பாதிக்கப்பட்ட கணவரைக் காக்க தயாரிக்க ஆரம்பிச்சேன்... இப்ப அதுவே பிசினஸ் ஆகிடுச்சு!



ஆர்கானிக் கூல் டிரிங்க்ஸ் பின்னால் இருக்கும் நெகிழ வைக்கும் கதை

‘‘என் கணவருக்கு ஏற்பட்ட அலர்ஜி பிரச்னைதான் இந்த பிஸினஸ் ஆரம்பிக்கவே காரணம்...’’ புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் அபா அப்பாசாமி. செயற்கையான வண்ணங்கள், சுவைகள் இல்லாமல் இயற்கையான குளிர்பானங்களை இப்பொழுது தயாரித்து வரும் இவருக்கு வயது 61.
‘‘முழுப் பெயரே அபா அப்பாசாமிதான். என் கணவர் பெயர் டேவிட் அப்பாசாமி. ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறைகள்ல எனக்கு எப்பவும் ஈடுபாடு உண்டு. இதனாலயே என் உடலை ஆரோக்கியமா வைச்சுகிட்டேன். ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் பணிபுரிஞ்சேன்...’’ என்ற அபா அப்பாசாமியின் சொந்த ஊர் தில்லி.

‘‘வேலை, திருமணம்னு சென்னைல செட்டிலாகிட்டேன். எங்களுக்கு இரண்டு பசங்க. பொண்ணுக்கு 32 வயசு. பையனுக்கு 29. அவனுக்கு ஆட்டிஸம் இருக்கு. அதற்கான ஆன்டி பயாடிக் கொடுக்கிறப்ப நோய்க்கான பாக்டீரியாஸ் மட்டுமில்லாம செரிமானத்துக்கு உதவற நல்ல பாக்டீரியாஸும் அழியுது. இதனால மனதளவிலும் உடலளவிலும் நிறைய பிரச்னைகளை சந்திச்சான்.

பையனுக்கு இப்படீன்னா என் கணவருக்கு வேற மாதிரி. வீட்ல மீதமான உணவை சாப்பிட்டாலும் ஹோட்டல் மாதிரியான வெளியிடங்கள்ல சாப்பிட்டாலும் உடனே அவருக்கு அலர்ஜியாகிடும். கேஸ்ட்ரிக் மற்றும் அல்சர் பிரச்னைகளால ரொம்பவே தவிச்சார்.

நானும் பார்க்காத மருத்துவம் இல்ல... சந்திக்காத டாக்டர்ஸ் இல்லை. எல்லா மருந்துகளும் நல்ல பாக்டீரியாஸையும் அழிக்கறதை நிறுத்தலை.
அப்பதான் இந்த மருந்துகள் எல்லாமே மேற்கொண்டு நம்மை நோயாளியாதான் மாத்துதுனு புரிஞ்சுது. ஒரு நோய்க்கு நாம சாப்பிடற மருந்து இன்னொரு நோய்க்கு காரணமா அமையுது.

இந்த நேரத்துலதான் எங்கம்மா கொம்புச்சா என்கிற காளானை எனக்கு அறிமுகப்படுத்தினாங்க. அதைக் கொண்டு லெமன் அல்லது டீ அல்லது அன்னாசி... இப்படி சுவைகள் சேர்த்து தினமும் நாங்க எல்லாருமே குடிக்க ஆரம்பிச்சோம். அடுத்த ஒரு வருஷத்துக்கு எந்த மருத்துவமும் பார்க்க வேண்டாம்... எந்த மருந்தும் சாப்பிட வேண்டாம்னு தீர்மானிச்சோம்.

சொன்னா நம்ப மாட்டீங்க... அந்த ஒரு வருஷத்துல என் கணவருக்கு எந்தப் பிரச்னையும் வராத அளவுக்கு இந்த புரோபயாடிக் பானங்கள் முன்னேற்றம் கொடுத்துச்சு...’’ வியப்புடன் சொல்லும் அபா அப்பாசாமி, இதற்கிடையில் கெஃபீர் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறார்.
‘‘அதாவது தயிர்ல இருக்கக் கூடிய நல்லது செய்யும் பாக்டீரியாஸை விட பல மடங்கு அதிகமான பாக்டீரியாஸ் இதுல இருக்கறதை தெரிஞ்சுகிட்டேன். அதையும் முறைப்படி ஆர்கானிக் சர்க்கரை சேர்த்து ஒரு ஆர்கானிக் பானமா மாத்தி மொத்தக் குடும்பமும் எடுத்துக்கிட்டோம். வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்களுக்கும் கொடுத்தோம்.

குடிச்ச எல்லாருமே தங்களுக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்படுவதா சொன்னாங்க. பலர் என்கிட்ட அதை கேட்டு வாங்கவும் செய்தாங்க.
அப்பதான் நாம ஏன் இதையே கமர்ஷியல் பிசினஸா செய்யக் கூடாதுனு தோணுச்சு. உடனே www.facebook.com/Abhasprobioticsனு ஒரு பக்கத்தை ஃபேஸ்புக்குல ஆரம்பிச்சு அதுல என் ப்ரொடக்ட்ஸ் எல்லாம் போட ஆரம்பிச்சேன். சில ஆர்கானிக் கடைகள், சில ஆயுர்வேத மருந்துக் கடைகளுக்கும் சப்ளை செஞ்சோம்.

என்ன ஒரு பிரச்னைனா... வெளியூருக்கு இதை எடுத்துட்டுப் போறவங்க கார்ல போறவங்களா இருக்கணும். ஏன்னா, ஐஸ் பெட்டிலதான் இதை கொண்டு போகணும்! ஃபிரிட்ஜை விட்டு இதை எடுத்ததுமே குடிச்சுடணும்!அதேசமயம், ஒருமுறை வாங்கறதை ஃபிரிட்ஜுல வைச்சு தேவைப்படறப்ப குடிச்சுக்கலாம். சுருக்கமா சொல்லணும்னா அனல் படக் கூடாது. ரூம் வெப்பம் கூட இதுக்கு ஆகாது.

கொம்புச்சாவை நான்கு சுவைகளா எலுமிச்சை, பீட்ரூட், கிரீன் டீ, அன்னாசி சுவைகள்ல தர்றோம். லிவர், சிறுநீரகம், உணவுப்பாதை, மூளை, தோல்னு பல பிரச்னைகளை இது மெதுவா தீர்க்கும். ஆனா, நிரந்தர தீர்வா இருக்கும்!

இது தவிர கெஃபிர் பானமும் இருக்கு. பால், தயிர்ல கிடைக்கற கால்சியத்தை விட இதுல அதிக கால்ஷியம் கிடைக்கும். இந்த கால்ஷியத்தை சீரா உடல்
பகுதிகளுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும்.

குறைந்தபட்சம் ரூ.90ல தொடங்கி ரூ.110 வரை விற்கறேன். வெளியூர் மக்களுக்கு இதனுடைய செய்முறை சொல்லிக் கொடுத்து வீட்டுலயே அவங்க தயாரிக்கும் விதமா பயிற்சியும் அளிக்கறேன்!’’ என்கிறார் அபா அப்பாசாமி.                      

ஷாலினி நியூட்டன்

ஆ.வின்சென்ட் பால்