என் பொண்ணுகிட்ட அசிஸ்டென்ட் டைரக்டரா வேலைப் பார்க்க ஆசைப்படறேன்..!



‘‘படத்தோட பேரு என்ன தெரியுமா? ‘ஒத்த செருப்பு’. இது நிஜமாகவே ஒன் மேன் ஷோ. நான் மட்டுமே நடித்து, தயாரித்து, இயக்கி... உலகத்தில் இது மாதிரி புதுமையில்லை என்கிறார்கள். இது ரெகுலரான ஃபார்மேட் கதையல்ல... சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறதால் மட்டுமே நகர்த்த முடிஞ்சது. முற்றிலும் புதுசா யோசிச்சு அதை வழி நடத்தி வந்ததுதான் இந்த ‘ஒத்த செருப்பு’.

இப்ப இந்த அனுபவத்தில, உலகத்துக்கு யோசிக்கிற புத்தி வந்திருக்கு. தாகத்தை அடங்கவிடாமல் அடிக்கிற தேடல், பக்குவம் அத்தனையும் சேர்த்துத்தான் இந்தப் படத்தை உருவாக்கி வைச்சிருக்கேன்...’’ கேள்விகளுக்குக் காத்திருக்காமல் தடதடவென பார்த்திபன் ஆரம்பிக்க, ‘டேக் ஆஃப்’ ஆகியது பேச்சு.உங்களுக்கு பல ஹீரோக்கள் பழக்கமாச்சே...

யாரோ ஒரு நடிகர் வீட்டு வாசலில் நின்னுட்டு உங்க கால்ஷீட் கொடுத்தால் என் இன்னொரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு சொல்றதில்லை. இதில் திறமை இருந்தால் தானாக ஒண்ணு நடக்கும். ஒரு சமயம் விஜய் சார் ‘நண்பன்’ படத்தை பண்ணுங்கன்னு சொன்ன மாதிரி இன்னொண்ணு நடக்கலாம்.

இது எக்ஸ்பரிமெண்ட், வியாபாரம் கஷ்டம்னு காரணங்கள் சொல்லி தவிர்க்கப்படுது, வீர்யமா இதைத் தாண்டி ஏதாவது ஒண்ணு செய்யணும்னு தோணுது. இப்பவும் நமக்கான இடம், பார்த்திபன்னு கண்கள் சற்றே விரியும்போது, அதைப் பயன்படுத்திக்க ஆசை வருது.
உழைக்கலாம், போராடலாம்னு தோணி சம்பாதிச்சதை, சம்பாதிக்கப்போறதை இதில் தூக்கிப் போட ஆரம்பிச்சு இது சொந்தப்படம் ஆகிவிட்டது. யாரையும் அணுகவில்லை. ஏளனமாகப் பார்க்கப்படுவது எனக்குப் பிடிக்காது.

கால் மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து உங்களைப் பார்க்க முடியுமான்னு நீங்க யோசிக்கிற போது... நான் கீர்த்தனா, ராக்கிகிட்டே இந்தக்கதையைச் சொன்னேன். அவங்க இந்த ஜெனரேஷன். கதை புதுசு, ஆடியன்ஸ் மாறியிருக்காங்கன்னு உற்சாகப்படுத்தினாங்க.

12 படம் இதைப்போல வந்திருக்கு. இப்ப பொய் சொல்ல முடியாது. அந்தக்காலத்தில் தூயவன் மாதிரியானவங்க கொஞ்சம் அப்படி இப்படி பார்த்து  எடுப்பாங்க.. யாருக்கும் தெரியாது. அந்த ஐடியாவை நமக்கு ஏத்த மாதிரி பன் பட்டர் ஜாமை இட்லி சாம்பாரா மாத்திடுவாங்க. 12 படத்திலும் யாரோ டைரக்ட் செய்து, எவரோ நடிச்சிருக்காங்க. இதில் நான் மட்டும்தான். நானே ஒருவனாகி, உலகத்தில் இம்மாதிரியில் முதல் படம்.
இது என் வாழ்நாளுக்குள் கிடைச்சது பெருமை. படை வீரனாக மட்டும் போதாதுன்னு ஒரு படையை - சந்தோஷ் நாராயணன், ரசூல் பூக்குட்டி, ராம்ஜின்னு சேர்த்துக்கிட்டேன்.

இந்த துணிவு பெரிய விஷயம் ஆச்சே...ஏதாவது சேர்த்து வைச்சிருந்தால் பயம் வந்திருக்கும். கையை விட்டுப் போயிடுமோனு அச்சம் வந்திருக்கும். அப்படி எதுவும் இல்லாததால் அனுபவமாகி விட்டது. எனக்குத் தெரிந்த தொழிலை, கிடைத்த அங்கீகாரத்தை என்னைத் தவிர எவனுமே கொடுக்க முடியாதுன்னு பட்டது. இந்தத் திமிரில், நீயே முயற்சிக்காத போது வேறு யார் முயற்சி செய்வான்னு ஒரு கேள்வி என்னை நோக்கியே வருது.

டைரக்‌ஷனை மீறி இதில் என் பண்பட்ட நடிப்பு இருந்தே ஆகணும். இப்படி நடிக்க முடியுமான்னு, விலகியிருந்து பார்த்துக்கிட்டே இருந்தேன். கேமராமேன் ராம்ஜியை ஒரு ஹோட்டலில் வைச்சு, படம் முழுவதையும் நடிச்சுக் காண்பிச்சேன். அவர் அப்படி ரசிச்சார். அதுவே பெரிய தெம்பு.
‘சார், நீங்க ஒரு மாதிரி பேசி மயக்கிடுவீங்க... ஸ்கிரிப்ட் கொடுங்க’ன்னு சொன்னார். கொடுத்ததும் உடனே ஷூட்டிங் போயிடலாம்னு சொல்லிட்டார். 500 ஸ்கொயர் ஃபீட் இடத்தில் 500 ஷாட் எடுத்திருக்கோம்.

எனக்கு சந்தோஷ் நாராயணன் கூட ஒர்க் பண்ண ஆசை. போனில்தான் கதை சொன்னேன். ஒரே பாடலில் மொத்த படத்தையும் உருக்கியெடுத்து வைச்சிருக்கார். இதென்ன ஒரு நாள் வாழ்க்கையா... புள்ளியா... குறுக்கு வெட்டுத் தோற்றமா..?

ஒரு போலீஸ் விசாரணை, நீ கொலை செய்தாயா, இல்லையான்னு ஒரு கேள்வி. அதை எப்படிச் சொல்றாங்கிறதுதான் படமே. அவனுக்குன்னு ஒரு போக்கு, மனநிலை இருக்கு. அவனுக்கு இப்படித்தான், இந்த முறையில்தான் சொல்ல வருது. அவன் நிறையச் சொல்கிறான். இதைக் கேட்டால் அதைச் சொல்கிறான், அதைக் கேட்டால் இதைச் சொல்கிறான். எல்லாத்துக்கும் தொடர்பு இருக்கு.

நீங்க அவன் கூடவே ட்ராவல் பண்ணிட்டு போறீங்க. எப்படி இந்தக் கொலையை செய்தாய்னு கேட்டால், ஏன் செய்தேன்னு முதலில் சொல்லட்டுமான்னு சொல்றான். இப்படித்தான் உள்ளே குடைஞ்சு போயிட்டு இருக்கான். இப்ப சிரிப்பு வருதில்ல... ஆனால், அவன் சீரியஸ்ஸா சொல்றான். நான் என்ன பரம்பரை கொலைகாரனா உடனே டக்டக்னு சொல்றதுக்குன்னு கேள்வி வேறே. கண்ணிகள் அவ்வளவு சேர்ந்து இணைஞ்சிருக்கு.

ஒரு சமயம் திருப்பதி கோயிலில் வெங்கடாஜலபதி முன்னாடி 25 நிமிஷம் உட்கார வைச்சிட்டாங்க. கால் முதல் தலை வரை சாமி அலங்காரமாக இருந்தார். கொஞ்ச நேரத்தில் என்ன பண்றதுன்னு தெரியலை.உலகமே வியந்து பார்க்கிற சாமியை கொஞ்ச நேரத்திற்கு மேல் பார்க்க முடியலை.
நான் கடவுள் மறுப்பாளன் கிடையாது.

அப்படிப்பட்ட கடவுளையே பார்க்க முடியலைங்கிறபோது, இரண்டு மணி நேரமும் என்னைப் பார்க்கிறதுக்கு இதில் மேஜிக் இருக்கு. ஒரு சராசரி மனுஷனை ஜனரஞ்சக மனுஷனாக மாற்றியும், உணர்ச்சிகரமாகவும், சந்தோஷமாக சிரிக்கக்கூடிய படமாகவும், உலுக்கும்விதத்தில்கூட இருக்கும்.

‘புதிய பாதை’ போஸ்டரில் ஒத்தை ஆளா ‘ஆ’ன்னு வாயைப் பிளந்திட்டு நின்னதைப் பார்த்திட்டும் வந்தாங்க இல்லையா... அப்படியும் வரலாம்.
நீங்கள் ‘அயோக்கியா’ வெளியான அன்றைக்கு வெளியிட்ட டுவிட்டர் அனலைக் கிளப்பியதே...‘அயோக்கியா’வில் புக் ஆனபிறகுதான் அதனோட மூலம் ‘டெம்பர்’ படத்தை பார்த்தேன். என்னுடைய ‘உள்ளே வெளியே’ படத்தை ஏறக்குறைய ஜெராக்ஸ் எடுத்திருந்தார்கள்.

நான் இந்த மாதிரி அமைந்துவிட்டால் வழக்கு போடவோ, சண்டைக்கு போவதோ கிடையாது. அட, நம்மகிட்ட இருந்து திருடுறானுங்கனு பெருமைப் பட்டுப்பேன். அதுவும் ‘அயோக்கியா’வில் நல்ல சம்பளம் கொடுத்து நடிக்க வைக்கிறாங்க.

நானும் விஷாலும் அப்போ நெருக்கமா இருந்தோம். இயக்குநர் ரவிக்குமார் சாரும் நானும் ஒவ்வொரு சீன் வரும்போதும் ‘இந்த சீன்... இந்த சீன்...’னு சொல்லிட்டு இருப்போம். விஷால் பணத்தை 60% - 40% எடுத்துப்போம்னு சொல்லுவார். அதுவும் அப்படியே ‘உள்ளே வெளியே’வில் இருக்கு. என்னுடைய டுவிட் ரிலீஸ் அன்றைக்கு கொடுத்த ரிவர்ஸ் பப்ளிசிட்டி, புரொமோஷனுக்கு உதவி பண்ணணும் என்பதுதான் நோக்கம்.  

உங்க பொண்ணு கீர்த்தனா எப்போ டைரக்‌ஷனில் இறங்கப் போறாங்க..?
மணிரத்னம் சார்கிட்ட குருகுலம் முடிச்சுட்டு வெளிய வந்துட்டாங்க. ஸ்கிரிப்ட் ஒர்க் நடந்துட்டிருக்கு. வெகு சீக்கிரம் அவங்க என்ட்ரி நடக்கும்னு நினைக்கிறேன். எனக்கு அவங்க படத்தில் வேஷம் கிடைக்குதோ இல்லையோ... அசிஸ்டென்ட் டைரக்டராகவும், கூட்டத்தை கண்ட்ரோல் பண்றவனாகவும் இருக்க ரெடியா இருக்கேன்.அவங்க இன்றைய தலைமுறை. சினிமாவில் வேற மாதிரி அவங்க வேலைப்பாடுகள் இருக்கும்னு நம்புறேன்!

நா.கதிர்வேலன்