1990 முதல் 1994 வரை நடந்த தொடர் படுகொலைகள்தான் இந்தப் படம்! எஸ்.ஆர்.பிரபாகரன் பளிச்!



‘‘நிச்சயம் என்கிட்ட ‘சுந்தரபாண்டியன்’ மூடை ஆடியன்ஸ் எதிர்பார்ப்பாங்க. அதை வைத்துதான் இந்த ஸ்கிரிப்ட்டை எழுதியிருக்கேன்.
கதைக்கு என்ன தேவையோ அதுதான் இங்கே தலைப்பு. ‘கொம்பு வச்ச சிங்கமடா’, கதைக்கு நேர் எதிரான டைட்டில். அந்தவிதமா இருக்கிற மனிதர்களை குறியீடாகச் சொல்லியிருக்கேன்.

நம்ம ஹீரோ அப்படி இருக்கக்கூடாதுன்னு நினைக்கிற மனுஷன். அடக்க முடியாமத் திரியிற ஆட்களைப் பற்றின சினிமாதான் இது. கலகலன்னு போகும் படம். ஆனாலும் அடிநாதத்தில் பல உண்மைகளைப் பேசும். பேரு, ஊரு, சாதியெல்லாம் இதில் எதுவும் இல்ல. நீங்க, நான், நாம எல்லோரும் படுகிற கஷ்டத்தைப் பத்தி பேசுற படம்தான்.
வன்முறை கூடாது என்பதற்காகவே கொஞ்சம் வன்முறை இருக்கும். அதுல ஒரு வரைமுறையும் இருக்கும்.
ரொம்ப நிதானிச்சு உணர்வையும் உயிரையும் எரிபொருளா எரிச்சி கொண்டு வந்திருக்கிற கதை. அதிகாலை வெயில் தருகிற சுகம்… உச்சி வெயில் தர்ற  ரணம்னு சுகமும் ரணமுமா ஒரு கதை இது.

நாம் சந்திக்கிற கிராமத்து மனிதர்கள், சூழல்கள் அவற்றின் அனுபவங்களிலிருந்து உருவாக்கின நியாயங்களை மட்டுமே என் படங்களில் முன்வைக்கிறேன். யாரும் காணக்கூடிய, எளிதில் கைவரக்கூடிய எளிய மனிதர்களே எனது கதாநாயகர்கள்...’’ எதார்த்தமாகப் பேசுகிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன். ‘சுந்தர பாண்டியன்’ கொடுத்த அதிரிபுதிரி வெற்றி தொடருமா…?

அந்தப் படம் மாதிரியே இதுவும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையா கொண்டதுதான். என் ஊருக்கு அருகில் நடந்தது. 1990 - 94ல் நான்கு வருஷம் நடந்த தொடர் கொலைகள். நண்பர்களுக்குள்ளே பிரச்னை ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் அதே நாளில் சம்பவம் நடக்கும். அதை யார் செய்யுறாங்க, எதுக்கு செய்யுறாங்க என்பதே கதை.

செய்பவர்களின் நோக்கம், இந்த நண்பர்கள் சிதறினார்களா, சேர்ந்தார்களா என்றும் கதை பயணமாகும். இந்த நான்கு வருஷமும் நாங்க மிரண்டு போயிருப்போம். அந்த நாள் வரும்போது எங்களுக்கு பயம் வந்திடும். இன்று என்ன நடக்கப் போகுதோ, யாரைச் செய்யப் போறாங்களோன்னு மனசு பதறும். சுத்துப்பட்டு இருபது கிராமங்களில் சம்பவத்துக்கு முன்னும் பின்னும் பத்து நாள் இதுவே பேச்சாயிருக்கும். இதைத்தான் எடுத்து ‘கொம்பு வைச்ச சிங்க’மா பண்ணியிருக்கேன்.

சினிமாவில் நீங்கள் சாதியை தூக்கிப் பிடிக்கிறீங்கன்னு பேச்சு இருக்கே…‘சுந்தரபாண்டியன்’ காலத்திலிருந்தே அந்தப் பேச்சு என்னை தொடர்ந்துகிட்டிருக்கு. நான் சார்ந்த சமூகத்தின் வாழ்வியல், உறவுமுறை நான் எடுத்து கையாள சுலபமா இருக்கு. எதை பேசணும், எதை பேசக்கூடாது, எதைப் பதிவு செய்யக் கூடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

இங்கே கிடந்து ஒண்ணுமன்னா வாய்ப்புக்கு அலைஞ்சிருக்கோம். யாருமே சாதி பார்த்து பழகுறதில்லை. ஒரே இலையில அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் உட்கார்ந்து சோறு சாப்பிட்டிருக்கோம். எங்களை உழைப்பு மட்டும்தான் தூக்கிட்டு வந்திருக்கு. எல்லாத்தையும் தாண்டி மனிதநேயம் மட்டும்தான் வாழ்க்கைன்னு புரிஞ்சு வந்திருக்கேன். எப்பவும் என் மனதின் மூலையில் உட்கார்ந்திருக்கிற நம்பிக்கைதான் என்னைக் காப்பாற்றி அழைச்சிட்டே வருது. அந்த மாதிரியெல்லாம் நான் இல்லைன்னு இந்த ஸ்கிரிப்ட்டுல சொல்லணும்னு நினைச்சேன். அதுவும் நடந்திருக்கு.  
சசிகுமார் எப்படி செய்திருக்கார்?

என்னுடைய குருநாதர் அவர்தான். அவர்கூட பேசினாலே எனக்கு எனர்ஜி கூடும். சேர்ந்து வேலை செய்தால் கேக்கணுமா! அழுத்தமான கதையில் அவர் ஸ்டைலில் பின்னி எடுத்திருக்கார். நான் சர்டிபிகேட் குடுக்குற இடத்துல அவர் இல்லை. ஆனால், சிறப்பா நடிச்சிட்டார்னு சொல்லி சந்தோசப்பட்டுக்கணும் இல்லையா! அப்படியே மனசில் தங்கிப் போற நடிப்பு. படத்துல ஜல்லிக்கட்டு காளை மாதிரி, பூமி கீறி மண்ணை வாரியிறைச்சு முன்னே நகர்கிற மூர்க்கமும் இருக்கு. கொஞ்சம் இன்ஜின் சூடேறணும்... பிறகுதான் வேகமெடுக்கும் என்ற நிர்ப்பந்தமெல்லாம் என் படத்தில் இல்லை. வேகம்தான். அதில் சசி சார் பங்கு அனேகம்.

திரும்பவும் சூரி உங்கள் லைனில் வந்துட்டார்…‘சுந்தரபாண்டியன்’ பண்ணும் போது அவர் பரோட்டா சூரிதான். இப்போ நிறைய மாற்றம் - வித்தியாசம். அதுல அவர் நாம சொன்ன கேர்க்டரைஅப்படியே பண்ணிக் கொடுத்தார். இதுல டைமிங், ஒரு புன்னகையாவது வரவழைக்கிற நேர்த்தி ஸ்கிரிப்ட் சென்ஸ் கூடிப்போச்சு.

இத்தனை டைரக்டர், ஹீரோக்களை பார்த்துட்டு வந்திருக்கார். அனுபவம் வகையா பேசுது. ‘சுந்தரபாண்டிய’னில் விஜய் சேதுபதி, சௌந்தர், இனிகோ வந்த மாதிரி இதில் விஜயராகவன், அபி சரவணன், சந்தோஷ், லோகுன்னு நண்பர்கள். அவங்களுக்கும் பெரிய ரீச் காத்திருக்கு.

மடோன்னா செபாஸ்டியன் ஹீரோயின். வெட்டிட்டு வான்னா அதை கட்டிட்டு வருது. நிச்சயமா இந்தப் படத்தில் அவங்களுக்கு நல்ல பெயர் இருக்கு. இதைச் சரியா பயன்படுத்தறது அவங்களுக்கு நல்ல பலன் தரும்.  

இயக்குநர் மகேந்திரன் அருமையான ரோலில் நடிச்சிருக்கார். அவர் இப்போ நம்மகிட்ட இல்லாமல் போனது பேரிழப்புன்னு இதைப் பார்த்தா தெரியும். திபு நினன் தாமஸ்தான் மியூசிக் டைரக்டர். சந்தோஷ் நாராயணன்கிட்ட பாடம் படிச்சவர். கேமராமேன் ஏகாம்பரம் 67 நாட்களில் இந்தப் படத்தை முடிச்சிக் கொடுத்திருக்கார். தொழில்ல மனசைப்போட்டு வேலை பார்க்கிறவர்.

படத்தில் ஆக்‌ஷன், உறவுகள், காமெடின்னு குறைவில்லாம வந்திருக்கு. இறுதியில் அதையெல்லாம் தாண்டி ஒரு லைஃப் இருக்கு. உண்மைச் சம்பவத்துக்கு ஒரு எஃபெக்ட் இருக்கே! கிளைமாக்ஸில் அதனோட மூடு வந்துரும். பிறகு கொஞ்ச நேரமாவது நினைக்காமல், வலிக்காமல் தூங்குவது சிரமமாயிடும். ஆரம்பத்திலிருந்தே புன்னகை வைத்திருக்கிற தயாரிப்பாளர் இந்தர்குமாருக்கு என் நன்றியைச் சொல்லியாகணும். l

நா.கதிர்வேலன்