திரவத் தங்கம்!



‘‘சிரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குக் குடிபெயர்கின்றனர். உலகில் 50 நாடுகளில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
அந்த அவலநிலை இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது. ஆட்சியாளர்கள் நதிகளை இணைப்பார்கள் என்று நம்பாமல் தண்ணீரை மக்களே சேமிக்கத் தொடங்க வேண்டும். அது ஒவ்வொருவரது கடமை. கிராமப்புற மக்களுக்கும் நீர்நிலைகளுக்குமான உறவு மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டும்...’’அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் இந்தியாவின்
‘தண்ணீர் மனிதரா’ன ராஜேந்திரசிங்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் தடுப்பணைகளையும் குளங்களையும் அமைத்து அங்கு தண்ணீர் பஞ்சத்தைப் போக்கியவர்தான் இந்த மனிதர். மரணித்த ‘ஆர்வாரி ஆற்று’க்கு உயிர் கொடுத்து அதன் மூலம் 6,500 சதுர கிமீ பரப்பளவு கொண்ட நிலத்தின் வளத்தை மீட்டிருக்கிறார். இதன்காரணமாகவே உலகளவில் நீர்மேலாண்மைக்காக சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்டாக்ஹோம் நீர் பரிசு’ சுவீடன் நாட்டு அரசால் 2015ல் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமீப நாட்களாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் தலைப்புச் செய்திகளாக வலம் வரும் இந்தியாவின் தண்ணீர் பிரச்னை, அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்..? நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது. மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட (2018) ஒரு புள்ளிவிவரத்தில், ‘இன்னும் இரண்டே ஆண்டுகளில், அதாவது வரும் 2020ம் ஆண்டுக்குள், இந்தியாவிலுள்ள 21 நகரங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும்...’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

தண்ணீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் குஜராத் முதலிடம் வகிக்கிறது. அதற்கடுத்தடுத்த இடங்களை மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகியன பிடித்துள்ளன. குஜராத்தைப் பொறுத்தவரை நாட்டிலேயே முதல்முறையாக விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் நீருக்கு பணம் செலுத்தும் முறையை உருவாக்கியுள்ளதன் மூலம் தண்ணீர் பயன்பாட்டை சிக்கனப்படுத்தும் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

‘ஒரு துளி நீரில் அதிகமான பயிர்’ என்ற பெயரில் சொட்டு நீர் பாசனத்தை ஊக்குவித்து நகர்ப்புறத்தில் வருவாய் அளிக்காத தண்ணீர் விநியோகத்தை நிறுத்தியதுடன், அனைத்து  நீர்க் கசிவுகளையும் சரிசெய்துள்ளதாகக் கூறுகிறதுநாட்டிலுள்ள தண்ணீர் பிரச்னை இதே வீதத்தில் தொடர்ந்தால் வரும் 2030ம் ஆண்டில் நாட்டில் 40% மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது.

இப்போது 600 மில்லியன் (ஒரு மில்லியன்- 10 லட்சம்) இந்தியர்கள் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக அதிகபட்ச அழுத்தத்தில் சிக்கியுள்ளனர். நாட்டிலுள்ள 70% தண்ணீர், கலப்படம் மற்றும் தூய்மையற்றுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் 2 லட்சம் மக்கள் சுகாதாரமற்ற நீரைக் குடித்து உயிரிழந்து வருகின்றனர்.உலகளவிலான 22 நாடுகளைக்கொண்ட தண்ணீரின் தரப் பட்டியலில் இந்தியா இன்று 120வது இடத்தில் உள்ளது.

சென்னை, தில்லி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் இன்னும் ஒருசில ஆண்டுகளில், நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றிவிடும்; இதனால், 100 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்...போன்ற அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

தேசிய அளவில் இந்த நிலை என்றால் உலகளவில் ஐநா வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மேலும் கவலையை ஏற்படுத்துகின்றன.
அதாவது, ஒவ்வொரு 15 வினாடிக்கும் ஒரு குழந்தை தண்ணீர் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு இறக்கிறது!

இரண்டில் ஒரு பகுதிமக்கள், வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கிறார்கள். அதில் பாதிப் பேர் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். 2030ம் ஆண்டுகளில் தொழிற்சாலைகள், மின்சாரம், மக்கள் பயன்பாடு ஆகியவற்றுக்கு இப்போதைய தண்ணீர்த் தேவையைவிட 50% அதிகம் தேவைப்படும்.

தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் இருந்து அதிகமான கழிவுநீர் வருவதால் ஏற்பட்ட நிலை இது. வளர்ந்த நாடுகளில் இருந்துதான் 70% கழிவுநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு எட்டு லட்சம் மக்கள் அசுத்தமான தண்ணீரைப் பயன்படுத்துவதால் இறக்கின்றனர்.
தண்ணீர் தொடர்பான பிரச்னைகளால் ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடத்துக்கு 35 லட்சம் மக்கள் இறக்கின்றனர். ஹெச்ஐவி மற்றும் விபத்துகளால் இறப்பவர்களைவிட இது அதிகம்.  

உலகளவில் ஆற்றின் சீர்கேட்டால் 25 மில்லியன் பேர் புகலிடம் தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்கின்றனர். மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை; ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடிதண்ணீர் கிடைப்பதில்லை.தண்ணீர் பற்றாக்குறையால் தானிய உற்பத்தி பாதிக்கிறது. அதனால் அவற்றின் விலையும் உயர்கிறது; அதன் தொடர்ச்சியாக பசிக்கொடுமையும் ஏற்படுகிறது.

இதற்கெல்லாம் ஒரே தீர்வாக ‘கழிவுநீரை மீள்சுழற்சி செய்வதுதான் தண்ணீர்ப் பிரச்னைக்கான தீர்வாக அமையும்’ என்று ஐநா தெரிவிக்கிறது.
உலகில் 45 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் (26%) உள்ளன. 2011ம் ஆண்டு புள்ளிவிவரப்படி சீனாவின் மக்கள் தொகை 130 கோடி. அமெரிக்காவின் மக்கள் தொகை 30 கோடி. இங்கு 6,675 அணைகள் (14%) உள்ளன.

இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடி. இங்கு 4,300 பெரிய அணைகள் உள்ளன. இது உலக அளவில் 9%. ‘திரவத் தங்கம்’ என்று அழைக்கப்படும் தண்ணீர் இல்லாமல் நம் வாழ்க்கையை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. உலகத்தில் உள்ள நீரில் 3 சதவிகிதத்தை மட்டுமே குடிக்கப் பயன்படுத்த முடியும். இதிலும் 2% தண்ணீர் பனிக்கட்டியாக உள்ளது. வெறும் 1 சதவீத தண்ணீர் மட்டுமே பூமி முழுவதும் நாம் வாழும் பகுதியில் கிடைக்கிறது.

மழை பெய்வதன் மூலம் மட்டுமே நாம் அதிகளவு நல்ல தண்ணீரைப் பெறுகிறோம். ஆனால், அதனை முறையாக சேமிக்கிறோமா என்றால் வெட்க
மின்றி ‘இல்லை’ என்றுதான் பதில் வரும்.உலகின் தானிய உற்பத்தியில் சரிபாதிக்கும் மேல் உற்பத்தி செய்துவரும் சீனா, இந்தியா, அமெரிக்க நாடுகள் தங்களின் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவை வெகுவாகக் குறைத்துக்கொண்டே வருகின்றன.

இந்நாடுகளில் ஆண்டுதோறும் சுமார் மூன்றடி அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே செல்கிறது. இந்தியாவில் பாசனத் திட்டங்கள் மூலமே பஞ்சாப், அரியானா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக அளவு தண்ணீரை உறிஞ்சுவதால், இங்கு நீலத்தடி நீர்மட்டம் ஆண்டுக்கு ஒரு மீட்டர் வீதம் குறைகிறது.

சீனாவில் ஆண்டுக்கு 3 மீட்டர்; பாகிஸ்தானிலுள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆண்டுக்கு 3.5 மீட்டர் வரை நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அடுத்து வரும் 50 ஆண்டுகளில் ‘தண்ணீரே எங்கள் நாட்டில் இல்லை...’ என்று சொல்லும் அளவுக்கு சவுதி அரேபியா இப்போது மிக அதிக அளவில் நீரைப் பயன்படுத்தி வருகிறது.

ஆப்பிரிக்காவும் அரேபியாவும் மறு நிரப்பீடு செய்ய இயலாத நூற்றுக்கணக்கான நீர் நிலைகளைக் கொண்டுள்ளன. இவை தீர்ந்து போகும் பட்சத்தில்
அந்நாடுகள் தீராத தண்ணீர் பஞ்சத்தில் மாட்டிக் கொள்ளும்.மனிதர்களுக்கு மட்டுமல்ல... விலங்குகள், தாவரங்கள் உயிர் வாழவும் தண்ணீர் தேவை. சொல்லப்போனால் உலகில் இருக்கும் அனைத்து வளங்களும் தண்ணீரால்தான் முடிவு செய்யப்படுகிறது. நீரின்றி எந்த உயிரினமும் இப்பூமியில் வாழ முடியாது.

அப்படியிருக்க தொழிற்சாலைக் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், நச்சுப்பொருள்கள்... ஆகியவற்றை ஆறு, கால்வாய்களில் கலக்குகிறோம். இதனால் நீர்மாசடைகின்றது. அந்நீரை நாம் குடிப்பதால் டைபாய்டு, அமீபியாசிஸ், ஜியார்டியாசிஸ், அஸ்காரியாசிஸ், கொக்கிப் புழுக்கள் நோய்... உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவையெல்லாம் எங்கு கொண்டுபோய் விடப்போகிறதோ...!                                

செ.அமிர்தலிங்கம்

தமிழக நீர்த்தேக்கம் 2025ல் வறண்டுவிடும்!

தமிழக நிலப்பரப்பில் 73 சதவிகிதத்தில் கடினப்பாறைகளும், 27 விழுக்காட்டில் வண்டல் மண்ணும் நிறைந்துள்ளன. நிலத்தடி நீரை மண்ணுக்குள் தேக்கி சேமித்து வைக்கும் தன்மை வண்டல் மண்ணுக்கே உண்டு. அதனால், மழைநீரைச் சேமித்துப் பாதுகாக்கும் அதே நேரம், வண்டல் மண்ணையும் சேதமுறாமல் பாதுகாப்பதும் முக்கியம்.

தமிழக நிலப்பரப்பில் பெய்யும் மழையளவில் ஏறக்குறைய 170 டி.எம்.சி. கடலில் கலக்கிறது. சரியான திட்டமிடல் இல்லாததும், சேமிப்பதற்குத் தேவையான நீராதாரங்கள் இல்லாததுமே இதற்குக் காரணம். இதுதவிர, ஆறுகளில் அவ்வப்போது பெருக்கெடுக்கும் வெள்ளத்தால், 7,563 ஹெக்டேர் நிலங்களும்; தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் 5,112 மில்லியன் ஹெக்டேர் நிலங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.

வரும் 2025ம் ஆண்டு தமிழக நீர்த்தேக்கங்களின் நிலத்தடி நீர்மட்டம் வறண்டுவிடும்... என எச்சரிக்கிறது சமீபத்தில் நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம்.தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் குறித்து மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக்குறிப்பு மையம் ஒவ்வொரு மாதமும் ஆய்வு மேற்கொள்ளும்.

அதன் அடிப்படையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ள பகுதிகளில், தண்ணீரின் அளவை அதிகரிக்கச் செய்யவும், அதிகளவு உறிஞ்சப்படுவதைக் கண்காணித்து அதனைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், இந்த அறிக்கைகள் எல்லாம் குப்பைக்குத்தான் போகின்றன. தண்ணீர்க் கொள்ளைதான் நடக்கிறது. தண்ணீரைப் பாதுகாப்பதற்கான தொலைநோக்குத்திட்டங்கள் இல்லை.

இஸ்ரேலிடம் கற்றுக்கொள்ேவாம்!

வெப்பம் நிறைந்த பாலைவனப் பகுதி, குடிக்க உதவாத உப்பு நீர், சீரற்ற பருவநிலை... ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட நாடுதான் இஸ்ரேல்.
கடல் நீரைக் குடிநீராக்கி குடிப்பதோடு, விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நிலத்தில் ஒரே பயிரை மீண்டும் பயிரிடுவதில்லை. பயிர்சுழற்சி முறையில் பல தாவரங்களைப் பயிரிடுகின்றனர்.

1948ம் ஆண்டு 74 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்த இஸ்ரேல், இப்போது 4 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் குழுக்களாக விவசாயம் செய்து பங்கு போட்டுக் கொள்ளும் வழக்கம் இஸ்ரேலில் உள்ளது.கோதுமை, சோளம், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிக அளவில் விளைவித்து உலகுக்கே முன்னோடியாக விளங்குகிறது.

நாட்டில் கொஞ்சம் பெய்யும் மழையைக்கூட வீணாக்காமல் சேமித்து சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பயிர்களை வளர்க்கின்றனர். கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரித்து விவசாயத்திற்கு ஏற்ப பயன்படுத்தி உலகுக்கே வழிகாட்டி வருகிறார்கள்.