தலபுராணம்-மெட்ராஸில் இருந்த பிற ஸ்டூடியோகள்…



அன்றைய மெட்ராஸில் ஜெமினி, ஏவிஎம், வாகினி, ராயல், விக்ரம், பரணி, பாரமவுண்ட், கோல்டன், சியாமளா, பிரகாஷ், பிலிம் சென்டர், வீனஸ், நெப்டியூன், நியூடோன், நரசு, சிட்டாடல், அருணாச்சலம் என 17 ஸ்டூடியோக்கள் இருந்ததாக 1961ம் வருடத்திய, ‘சென்னை மாநில தமிழ் டைரக்டரி’ நூல் குறிப்பிடுகிறது. இதில், 1938லேயே உருவான ஸ்டூடியோ நியூடோன்.

கீழ்ப்பாக்கத்தில் இருந்த இந்த ஸ்டூடியோவின் பங்குதாரர்களாக ஆர்.எம்.ராமநாதன் செட்டியார், கலை இயக்குநரான எஃப்.நாகூர், ஒளிப்பதிவாளரான ஜித்தன் பானர்ஜி, ஒலிப்பதிவாளரான தின்ஷா தெஹ்ரானி, அன்றைய சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோர் இருந்தனர்.
நியூடோன் ஸ்டூடியோ முதலில் ஒரு லெபாரட்டரியாக ஆரம்பமானது. பிறகே, ஒரு ஸ்டூடியோவாக பரிணமித்தது.

‘‘இது அந்நாட்களில் திரைப்படத் துறையின் கேந்திரஸ்தானமாகத் திகழ்ந்தது எனலாம். இங்கிருந்து பல புகழ்பெற்ற இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், கலை இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள் மற்றும் ஒப்பனைக் கலைஞர்கள் போன்றோர் உருவாகி வெளிவந்ததன் மூலம் இதை ‘படத்தொழிலின் பல்கலைக்கழகம்’ எனப் பெருமையுடன் அழைக்கலாம்...’’ என ‘சினிமாவின் மறுபக்கம்’ தொடரில் குறிப்பிடுகிறார் பழம்பெரும் கதை வசனகர்த்தாவான ஆரூர்தாஸ்.

ஆனால், 1961ல் ‘சென்னை மாநில தமிழ் டைரக்டரி’ நூலின்படி அன்றைய நிர்வாகியென தின்ஷா தெஹ்ரானி பெயரே உள்ளது. இதில், அப்போது ஏ.பீம்சிங்கின் பல்வேறு படங்கள் படமாக்கப்பட்டன.இந்நிலையில், கோடம்பாக்கத்தில் பல்வேறு ஸ்டூடியோக்கள் உருவாக ‘நியூடோன்’ பொலிவிழந்தது. இன்று இந்த இடத்தில் பாரதிய வித்யாபவனின் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி இயங்கி வருகிறது.

இதேபோல் கீழ்ப்பாக்கம் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த இன்னொரு ஸ்டூடியோ ‘சிட்டாடல்’. கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து சினிமா கனவுடன்மெட்ராஸ் வந்தவர் ஜூனியர் ஜோசப் தளியத். இவர் ‘நியூடோன் ஸ்டூடியோ’வின் கலை இயக்குநர் எஃப்.நாகூரின் உதவியுடன் ‘சிட்டாடல் பிலிம் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி படம் தயாரித்தார்.

இந்த பேனரில் வந்த முதல் படம் ‘ஞானசௌந்தரி’. 1948ல் டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா நடிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.இதன்பிறகு, ‘சிட்டாடல்’ என்ற பெயரில் சொந்த ஸ்டூடியோவை உருவாக்கினார் ஜோசப் தளியத். இதன்வழியே ‘இதய கீதம்’, ‘விஜயபுரி வீரன்’, ‘இரவும் பகலும்’, ‘காதல் படுத்தும் பாடு’ போன்ற படங்களைத் தயாரித்து இயக்கினார்.

இதில், ‘இரவும் பகலும்’ படத்தில் நடிகர் ஜெய்சங்கரை அறிமுகப்படுத்தினார். ‘காதல் படுத்தும் பாடு’ படத்திற்குப் பிறகு அவர் படங்கள் தயாரிப்பதையும் இயக்குவதையும் நிறுத்திக் கொண்டார். இந்த ‘சிட்டாடல் ஸ்டூடியோ’ இருந்த இடம் கல்லூரியாகவும், சிறுவர் இல்லமாகவும் மாறிவிட்டது. தேனாம்பேட்டை ஏரியாவில் 1930களின் தொடக்கத்தில் மிர்ஜாபுரம் மகாராஜாவால் ஒரு ஸ்டூடியோ ஆரம்பிக்கப்பட்டது. இதன்பெயர் ‘சோபனசாலா’.

இதில் பல்வேறு தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள் நடந்தன. பிறகு, மிர்ஜாபுரம் ராஜாவை மணந்த நடிகை சி.கிருஷ்ணவேணி,
ஸ்டூடியோவை நிர்வகித்து வந்தார். தொடர்ந்து ஸ்டூடிேயாவின் பெயர் ‘வீனஸ்’ என மாற்றப்பட்டது. தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் சென்றதும் இந்த ஸ்டூடியோ பொலிவிழந்து டப்பிங் தியேட்டராக மாறியது.

‘ஏவிஎம் ஸ்டூடியோ’விற்கு நேர் எதிரே அருணாச்சலம் சாலையில் இருந்தது ‘பிரகாஷ் ஸ்டூடியோ’. தெலுங்குப் படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான கே.எஸ்.பிரகாஷ்ராவ் 1951ல் இதனை நிறுவினார்.தெலுங்கில் பல்வேறு படங்களைத் தயாரித்து இயக்கினார். 1972ல் தமிழில் இவர் இயக்கிய ‘வசந்த மாளிகை’ மாபெரும் வெற்றியைப் பெற்ற ஒன்று. பின்னர், இந்த ஸ்டூடியோவும் பொலிவிழந்து டப்பிங் தியேட்டராக மாறியது.

இதற்கடுத்து கொஞ்ச தூரத்தில் இருந்த ஸ்டூடியோவின் பெயர் ‘அருணாச்சலம்’. தஞ்சாவூரிலுள்ள ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஏ.கே.வேலன் இதை உருவாக்கினார். 1958ம் வருடம் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தைத் தயாரித்து இயக்கினார் ஏ.கே.வேலன்.

இது வணிக ரீதியாக பெரிய வெற்றியை ஈட்ட, தன் தந்தையின் பெயரில் இந்த ‘அருணாச்சலம் ஸ்டூடியோ’வைக் கட்டினார். ‘‘இதை அந்
நாளைய காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலத்தின் கரங்களால் திறப்பு விழா நடத்தினார். அத்துடன் அரசு அனுமதி பெற்று பிரதான ஆற்காடு சாலையிலிருந்து வடதிசை நோக்கி பிரிந்து செல்லும் அந்தப் பாதைக்கு ‘அருணாச்சலம் சாலை’ எனப் பெயரிடச் செய்தார்...’’ என, ‘சினிமாவின் மறுபக்கம்’ தொடரில் குறிப்பிடுகிறார் ஆரூர்தாஸ்.

இன்று இந்த ஸ்டூடியோ குடியிருப்பாக மாறிவிட்டது. இதேபோல் ஆற்காடு சாலையில் ‘வாகினி’ அருகே இருந்த ஸ்டூடியோ ‘ஸ்டார் கம்பைன்ஸ்’. இதை 1944ல் கட்டியவர் ஏ.ராமையா. இப்போது இதுவும் அடுக்கு மாடிக் குடியிருப்பாக நிற்கிறது. இதையடுத்து போரூர் செல்லும் வழியில் இருக்கிறது ‘பரணி ஸ்டூடியோ’. இந்த ஸ்டூடியோவை நடிகை பானுமதியும் அவரின் காதல் கணவரும் இயக்குநருமான ராமகிருஷ்ணாவும் இணைந்து உருவாக்கினர்.

‘கிருஷ்ண பிரேமா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது அதில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்த ராமகிருஷ்ணாவைக் காதலித்தார் பானுமதி. பெற்றோர் எதிர்ப்பை மீறி 1943ம் வருடம் திருமணம் செய்தார்.‘‘இவர்களுக்கு 1945ம் வருடம் ஆண் குழந்தை பிறந்தது. பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால் பையனுக்கு பரணி என்றே பெயர் வைத்தார் பானுமதி. தற்போது பானுமதியும் ராமகிருஷ்ணாவும் சொந்தத்தில் நடத்திவரும் படக் கம்பெனிக்கு ‘பரணி பிக்சர்ஸ்’ எனப் பெயர் வைத்திருப்பதில் இருந்து புதல்வன் பரணி மீது அவர்களுக்கு எவ்வளவு அபிமானம் என்பதை ஊகிக்கலாம்...’’ என 1948ல் வெளிவந்த ‘வானவீதி’ என்ற நூல் பானுமதியின் வரலாற்றில் இந்தச் செய்தியைக் குறிப்பிட்டுள்ளது.

பிறகு, ‘பரணி ஸ்டூடியோ’வை உருவாக்கி இருவரும் அதன்வழியே பல்வேறு படங்களை எடுத்தனர். இப்போது அவர்களின் மகன் டாக்டர் பரணி அங்கே பரணி மருத்துவமனையும், ஃபங்ஷன் ஹாலும் நடத்தி வருகிறார். இதனைக் கடந்ததும் எதிர்ப்புறத்தில் இருந்தது ‘கற்பகம் ஸ்டூடியோ’. பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ‘கற்பகம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த ஸ்டூடியோவை உருவாக்கினார். இன்று அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறி நிற்கிறது.

பரணி மற்றும் கற்பகம் ஸ்டூடியோக்களை அடுத்து ‘பிலிம் சென்டர் ஸ்டூடியோ’ இருந்தது. இதை அப்துல் மஜீத், ஏ.கே.காஜி என்பவர்கள் நிர்வகித்தனர். இதில், இரண்டு தளங்களும், ஒரு ஒலிப்பதிவுக் கூடமும் அதனுடன் லெபாரட்டரியும் இருந்தன.

‘‘அன்றைய நாட்களில் 16 எம்.எம்.பிலிமை புரோஸஸிங் செய்த ஒரே லேப் இதுதான். 1956ல் நான் முதல் முதலாக இந்தியிலிருந்து தமிழில் டப்பிங் செய்த ‘மகுடம் காத்த மங்கை’ இந்த ஸ்டூடியோவில்தான் உருவாகியது. 1967ல் வாசு பிலிம்ஸ் தயாரிப்பாளர் வாசுமேனன் இந்த ஸ்டூடியோவை விலைக்கு வாங்கி ‘வாசு ஸ்டூடியோ’ என்று பெயரிட்டு முதன் முதலாக பி.பானுமதி, எஸ்.வி.ரங்காராவ் நடித்து நான் எழுதிய ‘பூவும் பொட்டும்’ படத்தைத் தயாரித்தார்...’’ என ‘சினிமாவின் மறுபக்கம்’ தொடரில் குறிப்பிடுகிறார் ஆரூர்தாஸ்.

இதற்கு எதிரில் ‘பாரமவுண்ட்’ என்ற ஸ்டூடியோ இருந்தது. இதை 1956ல் முத்துகுமரப்ப ரெட்டியார் நிறுவியதாக ‘சென்னை மாநில தமிழ் டைரக்டரி’ நூல் குறிப்பிடுகிறது. ஆனால், சில விவகாரங்களால் இந்த ஸ்டூடியோ ‘மெஜஸ்டிக் ஸ்டூடியோ’ எனப் பெயர் மாற்றமானது.பின்னர், கவியரசு கண்ணதாசனின் அண்ணன் ஏ.எல்.சீனிவாசன் இதைக் குத்தகைக்கு எடுத்து ‘சாரதா ஸ்டூடியோ’ எனப் பெயரிட்டு நடத்தினார். இப்போது அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்கிறது.

இதே வரிசையில் இருந்த இன்னொரு ஸ்டூடியோ ‘கோல்டன்’. ஆரம்பத்தில் இங்கே ‘ரோகிணி’ என்றொரு ஸ்டூடியோ இருந்தது. முதல் பேசும் படத்தை இயக்கிய எச்.எம்.ரெட்டி ‘ரோகிணி பிக்சர்ஸ்’ சார்பாக இதைக் கட்டினார். பின்னர், இதை கனிசாகிப் என்பவர் வாங்கி ‘கோல்டன் ஸ்டூடியோ’வாக மாற்றினார். இப்போது அரசின் உணவுப் பாதுகாப்புக் கிடங்காக இருக்கிறது.

இந்த கோல்டன் அருகே இருந்த இன்னொரு ஸ்டூடியோ ‘சியாமளா’! தற்போது இதுவும் அடுக்குமாடிக் குடியிருப்பாக உள்ளது.
இன்றைய வடபழனி ‘கமலா தியேட்டர்’ அருகே உள்ளது ‘விக்ரம் ஸ்டூடியோ’. பிரபல ஒளிப்பதிவாளரான பி.எஸ்.ரங்காவால் 1956ல் கட்டப்பட்டது. சிவாஜி கணேசன், பானுமதி நடித்த ‘தெனாலிராமன்’ விக்ரம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இங்கே படமாக்கப்பட்டது.

இதைத் தயாரித்து இயக்கியவர் பி.எஸ்.ரங்கா. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களைத் தயாரித்து இயக்கினார் அவர்.
‘விக்ரம் ஸ்டூடியோ’ எதிரே இருந்தது ‘ரேவதி ஸ்டூடியோ’. இதை ஒலிப்பதிவாளர் வி.எஸ்.ராகவன் உருவாக்கினார். பிறகு, இதை ‘வாகினி ஸ்டூடியோ’ அதிபரான பி.நாகிரெட்டிக்கு விற்றுவிட்டார். இதனால், ‘வாகினி ஸ்டூடியோ’ விரிவானது.

கிண்டியில் நரசு நகரில் இருந்தது ‘நரசு ஸ்டூடியோ’. நரசுஸ் காபி நிறுவனத்தினர் இதனை நிர்வகித்து வந்தனர். அதற்குமுன் ‘வேல் பிக்சர்ஸ்’ நிறுவனத்தினர் இங்கே ‘வேல் ஸ்டூடியோ’வை நடத்தி வந்தனர். பின்னர், இந்த ஸ்டூடியோ கொக்ககோலா நிறுவனத்திடம் சென்றுவிட்டது. பிறகு கேம்பகோலா என மாறியது. அங்கே பல்வேறு படப்பிடிப்புகளும் நடந்தன. இப்போது, கட்டடங்களாக மாறிவிட்டன.

இவை மட்டுமல்ல. ராயல், டயமண்ட், பொன்னலூரி, கார்த்திகேயா, மோகன் - செந்தில் என நகரில் இருந்த பல்வேறு ஸ்டூடியோக்கள் இன்று வெவ்வேறு கட்டடங்களாக உருமாறி நிற்கின்றன. ராமாபுரத்தில் இருந்த சிவாஜி கார்டன் இன்று ஐடி பார்க்காக மாறிவிட்டது. நடிகை அம்பிகா -ராதாவிற்குச் சொந்தமான ஏ.ஆர்.எஸ்.கார்டனில் மட்டும் சில ஷூட்டிங்குகள் நடக்கின்றன.  

பேராச்சி கண்ணன்

ஆர்.சந்திரசேகர்

ராஜா