கதைகள் சொல்லும் கலர்ஃபுல் சாக்ஸ்!ஒருமுறையோ இரண்டு முறையோ பயன்படுத்தும் சாக்ஸுக்காக மெனக்கெட வேண்டுமா..?இப்படி நினைத்துதான் பலரும் தரை ரேட்டில் சீப்பாக கிடைக்கும் சாக்ஸை பயன்படுத்துகிறார்கள்.ஆனால், எப்படி உள்ளாடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போமோ அதைப்போலவே சாக்ஸ்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்... ஏனெனில் நம் உடலுடன் ஒட்டி உறவாடக் கூடிய ஆடைகளில் சாக்ஸும் ஒன்று என்கிறார்கள் தீபனும் அவரது மனைவி ஆஷா மேனனும்.

அதனாலேயே கதைகள் சொல்லும் கலர்ஃபுல் சாக்ஸ்களை இவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.‘‘‘Peekaboo’ என்னும் வார்த்தைதான் எங்களுக்கு ‘Sockaboo’ ஆரம்பிக்க இன்ஸ்பிரேஷன்...’’ உற்சாகமாக பேசத் தொடங்குகிறார் ஆஷா.‘‘சென்னைதான் எங்க இரண்டு பேருக்கும் சொந்த ஊர். கணவரும் நானும் வெகேஷனுக்கு போயிருந்தப்ப மார்க்கெட்ல என் கணவர் ஒரு கலர்ஃபுல் சாக்ஸ் வாங்கினார். அப்பதான் இது மேல எங்களுக்கு ஈர்ப்பு வர ஆரம்பிச்சது. தீபனும் கருப்பு, வெள்ளை, பிரௌன்னு எப்பவும் அணியற கலர்களுக்கு பதிலா ஜாலி மோடுக்கு மாறினார்.

ஏற்கனவே ‘மைண்ட் யுவர் லாங்வேஜ்’ பெயர்ல தீபன் ஒரு விளம்பரக் கம்பெனியை நடத்திட்டு இருக்கார். எனக்கும் விளம்பரத் துறைல அனுபவம் உண்டு. ஆக, எங்க இரண்டு பேரோட அனுபவங்களையும் மூலதனமா வைச்சு சில ஐடியாக்களை உருவாக்கினோம்.அதாவது ‘ஒவ்வொரு சாக்ஸுக்கும் ஒரு கதை! இது குறும்பா சந்தோஷத்தை வெளிப்படுத்தக் கூடியதா இருக்கும். இப்போதைக்கு ரூ.399க்கு இதை விற்கறோம்...’’ என்ற ஆஷாவிடம் விலை அதிகமாக இருக்கிறதே என்று இழுத்தோம்.

‘‘ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கணும். ஒரு டி ஷர்ட்டுல எந்த டிசைனை வேண்டுமானாலும் அப்படியே பிரிண்ட் செய்துக்கலாம். சாக்ஸ் அப்படியல்ல. வுல்லன் கொண்டு பின்னித் தான் ஆகணும். பிரிண்டட் அல்லது மெஷின் முறைப்படி செய்தா நீங்க எந்த கலரையும் எப்படியும் மிக்ஸ் பண்ணலாம்.
ஆனா, பின்னும் முறைல இது சாத்தியமில்ல. குறிப்பா சில நிறங்களைத்தான் பயன்படுத்த முடியும். உற்பத்தியும் எல்லைக்கு உட்பட்டதுதான். இதை நீங்க மறக்கக் கூடாது.

எங்க அடுத்த திட்டம் கார்ப்பரேட் கூலான கிஃப்ட்ஸ். அதாவது எந்த வேலைக்கும் என்ன விதமான ஆடைக் கட்டுப்பாடுகள் இருந்தாலும் சாக்ஸ் இப்படித்தான் போடணும்னு எங்கயும் ரூல்ஸ் இருக்காது! அதையே நாங்க சாதகமா எடுத்துக்கிட்டு சில கார்ப்பரேட் கம்பெனிகள்ல கிஃப்ட் முறைப்படி கஸ்டர்மர்ஸை பிடிச்சிருக்கோம்.https://www.sockaboo.com/ என்கிற இணையதளம் வழியா இந்தியா முழுக்க இருந்து ஆர்டர்ஸ் வாங்கறோம்...’’ என்கிறார் ஆஷா.  

ஷாலினி நியூட்டன்