வெப் சீரிஸ் தமிழ் சினிமாவுக்கு ஆபத்தா..?தமிழ் சினிமா வட்டாரத்தில் இப்போது கவனிக்கப்படுகிற வார்த்தை ‘வெப் சீரிஸ்’.

சினிமாவில் தடம் பதிக்க விரும்புகிற இளைஞர்களின் குறி இதுதான். தமிழ்  ரசிகர்கள் மெதுவாக வெப் சீரிஸுக்கு தாவிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் மூன்றாவது இடத்தில் இருக்கிற கதாநாயகர்கள் இதில் புகுந்துவிட, இதன் செல்வாக்கையும், வளர்ச்சியையும் முக்கிய நடிகர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் தமிழ் சினிமாவிற்கு பாதிப்பு உண்டா, தியேட்டர்களில் ஏற்கனவே குறைந்திருக்கும் ரசிகர்கள் கூட்டம், மேலும் குறையுமா என்ற கேள்வி எழ, சினிமா உலகத்தில் சலசலப்பு கூடியிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் இதன் மெய்நிலை, பிரச்னைகள், ரசிகர்களின் மாறுபட்ட ரசனை குறித்தெல்லாம் தமிழ் சினிமாவை உற்று கவனித்துக் கொண்டிருக்கும், பங்கு பெற்றிருக்கும் சிலரிடம் பேசினோம்.

பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் சொல்வது புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது: ‘‘நாம் நினைத்தாலும் இதை நிறுத்த முடியாது. யாரும் போய் கோர்ட் ஆர்டர் வாங்கிக்கொண்டு தடை போடவும் முடியாது. வெப் சீரிஸ் வேண்டாம்னு சொல்லக்கூடிய நிலைமையிலும் நாம் இல்லை.

இதனால் தமிழ் சினிமாவுக்கு பாதிப்பு ஒன்றுமே கிடையாது. டிவி வந்தபோது சினிமா தியேட்டரை எல்லாம் இழுத்து மூடிவிட வேண்டியதுதான் என்று பேசிக்கொண்டார்கள். நாமும் அதை கிட்டத்தட்ட நம்பினோம். அதுமாதிரி நடக்கலை. பிறகு திடீரென்று டிவியில் 24 மணி நேரமும் சினிமாப்படம் போட்டார்கள். அப்பொழுதும் சினிமா அவ்வளவுதான் என்றார்கள்.

ஆக, சினிமா தியேட்டருக்கு மக்கள் செல்வது குறையாது. ஆனால், இப்போது தியேட்டரில் ரசிகர்கள் அதிக வசதியை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மை. இரண்டு கோடி வாங்கிய நடிகன் 20 கோடி வாங்குகிற நல்ல நிலைமையில்தான் சினிமா இருக்கு. சினிமா எந்த அளவுக்கு டெவலப் ஆகியிருக்குன்னு இதை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

எல்லாவற்றையும் தாண்டி சினிமா வரும். இஷ்டப்பட்டால், செய்தி பரவினால் வெப் சீரிஸ் பார்ப்பார்கள். பார்த்தாலும் சினிமாவுக்குத் திரும்பி வந்துவிடுவார்கள். இப்பவும் படம் ஓடிப்பார்த்த பிறகு சேட்டிலைட் ரைட்ஸ் வாங்கிக் கொள்கிற நிலைமை வந்தாச்சு. சேர்ந்து பார்த்து படத்தை கொண்டாட்டமாகப் பார்க்கிற மனோநிலைதான் இங்கே முக்கியம். காலம் அதை இன்னும் மாற்ற வில்லை...’’ அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் திருப்பூர் சுப்பிரமணியன்.

முக்கியமான தமிழ் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான செழியன் கூறுவது இதுதான்: ‘‘டெக்னாலஜியின் வசமாகி சினிமாவின் வடிவம் மாறிக்கிட்டே இருக்கு. கதை சொல்வதும், கதை கேட்பதும் மரபுப்படி எப்போதும் மாறாது.

இப்போது வெப்சீரிஸ் வரை டெக்னாலஜி வந்துவிட்டது. இனி கேம்ஸ்தான் பொழுது போக்கில் முன்னிலை வகிக்கப்போகிறது என்கிறார்கள்.
ஒரு கதையில் கதாநாயகனிடம் வில்லன் தோற்றுப்போய் விடுகிறான் என்றுதான் வரும். ஆனால், ‘வீடியோ கேமில்’ அப்படி இல்லையென்றால் என்ன ஆகும் என்ற வெர்ஷன் ஒன்று வரும். அது இப்போது மக்களுக்குப் பிடித்திருக்கிறது.

நீங்கள் போகும் வழியில் டைனோசர் ஒன்று வரும். இன்னொரு வழியில் வேறு மாதிரி முயற்சித்துப் பார்க்கலாம் என கேம் வருகிறது. அதை இளைஞர்கள் சிரமேற்கொண்டு விழுந்து விழுந்து பயணிக்கிறார்கள்.  

மன நிலை மாறிக்கொண்டே  இருக்கிறது. நாம்தான் அப்டேட் செய்து கொள்ளவேண்டும். கதை சொல்லிகளுக்கு எப்பவும் தேவை இருக்கும். சினிமா இப்படித்தான் இருக்கும் என்று ஒரே மாதிரி நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பாதிப்படைவார்கள்.

முன்பு ஒன்றரை மணிநேரத்தில் இடைவேளை வரும். வெப் சீரிஸை 45 நிமிடங்களில் முடித்துவிடுகிறார்கள். 5 நாள் கிரிக்கெட் ஆடியவர்கள் 20 - 20 மேட்ச்சுக்குப் போன மாதிரிதான். இதற்குத் தகுந்தபடி விளையாடத் தெரிந்தவர்கள் விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.

வெப் சீரிஸ் சினிமாவை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒவ்வொரு படமுமே இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் இனி சவால்தான். இனிமேல் மெதுவாகப் போகலாம் என சினிமாவில் கதை சொல்ல முடியாது. Most turn and twists தேவைப்படுகிறது. இன்று வாழ்க்கை ரொம்பவும் வேகமாக மாறிவிட்டது.  விடிய விடிய நாடகம் பார்த்தோம். அப்புறம் 3 மணி நேரம் சினிமா பார்த்தோம். இப்போது இரண்டு மணி நேரமாக சுருங்கப் பார்க்கிறது.

இனி சினிமாவில் எதையும் சுலபம் என்று சொல்ல முடியாது. முன்பு சினிமா மட்டும்தான் பொழுதுபோக்கு. இப்போது டிவி தொடர், டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ... என மாற்றுகள் வந்துவிட்டன. சில வெப் சீரிஸ் மக்களை வேறு எங்கும் செல்லாதபடி கட்டிப் போடுகின்றன.
இப்போதைக்கு வெப் சீரிஸுக்கு பெரிய நடிகர்கள் வரமாட்டார்கள். ஆனால், அதை கவனிக்கிறார்கள். கூட்டம் கூடினால், வால்யூம் அதிகம் என்று தெரிந்தால், நல்ல சம்பளம் கிடைக்கும் என்றால் கண்டிப்பாக அதற்குச் செல்வார்கள். அதாவது எதற்கு மவுஸ் அதிகமாகுமோ, அங்கு நடிகர்கள் வந்து விடுவார்கள்.

லேப்டாப், செல்போன், ஸ்மார்ட் டிவி... என வந்திருப்பதால் தேவைகள் அதிகரித்திருக்கின்றன. பார்க்கும் பழக்கம் கூடியிருக்கிறது...’’ என்கிறார் செழியன்.வேறு வகை சினிமாவுக்கு அடித்தளமிட்ட இயக்குநர் நலன் குமாரசாமி இவ்விதம் கூறுகிறார்: ‘‘வெப் சீரிஸ் எல்லாம் மிகப் பெரிய மாற்றத்திற்கு அடையாளம் . எதையும் நாம் செலக்ட் பண்ணும் இடத்தில் இல்லை. ஆமோதிக்க வேண்டிய இடத்தில்தான் இருக்கிறோம்.

நாவல் மாதிரியான இலக்கியத்தை கொண்டு வர வெப் சீரிஸ் அருமையாக இருக்கும். ‘பாகுபலி’ மாதிரி கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய சினிமாக்களை மக்கள் தியேட்டரில் பார்த்துக் கொள்ளவும், மீதியை வெப் சீரிஸில் பார்த்துக் கொள்ளவும் தயாராகி விட்டார்களோ எனப் படுகிறது.
மாற்றம் இன்னும் நடந்து முடியவில்லை. தொடங்கியிருக்கு.

என்ன ஆகும் என்று போகப் போகத்தான் தெரியும். எல்லோரும் வெப் சீரிஸை அரவணைத்துத்தான் போகணும். ஆனால், வெப் சீரிஸிலும் மொக்கைகள் வரத்தொடங்கி விட்டன. எல்லாமும் இதில் சிறப்பாக இல்லை என்பதே உண்மை.

ஆனாலும் வெப் சீரிஸ் புது ஃபார்ம். வெப் சீரிஸ் சிறிது நாட்களில் சினிமாக்காரன் கையில் வந்துவிடும். அது நடக்கும். சில கதைகளை குறும்படமாக எடுத்தால்தான் நன்றாக இருக்கும். அதேபோல்தான் வெப் சீரிஸுக்கு என ஒரு ஃபார்ம் இருக்கிறது. அது நாவல்...’’ என்கிறார் நலன் குமாரசாமி.

எப்படியிருந்தாலும், நல்ல சிந்தனையும் புதுப் பாணியும் எங்கே இருந்தாலும், அதை முன்னெடுக்க தமிழ் ரசிகர்கள் தயாராகவே இருப்பார்கள் என
நம்புவோம். எத்திசையில் இருந்து நல்ல காற்று வீசினாலும் மகிழ்ச்சிதான்!           

நா.கதிர்வேலன்