நான்... டாக்டர் கே.எம்.செரியன்



‘திருப்தி ஆயி! திருப்தி ஆயி!!’ என் அப்பாவின் கடைசி வார்த்தைகள் இவை. எல்லோரும் அவரவர் பிறந்த தேதி, இடம் என்றுதான் தங்களைக் குறித்து சொல்ல ஆரம்பிப்பார்கள். நான் என் அப்பாவின் கடைசி சில மணி நேரங்களில் இருந்து ஆரம்பிக்கிறேன். அவருக்கு அப்போது 96 வயது. அடுத்த நாள் அவருக்கு 97 வயது. ஆகஸ்ட் 23ம் தேதி. என் மனைவியும் மகளும் அமெரிக்காவில். பையன் ஜெனிவாவில். நானும் அதே வேளை பெர்லினில் மருத்துவ வேலை நிமித்தமாக இருந்தேன். பெர்லின் இருதய அமைப்பின் தலைவராக இருந்த வேளை அது.

தில்லியில் இருந்த என் மைத்துனரிடமிருந்து எனக்கு அழைப்பு. விசேஷம் ஒன்றுக்குச் சென்ற என் அப்பாவின் உடல்நிலையில் சிக்கல். அனைத்திந்திய மருத்துவ இன்ஸ்டிடியூட்டில் அவரை மைத்துனர் சேர்த்திருந்தார். அப்பாவின் இதயத் துடிப்பு குறைந்து கொண்டிருந்தது.  பொட்டாசியம் அதிகமானதால் அவருக்கு இந்தப் பிரச்னை. சர்க்கரை, பிபி என எந்த  நோயும் அவருக்கு கிடையாது. வயது மூப்பு காரணம். அதை நாம் ஒன்றும் செய்ய  முடியாது.

டயாலிஸிஸ் செய்யலாமே என மருத்துவர்கள் செய்தார்கள். இதயத்துடிப்பு சீரானது. தனது 94வது வயது வரை என் அப்பா இடது கை டிரைவிங் கார் ஓட்டியபடி சுறுசுறுப்பாக இருந்தார். நேராக பெர்லினில் இருந்து தில்லிக்கு வந்தேன். அப்பாவின் உடல்நிலை சீராகி இருந்ததால் அவரை அழைத்துக் கொண்டு தமிழகம் வந்தேன். மூன்று நாட்கள் கழித்து மருத்துவமனையை சுற்றிப்பார்க்க அப்பா ஆசைப்பட்டார். வேலையாட்களை அழைத்து அவருக்கு சுற்றிக் காண்பிக்க சொன்னேன். அங்கிருந்த நோயாளிகள் அனைவரிடமும் சிரித்துச் சிரித்து பேசினார்.

நான் ஒரு அறுவை சிகிச்சை முடித்துத் திரும்புகையில் அவருக்கென நியமிக்கப்பட்ட ஆண் நர்ஸுக்கு இவர் பெண் பார்த்திருந்த சம்பவமும் அரங்கேறி இருந்தது!அன்றிரவு 12 மணி இருக்கும். என்னை அழைத்தார். சென்றேன். கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டு ‘திருப்தி ஆயி!’ என்றார்.
தண்ணீர் வேண்டுமா எனக் கேட்டு ஒரு ஸ்பூன் அளவில் தண்ணீர் கொடுக்க... மீண்டும் அதே வார்த்தை. ‘திருப்தி ஆயி!!’. பெண் நர்ஸ் சொன்னார் அப்பாவின் இதயத் துடிப்பு குறைந்து நின்றுவிட்டது என.

என் கைகளிலேயே அப்பாவின் மரணம். இப்போது என் கதையை சொல்கிறேன். மூணாறு டீ எஸ்டேட்டில்தான் என் பெற்றோர்கள் இருந்தார்கள். படுகா குழுவைச் சேர்ந்த மக்கள் வசித்த பகுதி அது. அவர்களுக்கு தலைவரும் உண்டு. கூட்டமாக தலைவருடன் வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை டவுனுக்கு கீழே இறங்கி வருவார்கள்.  

மேலே அந்த மக்கள் இருக்கும் மலைக்கும், கீழே டவுனுக்கும் இடையில் எங்கள் எஸ்டேட். அம்மாவுக்கு மாடு வளர்ப்பதில் அதீத ஆர்வம். 20 முதல் 30 ஜெர்ஸி மாடுகள் வைத்திருந்தார். பகலில் இறங்கி வரும் மக்கள் எங்கள் எஸ்டேட் பகுதியில் தங்கி சமைத்துச் சாப்பிட்டு தூங்கி எழுந்து மீண்டும் காலையில் டவுனுக்கு இறங்கிச் செல்வார்கள்.

இரவுப் பயணம் சற்று ஆபத்தானது. அவர்களின் இடைப்பட்ட தங்குமிடம் எங்களின் எஸ்டேட். ஜெர்ஸி பசுக்களின் பால் அத்தனையும் எங்கள் எஸ்டேட் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கொடுப்பார் என் அம்மா. அப்படி ஒரு நாள் காலை என் அம்மா பால் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீர் என குமட்டலுடன் வாந்தியெடுத்தார். இதைப் பார்த்த மலைவாழ் மக்களுடைய தலைவர் ‘ஏன்மா நீ கர்ப்பமாக இருக்கிறாயா?’ எனக் கேட்டார். என் அம்மாவும் ‘ஆம்! மூன்று அல்லது நான்கு மாதங்கள் இருக்கும்’ என்றார்.

தலைவர் கையைப் பிடித்து பார்த்துவிட்டு, ‘உன் வயிற்றில் இருப்பது ஆண் பிள்ளை. ஒரு ஞாயிறு மதியம் அவன் பிறப்பான். அவன் வலது கையில் ஒரு மச்சம் இருக்கும். எதிர்காலத்தில் அவன் மிகப் பெரிய இதய மருத்துவராக வருவான்...’ என்றார்.1942. அப்போது இந்தியாவில் இதய மருத்துவம் என்றால் என்னவென்றே தெரியாது! இந்த சூழலில்தான் படுகா குழு தலைவர் இப்படிச் சொன்னார்!

வசதி காரணமாக என் அம்மா மூணாறில் இருந்த பாட்டி வீட்டுக்கு பிரசவத்துக்கு வந்தார். தலைவர் சொன்னதையும் மறந்து
விட்டார். சரியாக ஞாயிறு அன்று அங்கிருந்த தேவாலயத்தின் மணி மதியம் 12 மணிக்கு ஒலிக்கும்போது நான் பிறந்தேன்.
என்னை சுத்தம் செய்யும் போது என் கையில் இருந்த மச்சத்தை பாட்டி பார்த்தார். எல்லோரும் பிறந்த தேதி சொல்வார்கள்.

என் பிறப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே என் அம்மாவுக்கு சொல்லப்பட்டுவிட்டது! இந்தக் கதையை என் பாட்டி பிற்காலத்தில் எனக்குச் சொன்னார்.
சிறுவயது முதலே எதையும் நேர்த்தியாக செய்வேன். எட்டு வயதில் கடிகாரங்களைப் பழுது பார்த்தேன். மட்பாண்டங்கள் செய்வது, கைவேலைப்பாடுகள் என நுணுக்கமான நிறைய கைவினைப் பொருட்கள் செய்ததுண்டு.

ஒன்பதாம், பத்தாம் வகுப்பு படிக்கையில் மேல்படிப்பில் வரும் எலி ஆராய்ச்சியை - அதாவது எலியை வெட்டி சோதிப்பார்களே - அதைச் செய்தேன். மணிப்பால் கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு. இரண்டாம் வருடம் MS படிக்கும் போதே மேலை நாட்டிலிருந்து வந்திருந்த என் பேராசிரியர் எஸ்.ஆர்.உல்லால், தான் இதய அறுவை சிகிச்சை செய்யப் போவதாகவும் தனக்கு உதவியாளர் வேண்டும் எனவும் கேட்டார்.

அப்போதெல்லாம் பொது அறுவை சிகிச்சை செய்தால் ரூ.30 அல்லது ரூ.40 கிடைக்கும். மேலும் எம்எஸ் முழுமையாக முடிக்கவும் முடியும்.
ஆனால், திடீரென இதய அறுவை சிகிச்சை என்றதும் யாரும் முன்வரவில்லை. எனக்கும் அதில் உடன்பாடில்லை. இந்நிலையில் ‘எப்படி நான் எம்எஸ் பாஸ் செய்வேன்’ என ஒரு பேராசிரியரிடம் கேட்டேன். அவர், ‘எஸ்.ஆர்.உல்லால், உனக்கு மற்ற அறுவை சிகிச்சைகளும் கற்பிப்பார். மேலும் இதற்கு உனக்கு ஸ்காலர்ஷிப்பாக ரூ.90 கிடைக்கும்’ என்றார்.

அப்போது ரூ.90 என்பது பெரிய பணம். கேன்டீன் சாப்பாடு, தங்குமிடம், சார்மினார் சிகரெட், சினிமா என போதுமானதாக இருந்தது.
எம்எஸ் இரண்டாம் வருடம் படிக்கும்போது எனக்கு வயது 24. நான் இருதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரானேன். இப்போது வரை யாரும் அந்த வயதில் இருதய அறுவை சிகிச்சை செய்யுமளவுக்கு வரவில்லை.

என் பேராசிரியர் என்னை விரிவுரையாளராக்கி வேலூர்அனுப்பினார். அங்கே எஃப்.ஹெச். ஃபிரான்க் கார்லிக்கை சந்தித்தேன். ‘உனக்கு அருமையான கைகள். நீ ஆஸ்திரேலியா போ. உனக்கு நான் பரிந்துரை செய்கிறேன்...’ என்றார். ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக அறுவை சிகிச்சைப் பேராசிரியர்தான் கார்லிக்.நேர்முகத் தேர்வு  முடிந்த ஒருமணிநேரத்தில் நிரந்தர ஆஸ்திரேலிய பிரஜை என்னும் விசா கிடைத்தது! அடுத்த நாள் ஆஸ்திரேலியா கிளம்பிவிட்டேன். கையில் வெறும் ஆறு டாலர்களே இருந்தன.

விமானத்தில் ஒரு பெண் தொடர் மது மற்றும் புகைபிடிக்க என என்னிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார். சூட் சகிதமாக குழந்தையுடன் இருந்த என்மீது குழந்தை பாலாக கக்கி வாந்தி எடுக்க... சூட் பாழானது. அந்தப் பெண்ணுக்கு சில அறிவுரைகள் கூறிவிட்டு என்னை சுத்தம் செய்ய முயற்சித்தால் அதன் வாடை போகவில்லை.

ஒருவழியாக சிட்னி வந்திறங்கினேன். அங்கே யாரையும் தெரியாது. அது கிறிஸ்துமஸ் நேரம் என்பதால் அனைத்து அலுவலகங்களும் விடுமுறை.
ஒரு சீன மாணவன், சிட்னி சர்வதேச சென்டருக்கு செல்லச் சொன்னார். அங்கே சென்றால் ஒருவரும் இல்லை, படிக்கட்டில் அமர்ந்து விட்டேன். சில நிமிடங்களில் ஒரு பெண் வந்தார். என் கதையைக் கேட்டு ‘எட்டு மணிக்கு டெபுட்டி டைரக்டர் வந்துவிடுவார். இத்தாலியப் பெண்மணி. எழுபது முதல் எழுபத்தைந்து வயதிருக்கும். அவர் பெயர் மேக். அவரின் மகன் ஜிம் இந்தியாவில் பிறந்தவர். ஆஸ்திரேலியாவில் மருத்துவராக இருக்கிறார். அவர் உனக்கு உதவுவார்’ என்றார்.

அத்துடன் ‘உன் சூட்டை சுத்தம் செய்கிறேன். வேறு உடை மாற்றிக்கொள்’ என்று வாங்கிக்கொண்டவர் என்னிடம் பத்து டாலர்கள் கொடுத்தார். இப்போது கைகளில் 16 டாலர்கள்! டெபுடி டைரக்டரை சந்தித்தேன். எனது சான்றிதழ்களைப் பார்த்துவிட்டு மருத்துவமனை போர்டுக்குச் சென்று அவற்றை சமர்ப்பிக்கச் சொன்னார். பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பதிவிற்கான அழைப்பு வரும். நான் எனது சான்றிதழ்களைக் கொண்டு சென்று அங்கே இருந்த பெண்ணிடம் கொடுத்தேன்.

என் அதிர்ஷ்டம் அன்றைய நாள் சான்றிதழ் சோதனை நாள். ஒரு கப் டீயுடன் ஒரு மணி நேரம் காத்திருந்தேன். பெரும்பாலும் வெள்ளையர்கள். நான் மட்டுமே சம்பந்தமே இல்லாமல் இருந்தேன். என் சான்றிதழ் முதலில் பார்க்கப்பட ‘எம்எஸ் என்றால் என்ன’ எனக் கேட்டார்கள். ‘மாஸ்டர் ஆஃப் சர்ஜரி’ என்றேன். 25 வயதில் சர்ஜரி மாஸ்டரா என அதிர்ச்சி அடைந்தார்கள். நான் மாஸ்டர் அல்ல; நான் படித்த படிப்புக்கு எங்கள் நாட்டில் பெயர் மாஸ்டர் ஆஃப் சர்ஜரி என்றேன்.  

பதினைந்து நிமிடங்களில் எனக்கு ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சை பயிற்சிக்கான அங்கீகாரம் கிடைத்தது. ஜிம் என்னை அழைத்து மருத்துவ அலுவலகம் சென்று எந்த மருத்துவமனையில் இடம் காலி என பார்க்கச் சொன்னார். ஐந்தாறு மருத்துவமனைகளில் எனக்கு புனித ஜார்ஜ் மருத்துவமனை பிடித்திருந்தது. தேர்வு செய்தேன்.

அங்கே சென்றதும் எனக்கு இடம் மற்றும் சம்பளம் உள்ளிட்ட அத்தனை விவரங்களும் கொடுக்கப்பட்டன. ஒரு மாதத்திற்கு 500 டாலர்கள்.
மேக்கிடம் வந்து விவரங்கள் சொல்லி மகிழ்ந்தேன். ‘உனது உடமைகள் இங்கேயே இருக்கட்டும். ஹாஸ்பிடல் சென்று முழு வேலைகளும் முடிந்து வந்து
எடுத்துக்கொள்’ என்றார்.

அங்கே சென்றால் மெடிக்கல் சூப்பிரண்டென்ட்... அவருக்கும் அதே எம்.எஸ் என்றால்….கேள்வி. ‘சர்ஜிக்கல் ரெசிடென்ட் போஸ்ட் தருகிறோம்’ என்றார். ‘எதுவானாலும் சரி, நான் கிட்டத்தட்ட பிச்சைக்காரன்’ என்றேன். நான் ஏற்கனவே மூன்று டாலர்களுக்கு தங்குமிடமும் பார்த்துவைக்க... ‘அது வேண்டாம், இங்கே குவாட்டர்ஸில் தங்கிக்கொள்ளலாம்’ என்றார்.

அன்று மாலை ஆறு மணியளவில் டிவி முன்பு அமர்ந்திருந்தேன். பெரிய டிவி. நான் அதுவரை டிவியைப் பார்த்ததே இல்லை!
அப்போது மீண்டும் மெடிக்கல் சூப்பிரண்டென்ட் என்னை அழைத்து ‘மன்னிக்கவும், இன்று கேஷுவாலிட்டி மெடிக்கல் ஆபீசர்ஸ் மூவரில் ஒருவர் இன்னும் வரவில்லை. நீங்கள் அந்த வேலையைச் செய்ய முடியுமா? ஒரு நாள் இரவுக்கு உங்களுக்கு 37 டாலர்கள் தருகிறோம்’ என்றார்.
ஒப்புக்கொண்டு கேஷுவாலிட்டி டாக்டர்கள் பகுதிக்குச் சென்று அமர்ந்தால் அங்கே வெள்ளைக்காரப் பெண்கள் வந்து பார்த்துச் சிரித்துவிட்டுச் சென்றார்கள்.

வேலையில் சேர்ந்த சிறிது நேரத்தில் மிகப்பெரிய விபத்தில் சிக்கிய நான்கு இளைஞர்களைக் கொண்டு வந்தார்கள். அதில் இருவர் பெண்கள். மூவர் சம்பவ இடத்திலேயே மரணம். சனிக்கிழமை அல்லவா... பார்ட்டி,கொண்டாட்டம் என இளசுகள் ஜாலியாக இருந்திருக்கிறார்கள். அப்போது நிகழ்ந்த விபத்து.ஆபத்தான நிலையில் இருந்த ஒரு பெண்ணுக்கு டியூட்டி டாக்டர்ஸ் முதலுதவி கொடுக்க மற்ற வேலைகள் நடந்து கொண்டிருந்தன. கேஷுவல் சர்ஜிக்கல் ஆபீசர் என்பதால் என்னையும் இணைந்துகொள்ளச் சொன்னார்கள்.

மேலதிகாரியாக ஜான் கிராம். கொஞ்சம் கர்வமானவர். யாரையும் மதிக்க மாட்டார். நான் அந்தப் பெண்ணுக்கு ரத்தம் ஏற்றிக்கொண்டிருக்கும்போது வந்தவர் சோதித்துவிட்டு ‘மார்பில் பெரிய அளவில் ரத்தக்கட்டு ஏற்பட்டிருக்கிறது... அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்’ என்றார்.
‘எதற்கு மார்பு அறுவை சிகிச்சை?’ என்று கேட்டேன். ஜான் அதிர்ச்சியானார். அவர் யார், எப்படிப்பட்டவர் என எதுவும் தெரியாமல் நான் தொடர்ந்து பேசினேன்.

‘அந்தப் பெண்ணுக்கு வயிற்றுப்பகுதி மேலே ஏறியிருக்கிறது. வயிற்றில் சிகிச்சை செய்யுங்கள்’ என்றேன். என் பேச்சுக்கு மதிப்பளித்து அவர் அறுவை சிகிச்சை செய்தார். அடுத்த நாள் ஜான் கிராம் என்னைச் சந்தித்து ‘நீங்கள் செய்த உதவிக்கு நன்றி’ என்றார். அந்த நாள் முதல் நான் ஆஸ்திரேலியாவில் இருந்த ஒவ்வொரு நாளும் என்னைக் கேட்காமல் எந்த சிகிச்சையும் அங்கே நடக்கவே இல்லை!

நான் எப்.ஆர்.சி.எஸ் தேர்ச்சி யானேன். அங்கே இருந்த அத்தனை போர்ட் மருத்துவர்களிடமும் நான் பிரபலம். தேர்ச்சிக்காக மெல்போர்ன் சென்றால் அங்கே ஒரு மருத்துவர் என்னைப் பார்த்துக் கேட்டார் ‘நீதானே அந்த இந்திய மேஜிக் டாக்டர்?’‘நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைக்கலாம். என்னைப் பொறுத்தவரை நான் டாக்டர்’ என்றேன்.

இன்று ‘நான்’ என நானே சொல்லிக் கொள்வதற்கான அடிப்படைக் கதை இதுதான். இதன்பிறகு ரயில்வே மிஷன் ஹாஸ்பிடல், மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை, இருபத்தேழாயிரத்திற்கும் மேலான இருதய அறுவை சிகிச்சைகள், குழந்தைகளுக்கான சிறப்பு இதய மாற்று அறுவை சிகிச்சைகள், பத்ம விருது... என தனித் தனி கதைகள் இருக்கின்றன.

என் அப்பா, அம்மா இருவருமே விவசாயிகள். என் குடும்பத்தில் முதல் மருத்துவர் நான்தான். இப்போதும் பாண்டிச்சேரியில் எனக்கென இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்கிறேன்.

என் முழுப் பெயர் கோட்டுரத்து மாம்மென் செரியன். அதுவே கே.எம்.செரியன். அப்பாவின் பெயர் மாம்மென் செரியன். அம்மா பெயர் மரியன். மனைவி பெயர் செலீன் செரியன். மகள் பெயர் சந்தியா செரியன். மெடிக்கல் சட்டம் பயின்றவர். மகன் சஞ்சய் செரியன். அவரும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்தான்.            

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்