ரூ.95,800 கோடி எங்கே? அரசு வங்கிகளில் அசகாய ஊழல்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் நிதி அமைப்புகளையே ஆட்டம் காணச் செய்யக்கூடிய மோசமான ஊழல் ஒன்றைப் பற்றிய தகவல் அது.
ஆம்! நமது அரசு வங்கிகளில் இதுவரை ரூபாய் 95,800 கோடிகள் வரை போலியான ஆட்களுக்குக் கடனாக கொடுத்திருக்கிறார்களாம்! கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையான அரையாண்டு முடிவிலான நிதி நிலை விவரம் இது. இந்த நிதியாண்டில் இதுவரை மொத்தம் 5,743 போலிக் கணக்குகள் மூலம் நிதி வழங்கப்பட்டிருக்கிறது.
அதில், ஆயிரம் போலிக் கணக்குகளுக்கு சுமார் ரூ.2500 கோடி நிதி சமீபத்தில்தான் போய்ச் சேர்ந்திருக்கிறது!‘இப்படியான போலியான நிறுவனங்கள் மற்றும் கணக்குகளுக்கு வழங்கப்பட்ட நிதியை வசூலிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது...’ என்று தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர்.
இப்படி போலியான நிதி பெற்றிருக்கும் நிறுவனங்களில் மூன்று லட்சத்து 38 ஆயிரம் நிறுவனங்களைக் கண்டடைந்து அவற்றின் செயல்படாத வங்கிக் கணக்குகளை முடக்கி, அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். ஆனால், இதெல்லாம் தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் ஆகாத வேலை என்றே பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.
இத்தனை கோடி ஊழல் என்பது மாநில மற்றும் தேசிய ஆளும் கட்சிகள், அதிகாரிகளின் ஆசி இல்லாமல் கண்டிப்பாக நடக்க முடியாது. எனவே, நிதியமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருப்பது வெறும் கண்துடைப்பே என்கிறார்கள். இந்த வங்கி ஊழல் என்பது இன்று நேற்று நிகழ்வதில்லை. பல ஆண்டுகளாக இருந்து வருவதுதான் என்றாலும் சமீபமாக இது மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
போலியான ஆவணங்களைக் கொடுத்து வங்கியில் கடன் வாங்குவது, வழங்கப்பட்ட அடமான சொத்துகளைக் காட்டிலும் அதிகமாக வங்கிக் கடன் பெறுவது, ஒரே சொத்து ஆவணத்தைக் காட்டி இரண்டுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கடன் வாங்குவது, ஒரே சொத்துக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கடன் பெறுவது என்று விதவிதமான நிதி ஊழல்கள் அரசு வங்கிகளில் நடந்து கொண்டிருக்கின்றன.
இவற்றில் வங்கியின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளில் தொடங்கி உள்ளூர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் வரை அனைவரது கரங்களும் கறைபட்டிருக்கின்றன.இப்படி அனைவரின் ஆசியோடும் நடைபெறும் ஊழல் என்பதால் இவை பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. நிறுவனம் திவாலானாலோ, இயக்குநர்களுக்கு ஏதும் நேர்ந்தாலோதான் இந்த போலி நிதிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
இந்த ‘கொள்ளை’ சமீப காலமாக கணக்குவழக்கின்றி அதிகரித்துக் கொண்டிருப்பதை இந்த ஆண்டின் தொடக்கத்தில்ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கவலையோடு தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் ரூ.71,543 கோடி போலி நிதி வழங்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தெரிவித்த ரிசர்வ் வங்கியின் பொது மேலாளார் ஜெயந்த் தாஸ், இது அதற்கு முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடும்போது 74 சதவீதம் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளிப்படுத்தினார்.
இப்போது இந்த அரையாண்டிலேயே மேலும் எழுபது சதவீத போலி நிதி அதிகரித்துள்ளது.கடந்த மார்ச் 2019 வரையிலான கணக்கின்படி இப்படி போலி நிதி பெற்ற டாப் 5 நிறுவனங்கள் மட்டும் மொத்த ஊழலில் 24 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன.
டாப் 10 நிறுவனங்கள் 34 சதவீத ஊழலையும், டாப் 100 நிறுவனங்கள் 70 சதவீத ஊழலையும் செய்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக சராசரியாக வங்கிகள் ரூ.35,000 கோடி கடன்களை இப்படியான போலி மற்றும் வாராக் கடன் கணக்குகள் என்று தெரிவித்து வருகின்றன. இது வங்கியின் நஷ்டக் கணக்கில் சேர்வதில்லை என்பதால் வங்கியின் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பில்லை. ஆனால், வங்கிகளை உள்ளிருந்து அரிக்கும் மோசமான நோய்களில் இது முதன்மையானது என்கிறார்கள் பொருளாதார அறிஞர்கள்.
இதுவரை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ரூ.25,400 கோடி கடனை இப்படியான போலி மற்றும் வாராக் கடன் என்று அறிவித்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.10,800 கோடி கடனை போலி என்று அறிவித்துள்ளது.இப்படி கடன் வாங்கும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குநர்கள் ஒரு கட்டத்தில் திவால் நோட்டீஸ் கொடுத்துவிட்டு வெளிநாட்டில் சொகுசாக வாழ்வது வாடிக்கையாகிவிட்டது.
இதனால்தான், மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு திவால் நடைமுறைச் சட்டத்தில் சில புதிய நடைமுறைகளைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி சுமார் ரூ.1,400 கோடி நிதியை வங்கிகள் திரும்பப் பெற வழிவகை ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் மற்ற தொகைக்கு எல்லாம் என்ன பதில் என்று தெரியவில்லை.
பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த ஆண்டில் மட்டும் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட நஷ்டத்தை இப்படியான போலி கடன்கள் மூலம் சந்தித்துள்ளதாகச் சொல்லியுள்ளது. சில நகைக் கடை அதிபர்களுக்காக இந்த வங்கியின் ஊழியர்கள் தரகர்களாக மாறி போலியான பேங்க் கியாரண்டிகளை வெளிநாட்டு நிதியாதாரங்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
இது அரசு வங்கிகள் என்றில்லை... தனியார் வங்கிகளிலுமே நடந்துகொண்டிருக்கும் விஷயம்தான். விவகாரங்கள் பெரிதாகும் வரை இங்கு நடக்கும் எந்த ஊழலும் குற்றமும் யாருக்கும் தெரிவதில்லை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.
வேலியே பயிரை மேய்வதைப் போல வங்கியில் வேலை செய்பவர்களே தாங்கள் பணியாற்றும் வங்கிக்கு எதிராகச் செயல்படுவார்கள் என்றால் இந்தியாவின் நிதித் துறையின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாகிவிடும். அரசு உடனடியாக இந்தக் ‘கொள்ளை’க்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ கிருஷ்ணன்
|