என்டிஆர் சிவபார்வதி சந்திரபாபு நாயுடு!போஸ்ட் மார்ட்டம்-9

ஆந்திராவின் 50 ஆண்டுக்கால இரத்த சரித்திரம்


வீட்டில் வெடித்த டிவி பாமால் சூர்யநாராயண ரெட்டியின் அம்மா, தங்கை, அண்ணன், அண்ணன் மனைவி, பணியாளர்கள் சிலர் ஆகியோர் மரணமடைந்ததை அடுத்து பதியப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாக பரிதலா ரவிதான் சேர்க்கப்பட்டார்.ஊருக்கே தெரிந்த ரகசியமாயிற்றே இது! கொலையாளியாக இவரை உலகுக்கு அடையாளம் காட்டிய முதல் வழக்கு இதுதான் என்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் மக்கள் யுத்தக் குழு என்ற நக்ஸல்பாரி அமைப்பு, ‘ரெட் ஸ்டார்’, ‘ரீ ஆர்கனைசிங் கமிட்டி’ என இரண்டாக உடைந்தது. பொட்டுல்ல சுரேஷ் ரீ ஆர்கனைஸிங் கமிட்டிக்கும், சுதர்சன் ரெட் ஸ்டார் குழுவுக்கும் தலைமை தாங்கினர்.

இதில் ரெட் ஸ்டாரை பிரமோட் செய்து ஆதரவளிக்க சென்னா ரெட்டியின் மகன்களும், சூர்யநாராயண ரெட்டியும் முன்வந்தார்கள். இந்தப் பக்கம் இவர்கள் இருந்தால் எதிர்த் தரப்பில் வேறு யார் இருப்பார்கள்..? பரிதலா ரவிதானே! ரீ ஆர்கனைஸிங் கமிட்டியின் முன்னணித் தலைவராக பரிதலா ரவி திகழ்ந்தார். ஆக, கேங் வார்... நக்ஸல் அமைப்புக்குள் நடக்கும் சண்டையாக மாறியது.

ரவியின் குழு நேரடியாக 16 பேரை படுகொலை செய்ததாக சொல்கிறார்கள். போலவே ஓபுல் ரெட்டி மற்றும் சூர்ய நாராயண ரெட்டியின் ஆதரவாளர்கள் 13 பேரை கடத்திச் சென்று கொலை செய்தார்கள்.  இந்த நேரத்தில் ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி, அடுத்தடுத்து பரிதலா ரவியின் மீது வழக்குகளைப் பதிந்தது. மொத்தம் 57 வழக்குகள்! எதற்கும் நேரடி சாட்சியில்லை. 5 கொலைகளில் மட்டுமே ரவி நேரடியாகப் பங்கேற்று படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

என்னதான் இன்று நக்ஸல் அமைப்பு தங்களை ரவி பயன்படுத்திக் கொள்ளவில்லை என சொன்னாலும் ஊர் அதை நம்ப மறுக்கிறது!நக்ஸல்பாரிகளைத் தவிர தனக்கென ஒரு படையையும் ரவி திரட்டியிருந்தார். எனவே இந்தப் படைதான் ரவி சுட்டிக்காட்டியவர்களை எல்லாம் படுகொலை செய்தது என்கிறார்கள்.எது உண்மை என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது!

பொட்டுல்ல சுரேஷ், சமான், பிரபாகர், மதுசூதனன் ரெட்டி... உட்பட பலர் ரவியின் தளபதிகளாக இருந்ததாக காவல்துறை ரெக்கார்ட் அறிவிக்கிறது. எது எப்படியோ... சென்னா ரெட்டி மற்றும் சூர்யநாராயண ரெட்டியின் குரூப்பைச் சேர்ந்த பலர் வகை தொகை இல்லாமல் இந்தச் சமயத்தில்தான் ‘போட்டுத்’ தள்ளப்பட்டார்கள். அனந்தபூர் மாவட்டத்தில் தன்னை எதிர்ப்பவர்கள் இருக்கவே கூடாது என்று பரிதலா ரவி நினைத்தார். தளபதிகள் அதை கச்சிதமாகச் செய்து முடித்தார்கள்.

இப்படி அனந்தபூர் மாவட்டமே பழிக்குப் பழி என சின்னாபின்னமாகியபோதுதான் அந்த மாவட்டத்துக்கு ஓர் அரசியல் தலைவர் வருகை தந்தார்.
வந்தவர் இரு தரப்பையும் பார்த்து அசந்துவிட்டார்.அந்த அரசியல் தலைவர் வேறு யாருமல்ல... கலியுகக் கண்ணனான
என்.டி.ராமாராவ்தான்! காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத்தையே தன் கைக்குள் வைத்திருந்த ரமணா ரெட்டியை எதிர்க்க தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அனைவரும் அச்சப்பட்டு வந்த நேரம் அது.

இந்த சமயத்தில் அனந்தபூருக்கு வருகை தந்த என்டிஆரிடம் அவரது கட்சியினர் பரிதலா ரவியின் அருமை பெருமைகளை எடுத்துச் சொன்னார்கள்!

மகிழ்ச்சி அடைந்த என்டிஆர் உடனே பரிதலா ரவியை அழைத்து வரச் சொன்னார்.இதன் பிறகு என்ன நடக்கும்..? அதுவேதான்!தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினரானார் பரிதலா ரவி!

ரவியின் கோணத்தில் இந்த நகர்வு சரியானதுதான். ஏனெனில் அரசியல் / போலீஸ் துணையோடு, ஆட்சி அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு பம்பரம் ஆடி வந்த ரமணா ரெட்டியை அப்பீட் ஆக்க தானும் அரசியலில் நுழைவதுதான் சரி என ரவி முடிவு செய்ததை தவறென்று சொல்ல முடியாதே! 1993ல் நடந்த மாநில சட்டசபைக்கான தேர்தலில் பெனுகொண்டா தொகுதியின் தெலுங்கு தேசக் கட்சியின் வேட்பாளராக பரிதலா ரவி நிறுத்தப்பட்டார்.

ரமணா ரெட்டியின் கடுமையான எதிர்ப்பு... சில தொண்டர்களின் படுகொலைகள்... ஆகியவற்றை எல்லாம் மீறி ரவி வெற்றிபெற்றார். முதல்முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். அதுவும் 62% வாக்குகளைப் பெற்று!போதாதா? என்டிஆர் அவரை தொழிலாளர் நலத்துறைக்கு அமைச்சராக்கி அழகு பார்த்தார்! போஸ்டிங் கிடைத்தபிறகு எது நடக்க வேண்டுமோ அது அப்படியே நடந்தது!அனந்தபூர் மாவட்டத்தின் நிலை தலைகீழானது! மாவட்ட நிர்வாகமே பரிதலா ரவியின் கீழ் மண்டியிட்டது. அவ்வளவுதான், டமால் டுமீல் சத்தம் இன்னும் அதிகரித்தது.

சூர்யநாராயண ரெட்டியின் ஆதரவாளர்களும், ரமணா ரெட்டி மற்றும் ஓபுல் ரெட்டியின் அல்லக்கைகளும் தேடித் தேடிக் கொல்லப்பட்டனர். உயிருக்குப் பயந்து பலரும் கர்நாடகாவுக்குத் தப்பியோடினார்கள். உள்ளூரில் தனக்கு எதிரிகளே இல்லாத நிலையை உருவாக்க பரிதலா ரவி முயற்சித்து வந்த நேரத்தில்தான் -எதிர்பாராத சிக்கல் முளைத்தது. அதுவும் அவரது சொந்தக் கட்சியில் இருந்து!

பொதுவாகவே ஆந்திர அரசியலை ஆட்டிப் படைப்பவர்கள் ரெட்டிகளும், நாயுடுகளும்தான். ஆந்திராவின் ஆட்சியையே தீர்மானிக்கும் அளவுக்கு இவ்விரு சமூகமே செல்வாக்குப் படைத்தது.அப்படிப்பட்ட ரெட்டி சமூகத்தைச் சேர்ந்த ஜே.சி.பிரபாகர் ரெட்டி ஒரு சுபயோக சுபதினத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். கடைக்கோடியில் என்றாலும் இவரும் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான்!

ஜே.சி.பிரபாகர் ரெட்டியின் வருகையை பரிதலா ரவி விரும்பவில்லை. கட்சியில் இவரைச் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தார்.இதை அறிந்த பிரபாகர், நேராக ஐதராபாத் சென்று என்டிஆரின் அப்போதைய மனைவியான லட்சுமி பார்வதியைச் சந்தித்து நைச்சியமாகப் பேசி கட்சியில் இணைந்துவிட்டார்!லட்சுமி பார்வதியின் கட்டுப்பாட்டில் என்டிஆர் இருந்ததால் அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை! இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதுமே தனது எம்.எல்.ஏ. பதவியை பரிதலா ரவி ராஜினாமா செய்தார்.

ரவியை மீறி அனந்தபூர் மாவட்டத்தில் யாராலும் கட்சிப் பணி ஆற்ற முடியாது. அடுத்து நடந்த இடைத்தேர்தலில் பெனுகொண்டா தொகுதியின் சார்பில் தெலுங்கு தேச வேட்பாளராக போட்டியிட ஒருவரும் முன்வரவில்லை.அதிர்ந்த என்டிஆர், வேறு வழியின்றி பரிதலா ரவியை அழைத்து சமாதானப்படுத்தி அவரையே இடைத்தேர்தலில் நிற்க வைத்தார்.இம்முறையும் பரிதலா ரவியே வெற்றி பெற்றார்.

இதற்குள் அரசியல் வானில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன.வேறெப்படி இதைச் சொல்ல..?! என்டிஆர் குடும்பத்தில் நடந்த பிரச்னை மாநிலம் தழுவிய சிக்கல் ஆனது என்றா!தெலுங்கு தேசம் கட்சியிலும் மாநில ஆட்சியிலும் அளவுக்கு அதிகமான அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கிய என்டிஆரின் புதிய மனைவியான லட்சுமிபார்வதியை எதிர்த்து சந்திரபாபு நாயுடு போர்க் கொடி உயர்த்தினார்.

இதன் ஒரு பகுதியாக, தன் மாமனாரையே எதிர்க்கத் துணிந்தார் சந்திரபாபு நாயுடு.தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களைக் கடத்திச் சென்று ஆட்சியைக் கைப்பற்றினார் சந்திரபாபு நாயுடு.இந்த நேரத்தில் தனக்கு அரசியலில் ஓர் அறிமுகம் கொடுத்த என்டிஆரின் பக்கமே பரிதலா ரவி நின்றார். அனந்தபூர் மாவட்டத்தின் அனைத்து தெலுங்கு தேச எம்.எல்.ஏ.க்களும் ‘கண்ணன் பக்கம்தான்...’ என பகிரங்கமாக அறிவித்து தன் நன்றிக்கடனைத் தீர்த்தார்.

இந்நிலையில் குடும்பத்துக்குள் நிகழ்ந்த பிளவு... கட்சி பறிபோன சோகம்... ஆட்சியைப் பறிகொடுத்த அவலம் காரணமாக என்டிஆர் மனமுடைந்து திடீரென்று ஒருநாள் இறந்தார்.உடனே என்டிஆர் பக்கம் நின்றவர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் லட்சுமிபார்வதி கொண்டு வந்தார்.

ஏற்கனவே பிரபாகர் ரெட்டியை கட்சியில் சேர்த்தது லட்சுமி சிவபார்வதிதான் என்பதால் அவர் மீது ஏக கடுப்பில் இருந்தார் பரிதலா ரவி. இந்நிலையில் என்டிஆருக்குப் பின், தானே எல்லாம் என்பதுபோல் லட்சுமி பார்வதி நடந்து கொண்டது பரிதலா ரவிக்குப் பிடிக்கவில்லை.
இதற்காகத்தானே சந்திரபாபு நாயுடு காத்திருந்தார்!

வெற்றிலைப் பாக்குடன் பரிதலா ரவிக்கு அழைப்பு விடுத்தார். ‘அனந்தபூர் மாவட்டத்தில் உங்களுக்கு எதிராக யாரும் நம் கட்சியில் தலைதூக்காதபடி பார்த்துக் கொள்கிறேன்...’ என உறுதியளிக்க... ரவியும் மகிழ்ச்சியோடு சந்திரபாபு நாயுடு பக்கம் சேர்ந்தார்! 1996ம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அதே பெனுகொண்டா தொகுதியில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதே ரமணா ரெட்டியைத் தோற்கடித்தார் பரிதலா ரவி!அடுத்தசுற்று பழிவாங்கும் படலம் ஆரம்பமானது!

(தொடரும்)  

கே.என். சிவராமன்