கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்-39பாவம் போக்கி, இழந்த உடல் அழகையும் பதவியையும் மீண்டும் தருவார் இன்னம்பூர் ஈசன்!

இப்போது இன்னம்பூர் என்றழைக்கப்படும் அன்றைய செண்பக வனத்தில், தான் கண்ட அற்புத லிங்கத்தின் மர்மத்தை அறிய வேண்டும் என்ற ஆவல் அகத்தியரின் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது. அந்தத் தீயை அணைக்க தனது ஞானக் கண் கொண்டு நடந்தவற்றை அறிய தியானத்தில் அமர்ந்தார். அவரது இதழ்கள் ‘சிவாய நம’ என்று ஜபிக்கத் தொடங்கின. அவ்வளவுதான். மனதிற்குள் அற்புதக் காட்சி விரிந்தது.

கண்ணங்கரேல் என்று கருத்திருந்தது அந்த யானை. அதன் உள்ளத்தை கவலை என்னும் இருள் சூழ்ந்து இருப்பதை அதன் முக வாட்டம் சொல்லாமல் சொல்லியது. கம்பீரமான அதன் நடையும் முகத்தில் தெரியும் அபார ஒளியும் அது நிச்சயமாக பூலோகத்து யானை இல்லை என்று உணர்த்தியது.
காட்டில் வாழும் பிடிகளும் (பெண் யானைகள்) இப்படி ஒரு யானையை முன்பு கண்டிராததால் வாயடைத்துப் போய் அதைப் பார்த்தபடியே இருந்தன.

அந்த யானை இவை எதையும் கவனித்ததாகத் தெரியவில்லை. செண்பக மரத்தடியில் இருந்த அந்த லிங்கத்தின் அருகில் சொல்லி வைத்தது போல வந்தது. தனது துதிக்கையை உயரே வளைத்து முன்னங்கால்களை மடித்து வெகு நேர்த்தியாகமண்டியிட்டது. மண்டியிட்டபடியே கண்ணீர் வடித்தது. அந்தக் கண்ணீர், ‘தவறு செய்துவிட்டேன். என்னை மன்னிப்பாயா...’ என்று மவுனமாக சோக கீதம் பாடியது.

ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு அந்த லிங்கத்துக்கு மேல் இருக்கும் செண்பக மரத்தைப் பார்த்தது. அது பல செண்பகப் பூக்களோடு கூடி கிளைத்து வளர்ந்திருந்தது. உடன் தனது துதிக்கையால் அந்தக் கிளையைப் பற்றி வேகமாக உலுக்கியது. உலுக்கிய வேகத்தில் செண்பகப் பூக்கள் உதிர்ந்து மழையைப் போல லிங்கத்தின் மீது கொட்டின.

அதைக் கண்ட யானையின் உள்ளம் பூரித்துப் போனது. அருகிலேயே ஒரு பலா மரம் இருந்தது. அதில் பல பலாப்பழங்கள் பழுத்திருந்தன. அதில் ஒன்றை தனது துதிக்கையால் பறித்தது அந்தக் கரி. பறித்த பழத்தை வேகமாக பூமியில் போட்டு உடைத்தது. பலாச் சுளைகள் சிதறின.

சிதறிய சுளைகளில் சுத்தமான சுளைகளைப் பொறுக்கி எடுத்து அந்த லிங்கத்தின் முன் வைத்தது அந்த யானை. பிறகு மவுனமாக அந்த லிங்கத்தை வாஞ்சையோடு நோக்கியபடியே இருந்தது. ‘‘உலகிற்கே படி அளக்கும் ஈசன் நீர். சாதாரண ஐந்தறிவு ஜீவனான நான் படைத்த இந்தப் படையலால் தங்களுக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை. இவை தங்களுக்குத் தேவையும் இல்லை. ஆனால், இந்த ஏழையின் முன் வினைப் பயன் எல்லாம் தீரும் வண்ணம், பரம்பொருளே... நீங்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும்!’’

இப்படித்தான் மனதுக்குள் அந்த யானை வேண்டிக் கொண்டிருக்க வேண்டும். இதற்கு அதன் கண்களில் இருந்து வழியும் விழி நீரே சாட்சி.
உலகாளும் ஈசனுக்கு, யானை செய்யும் இந்த விசித்திர பூஜை இன்று, நேற்று என்று இல்லாமல் பல நாட்களாகத் தொடர்ந்தது.
காலையில் ஆதவன் உதிப்பதற்கு முன்பே அந்த யானை அங்கு வந்துவிடும். அருகில் இருக்கும் குளம் ஒன்றில் ஆசார சுத்தமாகக் குளிக்கும். பிறகு உவர் மணலை தனது துதிக்கையால் அள்ளி மத்தகத்தில் தேய்த்துக் கொள்ளும்.

அந்த உவர் மணல் அந்த யானையின் நெற்றி சம்பந்தம் பெற்றதும், திருநீறைப் போல ஜொலிக்கும்!பிறகென்ன, சிவ பூஜைக்குக் கிளம்பிவிடும் அந்த யானை. ஆறறிவு படைத்த மனிதனுக்கு இல்லாத பக்குவம், இந்த யானைக்கு எங்கிருந்துதான் வந்ததோ என்று அந்த வனத்தில் வாழும் ரிஷி முனிவர்கள் புல்லரித்துப் போவார்கள். இப்படியே பல நாட்கள் கழிந்தன. யானையின் தவம் ஈடேறும் சுப நாளும் கனிந்தது.

வழக்கம்போல் சிவ பூஜை செய்யும் வேளையில் செண்பக மரக் கிளையை அந்த யானை உலுக்கியது. செணபக மலர்களும் மழையாகப் பொழிந்தன.
ஆனால், சிவலிங்கத்தின் மீது இல்லை. விடையேறி வந்துவிட்ட அம்மை அப்பனின் பொற்பாதக் கமலங்களில் அந்த புஷ்பங்கள் விழுந்தன!
அப்பப்பா! அவைதான் எவ்வளவு பாக்கியசாலிகள். வேதங்கள் தேடியும் காணாத பைங்கமலப் பாதத்தை அவைகண்டுவிட்டனவே....

தனது தவத்தை ஏற்று கைலாயத்தை விட்டு பூலோகம் வந்து விட்ட பரம்பொருளை, நெக்குருகி சேவித்த அந்த கரி, ஆனந்தத்தில் ஒரு பிளிறு பிளிறியது. அது ஈசனின் அருளாலோ, இல்லை யானையின் ஆனந்தத்தாலோ ‘ஓம்’ என்று ஒலித்தது!ஆனந்தத்தில் யானை தன்நிலை மறந்தது. துள்ளிக் குதித்தபடியே அம்மையப்பனை வலம் வந்தது. அழகாக ஈசனின் பாதத்தின் முன் மண்டியிட்டது. ஆனந்தக் கண்ணீர் வடித்தது.
உடன் நொடியில் அதன் கருமை நிறம் மாறி வெண்மை நிறம் கூடியது. அதை கவனித்த அந்த யானை சந்தோஷத்தில் தன்னை மறந்து பேச ஆரம்பித்தது.  

‘‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்னும் முதுமொழி, என் விஷயத்தில் மெய்யாகிப் போனது பிரபோ. ஆம். வேத மணம் வீசும் தங்கள் பாதக் கமலங்களை அலங்கரித்த மாலையை அன்று ஒருநாள் துர்வாச முனிவர் தேவலோகத்துக்கு கொண்டு வந்து இந்திரனுக்கு கொடுத்தார்.
அவன் அந்த சமயம் அசுரர்களை போரில் வென்ற களிப்பில் இருந்தான். வெற்றியைக் கொண்டாட அவன் தனது பட்டத்து யானையின் மீது ஏறி வலம் வந்து கொண்டிருந்தான்.

அந்த யானை வேறு யாருமில்லை. சற்று நேரத்திற்கு முன் காட்டு யானையைப் போல காட்சி அளித்த நான்தான்! ஐராவதம் என்பது எனது திருநாமம். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து உதித்தவன். எனது அன்னை பாற்கடலைப் போல நானும் தூய வெண்மை நிறம் கொண்டவன். சர்வ லட்சணங்களும் பொருந்திய என் மீதுதான் இந்திரன் அமர்ந்திருந்தான். அவனைச் சுமந்தபடி நானும் ஒய்யாரமாக வெற்றி வலம் வந்தவண்ணம் இருந்தேன்.

அப்போது துர்வாச முனிவர், தான் செய்த சிவபூஜையின் பிரசாதமாக ஓர் அற்புத மலர் மாலையை இந்திரனுக்கு தந்தார்.  செருக்கில் இருந்த இந்திரன், துர்வாசரையும் மதிக்கவில்லை,தங்களது பிரசாதத்தையும் மதிக்கவில்லை. அலட்சியமாக மாலையை அவரிடமிருந்து பெற்று அதை கண்களில் கூட ஒற்றிக் கொள்ளாமல் என் மத்தகத்தின் மீது வைத்தான். வேத மணம் வீசும் அந்த மாலையின் அருமையை, கேவலம் ஒரு யானை நான் எப்படி அறிவேன்? தேவர்களின் தலைவனான இந்திரனே உணரவில்லை என்னும்போது நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
அந்த மாலையை என் துதிக்கையால் எடுத்து தரையில் போட்டு... அதை என் காலால் தரையோடு தேய்த்து...

மேலே சொல்லவே என் நா கூசுகிறது சுவாமி. செய்யக் கூடாத பாவம். அந்த பாவத்தின் பலனாக பல பிறவிகள் பிறந்து நான் அல்லல் பட்டிருக்க வேண்டும். ஆனால், யார் அல்லல் பட்டாலும் நீங்களோ அல்லது உங்கள் அடியவர்களோ பொறுப்பதில்லையே.... ஆகவே பல பிறவிகள் எடுத்து அல்லல் பட வேண்டும் என்ற இழிநிலையைப் போக்க, ‘காட்டு யானையாக ஒரு பிறவி பிறந்து, செய்த பாவத்தைத் தொலைப்பாய்’ என்று அந்த கருணையே வடிவான துர்வாச மகரிஷி என்னை சபித்தார்.

ஆஹா! யோகிகளின் கோபம் கூட இதத்தை அல்லவா செய்கிறது. அவரது சாபத்தால் பல பிறவிகள் எடுக்க வேண்டிய கொடுமை நீங்கியது. இன்று தங்களை பூஜித்ததால் சிவ அபராதம் என்னும் பாபம் நீங்கிவிட்டது. நம்பினார் கெடுவதில்லை என்ற நான் மறை தீர்ப்பு இன்றும் மெய்த்துவிட்டது...’’
ஆனந்தத்தால் நெக்குருகிய படியே பேசியது தேவலோகத்து ஐராவதம்.

அதைக் கேட்டு ஈசன் மெல்ல புன்னகை பூத்தார். ‘‘சாபம் நீங்கப்பெற்ற நீ, இனி தாராளமாக சொர்க்க லோகம் செல்லலாம். ஆசிகள்...’’ என்றபடி தனது வலது கையை உயர்த்தி அருள் புரிந்தார் ஈசன். அவர் கை உயர்த்தி செய்ததை அருகில் இருந்த அம்பிகை தன் கடை விழி நோக்காலேயே செய்து விட்டாள்!உருகி உருகி கதை சொல்லிக் கொண்டிருந்தார் நாகராஜன். கதை கேட்கும் கண்ணனிடமும் அவனது நண்பன் ஷ்யாமிடமும் அதே உருக்கம் எதிரொலித்தது.

அருகில் இருந்த நாகராஜனின் மனைவி ஆனந்தவல்லி, இதைக் கண்டு மகிழ்ந்தாள். மெல்ல சமையலறைக்குச் சென்று ஸ்நாக்ஸ் ஐட்டங்கள் அடங்கிய தட்டை எடுத்து வந்து இருவரிடமும் நீட்டினாள். சுயநினைவுக்கு வந்த கண்ணனுக்கு சட்டென பொறி தட்டியது. ‘‘கதைல இருந்த சூட்சுமத்தை நான் கண்டுபிடிச்சுட்டேன் தாத்தா...’’ என்றான். ‘‘சூட்சுமமா..?’’ ஷ்யாம் புரியாமல் கேட்டான்.

‘‘ஆமா... இப்ப கோயிலுக்கு போனா அங்க குடுக்குற விபூதி குங்கும பிரசாதத்தை யாரும் மதிக்கறதே இல்லை. சும்மா பேருக்கு வாங்கி நெத்தில கொஞ்சம் இட்டுட்டு அதை அப்படியே கோயில் சுவர்ல போட்டுடறாங்க. இப்பிடி நாம செய்யக் கூடாதுனு இந்தக் கதை சொல்லாம சொல்லுது... சாமி பிரசாதத்தை ஐராவதம் மதிச்சிருந்தா அதுக்கு சாபம் கிடைச்சிருக்காதே...’’ ‘‘பரவால்ல... உன் மூளை கூட வேலை செய்யுது...’’ ஷ்யாம் கலாய்த்தான்.

‘‘கரெக்ட் கண்ணா... கதையோட மையமே அதுதான்...’’ மகிழ்ச்சியோடு நாகராஜன் அவன் தலையைக் கோதினார். ‘‘அந்த யானை தன் அழகை திரும்பவும் அடைஞ்சது இந்த இன்னம்பூர் ஈசனாலதான். இழந்த பதவியையும் திரும்பி அதுக்கு கொடுத்தது அந்த சிவன்தான். இதுல இருந்து என்ன தெரியுது..? செய்த பாவத்துக்காக மனம் வருந்தி அவரை சேவிச்சா பாவம் எல்லாம் தொலையும்...’’ இன்னம்பூர் ஈசனின் பெருமையை தன் பங்குக்கு எடுத்துச் சொன்னாள் ஆனந்தவல்லி.

‘‘தாத்தா... எனக்கு நல்லா கணக்கு வர ஒரு கோயில் சொல்றதா சொன்னீங்களே...’’ நாகராஜனைப் பார்த்து ஷ்யாம் இழுத்தான். ‘‘ஷ்யாமுக்கு பதில் சொல்லும்போதே அகத்தியருக்கு அதுக்கப்புறம் என்ன ஆச்சுனும் சேர்த்து சொல்லுங்க தாத்தா...’’ கண்ணன் படபடத்தான். ‘‘இவங்க ரெண்டு பேருக்கும் பதில் சொல்லும் விதமா அமைச்சர் சுதன்மாவோட கதைய சொல்லுங்க...’’ என தன் கணவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் ஆனந்தவல்லி.தலையசைத்தபடி கதையைச் சொல்ல ஆரம்பித்தார் நாகராஜன்.

(கஷ்டங்கள் விலகும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்