என்னை நோக்கிப் பாயும் தோட்டா ஏன் தாமதம்..? துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ்? நரகாசூரனுக்கு என்னாச்சு..?



பதிலளிக்கிறார் கௌதம் மேனன்

‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ தனுஷ் எப்படி இருப்பார் என எக்கச்சக்க சஸ்பென்ஸில் காத்திருக்கிறது தமிழ் சினிமா. அனுபவமும் அபார திறமையும் கொண்டு மீண்டும் முத்திரை பதிக்க காத்திருக்கிறார் கௌதம் மேனன். ‘பிரச்னைகளின் பிடியில் இருக்கிறார் கௌதம்’ என  ஆயிரம் பேச்சுக்கள் வெளியே… ஆனால், அவரோ ஜீன்ஸ் போட்ட புத்தர் போல சிரிக்கிறார் அழகாக.

‘‘படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. ஆனால், அது எனக்கு எப்பவும் பயம்தான். கலெக்‌ஷன் கண்டிப்பாக வேணும். நாம் ஒரு ஸ்டைலில் செய்திருப்போம், அவங்க இப்படி இருக்கும்னு ஒருவேளை நெனச்சிட்டு வரலாம். இந்தக் கதையை நெனச்ச மாதிரி எடுத்திருக்கேன். படம் கொஞ்சம் தாமதமா வருவது படத்தில் தெரியாது என்பதே உண்மை. எல்லா விஷயங்களும் ஹேப்பி எண்டிங்கில் முடியணும்னு அவசியம் இல்லை.

ஒரு சின்ன கண் சிமிட்டலில் வேற மாதிரி சில விஷயங்கள் நடந்திருக்கு. முதல் பாதியில் ஃபிரஷ்ஷான லவ் ஸ்டோரி இருக்கு. அடுத்த பாதி வேறொரு ரூட்டில் பயணிக்கும். தனுஷ் இன்னமும் ரியலிசம் உள்ளே இருக்கிற ஆர்ட்டிஸ்ட்.நல்ல கேமரா ஒர்க், பாடல்கள், தனுஷ் - மேகா இயல்பான நெருக்கம்னு படம் நெடுக நல்லா இருக்கும்.

என் படத்தில் என் முழு பலத்தையும் பிரயோகிப்பேன். தனுஷ் படம், புரொடியூசரின் படம்னு நினைப்பதே கிடையாது. என்னுடைய சினிமான்னு உழைப்பேன். இப்ப படத்தை ஆடியன்ஸ்கிட்ட கையளிச்சிட்டேன். அவங்களுக்கு இந்த ஆரம்பமும், மாறுகிற இடங்களும் நிச்சயம் புதுசா இருக்கும்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் கெளதம் மேனன்.

என்னதான் ஆச்சு… இவ்வளவு பிரச்னைகள்னு இருந்திட்டீங்க…பிஸினஸ்னு வரும்போது வருவதுதான். இந்தப் படத்தை 55 நாட்களில் முடிச்சிட்டேன். ரிலீஸ் செய்ய முடியாமல் போச்சு. அடுத்த படத்துக்காக வாங்குனவங்க இதுலயே ரிட்டன் செய்யணும்னு சொன்னபோது முடியல. ‘துருவ நட்சத்திர’த்துக்கு கொடுத்தவங்க, எங்களுக்கு இப்பவே கொடுத்திருங்கன்னு கோர்ட் ஏறி, அவங்களுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வரும்போது அவங்களுக்கு பணம் தரவேண்டிய சூழ்நிலை.

இந்தப் படத்தோட பிஸினஸால் இதைத் தாங்க முடியல. இது ஒரு குறிப்பிட்ட அளவு பட்ஜெட்னா, ‘துருவ நட்சத்திரம்’ பெரிய படம். ரிலீஸ் வரைக்கும் பொறுத்திருந்தா கொடுத்திருக்க முடியும். ஆனால், இப்படி பணத்தைக் கேட்ட பின்னாடி நாங்க மாட்டிக்கிட்டு முழிச்சது உண்மை. அதற்குப் பின்னாடி மூணு நாலு படம் ஒப்பந்தமாகி அதுல இருந்து பணத்தைப் போட்டு இப்ப ரிலீஸ் ஆகுது.

இவ்வளவு பொறுமையா இருக்கீங்க…

ரொம்ப சீண்டிப் பார்த்தா கோபம் வரும்தான். ஆனால், இது என் தப்புன்னு புரிஞ்சி போச்சு. ரிலேசன்ஷிப்பை பராமரிக்கலைன்னா இப்படி பிரச்னைகள் வரும். தப்பாக கோபப்படவும், வழக்கு போடவும் சான்ஸ் இருக்கு.

ஒரு படத்தை நிறுத்த முடிவது எனக்குப் புது அனுபவம், ஒரு ஹீரோகிட்ட போயி ‘ஒரு படம் பண்ணிக் கொடுங்க, இந்தப் பிரச்சனையை சரி பண்ணிப்பேன்’னு நான் கேக்கலாம். அதற்கான கதையைச் சொல்லணும்ல? அப்படி எதுவும் இல்லாம அவங்களை நான் எதிர் பார்க்கறதும் தப்பு.

இத்தனைக்கும் நடுவில் ‘ஜோஷுவா’ எழுதி அது நன்றாகவும் வந்து, வருணை வெச்சி 50% படமும் முடிச்சாச்சு. இதற்கிடையில் அனுஷ்காவை ஹீரோயினா பேசியாச்சு. சூர்யாவுடன் ஒரு உரையாடல் போயிட்டிருக்கு. இரண்டு வாரத்தில் கன்பார்ம் ஆகிடும்.

இப்படி அடுத்தடுத்து படம் பண்ற மாதிரி ஐசரி கணேஷ் சார் சூழலை உருவாக்கிக் கொடுத்தார். எல்லோரும் ஹெல்ப் பண்றோம்னு சொல்லி இருந்தாங்க. ஆனால், ஐசரி உடனே முடிவெடுத்து இறங்கிச் செய்தார். ‘நீங்க நல்லா இருக்கணும், தேங்கிடக் கூடாது’ன்னு சொல்லிட்டு எல்லா இடத்திலும் உட்கார்ந்து பேசினார்.

இதையெல்லாம் முன்பே சரி பண்ணியிருக்கலாமே…  
பலருக்கும் இதில் இறங்கினால் என்ன பிரச்னை வருமோன்னு தோணியிருக்கலாம்.

இங்க யாரும் வீட்லயிருந்து பணம் எடுத்துட்டு வர்றதில்ல. ஒரு புராஜெக்ட் ரெடி பண்ணி, வெளியே வட்டிக்கு வாங்கி அதுல இருந்து லாபத்தைப் பார்க்குறாங்க. இவ்வளவு மக்கள் படம் பார்த்தும் ஏன் ரிடர்ன் புரொடியூசருக்குப் போய்ச் சேரலைங்கறது மில்லியன் டாலர் கேள்வி.

மற்ற மொழிகளில் இது சரியாப் போய்ச் சேருது. எனக்கு இப்பதான் கதவு ஒண்ணு திறந்தது. அதனால் யார்கிட்டயும் உரையாடலை நான் விடவே மாட்டேன். ஓர் இடத்திலும் தனியா இருக்க மாட்டேன்.

ஒரு விஷயத்தை செய்ங்க, செய்யாதீங்கனு சொல்றதுக்கு என்கிட்டே சிலபேர் இருக்காங்க. அதுதான் சந்தோஷம். என் மூணு பசங்களும் ஐசரி ஸார் ஸ்கூல்லதான் படிச்சாங்க. இப்ப ஏர்போர்ட்டில் அவரப் பார்த்துப் பேசும்போது மறுபடியும் நட்பு துளிர்த்தது.

அவர் எங்கே போனாலும் என்னைப் பத்தி பேசுறார்னு கேள்விப்பட்டேன். ஹீரோக்களை சந்திக்கும் போதெல்லாம் ‘கௌதமோட படம் பண்ணலாமே’ன்னு சொல்றத வழக்கமா வெச்சிருக்கார். நான் இல்லாதபோது நம்மைப் பத்தி நல்லாப் பேசுறது அருமையான விஷயம்தானே!

நானேதான் அவரப் பார்த்து ‘வருணை வெச்சிப் படம் பண்றேன். எனக்கும் உங்களுக்கும் எதோ ஒரு கனெக்‌ஷன் இருக்கு’ன்னு சொன்னேன். இப்படித்தான் ஆரம்பிச்சது. அவரே, ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ பார்த்துட்டு அருமையா இருக்கேன்னு உட்கார்ந்து எல்லாத்தையும் கையிலெடுத்து சரி பண்ணினார்.

கலைஞன் என்பவன் சாந்தமான மனநிலையில் இருந்துகொண்டு செயல்படுவதுதானே நல்லது! சிரிக்கிற பக்குவத்தை தொலைக்க இருந்ததை ஐசரி சார் மீட்டுக் கொடுத்து காப்பாற்றினார்.எழுதுவதை இது பாதிக்காதா?பாதிக்குது. ஆனா, பாதிக்கல. அதுதான் அர்த்தம். எப்படி பாதிச்சதுன்னா கொஞ்சம் டைம் எடுத்தது. எல்லா மீட்டிங்குக்கும் போக வேண்டியிருந்தது. போய் நேரம் தெரியாம உட்கார்ந்திருக்கணும்.

இதுதான் சினிமா. இவங்களைத் தாண்டி படம் பண்ண முடியாதுன்னு நினைக்கும்போது பாதிக்கும். அப்ப உட்கார்ந்து எழுதினால் சரியா வராது. விடா முயற்சியாக ஃபோர்ஸ் கொடுக்காமல் மூட் செட்டாகி எழுதினால் அப்புறம் வந்திடும். மூணு மாசத்தில முடிய வேண்டியது ஆறு மாசம் ஆகும். பாதிச்சதை பெருசா பாதிக்காம பார்த்துக்கிட்டேன். இப்ப கொஞ்சம் மீதியை முடிச்சால் வருண் நடிச்ச ‘ஜோஜ்வா - இமை போல் காக்க’ ரெடியாயிடும். இப்படி என்னை மாத்திக்கிற சக்திக்கு நன்றி சொல்லியாகணும்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நரகாசூரன்’ படங்கள் வெளியாவதில் உங்கள் பங்கு என்ன..?

‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆரம்பிச்சுவிட்டது மட்டுமே நான்! அதில் நான் புரொடியூசரும் கிடையாது. ‘ஒன்றாக’னு ஒரு கம்பெனி ஆரம்பிச்சு அதில் வெங்கட் பிரபு, செல்வராகவன் டைரக்ட் பண்ணணும்னு ஆரம்பிச்சோம். அதில் எஸ்.ஜே.சூர்யா வந்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் அதை தயாரிக்கற மாதிரி வெச்சிட்டு வெளியே வந்தாச்சு. உண்மையில் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அது எல்லாத்தையும் பார்த்துக்குறது மதன்தான்.

‘நரகாசூரன்’ படத்துக்கு கேட்டதெல்லாம் கொடுத்தோம். சின்ன படம்னு ஆரம்பிச்சு டைரக்டர் பெரிய ஆர்ட்டிஸ்ட்னு சொன்னதும் பட்ஜெட் அதிகம் ஆகிவிட்டது. இதற்குப் பிறகு எவ்வளவு ஆகும்னு பார்த்தபோது 100% வித்தியாசம் இருந்தது.

புது இன்வெஸ்டர்ஸ் வந்து இந்தப் படத்தை டேக் ஓவர் செய்து சென்ஸார் முடித்து அவங்க பேர்தான் இப்ப வருது. எனக்கு டைரக்டர் கார்த்திக் நரேன் மேல மரியாதை இருக்கு. நல்லா வருவான். அதற்குத்தான் அவனை அடுத்த படம் செய்ய வெச்சோம்.

நான் ‘நரகாசூரனை’ மறக்கலை. ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ பத்தி நான் டுவிட் பண்ணினப்ப ‘நரகாசூரனை’ மறந்துட்டீங்களான்னு பதில் டுவிட் செய்தான். எல்லாத்துக்கும் பதில் சொல்ல இஷ்டம் இல்லை. நேர்மை ஜெயிக்குமான்னு தெரியாது. ஆனால், நியாயம் கண்டிப்பா உலகத்துக்கு புரியும். நேர்மை புரிய கொஞ்சம் நேரம் புடிக்கும்.    

‘துருவ நட்சத்திரம்’ எப்போ ரிலீஸ்..?

டப்பிங் மட்டும்தான் பாக்கி. சின்னச் சின்ன வேலைகள் இருக்கு. ‘‘பொன்னியின் செல்வன்’ போறதுக்கு முன்னாடி டப்பிங் முடிக்கறேன்’னு விக்ரம் சொல்லியிருக்கார்.

அதற்கான வேலைகளும் ஒண்ணுபோல நடக்குது. அவர் பையன் துருவ் வேற வந்துட்டான். வேற லெவல்ல இருக்கான். அவனை என்கிட்ட கொடுத்துட மாட்டாங்களான்னு நினைக்கிறேன். ஒரு Narration ஏற்பாடு பண்றேன்னு விக்ரம் சொல்லியிருக்கார். பார்க்கலாம்.   
    
இத்தனைக்கும் உங்க வீடு எப்படி துணை இருந்தது..?

இங்கேயும் அமைதி இல்லேன்னா ரொம்பக் கஷ்டமாப் போயிருக்கும். அவங்களுக்கு எல்லாமே தெரியும். தெரியாத மாதிரி அரவணைப்பு தருவாங்க. வேறொரு உலகத்தைக் காண்பிப்பாங்க.

‘வா, எங்கேயாவது போகலாம், பேசலாம்’னு வேற ஒண்ணை அறியத் தருவாங்க. எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது. வெறும் அன்பு மட்டும்தான் இடையோடிக் கிடக்கும். நம்ம கதை சொன்னதெல்லாம் விட்டுட்டு பசங்க கதை சொல்றத கேக்கறதும், சிரிக்கிறதுமா அவங்களே என்னைக் கையில் எடுத்துப்பாங்க.

இப்படி ஓர் இடம் இருக்கறதாலதான் அனுபவிச்சும் லயிச்சும் இழைச்சும் படம் பண்ணிக்கிட்டிருக்கேன். இப்பகூட சூர்யாவுக்கு ஒரு அருமையான காதல் கதை எழுத்தில் இருக்கு. எனக்கு நாற்பது வயசு ஆயிடுச்சுன்னு சூர்யாதான் ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கார். நான் நம்பலை. ‘ஆறு மாசம் மட்டும் உங்களுக்கு கல்யாணம் ஆனதை மறந்துட்டு வாங்க’ன்னு சொல்லியிருக்கேன்!

நா.கதிர்வேலன்