அஜித் படத்தில் நடிக்க மாட்டேன்!‘‘கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சுட்டு சாஃப்ட்வேர்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அப்புறம் மாடலிங். இந்த நேரத்துலதான் தமிழ்ல ‘ஆடுகளம்’ ஆஃபரும் தெலுங்குல ‘ஜூம்மண்டி நாதம்’ வாய்ப்பும் வந்தது.அப்ப எல்லாம் எனக்கு இந்தி, இங்கிலீஷ் தவிர மத்த மொழிகள் தெரியாது. சினிமா இண்டஸ்ட்ரியும் புதுசு. சந்தோஷமா... துக்கமா... எப்படிப்பட்ட வாக்கியம்னு தெரிஞ்சுக்காமயே ரியாக்‌ஷன்ஸ் கொடுத்திருக்கேன். என் நல்ல நேரம் அது ஒர்க் அவுட் ஆச்சு!

டோலிவுட்ல கொஞ்சம் பிசியானப்ப இந்தி ‘பிங்க்’ சான்ஸ் கிடைச்சது. பாலிவுட்டுக்கு போகணும்னு திட்டம் எல்லாம் போடலை. அதுவா அமைஞ்சது. இந்தி எனக்குத் தெரிஞ்ச மொழி என்பதால் புரிஞ்சு நடிச்சேன். ‘பிங்க்’ நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.அப்பதான் கதையின் அவசியத்தை உணர்ந்தேன். இப்ப எந்த மொழில நடிச்சாலும் வசனங்களைப் புரிஞ்சுகிட்டு அதுக்குத் தகுந்த மாதிரி ரியாக்‌ஷன்ஸ் கொடுக்கணும்னு முடிவு செய்திருக்கேன்...’’

பேச்சு, மூச்சு, நடிப்பு என அத்தனையிலும் பக்குவமாக மிளிர்கிறார் டாப்ஸி. தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் நடித்த ‘கேம் ஓவர்’ பேசப்படுவதில் அவ்வளவு சந்தோஷம். ‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னால நடிக்க முடியும்னு நம்பி டைரக்டர் அஸ்வின் கதை சொன்னார். அவர் நம்பிக்கையை காப்பாத்தி இருக்கேன்னு நம்பறேன்...’’ கண்சிமிட்டுகிறார் டாப்ஸி.  

சீரியஸான ஆளுனு உங்களை சொல்லிக்கறீங்க... ஆனா, உங்க இன்ஸ்டா பக்கத்துக்குப் போனா அப்படித் தெரியலையே..?
தலைவா... நான் ஜாலியான பொண்ணு இல்ல. ஆனா, ஹேப்பி கேர்ள்! இந்த கேரக்டர்தான் என் இன்ஸ்டா பக்கத்துல வெளிப்படுது. ஒவ்வொரு செகண்டையும் என்ஜாய் பண்ணுவேன். பண்றேன். ‘பிங்க்’ இப்ப தமிழ்ல அஜித் நடிக்க ‘நேர்கொண்ட பார்வை’னு ரீமேக் ஆகுது. அதுல நடிக்க விரும்பினீங்களா?

யாரும் என்னைக் கேட்கலை! கேட்டிருந்தாலும் நடிக்க சம்மதிச்சிருக்க மாட்டேன்னுதான் நினைக்கறேன். என் சினி கேரியரை தீர்மானிச்ச படம் ‘பிங்க்’. அந்தப் படத்துல என் கேரக்டர்ல நடிக்க நானே மனதளவில் ரொம்பவே மெனக்கெடணும். ஸ்ட்ரெஸ் அதிகம். மறுபடியும் அப்படி ஒரு எமோஷனல் ரிஸ்க் எடுக்க மாட்டேன்.

அநேகமா இந்தப் பதிலை அப்படியே டுவிஸ்ட் பண்ணி, ‘அஜித் படத்தில் நடிக்க மாட்டேன்... சொல்கிறார் டாப்ஸி’னு தலைப்பு கொடுப்பீங்கனு நினைக்கறேன்!நோ ப்ராப்ளம். அஜித் சாருக்கு என்னைத் தெரியும். அவர் நான் என்ன சொல்ல வர்றேன்னு புரிஞ்சுப்பார்! கண்டிப்பா அவர் படத்துல நடிப்பேன்!உங்களுக்கு நைட் ஷூட் பிடிக்காதுனு கேள்விப்பட்டோமே..?

இட்ஸ் ட்ரூ. ஐ லவ் மை ஒர்க். ஆனா, ஐ ஹேட் நைட் ஷூட். ரெகுலரா ராத்திரி பத்து, பத்தரைக்கெல்லாம் ‘குட்நைட்’ சொல்லிட்டு தூங்கிடுவேன். அதைப்போல காலைல ஆறு மணிக்கு எழுந்துடுவேன். இது என் ரெகுலர் ஹேபிட்.

தப்பித் தவறி நைட் ஷூட் இருக்கும்னு ஸ்கிரிப்ட் டிமாண்ட் பண்ணினா ஒரு மாசத்துக்கு முன்னாடில இருந்தே, ‘ஏய் டாப்ஸி... உனக்கு அடுத்த மாசம் நைட் ஷூட் இருக்கு... உன்னால கண்விழிச்சு ஒர்க் பண்ண முடியும்....  முடியும்...’னு எனக்குள்ள சொல்லிக்கிட்டே இருப்பேன்!

மை.பாரதிராஜா