இவங்கதான் அந்த புள்ளைங்கோ!இணையத்தைக் கலக்கும் சமீபத்திய டிரெண்டு, ‘புள்ளைங்கோ…’தான். வடிவேலு தொடங்கி வடக்கே மோடி, ராகுல் காந்தி வரை யாரையும் இந்தப் ‘புள்ளைங்கோ...’ டிரெண்ட் விட்டு வைக்கவில்லை. இதற்கிடையில் ‘பிகில்’ பட இசை வெளியீட்டில் ‘என் நெஞ்சில் குடியிருக்கும் என் புள்ளிங்கோ...’ என விஜய் பேச... பக்கென்று பற்றிக் கொண்டது ‘புள்ளைங்கோ..!’யார் இந்தப் ‘புள்ளிங்கோ...’?

சில மாதங்களுக்கு முன் ‘எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்...’ என கானா பாடல் பாடிய ‘செம்மஞ்சேரி ஸ்டீபன் கேங்’ கலரடித்த முடிகள் சகிதமாக கண் சிமிட்டுகிறார்கள்.  ‘‘வாங்கண்ணா... வாங்கக்கா…’’ என சூளைமேடு ஏரியாவுக்குள் நம்மை வரவேற்றார் ஸ்டீபன்.ஸ்டைலாக வெட்டிய முடி. அதில் கோல்டன் கலர் சகிதமாக நின்றார். ‘‘‘நான்தான் ஸ்டீபன். அப்பா பேரு மு.ராஜு, அம்மா ஜெயா. அப்பா மாநகர மீன் மார்க்கெட்ல மீன் கூடை தூக்கற கூலியா இருக்கார். நல்லா கானா பாடுவாரு. அம்மா வூட்டு வேலை பார்க்குறாங்க.

‘ஐ டோனோ, மை டோன்னா...’ பாட்டை கேட்டிருக்கீங்களா... அது எங்க அப்பா பாடினதுதான். செம்ம ஹிட். எனக்கு நேச்சுரலாவே கானா வரும். ‘ராயபுரம்’ வினோத் அண்ணாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். பாட்டு எழுதணும்னு தோணுச்சு. நான் பச்சையப்பா காலேஜ்ல பிகாம் முடிச்சுட்டேன். கொஞ்சம் அரியர்ஸ் இருக்கு. கிளியர் பண்ணணும்...’’ சிரிக்கும் ஸ்டீபனுக்கு வீடு இருப்பது செம்மஞ்சேரியில்.

‘‘ஆனா வேலை, காலேஜ் எல்லாம் இங்க இருக்கு. அப்படியிருக்க எப்படி அங்க இருக்க..? அதான் சூளைமேட்டுல வாடகைக்கு வீடு எடுத்து இருக்கோம்.
‘புள்ளிங்கோ...’ பாட்டு முழுக்க வர்ற அத்தனை பசங்களும் நம்ம ஏரியா புள்ளிங்கோதான்...’’ மகிழ்ச்சியாக ஸ்டீபன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நடையும், பைக்குமாக பலரும் வந்துவிட்டார்கள்.

ஒரு அம்மா கையில் குடத்தோடு ‘‘ஏம்பா! யாருப்பா நீங்க? படம் புடிச்சுட்டு இருக்கீங்க?’’ என்றார். விவரத்தைச் சொன்னதும் ‘‘ஓ! பத்திரிகைக்காரங்களா, நல்லா புடிங்க. நான் வேற யாரோன்னு நினைச்சிட்டேன். போன வாரம் இதே மாதிரி ஒரு குரூப்பு படம் புடிக்க வந்தாங்க. ரெண்டு நாள்ல வூடெல்லாம் இடிச்சுட்டு போயிட்டாங்க! அதான் பயந்துட்டேன்... அட நம்ம ஸ்டீபன் தம்பி இங்கதான் இருக்கா? அப்ப சரி...’’ சிரித்தபடியே கடந்தார்.

‘‘ஏரியாக்குள்ளே எந்த நிகழ்ச்சின்னாலும் நம்ம கானாதான். ஆனா, வூட்ல ‘படிக்கிற வயசுல இன்னாடா கானா’னு கேட்டு அடிப்பாங்கோ!
அப்பதான் இந்த டிக்டாக் டிரெண்ட் ஆச்சு. நாமளும் எதுனா வீடியோ வுடலாம்னுதான் மொபைல்ல ஆரம்பிச்சோம். அப்பறம் அப்படியே நம்ம அச்சு அண்ணா பாடினாரே ‘கும்பகோணம் வெத்தலை...’ அந்த டியூனை வெச்சிட்டு ‘கும்பலா சுத்துவோம், ஐயோ யம்மான்னு கத்துவோம்...’னு பாட்டு எழுதினேன். நினைச்சுக் கூட பார்க்கலை... செம ஹிட் ஆயிடுச்சு.

‘மியூசிக் பென்னெட்’ அண்ணன்தான் ‘மைமா...’ பாட்டு போட்டாரு. வீடியோ & எடிட்டிங் எல்லாம் கேமராமேன் வெற்றி அண்ணன். அரை நாள்தான். ரெண்டு மணிக்கு ஆரம்பிச்சோம். சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் முடிச்சுட்டோம்.

என் ஃப்ரெண்டு உதயா மூலமா பிரபா அண்ணன் சேனல்ல வாய்ப்பு கிடைச்சது. வீடியோ போட்டோம். எனக்கு பத்தாயிரம் ஆச்சு. காசு
குடுத்துதான் வீடியோ போட்டோம். பாட்டு ஹிட்டு. இதை வைச்சு கொஞ்சம் நல்லதெல்லாம் நடந்திருக்கு. பெரிய படங்கள் வந்திருக்கு. கானா பாடியிருக்கேன். இப்போவே சொன்னா நல்லா இருக்காது!

‘புள்ளைங்கோ...’ டிரெண்ட் ஆகி விஜய்ணாவே சொல்ற அளவுக்கு ஆகும்னு நெனச்சுக் கூட பார்க்கல. தோ! நாங்கதான் ‘புள்ளிங்கோ..!’ கும்பலா சுத்துவோம். அலப்பரை வுடுவோம். எதுன்னா பிரச்னைனா எறங்கி வந்து ஏன்னு கேட்போம்...’’ கெத்து காட்டும் ஸ்டீபனின் அடுத்த கானா என்ன?
கேட்டபோது பாட்டாகவே பாடினார்.

ஹைட்டா இருக்கும் தென்னமரம்,
தென்னமரத்துல தேங்கா வரும்!
தேங்கா ஒடிச்சா தண்ணி வரும் - அந்தத்
தண்ணி குடிச்சா தெம்பு வரும்.
நான் செத்துப்போனாலே எங்க
புள்ளைங்களோட அன்பு வரும்!

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்