1931 to 1940 தமிழ் சினிமாவில் இடம்பெற்ற பாடல்களை தொகுத்திருக்கும் வழக்கறிஞர்!



இன்று கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்கே ‘தமிழ் சினிமா உலகம்’ என்ற புத்தகம்தான். 1930களின் ஆரம்பத்தில் வெளியான தமிழ்ப்படங்களில் இடம்பிடித்த பாடல்களின் தொகுப்பு இது.
ஊர் ஊராக பாட்டுப் புத்தகங்களைத் தேடி அலைந்து இந்தப் பாடல் பொக்கிஷத்தை நமக்குத் தந்திருக்கிறார் அகிலா விஜயகுமார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய பாடல்களை அழிவுப் பாதையிலிருந்து காப்பாற்றியிருக்கிறார் இவர்.

‘‘நான் பிறந்தது சிவகாசி பக்கம் திருத்தங்கல் கிராமம். பிழைப்புக்காக குடும்பத்தோட மதுரைக்கு வந்துட்டோம். அங்கேதான் பள்ளி, கல்லூரி வாழ்க்கை. சட்டம் படித்து வக்கீல் தொழிலும் செய்தேன். குடும்ப சூழ்நிலை காரணமா 2005ல திருப்பூருக்குக் குடிபெயர்ந்தேன். இங்கு நண்பரின் கம்பெனியில் வேலை செய்கிறேன்...’’ என்ற அகிலா விஜயகுமார் இசையில் ஏற்பட்ட ஆர்வம் பற்றி விவரித்தார்.

‘‘தாத்தா கோயிலில் உடுக்கை அடித்து பாடல்களைப் பாடும் பூசாரி. அப்பா தனியார் பஸ்சில் டிரைவரா இருந்ததோடு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவது, நாடகத்தில் நடிப்பதுமாக இருந்தார். இந்த பக்திப் பின்னணிதான் என்னையும் இசையை நாடச் செய்தது. சின்ன வயசுல இருந்து இலங்கை வானொலியில் பாடல்களைக் கேட்டு ரசிப்பேன்.

உள்ளூரில் நடக்கும் இசைக் கச்சேரிகளைத் தவற விடமாட்டேன். திரைப்படங்களும் என்னைக் கவர்ந்தன. இசையில் ஏற்பட்ட ஆர்வம்தான் திருமணத்தை தள்ளிவைத்துக்கொண்டே வந்தது. இப்போது எனக்கு உறுதுணையாக இருப்பது இசைதான்...’’ என்று சொல்லும் அகிலா இந்தப் புத்தகத்துக்கான கரு எங்கிருந்து உருவானது என்றும் விளக்கினார்.

‘‘திரையிசைப் பாடகி எஸ்.வரலட்சுமியின் குரலில் எனக்கு ஒரு வசீகரம். ‘கந்தன் கருணை’யில் ‘வெள்ளிமலை மன்னவா…’, ‘ராஜராஜசோழனி’ல் ‘ஏடு தந்தானடி தில்லையிலே…’ இறுதிக் காலத்தில் அவர் ‘குணா’வில் பாடிய ‘உன்னை நான் அறிவேன்...’ போன்ற பாடல்களை ரசித்து ரசித்துக் கேட்பேன்.
அவர் 120 பாடல்கள் வரை பாடியிருக்கிறார். ஆனால், 20 பாடல்களைத்தான் நம்மால் கேட்க முடிகிறது. மற்ற பாடல்கள் என்ன ஆனது என்று கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக இசை ஆர்வலர்களையும், இசை சேமிப்பாளர்களையும் சந்தித்தேன். எஸ்.வரலட்சுமி 2009ல் இறந்தார். அவர் பாடிய பாடல்களை 2010லிருந்து தேட ஆரம்பித்தேன்.

மற்ற பாடகர்களை சீக்கிரம் இமிடேட் செய்துவிடலாம். ஆனால், .வரலட்சுமியை இமிடேட் செய்வது கடினம். அப்படிப்பட்ட தனித்துவமான குரலின் சொந்தக்காரருக்கே இப்படி ஒரு நிலை என்றால் மற்றவர்களின் நிலையைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.

இதுதான் என்னை தமிழ் சினிமா முதன் முதலாக பேசியும் பாடியும் வந்த 1931 - 40க்குள் இட்டுச்சென்றது. முதல் தேடலில் எஸ்.வரலட்சுமியின் 60 பாடல்களைக் கண்டுபிடித்தேன்...’’ என்கிற அகிலா இந்தக் காலகட்டத்தில் உருவாகிய சினிமா இசை குறித்தும் பேசினார்.

‘‘1931 - 40க்குள் வெளிவந்த 238 படங்களில் பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி’, ‘திருநீலகண்டர்’, ‘சிந்தாமணி’, பி.யூ.சின்னப்பா நடித்த ‘உத்தமபுத்திரன்’ மற்றும் ‘சகுந்தலை’, ‘தியாகபூமி’, ‘ரம்பையின் காதல்’, ‘சாந்த சக்குபாய்’, ‘பட்டினத்தார்’ ஆகிய படங்களைத்தான் இப்போது நாம் பார்க்க முடியும்.
மற்ற படங்கள் கிடைப்பதில்லை. படங்களைத்தான் காணவில்லை. பாடல்களுக்கு என்ன ஆனது? இந்தக் கேள்வி மறுபடியும் என்னைத் துளைத்து எடுத்தது.

திரைப்படங்களுக்கான பாட்டுப் புத்தகம் வந்த காலம் அது. அதனால் பாட்டுப் புத்தகங்களைத் தேடிப் பயணமானேன். கன்னியாகுமரி முதல் பாண்டிச்சேரி, பாலக்காடு, திருப்பதி வரை பயணித்தேன்.

முதலில் ஒருவர் ஒரு தகவலைச் சொல்வார். அவர் மூலம் பிறரின் விவரங்கள் அறிந்து நூல்பிடித்து ஏறுவது மாதிரி ஒவ்வொரு படத்துக்குமான பாடல் புத்தகங்களைச் சேகரித்தேன். இதில், 17 படங்களைத் தவிர மற்ற படங்களின் பாடல் புத்தகங்கள் கிடைத்தன...’’ என்கிற அகிலா சிறிது இடைவெளிவிட்டு தொடர்ந்தார்.

‘‘பாடல் புத்தகங்கள் பாடல்களுக்கான ஆதாரமாக மட்டுமில்லாமல் அந்தப் படங்களில் நடித்தவர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் தயாரிப்பு தொடர்பான தகவல்களின் பொக்கிஷமாகவும் இருக்கும். ஒரு படத்துக்கு 50 பாடல்கள் இருந்தால் அந்த மொத்த பாட்டுகளும் பாட்டுப்புத்தகத்தில் இருக்கும். ஆனால், எனது புத்தகத்தில் ஒவ்வொரு படத்துக்கும் சில பாடல்களைத்தான் உதாரணமாகக் கொடுத்திருக்கிறேன்.

1937ல்தான் திரைப்படப்பாடலுக்கு கிராமஃபோன் ரெக்கார்டு வந்தது. அதற்கு முன் கிராமஃபோன் ரெக்கார்டுகள் மூலம் கர்நாடக சங்கீதம், கீர்த்தனைகள் மற்றும் நாடகங்களைத்தான் கேட்க முடியும்.

அதனால் 37க்கு முன் வந்த பல படங்களின் பாடல்களை நம்மால் கேட்கமுடியாமல் போய்விட்டது. அத்துடன் 37க்குப் பின் வந்த பாடல்களை ரெக்கார்டில் கொண்டுவந்தாலும் ஒரு ரெக்கார்டில் 10 பாடல்கள் வரைதான் பதியமுடியும். ஆகவே, பிரபலமான நடிகர், பிரபலமான பாடல் என்றுதான் ரெக்கார்டுகள் வரும்.

இதனால் ஒரு படத்தின் முழுமையான பாடல்களைக்கேட்க முடிவதில்லை. இப்போதைக்கு 1931 - 40க்குள்ளான 100 பாடல்களைத்தான் நம்மால் கேட்க முடியும்...’’ என்று சொல்லும் அகிலா, அந்தக் காலத்தில் வெளியான படங்களில் இடம்பெற்ற 90 சதவீத பாடல் வரிகள், அதாவது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் தன்னிடம் பத்திரமாக உள்ளன என்கிறார்.

‘‘தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, பாபநாசம் சிவன், ஜி.என்.பாலசுப்ரமணியம், கே.பி.சுந்தராம்பாள் மற்றும் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகிய 6 ஆளுமைகள்தான் அப்போது முக்கியமான பாடகர்கள்.

பொதுவாக பக்திப் படங்களும்பக்திப் பாடல்களுமாக இருந்ததால் கர்நாடக சங்கீத அமைப்புகளில்தான் அதிகபட்சமான பாடல்கள் இடம்பெறும். இடையில் வேண்டுமென்றால் காமெடி ட்ராக்குகளில் நாட்டுப்புறப் பாடல்களும், ஹாஸ்ய பாடல்களும் இடம்பெறும். தவிர, அன்றைய தேதியில் வந்த நாடகங்களை அடியொற்றியே திரைப்படங்களும் வந்தன.

ரெக்கார்டுகளில் இருந்து சில பாடல்கள் நமக்கு இப்போது கிடைக்காமல் இருக்கலாம். அதை புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். திரைப்படம் குறித்து பல தனிநபர்கள் சேகரித்து வைத்திருப்பார்கள். இவையெல்லாம் சேரும்போது ஆரம்பகால தமிழ் சினிமாவின் முழுச் சரித்திரத்தையும் நம்மால் எழுதமுடியும். இதற்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும்...’’ என்கிறார் அகிலா விஜயகுமார்.

டி.ரஞ்சித்