முதலீடு ரூ.2.5 கோடி...லாபம் ரூ.6.2 கோடி! விவசாயத்தில் சாதிக்கும் சென்னை சகோதரர்கள்விவசாயத்தில் லாபமா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால், சென்னையைச் சேர்ந்த சகோதரர்கள் விஜய்குமார் மணியும், வசந்தகுமார் மணியும் இதை சாதித்துக் காண்பித்துள்ளனர்! நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளனர்!வசந்தகுமார் வேளாண்மையில் பட்டம் பெற்றவர். அதனால் விவசாயம் பற்றிய புரிதலும் ஈடுபாடும் உண்டு. ஆனால், அவருக்கு வேலையோ மார்க்கெட்டிங் துறையில்.

இவரது தம்பி விஜய்குமாருக்கு எச்.ஆர்.துறையில் பணி. மொத்தத்தில் இருவருமே நல்ல வேலையில் கை நிறைய சம்பளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
என்றாலும் இருவருக்குமே விவசாயத்தில் ஈடுபாடு என்பதால் வார இறுதியில் சகோதரர்கள் இருவரும் கடலூருக்கு அருகில் இருக்கும் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்கின்றனர். நிலத்தில் இறங்கி வேலை பார்க்கின்றனர்.

‘‘15 வருடங்களாக தொடர்ந்து இப்படி வார இறுதியில் விவசாயம் செய்து வருகிறோம். எங்களைப் பார்த்து இப்போது எங்கள் நண்பர்களும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்...’’ என்று உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் விஜய்குமார்.‘‘நாங்களோ வார இறுதி விவசாயிகள். ஆனால், விவசாயத்தையே முழுநேரப் பணியாகக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவவேண்டும் என்று நினைத்தோம். ஆனால், எப்படி என்று புரியாமல் தவித்தோம்.

நகரத்தில் வாழ்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் என்பது ஒருநாள் டீம் லன்ச்சுக்கு செலவழிக்கும் தொகை. ஆனால், இது விவசாயிகளுக்கு பெரும் தொகை! ஒன்று தெரியுமா..? தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு எவ்வளவு கடன் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்..? லட்சங்கள்..? கோடி...? இல்லை. வெறும் பத்தாயிரம், இருபதாயிரம் வாங்கிவிட்டு அதைக் கட்ட முடியாமல்தான் கூனிக்குறுகி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்தத் தொகை நகரத்தில் வாழ்பவர்கள் தங்கள் மொபைலுக்கு செலவழிக்கும் தொகை என்பது முகத்தில் அறையும் நிஜம்!
இதையெல்லாம் நாங்கள் புரிந்துகொண்டபோதுதான் 2016ம் ஆண்டு வந்தது. அந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் கடலூர் பகுதி பெரு
மளவு பாதிக்கப்பட்டது. எங்கிருந்தெல்லாமோ அம்மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்தன. ரேடியோ, டுவிட்டர், முகநூல்... எல்லாம் அம்மக்களை இணைத்தன. தேவையான இடங்களுக்கு உதவிகள் போய்ச் சேர இவை எல்லாம் பாலமாக அமைந்தன.

என்றாலும் சில இடங்களுக்கு உரிய உதவிகள் போய்ச் சேரவில்லை. அந்த இடங்களுக்கு நாங்களே நிவாரணப் பொருட்களை எடுத்துச் சென்று வழங்கினோம். இந்தச் சம்பவம் எங்களுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. உதவி செய்யும் எண்ணம் இயல்பாகவே மனிதர்களிடம் இருக்கிறது. என்ன... யாருக்கு ...

எப்படி உதவ வேண்டும் என்பதில்தான் மக்களுக்கு குழப்பம்...’’ மூச்சு விடாமல் பேசிவிட்டு விஜய்குமார் நிறுத்த, தொடர்ந்தார் வசந்தகுமார்.
‘‘2016ம் ஆண்டு கற்றுத் தந்த பாடம் ‘I Support Farming’ அமைப்பு உருவாகக் காரணமாக அமைந்தது. நகர மக்களையும் கிராம மக்களையும் இணைக்கும் பாலமே இந்த அமைப்பு. இதன் அடிப்படை நோக்கம், விவசாயிகளுக்கு உதவுவதும் நகரவாசிகளை விவசாயிகளாக்குவதும்தான்.

விவசாயத்தைப் பொறுத்தவரை பெரிய விவசாயிகள், நடுத்தர விவசாயிகள், குறு விவசாயிகள் எனப் பலவகைகள் உண்டு. பெரிய விவசாயிகளுக்கு பல ஏக்கர் நிலம் இருக்கும். அதில் பலவிதமான பயிர்களை விவசாயம் செய்வார்கள். அதில் ஒன்று பருவ நிலை காரணமாக சேதமானாலும், மற்ற பயிர்களில் லாபம் கிடைத்துவிடும். அதனால் அவர்களுக்கு பெரும்பாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.

நடுத்தர விவசாயிகளும் ஓரளவு இப்படித்தான். இவர்களுக்கும் பயிர்களில் நஷ்டம் ஏற்பட்டாலும், அதை தாங்கக்கூடிய சக்தி இருக்கும். மாடுகள், கோழிகள் என விவசாயம் தாண்டி வியாபாரம் இருக்கும். அதனால் அவர்களும் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் குறு விவசாயிகள்? இவர்கள் பாடுதான் திண்டாட்டம். குறைந்த நிலம் அல்லது நிலமே இல்லாமல் இருக்கும் இவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால், அடுத்து பயிர் செய்ய பணம் இல்லாமல், கடன் வாங்கி அதில் மாட்டிக் கொள்கின்றனர்.

சொந்த நிலம் இருந்தும், விவசாயம் செய்ய முடியாமல், கூலி வேலைக்குச் செல்லும் விவசாயிகள் ஏராளம். எனவே நாங்கள் குறு விவசாயிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு பயன்படும் விதத்தில் திட்டங்களை உருவாக்கியுள்ளோம். இந்தத் திட்டம் மூலம் எங்களுடன் 150 விவசாயிகள் இணைந்து வேலை செய்கிறார்கள்.

இதன்படி, விவசாயிகளுக்குத்தேவையான விதைகள், உரங்கள் என அனைத்தையும் நாங்களே வாங்கி அவர்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்தால் போதும். அப்படி விவசாயம் செய்து கிடைக்கும் லாபத்தில், 70 சதவீதம் அவர்களுக்குத்தான் கொடுக்கப்படும். மீதியை மட்டுமே முதலீட்டாளர்களுக்குப்பகிர்ந்து அளிக்கிறோம்.

ஒருவேளை நஷ்டம் ஏற்பட்டாலும் அதை முழுமையாக முதலீட்டாளர்களே ஏற்றுக் கொள்வார்கள். ஒருபோதும் நஷ்டத்தை விவசாயிகள் தலையில் நாங்கள் கட்டுவதில்லை...’’ அழுத்தம்திருத்தமாக வசந்தகுமார் சொல்ல, சகோதரனைப் பார்த்துப் புன்னகைத்தபடியே தொடர்ந்தார் விஜய்குமார்.
‘‘இதில் முதலீடு செய்பவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்காது. விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இதில் இணையலாம். ஆனால், ஒன்று. வங்கியில் ஃபிக்சட் டெபாசிட்டில் கிடைக்கும் வட்டித் தொகையை விட இதில் அதிகம் கிடைக்கும். அதாவது வங்கியில் 6 - 7 சதவிகிதம் வட்டி என்றால் இதில் 10 சதவிகிதம் வட்டி.

அதேபோல் பங்குச் சந்தையில் இருக்கும் ரிஸ்க் இதில் இல்லை. இப்படி நாங்கள் செய்வதன் வழியாக சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம் என்றெல்லாம் சொல்லி எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்ள விரும்பவில்லை. கடுகளவு செய்கிறோம். அவ்வளவே.இதுவரை எங்கள் அமைப்பில் முதலீடு செய்த யாருமே நஷ்டப்படவில்லை. போதுமான லாபத்துடன் மகிழ்ச்சியாகவே இருக்கின்றனர்.

இப்போதைக்கு எங்கள் அமைப்பு தமிழகத்தில் மட்டுமே இயங்குகிறது. விரைவில் நாடு முழுக்க இதைச் செயல்படுத்தப் போகிறோம். அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறோம். பிரத்தியேகமான சாஃப்ட்வேர் இதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக முதலீட்டாளர்களையும் விவசாயிகளையும் இணைத்து, எந்த ஒளிவு மறைவும் இல்லாத வணிகமாக மாற்றவுள்ளோம்...” என்கிறார் விஜய்குமார்.

எல்லாம் சரி... இதில் இணைவது எப்படி?
‘‘ஒரு நிலத்தில் விவசாயம் செய்ய ரூ.25 ஆயிரம் தேவை. இதை தனி நபரும் ஏற்கலாம் அல்லது ஐந்து பேராக ஆளுக்கு ஐயாயிரம் கொடுத்தும் இணையலாம். பயிர்கள் தாண்டி காய்கள், கோழி, மாடு, பால் பண்ணை என்றும் முதலீடு செய்யலாம். உடனடி லாபம் வராவிட்டாலும், பெரிய ரிஸ்க் இதில் இல்லை. அதேபோல, எங்களுடன் இணைய விரும்பும் விவசாயிகளுக்கும் எங்களுடைய விதிகளுக்கு உட்பட்டிருக்கும் பட்சத்தில், உடனே அவர்களுக்கு விவசாயம் செய்ய பொருட்களை வழங்கிவிடுவோம்.

எங்களுடன் வேளாண்மையில் பட்டம் பெற்ற அதிகாரிகளும் உடன் இணைந்திருக்கின்றனர். அவர்கள் தினம் நிலத்திற்குச் சென்று மேற்பார்வை செய்து உடனுக்குடன் நிலவரத்தைத் தெரிவிப்பார்கள்...’’ என விளக்கம் அளிக்கிறார் வசந்த்குமார்.

‘‘தமிழக அரசின் திட்டத்தின் கீழ் மீன் வளர்ச்சித் துறையிலும் ஈடுபட்டு வருகிறோம். இந்தியாவிலேயே இந்த புது முயற்சியில் ஈடுபட்டிருப்பது ‘I support Farming’ குழு மட்டும்தான். இதற்கு கிடைத்த அங்கீகாரமும் விருதுகளும் எங்களை மேலும் ஊக்குவித்திருக்கின்றன.  

காக்னிசன்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மி நாராயணனும், முன்னாள் துணைத் தலைவர் சந்திரசேகரும் எங்கள் அமைப்பின் முக்கிய முதலீட்டாளர்கள்...” என்கிறார் விஜய்குமார்.2016ல் ரூ.12 லட்சம் வருமானம் கண்ட இந்த நிறுவனம், இப்போது இரண்டே ஆண்டு
களில் 6.2 கோடி வருமானம் வரை ஈட்டியுள்ளது. இந்த அமைப்பைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள http://isupportfarming.com என்ற இணையதளத்தைப்
பார்க்கலாம்.

ஸ்வேதா கண்ணன்

ஆ.வின்சென்ட் பால்