நியூஸ் சாண்ட்விச்



*சிக்கிய கொள்ளையர்கள்

இரண்டு மாதங்களுக்கு முன், திருநெல்வேலியில் சண்முகசுந்தரம் (70), சிவகாமி (65) தம்பதியினர் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து சண்முகத்தை தாக்கி திருட முயன்றனர். அப்போது அந்த வயதான தம்பதியினர் அதிரடியாக திருப்பித் தாக்கி கொள்ளையர்களை விரட்டினர்.  இந்த சம்பவத்தின் சிசிடிவி காணொளி டிவியிலும் சோஷியல் மீடியாவிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது அந்த திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை அவர்களுக்கு எதிராக 47 வழக்குகளும் இருக்கின்றன.

*பேனர் தேவையா?

சிறப்பு விருந்தினர்களையும், அரசியல் தலைவர்களையும் வரவேற்க உண்மையிலேயே பேனர்கள் தேவையா? அதிலிருக்கும் ஆபத்தை தெரிந்தே இதை ஊக்குவிப்பது ஏன்? பேனர் கலாசாரத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும்... என்று, பேனர் விழுந்ததால் நிலை தடுமாறி லாரி மோதி இறந்த சென்னை சுபயின் தாயார் கீதா தெரிவித்துள்ளார்.

சுப பேனரால் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சீனத் தலைவரின் வருகையையொட்டி ஏர்போர்ட் முதல் மாமல்லபுரம் வரை பேனர் வைத்து வரவேற்பதற்கு பதில், வேறு வழியில் வரவேற்கலாமே என்றும் கூறியிருக்கிறார்.

*Calling War!

ஒருவர் மொபைலில் இருந்து கால் செய்யும் போது, அது 45 நொடிகள் ரிங் ஆவது வழக்கம். ஆனால் இப்போது செல்போன் நிறுவனங்கள் தங்கள் அவுட்கோயிங் கால்களை அதிகரிக்க, ரிங் ஆகும் நேரத்தை 25 நொடிகளாக குறைத்துள்ளன!  
இதனால் என்ன நன்மை என்கிறீர்களா?

டப்பு!

அதாவது உங்கள் நம்பரில் இருந்து ஒருவரை அழைக்கிறீர்கள். சம்பந்தப்பட்டவர் 20 நொடிகளில் போன் எடுக்கவில்லை என்றால் அது மிஸ்டு காலாக மாறிவிடும். உடனே அவர் தனது போனில் மிஸ்டு காலை பார்த்து உங்களுக்கு போன் செய்வார். இதனால் ஒரு இன்கம்மிங் கால், இப்போது அவுட்கோயிங் காலாக மாறியிருக்கும்!இதன் வழியாக அவரவர் எண்ணுக்குரிய செல்போன் நிறுவனங்கள் பணம் அள்ளுகின்றன!

*நத்தையால் நிறுத்தப்பட்ட 25 புல்லட் ரயில்கள்!

ஜப்பானில் முக்கிய போக்குவரத்தாக புல்லட் ரயில்கள்தான் இருக்கின்றன. இதை தினமும் சுமார் 12,000 மக்கள் பயன்படுத்துகின்றனர்.
நேரம் தவறாமல் சரியான நேரத்தில் பாய்ந்து செல்லும் 25 புல்லட் ரயில்கள், சில மாதங்களுக்கு முன் மின் கோளாறு காரணமாக ஒரு நாள் முழுவதும் நிறுத்தப்பட்டன.

இதனால் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், ரயில்வே அதிகாரிகள் 25 புல்லட் ரயில்கள் ஒரு நாள் முழுக்க இயங்காமல் போனதற்கு ஒரு நத்தைதான் காரணம் என்று தெரிவித்துள்ளனர்!ஒரு நத்தை மின் கருவிகளுக்கு நடுவே சென்று கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததில், சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்!

lசி2600 மரங்களை வெட்ட ஒப்புதல்!

மும்பையில் மெட்ரோ வாகன நிறுத்தத்திற்காக ஆரே காலனி பகுதியிலுள்ள இரண்டாயிரத்து அறநூறு மரங்களை வெட்ட உயர்நீதி மன்றம் அனுமதியளித்துள்ளது. செப்டம்பர் மாதம், சமூக ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தையடுத்து, இந்த வழக்கை ஏற்று விசாரணை நடத்தி மும்பை உயர் நீதி மன்றம், ஆரே காலனி மரங்களை வன வரம்பிற்குள் அறிவிக்க முடியாது என்றும், திட்டமிட்டபடி வாகன நிறுத்தம் அமைக்கலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளனர். ஆரே காலனியும், சஞ்சய் காந்தி தேசிய பூங்காவும் மும்பை மாநகராட்சியின் Green Lungs என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்