தண்ணீர்..! தண்ணீர்..! தட்டுப்பாட்டால் தத்தளிக்கும் தமிழகம்… தீர்வு என்ன?சென்னையின் குடிநீர் பிரச்னை பற்றி கடந்த மார்ச் மாதமே ‘குங்குமம்’ இதழில் எழுதியிருந்தோம். இப்போது அந்நிலை சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. மக்கள் ஆங்காங்கே காலிக் குடங்களுடன் போராட்டம் நடத்தும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

சென்னை ஹோட்டல்களில் மதிய உணவை மட்டும் நிறுத்தலாமா... என ேஹாட்டல் சங்கத்தினர் யோசித்து வருகின்றனர். சில ஹோட்டல்களில் மதிய உணவை குறைத்தே விட்டனர். பாத்திரங்கள் கழுவுவதற்கும், உணவு தயாரிப்பதற்கும் போதுமான தண்ணீர் இல்லை என்பதே இதற்குக் காரணம்.  லாரித் தண்ணீரை மட்டுமே நம்பியுள்ள ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி பணித்துள்ளதாகத் தகவல்கள். ஏன் இந்நிலை?

மழை ெபாய்த்துப் போனது என ஒற்றை வரியில் காரணத்தை எளிதாகச் சொல்லலாம். ஆனால், அது மட்டும்தானா? ‘‘இல்லை...’’ என்கிறார் நீர் ஆய்வாளரும், ஓய்வுபெற்ற தமிழக குடிநீர் வாரிய பொறியாளருமான மீனாட்சிசுந்தரம். ‘‘தண்ணீர் பற்றிய புரிதல் நம்ம மக்கள்கிட்ட இன்னும் வளரல. இன்னைக்கு தண்ணீர் இல்லனு பொங்குறவங்க நாளைக்கு ஒரே ஒரு மழை பெய்ஞ்சதும் இந்தக் கஷ்டத்தை அப்படியே மறந்துடுவாங்க.

இதுக்கு என்ன காரணம்னு யோசிக்கமாட்டாங்க. இன்ெனாரு பக்கம் மழைநீர் வீணா கடல்ல கலக்குதேனு சிலர் கூப்பாடு போட்டு அரசை வசைபாடுவாங்க. ஆனா, இங்க அரசு, மக்கள்னு ரெண்டு தரப்பிலுமே நிறைய தப்புகள் இருக்கு...’’ என வேதனையுடன் விஷயத்தைப் பகிரத் தொடங்கினார் மீனாட்சிசுந்தரம்.  

‘‘இந்த உலகம் ரெண்டு பங்கு நீராலானதுனு நம்ம எல்லோருக்கும் தெரியும். இந்த ரெண்டு பங்குல நாம் பயன்படுத்துற தண்ணீரின் அளவு வெறும் ஒரு சதவீதம்தான். கடல்நீர் ஆவியாகி, மழையா பொழிஞ்சு, நிலத்தடி நீராகி, நீர்த்தேக்கங்கள்ல நிறைஞ்சு, நமக்கான குடிநீராகவும், விவசாயம், தொழில்நிறுவனங்கள் போன்ற மற்ற விஷயங்களுக்கும் பயன்படுது.

மீதி தண்ணீர் பிறந்த இடமான கடலுக்கே போகுது. இதுஒரு சுழற்சி. அதனால, வீணா கடலுக்குப் போகுதேன்னு அங்கலாய்க்க வேண்டியதில்ல. அதை எப்படி சேமிக்கணும்கிற அறிவு நம்மகிட்ட இருக்குதானே? அதை ஏன் பயன்படுத்தல?

நீர்த்தேக்கங்களை அழிச்சு குடியிருப்புகளாகவும், நிறுவனங்களாகவும் மாத்திட்டு கூப்பாடு போடுறதுல என்ன நியாயம் இருக்கு? சரி, அப்படி மாத்தின இடங்கள்ல ஏதாவது ஒரு இடத்துலயாவது மழைநீர் சேகரிப்பு இருக்கா?

எட்டு மாடி பத்து மாடினு இருக்குற சென்னையின் பெரிய ஐடி நிறுவனங்கள்ல துளிகூட மழைநீர் சேகரிப்பு அமைக்கப்படல. லாரித் தண்ணீரை நம்பித் தான் நடத்திட்டு இருக்காங்க. அரசின் விதிகள்ல, பெரிய கட்டடங்கள் அமைக்கும் போது மழைநீர் சேகரிப்பு கட்டாயம் செய்யப்படணும்னு இருக்கு. அதை யாரும் பெரிசா எடுத்துக்குறதில்ல. நூறு கோடி ரூபாய் போட்டு கட்டுற கட்டடங்கள்ல ஒரு ஐம்பது லட்ச ரூபாய்க்கு மழைநீர் சேகரிப்பு அமைக்கிறதுல என்ன கஷ்டம் வந்துடப் போகுது? சென்னைனு இல்ல. தமிழகம் முழுவதும் இருக்குற பெரிய கட்டடங்கள், வீடுகள், நிறுவனங்கள்லயும் கூட இதேதான் நிலமை. எங்குமே மழைநீர் சேகரிப்பு முறையா பராமரிக்கப்படல.

ஒருநாளைக்கு ஒருவருக்கு 135 லிட்டர் தண்ணீர் தேவை. இதுல 15 லிட்டர் குடிநீருக்கும், சமையலுக்கும் போக, மீதி நீர் குளிக்கவும், காலைக் கடனைக் கழிக்கவும் செலவாகுது. 1950கள்ல தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை இரண்டரைக் கோடி. இன்னைக்கு ஏறக்குறைய எட்டரைக் கோடிப் பேர் இருக்கோம். ஆக, இத்தனை பேருக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் தேவைனு பார்த்துக்கோங்க.

ஆனா, அதே நிலப்பரப்புதான். மக்கள்தொகை மட்டும் நான்கு மடங்கா அதிகரிச்சு இருக்கு. இதுல, மக்களின் வாழ்க்கை முறை மாறியதால சுற்றுச்சூழல்ல கட்டுக்கடங்காத மாசு ஏற்பட்டு, காலநிலை மாற்றத்தை சந்திச்சிட்டு இருக்கோம். தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு இதெல்லாமே காரணிகள்...’’ என்றவரிடம் இதற்கு என்னதான் தீர்வு என்றோம் ‘‘கடந்த 2003ல தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பை அரசு நடைமுறைப்படுத்துச்சு. ஆனா, அது சில வருஷங்களே சிறப்பா நடந்துச்சு. அப்புறம், யாருமே அதை சட்டை பண்ணல. மக்களாவது தனிப்பட்ட முறையிலாவது பராமரிச்சு இருக்கலாம். ஆனா, செய்யல. அரசும் அலட்சியமா இருந்துடுச்சு.

அடுத்து, 2013ல் ‘நிலையான நீர் பாதுகாப்பு மிஷன்’னு ஒரு திட்டத்தை அரசு உருவாக்குச்சு. இதை முதல்கட்ட முயற்சியா சென்னை மாநகராட்சியில செய்து பார்த்தது. இந்தத் திட்டத்தின் நோக்கம், மழைநீரை ேசமிக்குறது, நீர் வளத்தைப் பெருக்குறது, தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குறதுனு சில அம்சங்கள் கொண்டது. ஆனா, 2015ல் வந்த வெள்ளத்துக்குப் பிறகு இந்தத் திட்டத்துக்கு அரசு எந்த நிதியும் ஒதுக்காம கிடப்புல போட்டுடுச்சு.
பிறகு, 2017ல் மறுபடியும் இந்தத் திட்டத்தைப்பத்திப் பேசினாங்க. ஆனா, இப்பவரை பேச்சோடுதான் இருக்கு.  

இனி, வருங்காலத்துல அரசை குற்றஞ் சொல்லாமல் மக்களும் தண்ணீர் பற்றி விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு தனிநபரும் முதல்ல தங்கள் வீடுகள்ல இருக்கிற மழைநீர் சேகரிப்பைச் சரி செய்யணும். இல்லாதவங்க புதுசா அமைக்கணும். அதை மூணு பெரும் மழைக்கு ஒருமுறை துடைச்சு, அதிலுள்ள தூசுகளை அகற்றி, புதுப்பிச்சு போடணும்.

அடுத்து, அரசு செய்ய வேண்டியதும் இதே மழைநீர் சேகரிப்பைத்தான். பெரிய கட்டடங்கள் கட்டும்போது மழைநீர் சேகரிப்பு விதியை சரியா கடைப்பிடிக்கிறாங்களானு கண்காணிக்கணும். எல்லா கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டாயம்னு வலியுறுத்தணும்.

சென்னையில 8 லட்சத்து 28 ஆயிரம் வீடுகள்ல மழைநீர் சேகரிப்பு உள்ளது. தவிர, இரண்டாயிரத்து 700 அரசுக் கட்டடங்கள், 28 ஆயிரம் வணிக கட்டடங்கள், அறுநூறு பொது பூங்காக்கள், 210 மைதானங்கள், முந்நூறு பள்ளி, கல்லூரிகள்னு எல்லா இடங்களிலும் மழைநீர் சேகரிப்பை உடனடியாக சரிப்படுத்தணும். இல்லாமல் இருந்தா உருவாக்கணும்.

இதேபோல, தமிழகம் முழுவதும் கொண்டு வரணும். இப்படி செய்யும் போது நிறைவான நிலத்தடி நீரை சேமிக்கலாம். இதுக்குப் பிறகு, நீர்நிலைகளைச் சரிப்படுத்தும் பணியை மேற்கொள்ளணும். தொடர்ந்து, நிலையான நீர் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்கணும். இதுதான் நீண்ட கால ஒரே தீர்வு...’’ என விரிவாகப் பேசியவரிடம், இப்போதைய சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வழியில்ைலயா? என்றோம்.

‘‘இருக்கு. ஆந்திரா அரசிடம் பேசி கிருஷ்ணா நீரைப் பெறுவதே ஒரே வழி. மொத்தம் 12 டிஎம்சி நீர் சென்னையின் குடிநீர் பற்றாக்குறைக்குத் தருவதாக ஒப்பந்தம். ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு டிஎம்சி தந்திருக்கணும். ஆனா, அரை டிஎம்சி நீரே வந்திருக்கு. அதனால, அந்த நீரையும், ஜூலை முதல் அக்டோபர் வரை தரவேண்டிய எட்டு டிஎம்சி நீரையும் உடனே பெற அரசு முயற்சி எடுக்கணும். அப்பதான் பிரச்னை தீரும்...’’ என்கிறார்
மீனாட்சிசுந்தரம்.                     

பேராச்சி கண்ணன்