மருத்துவம் முதல் கல்வி வரை...உலகம் முழுக்க 20 லட்சம் நன்கொடையாளர்கள்...



9 வருடங்களில் ரூ.700 கோடி நிதி உதவி... பயனடைந்தவர்கள் 2 லட்சம் இந்தியர்கள்!

நல்ல சிந்தனையுடன் நடை போடும் ‘மிலாப்’...

சிந்துவுக்கு வயது 25தான். ஐடியில் பணியாற்றி வந்தவருக்கு இந்தச் சிறுவயதிலேயே கல்லீரல் சுருங்கி முற்றிலும் செயலிழந்து விட்டது.மாற்று அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே அவரைக் காப்பாற்ற முடியும் என டாக்டர்கள் சொல்லிவிட, வேலூரிலிருந்து அவசரமாக சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.இங்கே எல்லா பரிசோதனைகளும் முடிந்தவுடன் சிகிச்சைக்கு ஆகும் செலவு பற்றி டாக்டர்கள் சொல்ல, ஆடிப்போனது சிந்துவின் குடும்பம். எவ்வளவு தெரியுமா? ரூ.32 லட்சம்!

இவ்வளவு பெரிய தொகையை எப்படி திரட்டுவது? செய்வதறியாமல் தவித்தது சிந்துவின் குடும்பம். இந்நிலையில்தான் நண்பர் ஒருவரின் மூலம் ‘மிலாப்’ கூட்டுநிதித் தளம் பற்றி அறிந்தனர். உடனடியாக தங்களுக்குத் தேவையான நிதியைக் கோரி அதில் விண்ணப்பிக்க, இப்போது வெற்றிகரமாக ஆபரேஷன் முடிந்து நலமுடன் தேறி வருகிறார் சிந்து.   

அவருக்கு மட்டுமல்ல. அவரைப் போல இந்தியா முழுவதும் சுமார் 50 ஆயிரம் பேர்களுக்கு மருத்துவச் செலவுக்காக மட்டுமே கூட்டுநிதி மூலம் நிதியளித்து உதவியிருக்கிறது, உதவியும் வருகிறது பெங்களூரிலிருந்து செயல்பட்டு வரும் இந்த மிலாப் அமைப்பு.தவிர, கல்விக்காகவும், சிறுதொழிலுக்காகவும், சமூகத் தொண்டுகளுக்காகவும் நிதியளித்து வருகிறது இந்த அமைப்பு. இதன் நிறுவனரான அனோஜ் விஸ்வநாதன் தமிழகத்தைச் சேர்ந்தவர்.

‘‘கடந்த ஒன்பது வருஷங்களா இந்தப் பணியை நாங்க செய்திட்டு இருக்கோம். நிதி தேவைப்படுறவங்களுக்கு ஒரு பாலமா இருந்து உதவி செய்றது
தான் எங்க நோக்கம்...’’ என்னும் அனோஜிற்கு சொந்த ஊர் கோவை. ‘‘2005ல் பள்ளிப் படிப்பை முடிச்சதும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்துல எஞ்சினியரிங் கிடைச்சது. அது இரட்டை டிகிரி கோர்ஸ். எஞ்சினியரிங் உடன் பொருளாதாரமும் படிச்சேன்.

2009ல் இங்க வந்ததும் ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தேன். இதனால, ஐதராபாத், ஒரிசா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம்னு இந்தியா முழுக்க பயணம் செய்ற வாய்ப்பு அமைஞ்சது. கிட்டத்தட்ட பதினெட்டு மாசம் அங்க வேலை பார்த்தேன். பொதுவா, மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிகள் சிறுதொழில் செய்யவோ, மாடு வாங்கவோதான் சின்னதா கடன் தருவாங்க. இப்படி வழங்கப்படுகிற கடனை வேற பொது விஷயங்களுக்குப் பயன்படுத்த முடியுமானு யோசிச்சேன்.

உதாரணத்துக்கு, கிராமப்புறப் பகுதிகள்ல மின்சாரம் இன்னும் போய்ச் சேரல. அங்க ஒரு சோலார் லைட்டிங் அமைக்கக் கடன் வழங்கலாம். அடுத்து, விவசாயத்திற்குத் தேவையான கருவி வாங்க, வீட்டுக்குக் கழிப்பறை கட்டனு… மனசுல நிறைய தோணுச்சு. அப்பதான் இந்த மிலாப் ஐடியா வந்தது. அந்நேரம் என் கூட பணியாற்றிய மயூக் சவுத்ரியும் இதே அலைவரிசையில இருந்தார். மயூக், சென்னை ஐஐடியிலும், பிறகு லக்னோ ஐஐஎம்லயும் படிச்சவர். நானும் அவரும் சேர்ந்து மிலாப்பை ஆரம்பிச்சோம்.  

கூட்டுநிதி மூலம் இந்த விஷயங்களைச் செய்றதுதான் எங்க ஐடியா. இதை Crowdfundingனு சொல்வாங்க. அதாவது, நிதி உதவி தேவைப்படுறவங்களுக்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொடுப்பது. இதற்காக, நிதி உதவி தேவைப்படுறவங்களையும், நிதி உதவி செய்றவங்களையும் ஓர் இணையதளம் வழியா இணைச்சு பாலமா செயல்பட்டுட்டு வர்றோம். அதனாலயே இதற்கு மிலாப்னு பெயர் வச்சோம்.

மிலாப் என்பது இந்தி வார்த்தை. அதாவது, நற்சிந்தனையுடன் சந்திக்கிறதுனு சொல்லலாம். ஈகைத் திருநாள்ல இரண்டு பேர் சந்திச்சதும், ஈத் மிலாப்னு சொல்வாங்க. அது ஒரு பாசிட்டிவ் வார்த்தை...’’ நெகிழ்வுடன் குறிப்பிடும் அனோஜின் வயது 31.  ‘‘பிறகு, நண்பர்கள் வழியா எங்கள் தளத்தை புரமோட் செய்தோம். இப்ப வெளிநாடு வாழ் இந்தியர்கள் யார்கிட்டயாவது பேசினீங்கன்னா, ‘இந்தியாவுல ஏதாவது ஒரு திட்டத்திற்கோ அல்லது சமூக சேவைகள் செய்கிற அமைப்புகளுக்கோ உதவி செய்யணும்னு  விருப்பமாஇருக்கு.

ஆனா, எப்படினு தெரியல’னு சொல்வாங்க. அப்புறம், ‘அப்படி செய்தாலும் நாங்க கொடுக்கிற பணத்தை அந்த விஷயத்துக்குத்தான் பயன்படுத்துறாங்களானு தெரியல’ம்பாங்க. அவங்ககிட்ட ஒரு நம்பிக்கையில்லாமை இருந்திட்டே இருந்துச்சு. அந்த நம்பிக்கையை ஏற்படுத்தி எல்லோரையும் இதுக்குள்ள கொண்டு வரவே மிலாப்பை ஆன்லைன் தளமா ஆரம்பிச்சோம். ஏன்னா, வாங்குறவங்களையும், கொடுக்கிறவங்களையும் நேரடியாகவே தொடர்பு கொள்ள வைக்கலாம்னுதான்.

நாங்க ஆரம்பிக்கும்போது நிறைய கிராம மக்களுக்குப் போய்ச் சேரணும்னு நினைச்சோம். ஆனா, ஆன்லைன் என்பதால் ஆரம்பத்துல சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகர மக்களின் கவனத்திற்கு மட்டுமே இந்தத் தளம் வந்தது. பிறகு, நிறைய உதவிகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துச்சு. இந்த விண்ணப்பங்களை முதல்ல நாங்க சரி பார்ப்போம். இதுல 80 சதவீதம் பேர் புற்றுநோய், கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைனு மருத்துவத்திற்கான நிதியுதவி கேட்டே விண்ணப்பம் செய்தாங்க.  

எங்களுக்கு இந்தியா முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுடன் டைஅப் இருக்கு. அந்த மருத்துவமனையில் நிதி தேவைப்படுறவங்க சிகிச்சை எடுத்தால் ஈஸியா விசாரிச்சு உடனே எங்க தளத்துல அந்த விண்ணப்பத்தைப் போட்டுடுவோம்.இல்லன்னா, அவங்க சொல்ற மருத்துவமனைக்குப் போன் பண்ணியோ, தேவைப்பட்டால் நேரடியாகவோ கூட விசாரிப்போம். அதன்பிறகே எங்க தளத்துல போடுவோம். அதைப் பார்த்துட்டு உதவி செய்ய நினைக்கிறவங்க பணம் அனுப்புவாங்க.

எவ்வளவு வேணும்னாலும் அனுப்பலாம். பத்து ரூபாய் கூட பேடிஎம் வழியா அனுப்ப முடியும். அவங்க கோரிய நிதி சேர்ந்ததும் அதை மருத்துவமனைக்கு நேரடியாகவோ அல்லது சம்பந்தப்பட்டவங்களிடமோ கொடுத்திடுவோம். அதற்கான பில் உள்ளிட்ட அனைத்தையும் அவங்க சமர்ப்பிக்கணும். அதையும் நாங்க எங்க தளத்திலேயே போட்டுடுவோம். இதனால, உதவி செய்றவங்களுக்கு நம்பிக்கை வந்தது.

எங்களுக்கு சமூக வலைத்தளங்கள் ரொம்ப உதவியா இருந்துச்சு. ஒரு நண்பர், அவரின் நண்பர்னு ஒருத்தர் மூலமா ஒருத்தராக நன்கொடையாளர்கள் பெருகினாங்க. இன்னைக்கு உலகம் முழுவதும் 20 லட்சம் நன்கொடையாளர்கள் இருக்காங்க. இந்த ஒன்பது வருஷத்துல 700 கோடி ரூபாய்க்கும் மேல நாங்க நிதியுதவி கிடைக்க ஏற்பாடு செய்திருக்கோம்.

இதன்வழியா இந்தியா முழுவதும் 2 லட்சம் பேர் பயனடைஞ்சு இருக்காங்க...’’ பெருமையுடன் சொல்லும் அனோஜின் ஆசையெல்லாம் கிராம மக்கள் பயனடைய வேண்டும் என்பதே!  ‘‘இப்ப எங்க மிலாப்பில் 120 பேர் பணியாற்றுகிறோம். இதுல பெங்களூர்ல மட்டும் 80 பேர். தவிர, இந்தியா முழுவதும் 40 பேர் இருக்காங்க. ஆனாலும், இன்னும் கிராமங்களுக்கு எங்கள் சேவை முழுவதுமாகப் போய்ச் சேரல.

2014க்குப் பிறகு நகரப் பகுதிகள் ஓரளவு எங்கள் தளத்தைப் பார்த்து நிதியுதவி கேட்டாங்க. இருந்தும், தூத்துக்குடி பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்திலிருந்தோ அல்லது கன்னியாகுமரி பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்திலிருந்தோ இன்னும் ஒரு விண்ணப்பம் கூட வரல.

அவங்களுக்கும் இந்தத் தளம் போய்ச் சேரணும்ங்கிறது எங்க விருப்பம். காரணம், நிதியுதவி தேவைப்படுறவங்க நிறைய இருக்காங்க. குறிப்பா, மெடிக்கல் எமர்ஜென்ஸி நிறைய பேருக்குத் தேவையா இருக்கு. அடுத்து, கல்விக்கு நிதி தேவைப்படுது. எல்லோருக்கும் உதவணும்ங்கிறதே எங்க நோக்கம்.
அதனால, யார் வேணும்னாலும் எங்க www.milaap.org தளத்தைத் தொடர்பு கொள்ளலாம். உதவி செய்ய காத்திட்டு இருக்கோம்...’’ மகிழ்ச்சியுடன் சொல்கிறார் அனோஜ்.   

பேராச்சி கண்ணன்