நான் இயக்கறதா இருந்த பிரபுதேவா, வடிவேலு படங்கள் டிராப் ஆச்சு... நடிகர் ஜி.மாரிமுத்துவின் ஸ்டோரிஇயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில் கேரக்டர் ரோல்களில் அதிகம் ஸ்கோர் செய்தவர், செய்கிறவர் ஜி.மாரிமுத்து.‘கொம்பன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘பரியேறும் பெருமாள்’ என பல கிராமத்துப் படங்களில் மண் வாசனையைப் பறக்க விட்டவர்.
‘சங்கத் தமிழ’னுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருவதில் மகிழும் மாரிமுத்து, அடுத்து கமல், கார்த்தி, ஜெயம் ரவி என டாப் ஹீரோக்களின் படங்களில் பரபரக்கிறார்.

‘‘இயக்குநராக இருந்த என்னை நடிகராக்கினவர் எனது பல வருட நண்பரான இயக்குநர் மிஷ்கின்தான். லேண்ட்மார்க்கில் அவர் வேலை செய்த காலத்தில் இருந்து நாங்க நட்பா இருக்கோம். அடிக்கடி லேண்ட்மார்க் போவேன். அதுல அவரோடு நட்பானேன். உலக சினிமாக்கள்ல இருந்து இலக்கியம் வரை நாங்க பேசிப்போம்.

நான் ‘குஷி’ல ஒர்க் பண்றப்ப பிரபுதேவாவை வச்சு, ‘யாரடா நீ மன்மதா’னு ஒரு படம் ஆரம்பிச்சேன். பத்து நாட்கள் ஷூட்டும் போச்சு. அப்புறம் சில சூழல்களால படம் டேக் ஆஃப் ஆகல...’’ என்று சொல்லும் மாரிமுத்து முதல் படம் டிராப் ஆன இயக்குநர்கள் என்னவெல்லாம் துன்பப்படுவார்களோ அவை அனைத்தையும் அனுபவித்திருக்கிறார்.

‘‘அடுத்தடுத்து நான் கதை சொல்ல போனப்ப எல்லாம் ‘அந்தப் படம் ஏன் டிராப் ஆச்சு’னுதான் பேச்சை ஆரம்பிப்பாங்க. போராட்ட காலம் அது.
இதையெல்லாம் மீறி 2007ல ‘கண்ணும் கண்ணும்’னு ஒரு படம் இயக்கினேன். பத்திரிகைகள்ல அதுக்கு நல்ல பெயர் கிடைச்சது. ஆனா, ஹீரோ வேல்யூ இல்லாம போனதால படம் சரியா போகல.

நான் ராஜ்கிரண் சார்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தப்ப வடிவேலு அறிமுகமாகி நல்ல நண்பரானார். அவர் முன்னணிக்கு வந்ததும் அவரை வைச்சு ஒரு படம் இயக்க கமிட் ஆனேன். அவரும் அதுக்காக பெரிய பேமென்ட் வாங்கினார். ஆனா, சில காரணங்களால அந்தப் படமும் டேக் ஆஃப் ஆகல.
இந்தக் காலங்கள்ல அடிக்கடி மிஷ்கினை சந்திச்சு பேசுவேன். நைட் பேசத் தொடங்கி விடிய விடிய பேசுவோம். கிராமத்து ஸ்லாங்ல நான் பேசறது அவருக்குப் பிடிக்கும்.

ஒருநாள் ‘யுத்தம் செய்’ல நடிக்க கூப்பிட்டார். ‘ஒரு போலீஸ் ரோல் இருக்கு. நீங்கதான் பண்ணணும்’னு சொன்னார்...’’ புன்னகைக்கும் மாரித்துமுத்து இந்த ஆஃபரை மறுத்திருக்கிறார்.‘‘எனக்கு நடிக்கிற ஐடியாவே இல்ல... தவிர நான் சரியா நடிக்கலைனா இயக்குநரா மிஷ்கின் திட்டுவார். இதனால எங்க நட்பு பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கு. இதையெல்லாம் அவர்கிட்ட எடுத்துச் சொல்லி மறுத்தேன்.

‘அப்படியெல்லாம் நடக்காது. நீங்க நல்லா பண்ணுவீங்கனு நம்பிக்கை இருக்கு. தைரியமா வாங்க’னு மிஷ்கின் சொன்னார். சரினு ஷூட் போனேன். சேரன், லட்சுமி ராமகிருஷ்ணன் காம்பினேஷன்ல காட்சி. மிஷ்கின் சீன் சொன்னதும், நான் கேமரா பயம் கொஞ்சமும் இல்லாம டக்குனு நடிச்சுட்டேன். எனக்கே ஆச்சரியம். அப்பதான் எனக்குள்ள ஒரு நடிகன் இருக்கறது எனக்கே தெரிஞ்சுது... மிஷ்கின் அதை வெளிப்படுத்தி எனக்குக் காட்டினார்...’’ நிறைவுடன் சொல்லும் மாரிமுத்து, கவிப்பேரரசு வைரமுத்து, மணிரத்னம், வஸந்த், ராஜீவ்மேனன், எஸ்.ஜே.சூர்யா... என பலரிடமும் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார்!

‘‘என் பூர்வீகம் தேனி பக்கம் வருசநாடு. விவசாயக் குடும்பம். சிவகாசில என்ஜினியரிங் படிச்சப்ப ‘முதல் மரியாதை’ பார்த்தேன். எனக்குள்ள ஒரு மாற்றம். நம்ம ஊர் பக்கம் இருந்து போன பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்துனு எல்லாரும் சேர்ந்து என்னமா படம் எடுத்திருக்காங்க... அவங்களால முடியறப்ப நம்மால முடியாதா என்னனு தோணுச்சு. சினிமா கனவுகள்ல மிதக்க ஆரம்பிச்சேன்.

கிராமத்துல நிலபுலன்கள் இருந்தது. ஆனாலும் துணிஞ்சு இருநூறு ரூபா பணத்தோடு 1990ல சென்னை வந்தேன். சர்வைவலுக்காக ஹோட்டல்ல வேலை பார்த்தேன். கிராமத்துக் கட்டை இல்லையா... பசி தாங்க முடிஞ்சுது. ஒருநாள் வைரமுத்துவை போய் பார்த்தேன்.

ஆறு மாத ஃபாலோ அப்புக்குப் பிறகு அவர் ஆபீஸ்ல வேலை கிடைச்சது.அப்பல்லாம் உதவி இயக்குநரா சேரணும்னா, நம்ம கையெழுத்து குண்டு குண்டா அழகா இருக்கணும். என் கையெழுத்து அழகா இருக்கும். அவரோட ரசிகர்களுக்கு நான் கடிதம் எழுதுவேன். கவிஞர் அதுல கையெழுத்து போடுவார்.

ராஜ்கிரண் சார்கிட்ட் ‘அரண்மனைக்கிளி’ல அசிஸ்டென்ட்டா சேர்ந்தேன். ‘என் ராசாவின் மனசிலே’, ‘எல்லாமே என் ராசா’ படங்கள்ல ஒர்க் பண்ணினேன். வடிவேலு பழக்கமானது அப்பதான். இந்த நேரத்துல ஒரே கிராமத்து படங்களா ஒர்க் பண்றோமேனு ஃபீல் பண்ணினேன். ‘கேளடி கண்மணி’ பார்த்து ரொம்ப ஃபீலாகி வஸந்த் சாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதுல அவர் இம்ப்ரஸ் ஆகி ‘ஆசை’ல என்னை சேர்த்துக்கிட்டார். இந்தப் படத்துல எனக்கு ஜூனியரா எஸ்.ஜே.சூர்யா ஒர்க் பண்ணினார்.

நான் வஸந்த் சார்கிட்ட ‘நேருக்கு நேர்’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘ரிதம்’னு ஒர்க் பண்ணினேன். இடைல என் மாமன் மகளோடு எனக்கு திருமணமாச்சு. சீமான் சாரோட ‘பாஞ்சாலங்குறிச்சி’ல வேலை பார்த்தேன்.‘வாலி’ல எஸ்.ஜே.சூர்யா கமிட் ஆனதும் என்னை கோ டைரக்டரா ஒர்க் பண்ண கூப்பிட்டார். ‘குஷி’, ‘அன்பே ஆரூயிரே’, ‘நியூ’ வரை எஸ்.ஜே.சூர்யாகிட்ட ஒர்க் பண்ணினேன்.

‘ஆசை’, ‘நேருக்கு நேர்’ல வேலை பார்த்தப்ப மணிரத்னம் சார் பழக்கமானார். அவர்கிட்ட ‘பம்பாய்’, ‘இருவர்’லயும், ராஜீவ்மேனன்கிட்ட ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’லயும் ஒர்க் பண்ணினேன். ‘யுத்தம் செய்’ல நடிகராகி இப்ப பல படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். நல்ல நல்ல படங்கள்ல பிரமாதமான கேரக்டர்ஸா வருது. ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘இந்தியன் 2’, ‘பூமி’, ‘சுல்தான்’னு
கைவசம் நிறைய படங்கள் இருக்கு.

இனிமே டைரக்‌ஷன் பக்கமே போகக் கூடாதுனு உள்மனசு சொல்லிட்டே இருக்கு. உள்மனசுசொன்னா அது சரியாதான் இருக்கும்!’’ புன்னகைக்கிறார் மாரிமுத்து.

மை.பாரதிராஜா