விரிவடையும் சென்னை…வளரும் புறநகர் பகுதிகள்!



சென்னையிலிருந்து 50 கி.மீ. தள்ளியிருப்பது எதிர்காலத்தில் நகரத்திலிருந்து தள்ளியிருப்பதாக உணரச் செய்யாது என்கிறார்கள் வல்லுநர்கள்.இன்றைக்கே சென்னை என்பது செங்கல்பட்டு வரை நீண்டுவிட்டது.

நகரங்கள் மெல்ல விரிந்து வளர்ந்து சுற்றிலும் உள்ள கிராமங்களை எல்லாம் விழுங்கிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்கள் எல்லாம் ஃப்ளாட்களாக மாறிவிட்டன என்று ஒருபுறம் மக்கள் குமுறிக்கொண்டிருந்தாலும் நகர மையப் பொருளாதாரம் ஆட்சி செய்யும் ஒரு தேசத்தில் இந்த விளைவுகள் தவிர்க்க இயலாததுதான்.

இப்போது சென்னை மெட்ரோ என்பது பாரிமுனையை மைய அச்சாகக் கொண்டால் முப்பது கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. அதாவது, 1,189 சதுர கி.மீ விரிந்தது. இதனை 8,878 சதுர கிலோமீட்டர்கள் கொண்ட மிகப் பெரிய மெட்ரோவாக விரிவாக்கம் செய்ய கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
தற்போது அதற்கான பணிகள் ஜரூராக நடந்துகொண்டுள்ளன. இதற்காக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள், வேலூரின் அரக்கோணம் மற்றும் நெம்மேலி பகுதிகளை உள்ளடக்கி புதிய சென்னை மெட்ரோ உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீடு மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இந்த விரிவாக்கத்துக்காக சென்னை பீச் - காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னை பீச் என்ற வளையத்துக்குள் மேம்பாட்டுப் பணிகளைத் திட்டமிட்டுள்ளது. சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வரை உள்ள தொலைவு அறுபது கிலோமீட்டர். இந்தத் தொலைவுக்குள் இருக்கும் ஒவ்வொரு பகுதிக்கும் வேலை வாய்ப்பு முதல் சகல வசதிகளும் அந்தந்த இடத்திலேயே கிடைப்பதாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

அதாவது, ஒரு பகுதியில் உள்ள மக்கள் வேலைக்கோ, பொருட்களை வாங்குவதற்கோ, மால்கள், சினிமா தியேட்டர்கள் என்று உல்லாசமாகப் பொழுதுபோக்குவதற்கோ, எதற்காகவும் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை நோக்கி வந்தே ஆகவேண்டும் என்ற சூழல் இருக்கக் கூடாது என்பதுதான் திட்டத்தின் நோக்கம்.

சுமார் நூறு கிலோ மீட்டருக்கு மேல் சுற்றளவுள்ள சென்னை மெட்ரோவின் ஒவ்வொரு பகுதியும் அத்தியாவசியமான பொருட்கள் முதல் வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு வரை எல்லா உள்கட்டுமானங்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும். இப்படி புறநகரின் உள்கட்டுமானங்கள் மேம்படுவதால் அதன் பொருளாதார நிலையும் உயர்கிறது. அந்தப் பகுதியில் நெடுங்காலமாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.

விவசாய நிலங்களை மெட்ரோவுக்காக முழுவதுமாக அழிக்கும் எண்ணமில்லை. புதிய மெட்ரோவின் சுற்றுப்பகுதியில் காலங்காலமாக விவசாயம் நிகழ்ந்துவரும் வளமான நிலங்களைக் கண்டறிந்து அவற்றை சிறப்பு விவசாய மண்டலங்களாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படி ஒரு மெட்ரோவின் அருகிலேயே விவசாய சிறப்பு மண்டலங்களை உருவாக்குவதன் மூலம் மெட்ரோவுக்கான உணவுப் பொருட்கள் வழங்கலும் தன்னிறைவு அடைகிறது. அதாவது, காய்கறிகள், கீரைகளில் தொடங்கி அரிசி போன்ற அடிப்படை உணவுப் பொருட்கள் வரையிலும் இந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டால் அது விவசாயத்துக்கும் நல்லது. அருகில் உள்ள நகரத்துக்கும் நல்லது.

தொழில்நுட்பப் பூங்காக்கள், தொழிற்சாலைகள், மால்கள், பொழுதுபோக்கு அம்சங்களோடு செல்வந்தர்கள் வரை உழைப்பாளிகள், பாட்டாளிகள் வரை எல்லா தரப்பு மக்களும் வசிப்பதற்கு ஏற்ற பகுதியாக இந்த புதிய மெட்ரோவை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு தனிநபருக்கு அதிகபட்சமாக தன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் வேலை முதல் தனக்கான எல்லா வசதிகளும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம்.

இது தொடர்பாக மக்களில் பல்வேறு தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்படுகின்றன. சிறப்பு விவசாய மண்டலங்கள் திட்டத்துக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.  இந்தத் திட்டம் நல்லவிதமாக நிறைவேற வேண்டுமானால் இந்தப் பகுதிகளுக்கிடையே ரயில் போக்குவரத்து உருவாக்கப்பட வேண்டும். அதேபோல் சாலைப் போக்குவரத்தும் தரமானதாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று பலரும் கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

பெரு நகரங்கள் வளர்ந்துகொண்டே போவது ஆபத்தானது. ஒரேவகையான தொழில் துறைப் பொருளாதாரத்தை மட்டுமே நம்பி அரசு இருக்கக்கூடாது. நமது தேசத்தின் அடிப்படையான விவசாயத்தின் நலனை முதன்மைப்படுத்தி, கிராம மையப் பொருளாதாரத்தையும் அதற்கான உள்கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே ஒலிக்கின்றன.

கிராமப் பொருளாதாரமோ, நகரப் பொருளாதாரமோ, வளர்ச்சி முக்கியம். மக்களின் வாழ்வில் நல்ல விஷயங்கள் நடந்தால் எந்த வகைப் பொருளாதாரமாய் இருந்தால் என்ன என்கிறார்கள் சில சமூக ஆர்வலர்கள். அதுவும் சரிதான்.

இளங்கோ கிருஷ்ணன்