ரத்த மகுடம்-58பிரமாண்டமான சரித்திரத் தொடர்

‘‘கேட்க வேண்டியவைகளை எல்லாம் கேட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன்... இனி நான் பதில் சொல்லலாம் அல்லவா..?’’நிதானத்தை இழக்காமல் அதேநேரம் அழுத்தம்திருத்தமாகக் கேட்ட சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர், தொண்டையைக் கனைத்தார்.
நீள்வட்டமாக போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்தவர்கள் நிமிர்ந்தார்கள்.விக்கிரமாதித்தருக்கு நேர் எதிரில் அமர்ந்திருந்த அனந்தவர்மர், தன் கண்கள் இடுங்க சாளுக்கிய மன்னர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தார்.

பொறுமையை சோதிக்காமல் அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு விக்கிரமாதித்தர் பேசத் தொடங்கினார்.‘‘சாளுக்கியப் பேரரசின் அமைச்சர் பிரதானிகளாக நீங்கள் இருந்தபோதும் ஒவ்வொருவருமே சிற்றரசர்களுக்கான அந்தஸ்துடையவர்கள். சாளுக்கியப் பேரரசின் விரிவாக்கத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். அப்படிப்பட்ட உங்கள் அனைவரது வீரத்துக்கும் தீரத்துக்கும் முதலில் தலைவணங்குகிறேன்! சாளுக்கியப் பேரரசின் நலன் மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் உங்கள் செயல் உண்மையிலேயே என்னை நெகிழ வைக்கிறது; பெருமிதமாகவும் உணரச் செய்கிறது...’’
நிறுத்திய விக்கிரமாதித்தர், எழுந்து அவையை வணங்கினார்.

பதிலுக்கு அனந்தவர்மர் உட்பட அனைவரும் அநிச்சையாக எழுந்து மன்னரை வணங்கினர். பரஸ்பரம் இப்படி இருதரப்பும் வணங்கியபிறகு, ‘‘அமருங்கள்... உங்களுக்கு ஆட்சேபணை இருக்காது என்ற நம்பிக்கையில் நின்றபடியும் நடந்தபடியும் என் பதிலைத் தெரிவிக்கிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தர், நெஞ்சை நிமிர்த்தி நின்றார்.

‘‘இந்த பாரத தேசத்தின் தட்சிணப் பகுதியை சாளுக்கியர்களாகிய நாம் ஆட்சி செய்து வருகிறோம். அது என்ன தட்சிணப் பகுதி..? வடக்கே விந்திய மலையும் நருமதை ஆறும்; தெற்கில் துங்கபத்திரை, கிருஷ்ணா நதிகள்... கிழக்கிலும் மேற்கிலும் கடல்... இதற்குள் இருக்கும் பகுதிதான் தட்சிணப் பிரதேசம்.

இந்த பீடபூமியின் கீழ்ப்பாகத்தில் கோதாவரி, கிருஷ்ணா நதிகளுக்கு இடையிலுள்ள பகுதி மாமன்னர் அசோகர் காலத்தில் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டிருந்தது. பிறகு சாதவாகனர்களின் ஆளுகைக்குக் கீழ் அப்பகுதி வந்தது.இதன் பிறகு கூர்ஜர ராஜ வம்சத்தைச் சேர்ந்த சாளுக்கியர்களாகிய நாம் முன்னேற்றம் அடைந்து இந்த ‘தட்சிண’ப் பகுதியை ஆளத் தொடங்கினோம்...’’ நிறுத்திய விக்கிரமாதித்தர் மெல்ல நடந்தபடி தன் உரையைத் தொடர்ந்தார்.

‘‘பாரத தேசம் பன்னெடுங்காலமாகவே நாடோடி கூட்டத்தாரின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. வடமேற்கிலுள்ள கணவாய் வழியாக சாரி சாரியாக அயலவர்கள் நம் நாட்டில் புகுந்து, இருக்கும் ராஜ்ஜியங்களை எல்லாம் கைப்பற்றி வருகிறார்கள்.

ஆனால், ஒருவராலும் பாரதத்தின் தென் பகுதிக்கு வரவே முடியவில்லை. காரணம், அரணாக விளங்கும் நாம்! தட்சிணப் பிரதேசத்தை ஆட்சி செய்து வரும் சாட்சாத் நாமேதான். நம்மை மீறி ஒருவராலும் தென் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. அதனாலேயே தனித்த நாகரீகத்துடன் தென் பகுதியானது காலம் காலமாகத் திகழ்ந்து வருகிறது.

இதற்கான நன்றியை தென்பகுதி மக்கள் நமக்குத் தெரிவிக்க வேண்டும்! வரலாற்றில் நம் பெயரைப் பொறித்து நம்மை கவுரவிக்க வேண்டும்! ஆனால், அப்படி எதையும் அவர்கள் செய்யவில்லை.ஏன் என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறோமா..? நாள் முழுக்க இதுகுறித்துதான் நான் ஆலோசித்து வருகிறேன்...’’ என்ற விக்கிரமாதித்தர் அறையின் மூலையில் முற்றிலுமாக மூடியிருந்த சாளரத்தில் சாய்ந்தபடி நின்றார்.

‘‘நமது முன்னோரான முதலாம் புலிகேசி, வேங்கியை ஜெயித்து வாதாபியில் சாளுக்கிய அரசை நிறுவினார். மகாராஜா என்னும் பட்டத்தையும் பெற்றார். நருமதை முதல் பாலாறு வரை பரந்திருக்க... மற்ற இரு பக்கங்களில் கடல் நிரம்பி வழிய... தன் ஆட்சியைத் தொடங்கினார்.
 
பிறகு முதலாம் கீர்த்திவர்மன், மங்களேசன் ஆகியோர் சாளுக்கிய அரியணையை அலங்கரித்தார்கள். ராஜ்ஜியத்தை விஸ்தரிக்காவிட்டாலும், அடைந்த பகுதியை இவர்கள் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றினர்.

பின்னர் அரியணை ஏறிய என் தந்தையாரான இரண்டாம் புலிகேசி, மாமன்னரானார். வடக்கில் ஹர்ஷவர்த்தனரைத் தோற்கடித்து ஓட ஓட விரட்டினார். இதன் வழியாக வட பகுதி அரசுகள் தெற்கில் கால் பதிக்காதபடி செய்தார்.

வடக்குப் பிரச்னை ஓய்ந்ததும் தென் பகுதியில் தன் கவனத்தைக் குவித்தார். இதன் ஒரு பகுதியாக தென்னக கடற்கரையோரமாக படையெடுத்து பல கோட்டைகளைக் கைப்பற்றினார். இது குறித்த விவரங்களை அய்கோலிக் கல்வெட்டில் நாம் காணலாம்.

அது மட்டுமா..? பல்லவ மன்னர் மகேந்திரவர்மரை காஞ்சிக் கோட்டைக்குள் பதுங்கும்படி செய்தார். பின்னர் காவிரி ஆற்றைக் கடந்து சோழர், சேரர், பாண்டியருடன் நட்புறவு பூண்டு வாதாபி திரும்பினார். என் தந்தைக் காலத்தில் பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையில் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் போர் நடைபெற்றிருக்கிறது.

இவை அனைத்தும் வேங்கியை என் தந்தையும் சாளுக்கிய மாமன்னருமான இரண்டாம் புலிகேசி கைப்பற்றியபிறகே நடைபெற்றது.
நினைக்க நினைக்க நெஞ்சமெல்லாம் ததும்பி வழிகிறது. எப்பேர்ப் பட்ட வீரம்...‘இரண்டாம் புலிகேசி தன்னுடைய சேனையை நடத்திச் செல்லும்போது கிளம்பிய தூசியானது எதிர்க்க வந்த பல்லவ மன்னனின் ஒளியை மங்கச் செய்தது; புலிகேசியின் பெரும் படைக்கடலைக் கண்டு காஞ்சிபுரத்தான் காஞ்சிக் கோட்டையில் ஒளிந்துகொண்டான்.... பல்லவர்களின் படையாகிய குளிர்ந்த பனிக்குக் கடுங்கதிராயுள்ள கதிரவனைப் போன்ற அவன் (புலிகேசி) சோழ, பாண்டிய, சேரர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கினான்...’ என்ற அய்கோலிக் கல்வெட்டின் வாசகங்கள் அனைத்தும் எவ்வளவு நிஜம்!

இதிலிருந்து என்ன தெரிகிறது? தன் நாட்டின் ஒரு பகுதியை சாளுக்கியர்களிடம் மகேந்திரவர்மர் பறிகொடுத்தார்... அதில் வேங்கியும் ஒன்று.இப்பகுதியை தன் இளைய சகோதரராகிய விஷ்ணுவர்த்தனர் வசம் என் தந்தை ஒப்படைத்தார். இப்போது எங்கள் சித்தப்பாவின் குடும்பம் அப்பகுதியை சீரும் சிறப்புமாக ஆண்டு வருகிறது...’’ பெருமிதத்துடன் பேசிக் கொண்டே வந்த விக்கிரமாதித்தரின் நயனங்கள் சட்டென்று சிவந்தன.

‘‘ஆனால், பல்லவர்களின் காசக்குடிச் செப்பேடுகள் என்ன சொல்கின்றன? சாளுக்கிய மாமன்னர் இரண்டாம் புலிகேசியையும் அவருக்குத் துணையாக நின்ற பல அரசர்களையும் காஞ்சிக்கு வடக்கே பதினைந்து கல் தொலைவிலுள்ள புள்ளலூர் என்னும் இடத்தில் மகேந்திரவர்மர் புறங்காணச் செய்தார் என்கிறது... அத்துடன் இந்திரனைப் போன்று கீர்த்தி வாய்ந்த மகேந்திரவர்மர் பூமண்டலத்தைப் பாதுகாத்து வந்தார் என சிலாகிக்கிறது...

என்றாலும் பல்லவ நாட்டின் வடபகுதியை சாளுக்கியர்களிடம் மகேந்திரவர்மர் இழந்தார் என்ற உண்மையை மட்டும் அவர்களால் மறைக்கவே முடியவில்லை. ஏனெனில் இதன்பிறகு வடக்கே வடபெண்ணை ஆற்றிலிருந்து தெற்கே சோழ மண்டலம் வரை பல்லவ நாடு சுருங்கிவிட்டது.
மகேந்திரவர்மருக்குப் பிறகு பல்லவ சிம்மாசனத்தில் அமர்ந்த நரசிம்மவர்மர் காலத்தில் மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் போர் நடைபெற்றது.

நரசிம்மவர்மர் காலத்தில் மீண்டும் என் தந்தை பல்லவ நாட்டின் மீது போர் தொடுத்தார்.... ஆனால், அவர் காஞ்சியை அணுகும் முன் இருபது கல் தொலைவிலுள்ள மணிமங்கலம் என்னுமிடத்திலும், பரியளம், சூரமாரம் முதலிய இடங்களிலும் பல்லவ சேனைகள் பாய்ந்து வந்து சாளுக்கியப் படைகளைத் தாக்கி முறியடித்தன... என கூரம் செப்பேடு கூரை மீதேறி அறிவிக்கிறது.

அதுவும் எப்படி..?
‘இம்மரபில் உதயகிரியிலிருந்து (கிழக்கு மலையிலிருந்து) ஆதவனும் நிலவும் தோன்றுவது போல் தோன்றி தலைவணங்காத இம்மரபு மன்னர்களின் மணிமுடியில் சூடாமணி போல் விளங்கி, பகை மன்னர்களாகிய யானைக் கூட்டங்களுக்கு அரிமா போன்று நரசிம்ம மூர்த்தியே மண்ணுலகில் அரசகுமாரனாக அவதரித்ததைப் போல் நரசிம்மன் உதித்தான்...

இவன் சோழர், கேரளர், களப்பிரர், பாண்டியர்களைத் திரும்பத் திரும்ப வென்று ஆயிரங் கைகளைக் கொண்டவன் (கார்த்தவீரியன்) போல் விளங்கினான்...பரியளம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய போர்களில் புறங்காட்டியோடிய புலிகேசியின் முதுகாகிய பட்டயத்தில் ‘வெற்றி’ என்னும் சொல்லைப் பொறித்தான்...

இதற்குப் பின் கும்ப முனிவர் (அகத்தியர்), வாதாபியை (வாதாபி என்ற அசுரனை) அழித்ததைப் போல் இவன் வாதாபியை (இரண்டாம் புலிகேசியின் கோநகரை) அழித்தான்...’இப்படித்தானே கூரம் செப்பேடுகள் செப்புகின்றன..?’’ சீறினார் விக்கிரமாதித்தர்.‘‘இவை எல்லாம் உண்மைதானே மன்னா... இதன் காரணமாகத்தானே ‘வாதாபி கொண்ட நரசிம்மன்’ என்ற விருதுப் பெயரும் நரசிம்மவர்ம பல்லவருக்குக் கிட்டியது..?’’ அதுவரை அமைதியாக இருந்த ராமபுண்ய வல்லபர் இடையில் புகுந்தார்.

விக்கிரமாதித்தர் பதிலேதும் சொல்லாமல் சில கணங்கள் தன் கண்களை மூடினார். ‘‘மறுக்கவில்லை சாளுக்கிய போர் அமைச்சரே...’’ தழுதழுத்தபடி சொன்னவர் தன் கண்களைத் திறந்தார். ‘‘என் சித்தப்பா நாகநந்தி அடிகள் நாட்டியக்காரியான சிவகாமியை விரும்பினார். தம்பிக்காக சிவகாமியைக் கவர்ந்தார் என் தந்தை. இதற்குப் பழிவாங்க படை திரட்டி வந்து வாதாபியை தீக்கிரையாக்கியதுடன் சிறையிலிருந்த சிவகாமியையும் நரசிம்மவர்மர் மீட்டுச் சென்றார்...

இதன்பிறகு பதிமூன்று ஆண்டுகள் நம் தலைநகரான வாதாபி, பல்லவர்களின் வசம்தான் இருந்தது... இந்நிகழ்வுகளை எல்லாம் நான் எங்கே மறுத்தேன் ராமபுண்ய வல்லபரே..?இதற்கெல்லாம் சேர்த்துதானே அதே சிவகாமியின் வளர்ப்புப் பேத்தியான இளையவள் என நம்மால் அழைக்கப்படும் சிவகாமியை ஆயுதமாக்கி பல்லவர்களை பழிக்குப் பழி வாங்க திட்டமிட்டு இதோ காஞ்சிபுரத்துக்கும் வந்திருக்கிறோம்...’’

‘‘ஆனால், அந்தத் திட்டத்தைத்தான் சாளுக்கிய மன்னரான நீங்கள் தகர்த்துவிட்டீர்களே... நம் ஆயுதமான இந்த இளைய சிவகாமி குறித்த உண்மையை கரிகாலனுக்கு அறிவித்துவிட்டீர்களே...’’ அனந்தவர்மர் பாய்ந்தார்.‘‘நம் திட்டத்தை நான் தகர்த்தேன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்..? சிவகாமி குறித்த எந்த விவரமும் கரிகாலனுக்குத் தெரியாது..!’’

சாளுக்கிய மன்னரான விக்கிரமாதித்தர் இப்படிச் சொன்னதும் அந்த ரகசிய அவையில் இருந்த ஒவ்வொருவரும் திகைத்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.‘‘என்ன சொல்கிறீர்கள் மன்னா..?’’ ராமபுண்ய வல்லபர் வியப்புடன் கேட்டார்.

‘‘உண்மையை! கரிகாலனுக்கு இந்நேரம் சிவகாமி குறித்த சந்தேகம் எழுந்திருக்கும்! ஆனால், அவன் அறியப் போவது நாம் மறைத்திருக்கும் உண்மைகளை அல்ல! வேறொரு நாடகம் அங்கே அரங்கேறப் போகிறது!’’‘‘நாடகமா..?’’ அனந்தவர்மரின் குரலில் அதிர்ச்சி பூரணமாக வெளிப்பட்டது.

‘‘ஆம்! நாடகமேதான். சாளுக்கிய அரியணையைக் கைப்பற்ற ஓடி ஒளிந்திருக்கும் பல்லவ மன்னரான பரமேஸ்வரவர்மரின் உதவியை நீங்கள் நாட முற்பட்டிருக்கிறீர்களே... அதற்காக இப்படியொரு விசாரணை நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்களே... அப்படி ஒரு நாடகத்தைத்தான் கரிகாலன் முன்னால் இப்போது சிவகாமி அரங்கேற்றிக் கொண்டிருப்பாள்!’’ என்றபடி விக்கிரமாதித்தர் புன்னகைத்தார்!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்