங்க குழுவினர், தன்னார்வலர்கள்னு மொத்தம் ஆயிரம் பேர் சேர்ந்து இந்த நற்பணில ஈடுபட்டோம்...’’ உற்சாகமாகச் சொல்லும் ராஜவேலு இதற்காக நிறைய சிரமங்களையும் பட்டிருக்கிறார்.

‘‘இவ்வளவு தூரத்திற்கான மரப்போத்துகள வெட்டுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. முதல்ல சாலைப் பணியாளர்களை வச்சு வெட்டினோம். கொஞ்சம் வயசானங்களாக இருந்ததால அவங்களால் முடியல. 150 மரப்போத்துகளே வெட்ட முடிஞ்சது.

அலுவலகத்துக்கு லீவு போட்டு மரம்வெட்டுகிற தொழில் செய்றவங்களைத் தேடிப் பிடிச்சேன். அப்புறம், ஒரு போத்துக்கு 10 ரூபாய்னு பேசி ஆலமரம், ஒதிய மரம், வாத முடக்கினு மூணு மரங்களைத் தேர்ந்தெடுத்து வெட்டினோம். இதுல, ஆலமரப் போத்துகள் 1500, ஒதியமரப்போத்துகளும், வாதமுடக்கி போத்துகளும் தலா 300னு மொத்தம் 2100 மரப்போத்துகள் ரெடி பண்ணினோம்.

ஏற்கனவே, நெடுஞ்சாலைத் துறைகிட்ட பேசியிருந்ேதாம். அவங்க  ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க. கூடவே நீடாமங்கலம், மன்னார்குடி அலுவலர்களையும் உதவிக்கும் அனுப்பினாங்க. முதல் நாளே வேளாண் துறையினரின் குழி போடுகிற இயந்திரஉதவியுடன் குழி தோண்டி, ஒவ்வொரு குழி பக்கத்துலயும் ஏழு அடி மரப்போத்துகளை வச்சிட்டு வந்திட்டோம்.

இதனால, மாணவ - மாணவிகள் போத்துகளை நடுவது எளிதாகிடுச்சு. இதற்கு 55 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. இதற்கும் நிறைய தன்னார்வலர்கள் உதவினாங்க...’’ மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறவர், அடுத்து தமிழகம் முழுவதும் மரப்போத்துகள் நடும் திட்டத்தை செயல்படுத்தப்ப் போகிறார்.

‘‘அடுத்து காரைக்காலில் இருந்து திருநள்ளார் வரை பண்ணப் போறோம். பிறகு தஞ்சாவூர்ல இருந்து நீடாமங்கலம் வரை 35 கிமீ தூரமும், திருவாரூர் வரை 28 கிமீ தூரமும் நட இருக்கோம். இது மழைக் காலம். அதனால தண்ணீர் ஊத்த வேண்டியது இருக்காது. போத்துகளும் வேகமா துளிர்விடும்.

இப்ப எங்க செயல்பாட்டை சமூக வலைத்தளத்துல பார்த்திட்டு நிறையபேர் அவங்க பகுதியில பண்ணச் சொல்லிக் கேட்கறாங்க. சீக்கிரமே எல்லா பகுதிகளுக்கும் போக இருக்கோம். நிறைய மரப்போத்துகளை நட்டு தமிழகத்தைப் பசுமையாக்கறதுதான் எங்க லட்சியம்!’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் ராஜவேலு.          

பேராச்சி கண்ணன்