காமெடி நடிகராக ஜொலிக்கும் அமிதாப்பின் பர்சனல் மேக்கப் மேன்!
விஜய்யின் ‘தலைவா’வில் சுரேஷ் நடத்தும் ஹோட்டலின் செஃப்; ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’வில் பவர் ஸ்டாரின் அப்பா; ‘தில்லுக்கு துட்டு 2’வில் குடியிருப்போர் நலச்சங்க தலைவர்; ‘ஏ1’ படத்தில் டெனன்டுடன் சரக்கு அடிக்கும் ஹவுஸ் ஓனர்... என சின்ன கேரக்டர்களிலும் தனது பெக்யூலியர் மொழி வளத்தால் குலுங்கும் நகைச்சுவையாக்கியவர் புஜ்ஜிபாபு.
சினிமாவின் கறுப்பு வெள்ளை காலத்திலிருந்து இன்று வரை மேக்கப் மேனாக பயணிப்பவர். 12 ஆண்டுகளாக சந்தானத்தின் பர்சனல் மேக்கப்மேனாக இருந்து வரும் புஜ்ஜிபாபு, இதற்கு முன் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், டோலிவுட் பாலகிருஷ்ணா என பல டாப் ஹீரோக்களுக்கும் பர்சனல் மேக்கப்மேனாக இருந்திருக்கிறார்.
‘‘நாற்பது வருஷங்களுக்கு மேல மேக்கப் ஆர்ட்டிஸ்டா இருந்திருக்கேன். அப்பல்லாம் நான் தி.நகர், சாலிகிராமம், கோடம்பாக்கம் ஏரியாக்கள்ல சைக்கிள்ல சுத்துவேன். என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. இப்ப நான் எந்த ஏரியாவுல சுத்தினாலும் கரெக்ட்டா என்னை பாயிண்ட் அவுட் பண்ணி பேசி நலம் விசாரிக்கறாங்க. நடிக்கறது ஒரு வரம்...’’ பூரிக்கும் புஜ்ஜி பாபு, ஆந்திராவில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர்.
‘‘விஜயவாடா பக்கம் ஒரு குக்கிராமத்துல பிறந்தேன். ரொம்பவும் ஏழ்மையான குடும்பம். 1965ல பொழப்பு தேடி சென்னை வந்தேன். ஹோட்டல் சர்வர்ல இருந்து பார்க்காத வேலையில்லை. மெல்ல இண்டஸ்ட்ரீல மேக்கப் அப்ரன்டீஸா சேர்ந்தேன். பிடிச்ச வேலையா இருந்ததால, கொஞ்ச வருஷத்துல சீஃப் மேக்கப்மேன் ஆகிட்டேன்.
தெலுங்கில் பெரிய பெரிய பேனர்களின் மேக்கப்மேனா இருந்திருக்கேன். அப்புறம் நடிகை லட்சுமி மேடத்தோட பர்சனல் மேக்கப்மேனா ஆனேன். அவங்களோட ‘ஜூலி’, ‘சட்டைக்காரி’ எல்லாம் பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள்.1981ல அமிதாப்பச்சன் சார் அறிமுகம் கிடைச்சது. அவர் லெஜண்ட். அவரோடு முதல் முதலா ஒர்க் பண்றப்ப என் சீஃப் என்னை அறிமுகப்படுத்தினார். அவர் கண்டுக்கலை!
ரெண்டு மாசத்துக்குப் பிறகு அவருக்கு ஒரு கெட்டப் ஒர்க் பண்ற வேலை வந்தது. பண்ணிக் கொடுத்தேன். அதுல அவர் இம்ப்ரஸாகி என்னை அவர் பர்சனல் மேக்கப்மேனா ஆக்கிக்கிட்டார். அவர் நடிச்ச ‘அந்தா கானூன்’, ‘இன்குலாப்’, ‘ஆக்ரி ரஸ்தா’, ‘ஜல்வா’, ‘பட்வாரா’னு கிட்டத்தட்ட அஞ்சு வருஷங்கள் அவர் கூடவே டிராவல் செய்தேன்.
அப்ப இந்திப் படங்களின் ஷூட் சென்னைலதான் நடக்கும். ராஜீவ்காந்தி பிரதமரா இருந்தப்ப அமிதாப்ஜி எம்பி ஆகிட்டார். அதனால அவருக்குப் படங்கள் பண்ண முடியாமப் போச்சு. அடுத்து ஜெய்சித்ரா மாதிரி சில ஆர்ட்டிஸ்ட்களுக்கும் சில பேனர்களுக்கும் ஒர்க் பண்ணினேன். பாலிவுட்டில் பல படங்களை இயக்கின டி.ராமாராவின் கம்பெனி சீஃப் மேக்கப்மேனாகவும் இருந்தேன்.
அந்த டைம்ல டோலிவுட் ஹீரோ பாலகிருஷ்ணா சாருக்கு மேக்கப்மேன் தேவைப்பட்டதால, அவர்கிட்ட ஒர்க் பண்ற சந்தர்ப்பம் கிடைச்சது. அவருக்கும் பத்து படங்கள் வரை பர்சனல் மேக்கப்மேனா இருந்தேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு என்னை அவர் ஹைதராபாத்துக்கே வரச் சொன்னார். எனக்கு வசதிப்படல. சென்னை பிடிச்சுப் போனதால போகலை.
அடுத்ததா, கமல் சார் கூப்பிட்டு ‘நம்மவர்’ல ஒர்க் பண்ண சொன்னார். அப்புறம் அவருக்கே ‘சதிலீலாவதி’, ‘ஸ்வாதிமுத்தியம்’, ‘மகளிர் மட்டும்’, ‘குருதிப்புனல்’, ‘இந்தியன்’னு பல படங்கள்ல ஒர்க் பண்ணினேன். கமல் சாருக்கு சினிமாவுல அத்தனையும் அத்துப்படியா தெரியும். மேக்கப்ல புதுப்புது விஷயங்களை நமக்கு அவர் அறிமுகப்படுத்துவார்!
‘இந்தியன்’ல ஒர்க் பண்ணின அனுபவத்துல ஷங்கர் சார் கூப்பிட்டு ‘ஜீன்ஸ்’ல வேலை கொடுத்தார். அதுல எனக்கு பிரஷாந்த் அறிமுகமானார். அவரோடவே 25 படங்கள் ட்ராவல் பண்ணினேன். அப்புறம் கே.எஸ்.ஆர்., விஷால் கம்பெனிகளுக்கு பண்ண ஆரம்பிச்சேன்.
விஷாலோட ‘தோரணை’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யில் ஒர்க் பண்றப்ப சந்தானம் சார் பழக்கம் கிடைச்சது. ‘எனக்கு ஒர்க் பண்றீங்களா’னு கேட்டார். 2009ல இருந்து இப்ப வரை அவரோட பர்சனல் மேக்கப்மேனா இருக்கேன்...’’ புன்னகைக்கும் புஜ்ஜிபாபுவை நடிகராக மாற்றியவர் இயக்குநர் ஏ.எல்.விஜய்!
‘‘சந்தானம் சார்கிட்ட 12 வருஷங்களா இருக்கேன். ரொம்ப நல்ல மனசுக்காரர். அவரும் சரி, அவர் ஃபேமிலில உள்ளவங்களும் சரி என்னை இதுவரை புஜ்ஜிபாபு சார்னு கூட கூப்பிட்டதில்ல. ‘நைனா’னுதான் பாசமா கூப்பிடறாங்க. சில நேரம் டிஸ்கஷனின் போது, ‘நைனா இது சரி வருமா’னு கருத்து கேட்பார். நான் சொல்றதை அவரும் ஏத்துக்குவார். ‘தெய்வத்திருமகள்’ ஷூட்டிங்கப்ப டைரக்டர் ஏ.எல்.விஜய் சார் அறிமுகமானார். நான் தெலுங்கு கலந்த தமிழ்ல பேசறதை ரசிச்சவர், ஒருநாள் ‘நான் சொல்ற டயலாக்கை அப்படியே சொல்லுங்க பார்ப்போம்’ன்னார். சரினு சொன்னேன்.
‘லாயர்கிட்டயும் டாக்டர்கிட்டயும் பொய் சொல்லக்கூடாது. ஆனா, டாக்டர், லாயர்கிட்ட பொய் சொல்லலாம்!’ இதை அப்படியே என் மாடுலேஷன்ல சொன்னேன். அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. அதுல என்னை நடிக்க வச்சிட்டார். முதல் படமே என்னை கவனிக்க வச்சது. ‘தலைவா’ல ஹோட்டல் செஃப். ஹோட்டல் ஓனர் சுரேஷ்கிட்ட ‘இது என்ன சொல்லுங்கோ’னு ஒரு டிஷ்ஷை காட்டிக் கேட்பேன். அவர் அதை டேஸ்ட் பார்த்துட்டு ‘தயிர்சாதம்’பார். உடனே நான், ‘இது உப்புமா’னு சொல்வேன்!
இந்த காமெடி எனக்கு திருப்புமுனையா அமைஞ்சது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ல பவர் ஸ்டாரின் அப்பாவா நடிச்சேன். இன்னும் பாப்புலர் ஆகிட்டேன். காமெடி கேரக்டர் செமையா ஒர்க் அவுட் ஆச்சு. ‘தில்லுக்குத்துட்டு 2’, ‘ஏ1’னு நான் நடிச்ச கேரக்டர்ஸ் சக்சஸ் ஆச்சு. இப்ப ‘டகால்டி’, ஆர்.கண்ணன் படங்களும் பண்ணிட்டிருக்கேன்.
ஒரு நாள் கால்ஷீட், அரை நாள் கால்ஷீட், சும்மா தலைகாட்டிட்டு போற சீன்ஸ் எல்லாம் வந்தா பண்ணமாட்டேன். நான் படத்துல இருந்தால், அந்த கேரக்டர் ஆடியன்ஸுக்கு ரீச் ஆகறதா இருந்தா மட்டுமே நடிக்க சம்மதிக்கறேன். சந்தானம் சார் படங்கள் மட்டுமில்லாமல் வெளிப் படங்களும் பண்ணுவேன்...’’ ஒளிவு மறைவின்றி பேசும் புஜ்ஜிபாபு அந்தக் காலத்தில் மேக்கப் போடுவது சிரமமானது என்கிறார்.
‘‘அப்ப ஒரு நடிகருக்கு மேக்கப் போட ஒரு மணி நேரம் வரை ஆகும். கறுப்பு வெள்ளை படங்கள் என்பதால் நாம மேக்கப்ல எந்த கலர் போட்டாலும் கறுப்பு வெள்ளையாகத்தான் தெரியும். மஞ்சள் போட்டா கூட வெள்ளையாகத்தான் இருக்கும். எந்த கலரும் தெரியாது. ஃபேஸ், தாடைனு கட் பண்ணி மேக்கப் பண்ண வேண்டியிருக்கும்.
அப்ப ஃபேஸ் மோல்டு பண்ணினது மாதிரி இப்ப கலர்ல பண்ண முடியாது. அப்ப அஞ்சாறு கோட்டிங் போடுவோம். மேக்கப்ல பிளாக் அண்ட் ஒயிட் கால மேக்கப்தான் உசந்தது! மேக்கப்ல எனக்குனு தனி பாணி எதுவும் கடைப்பிடிக்கல. ஒவ்வொருத்தர் ஸ்கின் டோனையும் சரியா பிடிச்சு, அதுக்குத் தகுந்தா மாதிரி போடுவேன்.
இதுவரை எந்த ஒளிப்பதிவாளரும் என் மேக்கப்பை குறை சொன்னதில்ல. ‘மேக்கப் ஓவரா இருக்கு. கொஞ்சம் துடைச்சிடுங்க’னு சுட்டிக் காட்டினதில்ல. ‘குருதிப்புனல்’ல பி.சி.ராம் சார்கூட என் மேக்கப்பை பாராட்டியிருக்கார். இப்ப பிளட் கசியுதுனா கூட கிராபிக்ஸ்ல கொண்டு வர்றாங்க. அப்ப அப்படியில்ல. தீக்காயம் மேக்கப் போடணும்னா நிரோத் பாக்கெட் வாங்கிட்டு வந்து அதை கட் பண்ணி முகமெல்லாம் தீயில வெந்தது மாதிரி எஃபெக்ட் கொடுப்போம். ரியாலிட்டி இருக்கும்.
ரத்தத்துக்கு குங்குமம் பயன்படுத்த மாட்டோம். சிகப்பு கலர் பெயிண்ட்ல கறுப்பு கலர் மிக்ஸ் பண்ணி பிளட் கலருக்கு கொண்டு வருவோம். இப்ப டிஜிட்டல் வந்துட்டதால 10 நிமிஷங்கள்ல மேக்கப் போட்டுட முடியும். கலர்ல மேக்கப் ஈஸியாகிடுச்சு. ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட்டும் தாங்களே மேக்கப் போட்டுக்கவும் முடியுது...’’ அசைபோடும் புஜ்ஜிபாபுவுக்கு இரு மகள்கள்.
‘‘ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. பெரிய பொண்ணு ஆஸ்திரேலியா, சிட்னில இருக்கா. ஒர்க் பண்றா. மருமகனும் நல்ல வேலைல இருக்கார். அவங்களுக்கு மூணு பசங்க.ரெண்டாவது மக, மெல்போர்ன்ல இருக்கா. அவளுக்கு ரெண்டு பசங்க. போன டிசம்பர், ஜனவரில ரெண்டு பொண்ணு வீடுகளுக்கும் போய் அஞ்சு பேரன்களையும் கொஞ்சிட்டு வந்தேன்.
நான் நடிகரானதுல அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நெட்ல நான் நடிச்ச படம் எதாவது பார்த்தால் கூட உடனே எனக்கு போன் செஞ்சு, ‘டாடி நீங்க சூப்பரா நடிச்சிருக்கீங்க’னு பாராட்டுவாங்க. வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கு...’’ மனதார நிறைவுடன் சொல்கிறார் புஜ்ஜிபாபு.
மை.பாரதிராஜா
ஆ.வின்சென்ட் பால்
|