கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-41



இன்னம்பூர் ஈசனை வணங்கினால் கணக்கில் புலியாகலாம்!

மிதமிஞ்சிய ஆச்சரியத்தால் சோழ மன்னன் வாயடைத்துப் போனார். அதற்கு காரணம் இருக்கத்தான் செய்தது. இடையறாத சிவ நாம ஜபத்தால் கணக்கர் சுதன்மரின் முகம் தேஜஸ்ஸோடு எப்போதுமே இருக்கும். பார்க்கப் பார்க்க ஒரு தெய்வீக உணர்வு தோன்றும்.

ஆனால், இன்றோ என்றும் இல்லாத அளவுக்கு அவர் ஜொலித்தார். அவர் நடந்து வரும் தோரணையே கம்பீரமாக இருந்தது. இதுவரை அதை அவரிடம் கண்டிராத மன்னர் வியப்புடன் இந்த நடையழகு தன்னிடம் இல்லையே என்று வெதும்பவும் செய்தார்.

அடர்ந்து கருத்து வளர்ந்திருந்த தனது கேசத்தை சுதன்மர் அன்று வாரிச் சுருட்டி கொண்டையாகப் போட்டிருந்தார். அந்த செந்நிற கொண்டையில் கொன்றைப் பூச்சரம் ஒன்று எழிலாக மணம் வீசியபடி இருந்தது. தினமும் சிவபூஜை செய்துவிட்டு, சிவ பிரசாதமாக ஈசனுக்கு அணிவித்த மாலையை, அவர் தனது சிரத்தில் சூடுவார். அப்படித்தான் இன்றும் அணிந்திருந்தார்.
மன்னர் மட்டுமல்ல, அவையில் இருந்த அனைவரும் அதைக் கண்டு மயங்கினார்கள். என்றும்போல் சுதன்மர் தன் மேனி முழுவதும் நீறு பூசியிருந்தார். அவர்மீது திருநீறு வாசம் வீசினாலும் அதில் என்றுமில்லாத ஒரு தெய்வீக மணத்தை மன்னர் உணர்ந்தார்.

மெல்ல நடந்து வந்த சுதன்மர் மன்னரை வணங்கினார். அந்த வணக்கம் என்றும் போல் மன்னருக்கு உவப்பாக இல்லை. அன்று ஏனோ அவருக்குக் கூசியது. ‘‘ம்... கணக்கு வழக்கை விளக்கிக் காட்டும்...’’ மன்னரின் இதழ்கள் கட்டளையை உதிர்த்தன. சுதன்மரும் அவர் அருகில் வந்து கணக்கு வழக்கு அடங்கிய ஓலையைக் கொடுத்தார். அருகில் நின்று ஓலையில் இருக்கும் ஒவ்வொரு வரியையும் விளக்க ஆரம்பித்தார்.

மன்னர் அவர் சொல்வதை கவனிக்கவே இல்லை. ஏனெனில் என்றுமில்லாத ஆனந்தத்தை சுதன்மர் அருகில் வந்ததுமே மன்னர் உணர்ந்தார்.
சுதன்மர் தனது தோளோடு தோள் உரச பேசும்போதும், குனிந்து கணக்கை விளக்கும் போது அவரது மார்பில் இருந்த ருத்ராட்ச மாலை தன் மீது பட்டபோதும் தன்னிலை மறந்தார். மகாராணியோடு மலர்ப் பஞ்சணையில் உருண்டபோதுகூட அவர் கண்டிராத இன்பம் அது.

தினம் தினம் சுதன்மரை கணக்கு காட்டச் சொன்னால் என்ன என்றுகூட அவருக்குத் தோன்றியது. எல்லா கணக்கையும் விளக்கிவிட்டு ‘‘எல்லாம் சரிதானே மன்னா?’’ என்றார் சுதன்மர். அந்தக் குரலில்தான் எத்தனை கம்பீரம்! எத்தனை இனிமை! கட்டிக் கரும்பும், தேனும் தோற்றது என்றே தோன்றியது மன்னருக்கு. வார்த்தையே வரவில்லை. மெல்ல தலையை மட்டும் அசைத்தார் மன்னர்.இதையே உத்தரவாக ஏற்று மீண்டும் மன்னரை வணங்கிவிட்டு சுதன்மர் புறப்பட்டார்.

சுதன்மரின் உருவம் கண்ணை விட்டு மறைந்தாலும், மன்னரின் அகத்தை விட்டு அவர் அகலவில்லை. சுதன்மரின் தெய்வீகத்தை அசை போட்டபடியே இருந்தார் மன்னர். சில கணங்களுக்குப் பின் அதே காவலன் மீண்டும் வந்து மன்னரை வணங்கினான். ‘‘மன்னா... தங்களைக் காண சுதன்மர் வந்திருக்கிறார்!’’மன்னருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘‘வரச்சொல்...’’ என கட்டளையிட்டார். மீண்டும் தெய்வீகத்தை உணரப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு அவர் முகத்தில். வந்த சுதன்மரின் நடையில் கம்பீரம் இல்லை. முகத்தில் தேஜஸ் சுடர்விடவில்லை. மாறாக சோகம் நிரம்பி வழிந்தது. அதே பழக்கப் பட்ட சுதன்மரின் முகம். கொண்டையில் இருந்த கொன்றைப் பூச் சரத்திலும் அந்த மணம் இல்லை.

மன்னருக்கு திகைப்பு. ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.அருகில் வந்த சுதன்மர் மரியாதையுடன் மன்னரை வணங்கினார்.
இம்முறை சுதன்மரின் வணக்கம் மன்னரைக் கூசவைக்கவில்லை.‘‘மன்னா! நீங்கள் தந்த பொன்னை எல்லாம் இன்னம்பர் ஈசனுக்கு மட்டுமே பயன்
படுத்தினேன். இது சத்தியம். எனது எண்ணமும் செயலும் சுத்தமாக இருந்ததால் செலவு செய்த கணக்கை நான் எழுதவே இல்லை! நீங்கள் தந்த ஒவ்வொரு பொன்னையும் ஈசனுக்கே பயன்படுத்தினேன்.

அதனால் கணக்கு தேவை இல்லை என்று விட்டுவிட்டேன். அது தவறு என இப்போது புரிகிறது. என்னை நிரூபிக்க என்ன செய்ய வேண்டும்... யாரை சாட்சிக்கு அழைக்க வேண்டும் என்றுதெரியாமல் இரவெல்லாம் நான் உறங்கவில்லை... ஈசனிடம் மன்றாடினேன். ஆனால், லிங்கமாக... வெறும் கல்லாக அவர் இருக்கிறார்!’’ தன் விம்மலையும் கண்ணீரையும் கட்டுப்படுத்த முடியாமல் சுதன்மர் திணறினார்.

சில கணங்களுக்குப் பின் தன்னைக் கட்டுப்படுத்தியபடி தொடர்ந்தார். ‘‘கணக்கு எழுதாதது பிழைதான் மன்னா... அதற்கான தண்டனையை ஏற்கிறேன்...’’தனது சிம்மாசனத்தில் கல்லாக அசைவற்று இருந்தார் மன்னர்.பிறகு சட்டென எழுந்தவர் நேராக சுதன்மரின் அருகில் வந்து அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். ‘‘வேதங்களும் பிரம்மனும் திருமாலும் தேடித் தேடி இன்று வரை காணாத பரம்பொருளை சற்று நேரத்துக்கு முன் அடியேன் தரிசித்தேன்... தரிசனம் மட்டுமா எனக்குக் கிட்டியது... இல்லை;அவர் தோளில் என் தோள்கள் உரசின. தேன் மதுரத் தமிழை அந்த ஈசன் பேச என் காதாரக் கேட்டேன்...

ஆம் சுதன்மரே... உங்களால்தான் அந்த ஈசனை தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. எந்த சிவலிங்கத்துக்காக நான் கொடுத்த பொன்னை எல்லாம் செலவு செய்தீரோ அந்த சிவலிங்கம் சில கணங்களுக்கு முன் உங்கள் உருவில் வந்து உங்கள் சார்பாக என்னிடம் முழு கணக்கையும் ஒப்படைத்துவிட்டார்! நீரே சிறந்த பக்திமான்... தெரிந்தோ தெரியாமலோ உங்களுக்கு ஏதேனும் அபவாதம் நான் செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்...’’சுதன்மரின் பாதங்களைப் பிடித்துக்கொண்டு கதறினார் மன்னர்.

சுதன்மருக்கு மெல்ல மெல்ல நடந்தது புரிந்தது. அவரும் அழுதார். ‘‘இத்தனை பூஜை செய்து என்ன பயன்? அந்த பரம்பொருளை தரிசிக்கும் பாக்கியம் இந்தப் பாவிக்கு கிடைக்கவில்லையே..? உங்கள் முன்னோர்கள் எண்ணற்ற சிவாலயங்களை எழுப்பியதன் புண்ணியம்... உங்களுக்கு கிடைத்திருக்கிறது மன்னா... நான் வெறும் கணக்கன்தானே..?’’

‘‘இல்லை... ‘தெய்வம் மனுஷ்ய ரூபேன’ என்பார்கள். ஆனால், அந்த தெய்வம் மனித ரூபம் எடுக்க, தங்களின் உருவை அல்லவா தேர்ந்தெடுத்துள்ளது? அப்படியானால் எங்கள் அனைவரையும் விட நீங்கள்தானே அதிக பாக்கியமும் புண்ணியமும் செய்தவர்...’’ தழுதழுத்தார் மன்னர்.
‘‘கண்ணா... ஷ்யாம்... புரியுதா? நாம பண்ற நல்லது கெட்டதை எல்லாம் அந்த ஈசன் கணக்கு வைச்சுக்கறார்னு இதனாலதான் பெரியவங்க சொல்றாங்க... பாரு... சுனந்தருக்காக அவரே நேர்ல போய் நாடாளும் மன்னர்கிட்ட கணக்கு சொல்லியிருக்கார்!

இதையெல்லாம் தன் ஞானக்கண்ணால அறிஞ்ச அகத்தியர், இன்னம்பூர் சிவனை வழிபட்டு தமிழ் இலக்கணத்தை அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டார்...’’ நெகிழ்ச்சியுடன் சொன்னார் நாகராஜன். ‘‘இப்படி பக்தனுக்காக, தானே வந்து கணக்கு காட்டினதாலயும் அகத்தியருக்கு தமிழ் இலக்கணம் கத்துக் கொடுத்ததாலயும் அவர் ‘எழுத்தறிநாதர்’, ‘அக்‌ஷராபுரீஸ்வரர்’னு எல்லாம் அழைக்கப்படறார்...

மேத்ஸ்ல வீக்கா இருக்கேன்னு வருத்தப்படறியே ஷ்யாம்... இந்தக் கோயிலுக்குப் போய் சிவனை வணங்கு. கணக்குல புலியா மாறிடுவே...’’ என்றபடி புன்னகைத்தாள் ஆனந்தவல்லி. ‘‘தாத்தா! இந்த ஊர் தேவாரப் பாடலை எனக்கு நீங்க சொல்லிக்கொடுத்திருக்கீங்க... சிம்மேந்திர மத்யம ராகம்... சரிதானே?’’ கண்ணன் பரபரத்தான்.‘‘ரொம்ப சரிடா கண்ணா! அந்தப் பாட்டுல, ‘நாம செய்யற நல்லது கெட்டது எல்லாத்தையும் அந்த ஈஸ்வரன் கணக்கு வச்சிருக்கார்’னு அப்பர் சுவாமிகள் சொல்றார்.

ராவணன் சொல்றதை அவனுக்கு பயந்து நவகிரகங்கள் செய்ததுனு புராணங்கள் சொல்லுது இல்லையா..? ராவணனுக்கு எப்படி அவ்வளவு சக்தி வந்ததுனு தெரியுமா? விடையை அப்பர் சுவாமிகள் இந்தக் கோயில் தேவாரத்துல சொல்றார். இந்த இன்னம்பூர் சிவனை பூஜை செய்துதான் ராவணனுக்கு அவ்வளவு சக்தி வந்ததாம்!’’ நாகராஜன் கண்கள் விரிய சொன்னார்.

‘‘தாத்தா! அந்த தேவாரத்தை எனக்காக பாடிக் காட்டுங்களேன்...’’ கண்ணனின் நண்பன் ஷ்யாம் கெஞ்சினான்.நாகராஜன் பாட ஆரம்பித்தார். கண்ணனும் ஆனந்தவல்லியும் உடன் சேர்ந்து கொண்டார்கள்.‘‘சனியும் வெள்ளியுந் திங்களும் ஞாயிறும் முனிவ னாய்முடி பத்துடை யான்றனைக்கனிய வூன்றிய காரண மென்கொலோஇனிய னாய்நின்ற இன்னம்பர் ஈசனே...’’மூவரும் ராகத்துடன் பாடி முடித்ததை பிரமிப்புடன் பார்த்தான் ஷ்யாம். ‘‘நீ ஸ்போர்ட்ஸ்ல கில்லாடினு கண்ணன் சொன்னான்... விளையாட்டுல நீ சாதிச்சு மேல வர ஒரு கோயில் இருக்கு... அதையும் சொல்றேன் கேளு...’’ என்றபடி நாகராஜன் சொல்ல ஆரம்பித்தார்.

(கஷ்டங்கள் தீரும்)

கோயில் பெயர்:

இன்னம்பூர் சிவன் கோயில்.

சிறப்பு: பாவமும் சாபமும் போக்கி, தேக அழகைத் தந்து, சூரிய தோஷத்தை நீக்கி வாழ்வில் ஒளி தந்து கணக்கு பாடத்தில் உயர வைப்பார்.
ஸ்தலம் இருக்கும் இடம்: கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் வழியில் புளியஞ்சேரிக்கு வடக்கே இரண்டு கிமீ தொலைவில் உள்ளது.
நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4:30 மணி முதல் 8 மணி வரை

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்